முகவரியில்லா வாழ்த்துகள்..!

புத்தாண்டு, தைப் பொங்கல் வந்துவிட்டாலே முன்பெல்லாம் யார் யாருக்கெல்லாம் வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும் என யோசித்து யோசித்து அனுப்புவோம். வீடுகளில் யாரெல்லாம் அதிகம் வாழ்த்து அட்டை அனுப்புகிறார்களோ.
Updated on
2 min read

புத்தாண்டு, தைப் பொங்கல் வந்துவிட்டாலே முன்பெல்லாம் யார் யாருக்கெல்லாம் வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும் என யோசித்து யோசித்து அனுப்புவோம். வீடுகளில் யாரெல்லாம் அதிகம் வாழ்த்து அட்டை அனுப்புகிறார்களோ...! யாருக்கெல்லாம் அதிகமாக வாழ்த்து அட்டைகள் வருகிறதோ...! அவர்களை சற்று பொறாமையுடன் பார்ப்போம்.

ஒருவருக்கு வாழ்த்து அனுப்புவது என்பது சாதாரண விஷயமா என்ன..! ஒருவருக்கு அனுப்பும் வாழ்த்து அட்டையால், அவரது குடும்பமே மகிழ்ச்சி அடையும். அதை அனுப்பியவர் மீது, சட்டென ஒருவித பாச உணர்வு தழைக்கும்.

ஆஹா..! நம்மை இன்னும் மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறாரே..! என்ற சிந்தனையில் அவர்களிடையே உறவுகள் பலப்படும். நட்பு வட்டம் பழைய ஞாபகங்களில் சுழன்று விரிவடையும்.

புத்தாண்டுக்கு மட்டுமல்ல. நண்பர்களின் திருமணம், வீட்டு விசேஷம் என பல நல்ல காரியங்களுக்கும் சுவாமி படங்கள், தலைவர்கள், இயற்கைக் காட்சிகள் என பெரிய புகைப்படங்களைப் பிரேமிட்டு பரிசளிக்கும் வழக்கம், கிராமப்புறங்களில்தான் தொன்றுதொட்டு அதிகம் இருந்தது.

இப்போது செல்போன்களின் வரவால், பலரது இதயங்கள் வாழ்த்துச் சொல்வதில்கூட வரவு-செலவு பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதை நினைத்தால் எதிர்காலத்தில் வாழ்த்துகிற வழக்கம்... என்னவாகுமோ... என்ற ஒருவித அச்ச உணர்வே அலைமோதுகிறது.

எத்தனையோ பண்பாடுகளை, கலாசாரங்களை கால ஓட்டத்தில் காக்கத் தவறியது போலவே வாழ்த்து அனுப்பும் பழக்கவழக்கத்தையும் நாம் மறந்து வருகிறோம்.

வாழ்த்துகள் என்பது வெறும் அட்டைகளோடும், அதில் இடம்பெறும் வாக்கியங்களோடும் மட்டும் முடிந்து விடுவதல்ல. அதையும் தாண்டிய உணர்வுகளை உள்ளடக்கி உறவுகளை உருவாக்கி, பலப்படுத்தும் சக்தி படைத்தது.

நெருங்கிய நண்பர், உறவினர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும்போது, அவை அனுப்பியவரின் அகத்தையும், முகத்தையும் பிரதிபலிப்பதோடு, தம்மை எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறார் என்பதைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக அல்லவா அவை காட்சியளிக்கும்.

மூத்தவர்கள், ஆசிரியர்கள், மாமா, அத்தை போன்ற உறவினர்களின் ஆசிகளைப் பெறும் கவித்துவமான வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதே சிறந்த வாழ்த்துகள்.

நீண்ட நாள்களுக்குத் தொடர்பில்லாத உறவினர்கள், நகரத்து நெருக்கடிகளில் ஒவ்வோர் ஆண்டும் வீட்டை மாற்றுவோரது முகவரிகளையும்கூட வாழ்த்து அட்டைகள் வங்கிகள்போல சேமித்திருக்குமே!

இப்போது செல்போன்களின் பெருக்கத்தால், வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கமே அருகிவிட்டதாகத் தோன்றுகிறது. வாழ்த்துகள் பரிமாறும் பழக்கம்கூட வெறும் சம்பிரதாயச் சடங்காக மாறி வருகிறது.

