அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம் 1.9.1998 முதல் அரசாணைப்படி அமலில் இருந்து வருகிறது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்ட நிலையில், 1.4.2003 முதல் ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதற்குக் காரணம் ஓய்வூதிய நிதியில் ஏற்பட்ட பற்றாக்குறையே எனக் கூறப்பட்டது. தொழிற்சங்கங்களின் சட்ட நடவடிக்கையால் 21 மாதங்கள் கழித்து 24.12.2004-ல் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கியபோது, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தங்களில் கொடுக்கப்படும் ஊதிய உயர்வு பலன் தொகை ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்படும் என்ற நிலைப்பாடு எடுக்கப்படவில்லை.
இதனால், 1998 -க்குப் பிறகு போடப்பட்ட இரண்டு ஊதிய ஒப்பந்தப் பலன்கள் ஓய்வூதியர்களுக்கு 2003 முதல் 2007 வரை ஓய்வூதியம் கிடைக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஏற்கெனவே பெற்றிருந்த ஓய்வூதியத் தொகையும் குறைந்தது.
ஓய்வூதியர் குறை தீர்க்கும் குழுவில் தொழிற்சங்கங்களின் தொடர் முறையீட்டின் விளைவாக, ஓய்வூதியர் குழு, அகவிலைப்படி வழங்குவதில் ஒரு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது. இதனால் 2008 முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு அகவிலைப்படி உயர்வை சதவீத முறையில் வழங்க வகை செய்யும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
வருகிற 2018-19-ம் ஆண்டில் இந்தத் திட்டம் செயலிழந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில், இந்தத் திட்டத்தைச் சீரமைக்க 31.3.2008 அரசாணைப்படி அரசு உயர்நிலை அலுவலர்கள், போக்குவரத்துக்கழக அலுவலர்கள், ஓய்வூதியம் தொடர்பான துறை வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஓய்வூதிய சீரமைப்புக் குழுவைத் தமிழக அரசு நியமித்தது. அந்தக் குழுவில் ஏஐடியுசி உள்ளிட்ட 5 தொழிற்சங்கங்கள் இடம்பெற்றிருந்தன.
குழுவின் ஆய்வு முடிவில், சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி போக்குவரத்துக் கழக ஓய்வூதியத் திட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று 6.10.2008-ல் அரசுக்குப் பரிந்துரைத்தது.
குழுவின் பரிந்துரை மீது அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன், 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் இந்தத் திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
நிதிப் பற்றாக்குறையால் சுமார் 3 ஆண்டுகளாக ஓய்வூதியர்களுக்குக் கொடுக்கப்படாமல் இருந்த ஓய்வூதியப் பலன்கள் 28.10.2009 அன்று வழங்கப்பட்டன.
இந்தக் குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தவிர, இதர ஓய்வூதியப் பலன்கள் இன்று வரை கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஓய்வூதியத் திட்டம் அமலான 1.9.1998-க்கு பிறகு போடப்பட்ட ஊதிய ஒப்பந்தங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தில் எந்த உயர்வும் வழங்கப்படாததால், 2010-ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தக் கோரிக்கையில் ஊதிய ஒப்பந்த உயர்வு பலன்தொகைக்கு ஈடான தொகையை (அரசு மற்றும் மின் வாரியத்தில் வழங்குவதுபோல்) ஓய்வூதியருக்கும் வழங்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.
அதன் அடிப்படையில் 22.1.2011 தேதியிட்ட 2010-ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 2003, 2007, 2010-ம் ஆண்டுகளின் ஊதிய ஒப்பந்தப் பலன்களை வழங்குவது, அகவிலைப்படி 45 சதம் வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.
அப்போது பயன்பெறும் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 33,929 பேர் என்றும், 2010 செப்டம்பர் முதல் மார்ச் 2011 வரை தேவையான நிதி ரூ. 24.29 கோடி என்றும், 2011 ஏப்ரல் முதல் மார்ச் 2012 வரை தேவையான நிதி ரூ. 41.64 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
அந்த அளவிலான கணக்கீடுகளோடு, 22.1.2011 அன்று ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி மூன்று மாதங்கள் ஆகியும், இதுவரை ஊதிய உயர்வு ஒப்பந்தப் பலன்கள் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், ஜனவரி 2011 -ல் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தப் பலன்கள் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், போக்குவரத்துக் கழக ஓய்வூதியத் திட்டம் நன்கு செயல்படவில்லை என்பது தெளிவாவதுடன், ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் பலன்களை குறித்த காலத்தில் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. இதற்கு தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், போக்குவரத்துக் கழக ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்தும் வகையில், சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டுமென்பது ஏஐடியுசி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சம்மேளனத்தின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.