திருப்பூரை திருப்பிடலாம்!

இந்தியாவிலேயே முதன்மையான இடத்தில் உள்ளாடை மற்றும் வண்ண ஆடைகள் உற்பத்தியில் செழித்து வளர்ந்த திருப்பூர், இப்போது தொழில் முடக்கத்தால் முடமாகி, தேய்ந்து கொண்டிருக்கிறது. சாயத்தால் காயம்பட்ட விவசாயத்தால்
Published on
Updated on
3 min read

இந்தியாவிலேயே முதன்மையான இடத்தில் உள்ளாடை மற்றும் வண்ண ஆடைகள் உற்பத்தியில் செழித்து வளர்ந்த திருப்பூர், இப்போது தொழில் முடக்கத்தால் முடமாகி, தேய்ந்து கொண்டிருக்கிறது. சாயத்தால் காயம்பட்ட விவசாயத்தால் பயிர்வளர்ப்போர்க்கும் தொழில் முடக்கம் ஏற்பட்டது. ஈடுசெய்யும் பல தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக மாசுக் கட்டுப்பாடுகள் கொணர்ந்தும், தோல்விகள் தொடர்கதையாகவே உள்ளன.

எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, பொருளாதார ரீதியில் லாபமும், சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்தும்படியான கீழே குறிப்பிடும் நடவடிக்கைகள், அறிவியல், தொழில்நுட்ப ஆலோசனையுடன் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

திருப்பூரில் சாயத் தொழிற்சாலைகளில் சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் டன் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக, பொட்டாசியம் குளோரைடு அல்லது பொட்டாசியம் சல்பேட்டு ரசாயனத்தைப் பயன்படுத்தினால், வண்ணங்கள் நூலில் ஊடுருவும் திறன் 10 முதல் 15 சதம் வரை அதிகரிப்பதை கோவையிலுள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் பரிசோதனை செய்து இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அபரிமிதமான சோடியம் குளோரைடின் பாதிப்பால் விளைநிலங்களில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே, வளம் குறைந்தது.

ஆனால், பொட்டாசியம் குளோரைடு அல்லது பொட்டாசியம் சல்பேட்டு பயிர்களுக்கு உரமாகப் பயன்படுவதால், இவற்றின் பயன்பாட்டால் குறைகள் குறைந்து, நிலத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். கழிவு நீரிலிருந்து பொட்டாசியம் பிரித்தெடுக்கப்பட்டு, உரமாகப் பயன்படுத்தப்படலாம். சல்பரும் முக்கியமானதொரு, தமிழக மண்ணுக்கேற்ற, இப்போது குறைவாக உள்ள சத்தாகப் பயன்படும். அவ்வாறு முற்றிலுமாகவும், முழுமையாகவும் குறையைக் குறைத்து, நிறையை நிறைவாகச் செய்திடலாம். சில நூல்களுக்குப் பொட்டாசியம் குளோரைடு ஏற்றதாக உள்ளதாலும், அவைகளும் உரமாகப் பயன்படுவதாலும், அதனையும் சோடியம் குளோரைடுக்கு (உப்புக்கு) மாற்றாகப் பயன்படுத்தலாம்.

திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு 1 லட்சம் டன் உப்பு பயன்படுத்தப்பட்டு கழிவாக வெளியேறுவதில், கசிவுகள் பல ஆண்டுகள் நிலத்தடியிலும், நீரிலும் கலந்து, விளைநிலங்களைப் பாழ்படுத்தியுள்ளது. இவ்வாறு செய்கையில் குறையைக் குறைக்க முடியும். மாதம் சுமார் 600 டன் பொட்டாசியம் சல்பேட் அல்லது பொட்டாசியம் குளோரைடு பயன்பாட்டுக்குக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சோடியம் குளோரைடைவிட இரண்டு மடங்கு விலை அதிகமானாலும், உரமாக விற்க முடியுமாதலால், தொழில் தேக்கமின்றி நடைபெற உறுதுணையாக இருக்க வழிவகை செய்வதாலும், இது லாபகரமான ஒருவழிவகையாகும்.