அரசு அலுவலகங்களில் உயரதிகாரிகள், நிறுவனங்களில் தங்களுக்கு மேலதிகாரிகளாக உள்ளோர் எனக் குறிப்பிட்ட சிலருக்கு... தங்களை அடையாளம் காட்டும் சடங்காகவே புத்தாண்டு வாழ்த்தைப் பரிமாறும் வழக்கம் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

வாழ்த்துகளையும் வர்த்தக நோக்கில் காணும் செல்போன் நிறுவனங்களும் குறிப்பிட்ட பண்டிகை நாள்களில் மட்டும் குறுந்தகவல்களுக்குக் கூடுதல் கட்டணத்தை நிர்ணயித்து கோடிகளைக் குவிக்கின்றன.

பெரும்பாலான குறுந்தகவல்களும் ட்ண் ஜ்ண்ள் ன் ட்ல்ஹ் ய்ன் ஹ்ழ். ஜ்ண்ள் ன் ட்ல்ஹ் ல்ய்ஞ்ப், ட்ல்ஹ் க்ஜ்ப்ண் என்ற சுருக்கெழுத்து வடிவத்தில் அனுப்பப்படுவதால், வாழ்த்துகளின் அர்த்தமே திசைமாறிவிடுகிறது.

இவை வாழ்த்து அனுப்புபவரின் எண்ணத்தையோ, அதைப் பெறுபவரின் உணர்வையோ பிரதிபலிப்பவையாக இல்லை என்பதுதான் உண்மை.

செல்போன்களில் அனுப்பும் குறுந்தகவல்களைப் படிப்பவர்களும், தேங்க்ஸ் என ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொள்கின்றனர்.

ஆக, இரு இதயங்களின் வாழ்த்துப் பரிமாற்றம்கூட இயந்திரமயமாகி விட்டது.

இத்தகைய வாழ்த்துகளில் உயிரோட்டத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

மேலும், வாழ்த்து அனுப்புபவரின் செல்போன் எண், வாழ்த்தைப் பெறுகிறவரின் செல்போனில் பதிவாகியிருக்காவிட்டால், அந்த வாழ்த்தை அனுப்பியவர் யார் என்பதே வாழ்த்தைப் பெற்றவருக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் ""அன்புடை நெஞ்சம் தாம்'' எப்படி கலக்கமுடியும்? வீட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தும் மணமற்ற காகிதப் பூக்களைப்போல, காற்றில் பறந்துவரும் செல்போன் வாழ்த்துகளும் ஜீவனற்ற வார்த்தைகளையே சுமந்து வருகின்றன.

இதனால் நட்புகள் புதுப்பிக்கப்படுவதுமில்லை; உறவுகள் பலப்படுவதுமில்லை..!

இதில், பெரும்பாலானோர் குறுந்தகவல்களையே பார்ப்பதில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால், வாழ்த்து அட்டைகள் குழந்தைகளது கற்பனை, கவிதைத் திறன், எழுத்துத் திறன், அடுத்தவருடனான தொடர்புத் திறனை மறைமுகமாக வளர்க்க உதவின.

அத்தகைய வாழ்த்து அட்டைகள், தபால் நிலையங்களுக்கும் வாழ்வளித்தன. அவற்றின் வருவாயைப் பெருக்கின.

அறிவியல் யுகத்தில் வாழ்த்துகள் எந்த வழியில் அனுப்பப்படுகிறது என்பது முக்கியமல்ல; அவை, எந்தவகையில் அமைந்துள்ளது? எப்படி இலக்கை அடைகிறது? அதனால் ஏற்படும் விளைவுகள் எத்தகையவை என்பதே முக்கியம்.

ஆம்...! சுக்கானில்லாத படகைப்போல..! இலக்கு இல்லாத பயணத்தைப்போல...!..முகவரியில்லாத கடிதம்போல..! நமது வாழ்த்துகளும் பயனற்றதாகி விடக்கூடாதல்லவா? நமது கலாசார... பண்பாட்டை வாழவைக்கும் நோக்கத்திலாவது.... வாழ்த்துகளை... வார்த்தைகளால் அல்ல... வாழ்க்கையோடு இணைப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com