நான் பெற்ற செல்வம் குறையாத செல்வம் என்று சொன்னால் அது கல்வி ஒன்றாகத்தான் இருக்க முடியும். தொட்டனைத்தூறும் மணற்கேணி போல் தோண்டத் தோண்டப் பெருக்கெடுக்கும் வல்லமை படைத்தது படிப்பறிவு ஒன்றுதான். எழுதப்பட்ட சாசனங்களில் மிக விரிவான சாசனம், இந்திய அரசியலமைப்புச் சாசனம் என்ற பெருமை உண்டு. அதில் 10 ஆண்டுகளில் கல்வி எல்லோருக்கும் சென்றடைய எல்லாவிதமான முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆயினும், சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்தக் கனவு மெய்ப்படவில்லை.
இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பவை படிப்பறிவின்மை மற்றும் ஊழல். "புத்தி கெட்டதடா நெஞ்சைச் சுட்டதடா' என்ற கவிஞர் பாடலில் உண்மை இருக்கிறது. புத்தி கெட்டால் எல்லாவற்றையும் பாதிக்கும். புத்தியே இல்லை என்றால் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று யூகிக்கலாம். ஒரு மனிதனுக்குத் தெரியாமை, புரியாமை, அறியாமை என்ற நிலைகள் ஏதாவது ஒரு கட்டத்தில் வராமல் இருக்காது.
தெரியாமை, புரியாமை என்பனவற்றை மற்றவர்கள் கொடுக்கும் தகவல் மற்றும் ஆலோசனை மூலம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால், அறியாமை என்பது கல்லாதவருக்குக் கண் இருந்து என்ன பயன்? அது புண்தானே? என்றாரே வள்ளுவப் பெருமான், அந்த நிலைதான்.
அறிவு இருந்தும் அறியாமல் இருப்பது இன்னும் கொடுமை. அறியாமையைப் போக்கவல்லது கல்வி ஒன்றுதான். அதனால்தான் பெருந்தலைவர் காமராஜ், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைத் தகர்க்கக்கூடிய சக்தி கல்விக்கு மட்டும்தான் உண்டு என்ற அடிப்படையில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் கல்விக் கூடங்கள் தமிழகத்தில் வளர்ச்சியடைந்தன. அரசுப் பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், உடலுக்கு மட்டுமன்றி அறிவுக்கும், செவிக்குமான ஊட்டச்சத்து பாமர மக்களின் குழந்தைகளையும் சென்றடைய வழி வகுத்தது.
2005-ம் ஆண்டு இந்திய அரசு, கல்வி அடிப்படை உரிமையாகத் திருத்தம் கொண்டுவரப்பட்டு 21(எ) என்ற பிரிவு அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. ஆகையால், எல்லோருக்கும் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமையாகிவிட்டது. ஆம், சமமான கல்வியைச் சாமானியரும் பெறவேண்டும். ஆனால், அத்தகைய கல்வி தரமானதாகவும் இருக்க வேண்டுமல்லவா? அதைத்தான் தமிழக அரசு சீர்செய்யத் தொடங்கியுள்ளது, இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் துவக்கப் பள்ளிகள் 34,226, நடுநிலைப் பள்ளிகள் 10,614, உயர்நிலைப் பள்ளிகள் சேர்த்து மொத்தம் 53,722 அரசுப் பள்ளிகள் உள்ளன. இதுதவிர, பதிவு செய்யப்பட்ட மெட்ரிகுலேஷன் துவக்கப் பள்ளிகள் 5,845, நடுநிலைப் பள்ளிகள் 280. ஆக எல்லாப் பள்ளிகளிலும் வசதிகள் ஒரே சீராக இருப்பதில்லை. கட்டாந்தரையிலும், மரத்தடியிலும் வகுப்புகள் நடத்தப்படும் நிலை உள்ளது. இடவசதிப்பிரச்னை மட்டுமன்றி, ஆசிரியர் பற்றாக்குறை, நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் நேரத்துக்கு வராமை, பாடம் நடத்துவதிலும் மாணவர்களைக் கையாள்வதிலும் போதிய பயிற்சியின்மை போன்ற பல குறைகள் உள்ளன.
