பிறப்பும், இறப்பும் எல்லா உயிர் வகைகளுக்கும் பொதுவாக உள்ள இயற்கையின் செயல்பாடு என்பதை யாரும் மறுக்க இயலாது.
ஆம் எனில், நாம் ஏன் அதை நினைவில் நிறுத்த, செயலில் வெளிப்படுத்த ஊக்கமில்லாமல் உள்ளோம் என்பதையும், எல்லா உயிர்க்கும் என்பதிலேயும் மனித இனத்தை மட்டும் மனதில் கொண்டு, சமூக நீதிக் கோட்பாடுகளையும், செயல்பாடுகளையும் வாழ்வியலில் வழிமுறைப்படுத்த முன்மொழிந்து கொண்டுள்ளோம் என்பதையும் உலக சுற்றுப்புறச் சூழல் நாளை, முத்திரையுடன் திரை விலக்கும் ஜூன் மாதமான இம்மாதத்தில் சிந்திப்போம்.
ஒரு நாடு, அதில் வாழும் அனைத்து உயிர்வகைகளின் (மனிதவகை உள்பட) நலமான, வளமான, மகிழ்வான வாழ்வை உறுதிப்படுத்தும், உறுதியான கோட்பாட்டை நிலைநிறுத்தி, அதற்கு ஏற்ப, மாறிடாத, ஆதாரமாக, அடித்தளமாகப் பரிமளிக்க வல்ல தொடர் செயல் திட்டங்களை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, பாரினில் நல்ல நாடு என பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரித்தாகும் உரிமையையும், பெருமையையும் பெற்றதாகும். பாட்டிலே மட்டும் இருந்திட்டால் போதாது, நாட்டிலேயும், அந்த நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டும்.
அறிவியலின் அடிப்படையில், அழகுடன், விந்தைப்படும் வண்ணம், சிந்திக்க வைக்கும் சிலந்திவலைபோல இயற்கையின் உயிர் வலையில், மனித இனம், ஒரே ஒரு கிளை இழை என்பதை நாம் மறக்கலாகாது.
நினைத்திருந்தால்தானே மறந்திருக்க முடியும். தெரிந்தால்தான், புரிந்தால்தான் நினைக்க இயலும். அறிந்து கொள்வதற்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது, அதற்குரிய வாய்ப்பை, இச்சமுதாயம், நமது குழந்தைகளுக்காவது அளித்தல் அவசியம்.
இப்பூவுலகில், ஆழ்கடலிலும், அடர்காடுகளிலும் இன்றும் கணக்கெடுத்து முடியாத எண்ணிக்கையில் கோடிக்கணக்கான உயிர்வகைகள் உள்ளதையும், அவை மனித இனத்துக்கு முன்னரே பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டு வருவதையும் நினைவில்கொள்ள வேண்டும். கண்டுபிடிக்கப்படுவதற்குள், பெயரிடப்படுவதற்குள் உலகிலிருந்து முற்றிலுமாக மனிதனால் அழிக்கப்பட்ட உயிரினங்கள் ஆயிரம், ஆயிரம். இவை அனைத்தும் அசுர வேகத்தில் அரங்கேறியது இப்புத்தாயிரம் ஆண்டுக்குள்தான் என்பதும் வேதனைக்குரிய உண்மையாகும்.
உலகில் பெயரிடப்பட்டுள்ள இருபது லட்சம் உயிர் வகைகளில் மானிடமும் ஒன்று. உலகம் தோன்றி 4,600 மில்லியன் ஆண்டுகள் ஆவதாக அறிவியல் கூறுகிறது. முதல் உயிரினம் தோன்றி 3,500 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. பாலூட்டிகள் தோன்றி 4 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. மனித இனம் தோன்றி 1.5 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. அதாவது, உலகம் தோன்றியது ஜனவரி 1-ம் தேதி என்று வைத்துக்கொண்டால், முதல் உயிரினம் செப்டம்பர் மாதம் 21-ம் தேதியும், தாவரங்கள் அக்டோபர் 12-ம் தேதியும், பூச்சிகள் டிசம்பர் 14-ம் தேதியும், விலங்குகள் 26-ம் தேதியும் தோன்றின. மனிதன் தோன்றியதோ டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணி 24 நிமிடங்கள் என்ற காலக்கணிப்பு உண்மையை, நாம் சற்றே அமைதியுடன் சிந்திக்க வேண்டும்.