திருப்பூரில் மட்டும் தினமும் சுமார் 690 சாயத் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்காக 5 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இத்தண்ணீரில் தினமும் சுமார் 500 முதல் 600 டன் உப்புக் கரைக்கப்படுகிறது. 500 டன் நூல் இழை சாயமிடப்படுகிறது. தினமும் பின் சவ்வூடு பரவுதல் மூலம் 85% தண்ணீர் சாயமிட்டபின் பெற்று, சாயங்களை நொதித்தபின் வடிகட்டப்படுகிறது. மீதமுள்ள 15% (சுமார் 75 லட்சம் லிட்டர்) கழிவுநீரில் சுமார் 20,000 டி.டி.எஸ். (மொத்தம் கரைந்துள்ள அளவு) உப்பு அடர்த்தியுடன் பூரிதக் கரைசலாக இந்தத் திரவம் இருக்கும்.

இந்த உப்பு நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்க இப்போது (இயந்திர கொதி ஆவி) பயன்படுத்தப்படுகிறது. இதற்குத் தினமும் எரிப்பதற்குச் சுமார் 3,000 டன் மரம் தேவைப்படுகிறது. இயந்திரக் கொதிகலனின் விலையும் அதிகம்; விறகு விலையும் அதிகம். எனவே, 1 லிட்டர் உப்பு நீரை ஆவியாக்கி உப்பைப் பிரித்தெடுக்க மூன்று ரூபாய் செலவாகிறது. அதிக வெப்பத்தால், சாதாரணமாகக் கிடைக்கும் கொதிகலன்களின் உறுப்புகள் உதிர்ந்தும், வலுவிழந்தும் விடுவதால் இதைச் சரிவரப் பயன்படுத்துவதில் பல சிரமங்களைச் சாயத்தொழில் செய்வோர் சந்திக்க வேண்டியுள்ளது.

இதற்கு மாற்றாக, காற்றின் துணையுடன் உப்பு நீரை உலர வைத்து, உப்பைப் பிரித்தெடுக்கும் புதுவகையான யுக்தியைக் கையாளலாம். ஜெர்மனி நாட்டில், கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கும் பணி இம்முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை அங்ழ்ர்ள்ஹப்ற் என்று அழைக்கின்றனர்.

சுமார் 10 மீட்டரிலிருந்து 20 மீட்டர் வரை உயரத்திலிருந்து உப்பு நீரைச் சொட்டுச் சொட்டாக, சிறு மரக்கட்டைகள், குச்சிகள் மீது விழ வைத்து, மீளச் சொட்ட வைத்து, அடியில் தேக்கி வைக்கலாம். காற்று உள்புகுந்து, உப்பு நீரில் உள்ள தண்ணீரைப் பிரித்தெடுத்து, ஈரக்காற்றாக மாற்றிக் காற்றில் கலந்துவிடும். இவ்வாறு நடப்பதால், 20,000 டி.டி.எஸ். உப்பு அடர்த்தி திரவம், 40,000 டி.டி.எஸ். ஆக மாறும். மறுபடியும் இந்த உப்புக் கரைசலை மேலே ஏற்றி, திரும்பவும் சொட்ட வைத்து, உலர வைத்தால், 60,000 முதல் 80,000 டி.டி.எஸ். ஆக மாறும். இவ்வாறு காற்றின் வேகத்தைப் பொறுத்தும், வறட்சியைப் பொறுத்தும் உப்பின் அளவு தொடர்ந்து அதிகரித்து, சுமார் 3 லட்சம் டி.டி.எஸ். வரை கொண்டு வரலாம். பிறகு, அதைக் குளிர்பதன இயந்திரத்தின் மூலம் குளிரவைத்தால், உப்பை முழுவதுமாகத் திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாற்றலாம். இவ்வாறு பெறப்படும் பொட்டாசியம் சல்பேட் அல்லது பொட்டாசியம் குளோரைடு உப்பை உரமாக விற்கலாம். அதை மீண்டும் பயன்படுத்தலாம். மீதியை உரமாகவும் பயன்படுத்த முடியும்.

சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் 10 மீட்டர் உயரம், 30 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் கொண்ட இயற்கை உலர் தடுப்பணை நிறுவப்பட்டு, அதன் செயல்பாட்டைச் செம்மைப்படுத்தி, பார்வைக்கு உள்படுத்த வேண்டும். இப்போது தமிழக அரசு திட்டக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையில், இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐப) ஆய்வு மையத்தின் ஆய்வின் மூலம் இதை நிகழ்த்த ஏதுவான செயல்முறைகள் நடைபெற தமிழக அரசால் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. அதன் முழுச் செயல்பாடும் 6 மாதங்களில் அறிவியல்பூர்வமாக அந்த நிறுவனத்தால் கண்டறியப்படும். கடந்த 20 ஆண்டுகளாக, சாயத்தொழில் கழிவுநீர் மண்ணில் கரைந்து, நீரில் கலந்து, விளைநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை.