கிழக்கு மலைத் தொடர், மேற்கு மலைத் தொடர் சூழ்ந்த மாநிலம் தமிழகம். பல மாவட்டங்களில் மலைவாழ் மக்களும் பழங்குடியினரும் வசிக்கின்றனர். அத்தகைய இடங்களில் உள்ள பள்ளிகளில் வசதி குறைவு என்பதுமட்டுமல்லாமல், ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை.
ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளின் நிலைபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. கட்டாயக் கல்வி பயில வேண்டும் என்ற குறிக்கோளை வைத்து, அதற்கேற்ற வசதியில்லை என்றால், குழந்தைகள் பள்ளிப் படிப்பிலிருந்து விடுபடுவதில் ஆச்சரியமில்லை.
முன்னோடி மாநிலமான தமிழகத்தில் ஆரம்பப் பள்ளியில் சுமார் ஒரு கோடி மாணவர்கள் பள்ளிப்படிப்பைத் தொடங்குகிறார்கள். ஆனால், 2011-ம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற 10-ம் வகுப்புத் தேர்வில், 8.38 லட்சம் மாணவ, மாணவியர்தான் பங்கு கொண்டனர். மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்திய மாணவர்களைச் சேர்த்து மொத்தம் 10.61 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இடையில் சுமார் 90 லட்சம் மாணவர்கள் கல்விப் புரட்சியில் பங்கு கொள்வதில்லை. இது ஒரு மிகப்பெரிய பிரச்னை.
எல்லா இந்தியர்களுக்கும் "ஆதார்' என்ற தனித்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்துக்குத் தலைமை வகிக்கும் நந்தன் நீலகேனி, கல்வித் தரம் மேன்மையடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிக் கல்வி மட்டுமல்ல; கல்லூரி, தொழில்நுட்பம், மருத்துவம், ஆளுமைப் பட்டப்படிப்பு என்று எல்லாத் துறைகளிலும் தரம் தாழ்ந்துகொண்டே வருகிறது. அதை சர்வதேச அளவில் இல்லாவிட்டாலும் சமன்குலைவைத் தடுத்து, தரத்தை நிமிர்த்த வேண்டும் என்ற கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
பொறியியல் பட்டம் பெற்ற பல இளைஞர்களுக்கு, வேலைக்குத் தகுதிபெற மேலும் சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டிய நிலை உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் இரண்டு வகை. முதல்வகை, படிப்பும், திறமையும் இல்லாததால் வேலையில்லாமல் திண்டாடுபவர்கள். பட்டம் பெற்றும் அதற்கேற்றவாறு பணி செய்யக்கூடிய திறன் இல்லாததால் அல்லல்படுபவர்கள் இரண்டாம் வகை. இவர்களை "அன்எம்ப்ளாயபள்' என்று கணக்கிடலாம்.
ஆண்டுக்குச் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் உருவானாலும், அவர்களில் 10 சதவிகிதம் பட்டதாரிகள்தான் படிப்புக்கு உகந்த திறன் படைத்தவர்கள் என்ற கணிப்பு கல்வியாளர்களைச் சிந்திக்கவைக்க வேண்டும்.
நிலைமை இவ்வாறு இருக்க, ஒரு மாணவருக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய பள்ளிக் கல்வியில் தரமான சிறந்த பாடங்களும், பாடப் புத்தகங்களும் வழங்கப்பட வேண்டும் என்று அரசு எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது.
இந்தியா பழமையான நாடு, வளமையான நாடு. ரம்யமான தட்பவெப்பநிலை காரணமாக வாழ உகந்த நாடு. சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது, நமது நாட்டுக்கு மேலும் வலிமையைச் சேர்க்கும். 15 வயதிலிருந்து 60 வயதுக்கு உள்பட்டவர் உழைக்கக்கூடியவர்கள். அவர்களது உழைப்புதான் நாட்டின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும். இப்போது நமது நாட்டின் மக்கள்தொகையின் சராசரி வயது 35-க்குக் குறைவானது என்பது நமது வலிமை.
இன்னும் 30 ஆண்டுகளுக்கு, இளைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் மக்களின் சராசரி வயது நாற்பதைக் கடந்துவிடும். சீனாவில் ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாய மக்கள்தொகை கட்டுப்பாட்டால் மக்கள்தொகையின் சராசரி வயது 35-க்கு மேல் சென்றுவிடும்.
இத்தகைய சூழலில் உலகத்துக்கே உழைப்பாளிகளைக் கொடுக்கக்கூடிய நிலையை இந்தியா பெறும். அதனைத்தான் தீர்க்கதரிசியான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்தியா வல்லரசாக வளரும் என்று பெருமையுடன் கூறிவருகிறார்.