இப்பூவுலகில் புல், பூண்டுகள் இல்லையேல் மனிதன் வாழ முடியாது. பூத்திடும் தாவரங்கள் இல்லாமல் வாழ முடியாது. புல்லினங்கள், பட்டாம்பூச்சிகள், விலங்குகள் இல்லாவிட்டாலும் நாம் வாழ முடியாது. பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களும் நம் உயிரைக் காக்கும் கருணைப் பணியைத் தரணியெங்கும் தங்குதடையின்றி தொடர்ந்து செயலாக்கி வருகின்றன. எனவே, அவையும் நமது வாழ்வுக்கு இன்றியமையாத ஆதாரங்களாகும்.
ஆனால், மனிதன் என்ற இந்த ஓர் இனம் இவ்வுலகில் இல்லாவிட்டால் மற்ற அனைத்து உயிர் வகைகளின் நிலை என்னவாகும்? அவைகளை நிலைகுலைய வைக்கும் மனிதனின் இரக்கமற்ற செயல்களின் பாதிப்பு விலகினால், அவைகள் நித்தமும், நிச்சயம் வாழ்ந்திடும். வாழ்வது மட்டுமல்ல, அவை மிக மகிழ்வாக வாழ்ந்திடும்.
எனவேதான் வள்ளலாரின் மிக உன்னதமாக, மிக உயர்ந்த, கருணை மனநிலையாகிய "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றில்லாவிட்டால்கூட, உலகில் நம்முடன் வாழும் சகஜீவன் என்ற அளவிலாவது - அவைகள் வாழ்வுக்கேற்ற உரிமைகளை அளித்தேயாக வேண்டும். ஏனெனில், அவை இல்லையேல் நாம் இல்லை.
இயற்கை கொடுத்தது, கொடுக்கிறது, கொடுத்துக் கொண்டே இருக்கும். நாமோ, எடுத்தோம், எடுத்துக்கொண்டே இருக்கிறோம்.
மற்ற உயிர்களின் பங்கைத் தடுத்தோம், தடுத்துக்கொண்டே இருக்கிறோம். உலகின் வாழ்வாதாரத்தைக் கெடுத்தோம், கெடுத்துக்கொண்டே இருக்கிறோம். இயற்கையே எதிர்காலம் என்பதுதான் மறுக்க முடியாத அறிவியல் மட்டுமல்ல, வாழ்வியலின் அடிப்படையான உண்மையாகும்.
உலகச் சுற்றுச்சூழல் தினம் இந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி. இயற்கை மனிதனுக்கு அளிக்கும் சேவைகள் அல்லது மனிதனின் சேவையில் இயற்கை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உலகெங்கும் நினைவில் நிறுத்திக் கொண்டாடப்பட்டது.
மனிதனின் மதிகெட்ட தாக்குதலால் நிலையிழக்காமல் இயற்கையைக் காப்பதும், மக்களின் மத்தியில் மனமாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், குறிப்பாக குழந்தைகள் மனதில் கருணை உணர்வு ஊறவும் ஏதுவாகும் வண்ணம் 1974-ம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகள் அமைப்பால் இந்த நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தின் எதிர்காலம், ஒளிமயமாகத் திகழ வேண்டுமெனில், பள்ளிக் குழந்தைகளுக்கு இயற்கையை எட்டிப்பார்க்க, தொட்டுப்பார்க்க, முகர்ந்து பார்க்க, முழுகிப்பார்க்க, புரண்டு பார்க்க வாய்ப்பளிக்கவல்ல வசதிகள் உருவாக்கப்பட வேண்டும்.
மனிதனால் மாற்றப்படாத வனப் பகுதிகளில் உயிர் வகைகள் மட்டுமன்றி, அஃறிணைப் பொருள்களும் சேர்ந்து ஒன்றிணைந்து, பின்னிப் பிணைந்து, சார்ந்து, கொடுத்து, எடுத்து, மீளக் கொடுத்து நிலையான, வளமான வாழ்வை வாழ்ந்திடும் கலையைக் கற்க வாய்ப்பாக அது அமைந்திடும்.
