நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல்துறை முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இதுமட்டுமல்லாது குற்றம் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாத்து, அடுத்து நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக விரைந்து குற்றவாளிகளைப் பிடிப்பது உள்ளிட்ட பணிகளையும் காவல்துறை செய்து வருகிறது. இதற்காகவே குற்ற ஆவணக் காப்பகம் என்ற தனிப்பிரிவும் காவல்துறையில் இயங்கி வருகிறது.
இப்பிரிவு மூலம் காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மாவட்டக் காவல்துறையில், காவல் புகைப்படக்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு பிலிம் ரோலில் படம் எடுக்கும் கேமராக்கள் வழங்கப்பட்டன. இன்று அந்த கேமராக்கள் பயன்படுத்தும் நிலையில் இல்லை. குற்றம் நடந்த இடங்களில் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி, வழக்குக்காக நீதிமன்றத்தில் போட்டோ மற்றும் நெகட்டிவ் சமர்ப்பிப்பது, குற்றம் நடந்த பகுதிகளில் எடுக்கப்பட்ட கைரேகைப் பதிவுகளையும் கறுப்பு-வெள்ளை பிலிம் ரோலில் படம் எடுத்து வழக்கைப் போலீஸôருக்கு வழங்குவது காவல் புகைப்படக்காரர்களின் முக்கியப் பணி.
இப்போது கலர் பிலிம் ரோல் தயாரிக்கும் கம்பெனிகள் பல மூடப்பட்டுவிட்டன. கறுப்பு-வெள்ளை பிலிம் ரோல் தயாரிப்பே நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது குற்றவாளிகள் உயரிய தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக உள்ளனர். இந்நிலையில், பழைய கேமராக்களை கொண்டு, காவல் புகைப்படக்காரர்கள் படம் எடுத்து வருகின்றனர். ரோல் டெவலப் செய்து, பிரிண்ட் செய்யும் நிறுவனங்களும் குறைந்துவிட்டன. டிஜிட்டல் கேமராக்கள் இருந்தும், அதைப் பயன்படுத்தலாம் என்று சட்டங்கள் இருந்தும் போலீஸôர் பிலிம் ரோலில் படம் எடுத்து வருகின்றனர். குற்றவாளிகள் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், காவல்துறையினர் மாட்டு வண்டியில் சென்று பிடிக்க முயல்வது குற்றவாளிகளுக்குத்தான் சாதகம்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக டிஜிட்டல் கேமராக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதுவரை பிலிம் ரோல் கேமராக்களையே போலீஸôர் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல் புகைப்படக்காரர்களிடம் கேட்டபோது, "டிஜிட்டல் கேமரா படங்களில் எடிட் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், நெகட்டிவில் எடிட் செய்ய வாய்ப்பில்லை. டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்து, சிடி மற்றும் படங்களை வழங்கினால், எதிர்த்தரப்பு வழக்கறிஞர், டிஜிட்டலில் எடிட் செய்ய வாய்ப்புள்ளது என்று வாதாடக்கூடும். எனவே, டிஜிட்டல் படங்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படாது. இந்திய ஆதாரச் சட்டத்தில் முதன்மை ஆதாரமாக நெகட்டிவை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் பிலிம் ரோல் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர்களின் தலைமை அலுவலகமான குற்ற ஆவணக் காப்பகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
துணை ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அளவிலான சில காவல்துறை அதிகாரிகளைக் கேட்டபோது, படங்களை நீதிமன்றத்தில் எப்படி வழங்க வேண்டும் என்ற சட்டம் எதுவும் கிடையாது. எப்படி வேண்டுமானாலும் வழங்கலாம் என்று கூறுகின்றனர். சட்டம் தெரியாத இதுபோன்ற அதிகாரிகளிடம் வழக்குகளை ஒப்படைத்தால், படங்களில் போதுமான ஆதாரங்கள் இருக்கும்நிலையில், உண்மையான குற்றவாளியைகூட நிரபராதி ஆக்கிவிடுவார்கள்.
தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பக அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்போது மத்திய அரசு சிசிடிஎன்எஸ் (இழ்ண்ம்ங் ஹய்க் இழ்ண்ம்ண்ய்ஹப் பழ்ஹஸ்ரீந்ண்ய்ஞ் சங்ற்ஜ்ர்ழ்ந் நஹ்ள்ற்ங்ம்ள்)என்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்தால் முற்றிலும் டிஜிட்டல் முறையில் தமிழ்நாடு காவல்துறை இயங்கும். அதற்கு சில ஆண்டுகள் ஆகும். அதுவரை பழைய முறையில் பிலிம் ரோல் கொண்டு எடுக்க வேண்டியதுதான் என்றனர்.
1872 இந்திய ஆதாரங்கள் சட்டத்தின்படி இன்றுவரை பிலிம் ரோல் நெகட்டிவை முதன்மை ஆதாரமாக நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னர் வந்துள்ள திருத்தியமைக்கப்பட்ட இந்திய ஆதாரங்கள் சட்டப்பிரிவு 65 எ மற்றும் பி-யில் டிஜிட்டல் பதிவுகளையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் உள்ள படங்களை, நேரடியாக நெகட்டிவ் பிலிம்களாக மாற்ற முடியும். டிஜிட்டலில் எடுக்கப்பட்ட படங்களை, கம்ப்யூட்டரில் எடிட் செய்து நெகட்டிவாக கூட, கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டு இருக்கலாம். தற்போது உள்ள சூழலில் டிஜிட்டலை எடிட் செய்து, நெகட்டிவாக மாற்றினால் கண்டுபிடிப்பது கடினம். ஆனால், டிஜிட்டல் வடிவில் இருக்கும் படங்களை எடிட் செய்து, டிஜிட்டல் வடிவில் வழங்கினால், எளிதில் கண்டுபிடிக்க மென்பொருள்கள் உள்ளன. அதனால் நெகட்டிவைவிட, டிஜிட்டல் வடிவிலான படங்களே அதிக அளவு நம்பகத்தன்மை வாய்ந்தது. காவல்துறை சார்ந்த சட்டங்கள் மற்றும் அதன் திருத்தியமைக்கப்பட்ட சட்டங்கள் குறித்து, பெரும்பாலான காவல்துறையினருக்குத் தெரிவதே இல்லை. அதனால் போலீஸôருக்கு தொடர் சட்டக்கல்விக் கருத்தரங்கங்கள் நடத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு நடந்த உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில், காவல்துறையைத் தொழில்நுட்ப ரீதியில் வலுப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுநாள்வரை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் தொழில்நுட்ப அறிவின்மை, தொழில்நுட்ப ரீதியாக காவல்துறையை மேம்படுத்த ஆர்வமின்மை காரணமாக டிஜிட்டல் முறையில் படம் எடுக்கப்படவில்லை. பிலிம் ரோல் கேமரா மூலமே எடுக்கப்பட்டு வருகிறது. மாநாட்டில் காவல்துறையைத் தொழில்நுட்ப ரீதியில் வலுப்படுத்த வேண்டும் என்று முதல்வர்கள் முடிவெடுத்துவிட்டு வந்துவிட்டால்போதுமா, அதைச் செயல்படுத்த வேண்டாமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.