இளைஞர்களின் சுயதிறன் திண்மை பெறவேண்டும் என்றால், கல்வியின் தரம் உயர வேண்டும். முக்கியமாக விஞ்ஞானம், கணிதம், கணினிப் பயிற்சி சிறு வகுப்பிலேயே புகட்டப்பட வேண்டும். சர்வதேச வர்த்தகப் பரிமாற்றத்துக்கு ஆங்கில அறிவு அவசியமாகிறது, தகவல் தொடர்பு வர்த்தகம், மென்பொருள் தயாரிப்பதிலும், வணிக செயலாக்க அயல் அமர்த்தலிலும் (பிபிஓ) நம் நாட்டவர் ஓரளவு முன்னிலையில் இருப்பதற்குக் காரணம் நமது ஆங்கில அறிவு. இது பன்மடங்கு பெருகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இத்தகைய வாய்ப்புகள் நிலைக்க வேண்டும் என்றால், ஆங்கில அறிவைப் புறக்கணிக்கலாகாது, இந்த வாய்ப்புகளின் இடைவெளி மிகக் குறுகியது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டு, வாய்ப்புகளை இழந்து புலம்புவதில் பலனில்லை. சாதாரண கிராம மக்கள், தமது குழந்தைகள் உரக்கப்படிப்பதையும் அதுவும் ஆங்கிலப்பாடங்களைப் படிப்பதையும் பார்த்து புளகாங்கிதம் அடைகின்றனர். தாம் அடையாததை தமது குழந்தைகள் அடைய வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில் தவறில்லை. இது எந்த விதத்திலும் தாய்மொழிப்பற்றைப் பாதிக்காது.
மேன்மையான சமுதாயம் உருவாக வேண்டும் என்றால், அதில் உள்ள நல்ல மனிதர்கள் நல்ல பிரஜைகளாக உருவாக வேண்டும் என்றார் அரிஸ்டாடில். நேர்மையான குடிமக்கள் தலையெடுக்க வேண்டுமென்றால், கல்விப்புரட்சி ஒன்றுதான் அதற்கு ஆதாரம். பள்ளிகள் குழந்தைகளின் சிந்திக்கும் சக்தியை வளர்க்க வேண்டும். "கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதிலும் கிடைத்தது இன்று' என்பதற்கேற்ப கேள்வி கேட்கும் திறனை மாணவர்கள் பெறவேண்டும். பாடங்களை மனப்பாடம் செய்து புரிந்துகொள்ளாமல் ஒப்பிக்கும் முறை கைவிடப்பட வேண்டும். மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாடில், எந்த ஒரு பிரச்னை என்றாலும், அதை அலசி ஆராயும் முறையையும் கேள்வி கேட்கும் நேர்த்தியையும் புகட்டினார். ஒரு மாவீரன் உருவானான். மாணவர் - ஆசிரியர் இடையே அத்தகைய அறிவுப் பரிமாற்றம் ஏற்பட வேண்டும். அதனால்தான் பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று பெருமையாகக் கூறப்படுகிறது.
கிருத்திகா என்ற கல் உடைக்கும் தொழிலாளியின் மகள் தேசிய சட்டக்கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தி. மாணவியின் சொந்தக் கிராமத்திலிருந்து பள்ளி வெகுதொலைவில் உள்ளது. அன்றாட ஜீவனம் ஒரு போராட்டம், அதைக்கடந்து வெற்றிகண்ட இந்த மாணவி, போற்றதலுக்குரியவர். மேலோர், கீழோர், நகர்ப்புறம், கிராமங்கள் என்ற பாகுபாடு நாமாக ஏற்படுத்தியது. எல்லாக் குழந்தைகளிடமும் ஏதோ ஓர் ஆற்றல் நிச்சயம் இருக்கிறது. அதை அடையாளம் கண்டு அறிவாற்றலை வளர்க்கும் புனித இடம் பள்ளிக்கூடங்கள்தான்.
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே' என்பது நிதர்சன உண்மை. தமிழ் நாட்டுக்கு இப்போது அன்னையின் அரவணைப்புக் கிடைத்துள்ளது. பாரதியின் புதிய ஆத்திசூடி போல் புதிய கல்வித்திட்டம் அறிவொளிமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கட்டும்!