பள்ளிப்பருவத்தில், ஒரு முறையாவது, இயற்கை எழில் மிளிரும் கானகப் பகுதியிலே, மூன்று நாள்களாவது முகாமிட்டு, இயற்கையை முகர்ந்திட, நுகர்ந்திட வழிவகைகள் செய்ய வேண்டும்.
கடந்த கால நிகழ்வுகளைத் தெரிந்து, நிகழ்காலத்தை நினைத்துப் பார்த்து, எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கும் கூரறிவைக் குழந்தைகளுக்குத் தூண்ட பள்ளிக் கல்வி வழிவகுக்க வேண்டும்.
தமிழக மலைகளின் வயதை ஒப்பிட்டால், இமயமலைத் தொடரில் உள்ள பாறைகளும், கற்களும் மழலையின் வயதுக்கு ஒப்புடையதே என்பதும், தமிழகத்தில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனம் வாழ்ந்து வருகிறது என்பதும், இந்திய சரித்திரம், கங்கைக் கரையிலிருந்து அல்ல, காவிரிக் கரையிலிருந்து தான் வடக்கு நோக்கிப் பரவியது என்பதும், தாமிரபரணி நதிக் கரைகளிலே அகழ்வாய்வு செய்ததில் பெறப்பட்ட செப்புக் கலசங்கள், சிந்து சமவெளி நாகரிகத்தின் இருப்பிடமான ஹரப்பாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட செப்புக் கலசங்களின் அதே வடிவம், அதே 6 சதவிகிதம் அர்சனிக் கலவை கொண்டுள்ளதால் 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் புலனாகும்.
பல இன மனித எலும்புகள் இங்கே ஆய்வில் சேகரிக்கப்பட்டதால், ஒரு பெரும் பன்னாட்டு நாகரிகமே தமிழகத்தில் பரிமளித்தது என்பதும், நமது மாநிலம் 5,640 மலரும் தாவர வகைகளைக் கொண்டு அசாமை விட, மேகாலயத்தைவிட, உத்தரப் பிரதேசத்தைவிட, மத்தியப் பிரதேசத்தை விட, கர்நாடகத்தைவிட, கேரளத்தைவிட அதிக அளவில் கொண்டு, இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதும், இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காணப்படும் மண் வகைகள், வன வகைகள், உயிர் வகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பெருமையுடையது.
உலகத்திலேயே எங்குமே இல்லாத 533 தாவர வகைகள் உள்ளதும், 187 பாலூட்டி மிருக வகைகளும், 454 பறவை இனங்கள் கொண்டுள்ளதும், குறைந்த மழை அளவாக 300 மி.மீட்டரும், மிக அதிகமாக 3,000 மி. மீட்டர் பொழிவதும், கடல் மட்டத்திலிருந்து 8,000 அடி வரை உயர மலைகள் கொண்டதும், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகிதம் கொண்டும், நிலப்பரப்பு 4 சதவிகிதமாகவும், நீர்வளம் 3 சதவிகிதமாகவும் கொண்டுள்ளது.
இது போன்ற உண்மைகள் தெரிந்தால்தான் வருங்காலத் தமிழ்ச் சமுதாயம் பெருமிதம் கொண்டு, ஒருமித்த கருத்துடன், ஒழுக்கத்துடன், காசநோயால் பாதிக்கப்படாமல், மாசு களைந்து, ஊக்கமாகச் செயல்பட்டு, நல்ல பல இயற்கைவளப் பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்றி, பல் உயிர் ஓம்பி, எல்லா உயிர்வகைகளின் நலமான, வளமான, மகிழ்வான, வாழ்வுக்கு ஏற்ற செயலாக்கங்களை நிகழ்த்தும் என்பது உறுதி.
"காக்கைக் குருவி எங்கள் ஜாதி' என்ற மகாகவி பாரதியாரின் பாடலை ஏற்று, அதை நிஜமாக்கினால், ஒளிமயமான எதிர்காலத்தைத் தமிழ்ச் சமுதாயம் எதிர்கொள்வது திண்ணம். ஆம் - மலைகளின் நலமே, சமவெளியின் வளம். வனம் என்றாலே வளமும், நலமும். எனவே, வாழ்க வனமுடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.