குறிப்பாக, சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போது ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ. 2,000-க்குக் குறைவாக வருமானம் வருகிறது. முன்னர் ஏக்கருக்கு ரூ. 10,000 கிடைத்து வந்தது.

இந்தப் பூமியின் பரப்பளவு சுமார் 10,000 ஏக்கர் ஆகும். இதில் உப்பால் மாசுபட்டு, உற்பத்தி குறைந்துள்ள இந்த விவசாய பூமிகளிலே 3 மீட்டர் விட்டமும், மையத்தில் 15 செ.மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு வட்டக் குழித் தட்டுப் போன்ற வடிவமைப்பை ஏற்படுத்தினால், ஒவ்வொரு குழித்தட்டு அமைப்பிலும் மழைக்காலங்களில் சுமார் 1,000 லிட்டர் மழைநீரைச் சேமிக்க முடியும்.

இதுபோன்று ஓர் ஏக்கருக்கு 100 குழிகள், ஒவ்வொரு குழியின் மையத்திலிருந்து 6 மீட்டர் இடைவெளியில் 100 குழிகள் எடுக்கலாம். ஒரு குழித் தட்டில் 1,000 லிட்டர் வீதம், ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்க முடியும். இதுபோன்று ஓர் ஏக்கருக்கு 10 மழை நாள்கள் என்று வைத்துக் கொண்டாலும், சுமார் 10 லட்சம் லிட்டர் மழை நீர் புவி ஈர்ப்புச் சக்தியினால் மண்ணின் ஆழத்தை நோக்கிச் செல்லும்போது, உப்பால் பாதிக்கப்பட்ட மண்ணிலிருந்து உப்பைக் குறைத்து, மண்ணின் மேல் பகுதியில் மண்ணின் குறைபாடுகளை வெகுவாகக் குறைக்கும். 2 ஆண்டுகளில் படிப்படியாக பெருமளவு உப்பின் பாதிப்பைக் குறைத்துவிட இயலும்.

இதில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி, மண்ணின் உப்புத் தன்மையைக் குறைக்க முடியும். மழைநீரை ஓர் ஏக்கரில் ஓராண்டில் 10 லட்சம் லிட்டர் தக்கவைக்க முடியும். இந்தப் பூமியில் இயற்கைச் சாய தாவரங்கள் - இண்டிகோ (அவுரி) மற்றும் (நுணா) போன்ற உப்பையும், வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தாவரங்களை வளர்க்க இயலும். இதற்காக வழிமுறைகளும், சாயத்தைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பமும் கண்டறியப்பட்டு, ஆய்வு அறிஞர்களுடனும், இத் தாவரத்தை வளர்க்கும் சில விவசாயிகள், விற்பனையாளர்களுடன் உரையாடி, நடைமுறைப்படுத்த இயலும் என்ற உறுதியான நிலைக்கு வளர்ந்துள்ளார்கள். இவ்வாறு பயிரிட்டு, பயன்படுத்தினால், ஏக்கருக்கு ரூ. 20,000 வரை நிகர லாபமாக இவ்விவசாயிகளுக்குக் கிடைக்க வழிவகை செய்யலாம்.

இவ்வளமிழந்த பூமியில், உப்பைத் தாங்கி வேகமாக வளரக்கூடிய மலைவேம்பு மற்றும் சவுக்கு மர இனங்களின் வீரிய ஒட்டு அல்லது வெட்டுக் கன்றுகளை நட்டு ஏக்கருக்கு குறைந்த அளவு ஆண்டுக்கு 10 டன் முதல் 20 டன் வரை மர மகசூல் பெறலாம். மரம் நடப்பட்ட குழிகளின் விளிம்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில் இயற்கை சாயத் தாவரமான இண்டிகோ (அவுரி) வளர்க்கப்படும். இத்தாவரத்திலும், உப்பைத் தாங்கி வளரக்கூடிய தனி இனங்கள் தேர்வு செய்யப்படும். ஏக்கருக்கு ரூ.10,000 செலவு செய்தால், ரூ. 30,000 வரை லாபம் பெறலாம். இதுபோன்று, சுற்றுச்சூழலை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடலாம்.

கட்டுரையாளர்: தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com