இது ஏழைகளின் பட்ஜெட் அல்ல...

செலவு அதிகரித்திருக்கிறது, என்றாலும் நிதிப் பற்றாக்குறையை 5.5 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாகக் குறைத்திருக்கிறேன்' என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது பட்ஜெட் உரையின்போது மார்தட்டிக் கொண்டார். நித
Updated on
4 min read

செலவு அதிகரித்திருக்கிறது, என்றாலும் நிதிப் பற்றாக்குறையை 5.5 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாகக் குறைத்திருக்கிறேன்' என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது பட்ஜெட் உரையின்போது மார்தட்டிக் கொண்டார். நிதிநிலை அறிக்கையைப் படித்த அனைவருமே, நிதிப்பற்றாக்குறைத் தொகை ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறதே, பிறகு எப்படி நிதிப்பற்றாக்குறை வீதம் மட்டும் குறைந்து போனது எனக் குழம்பிப் போனார்கள்.

 பட்ஜெட்டை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர்கூட பிரணாப் காட்டிய மாயாஜாலத்தில் மயங்கிப் போனார்கள். இது எப்படிச் சாத்தியம் என்று அவர்கள் ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை. உண்மையில், பற்றாக்குறை வீதத்தைக் குறைப்பதற்கு பிரணாப் எதுவுமே செய்யவில்லை. பிறகு எப்படி நிதிப்பற்றாக்குறை குறைந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? இந்த அதிசயத்தை நிகழ்த்தியது சாட்சாத் பணவீக்கம்தான் என்பதை உன்னிப்பாகக் கவனித்தால் தெரியும்.

 2010-11 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதிப் பற்றாக்குறை ரூ.3.81 லட்சம் கோடி என்று மதிப்பிட்டார் நிதியமைச்சர். இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான (ஜிடிபி) ரூ.69.35 லட்சம் கோடியில் 5.5 சதவீதம். அதன் பிறகு பணவீக்கம் படுவேகமாக உயர்ந்தது. பொருள்களின் விலைகள் விண்ணைத் தொட்டன. புதிய விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (நாமினல் ஜிடிபி) ரூ. 69.35 லட்சம் கோடியிலிருந்து ரூ.78.78 லட்சம் கோடியாக அதிகரித்தது. இந்த ரூ.9.43 லட்சம் கோடி உயர்வு முழுக்க முழுக்க பணவீக்கத்தால் மட்டுமே. எந்த விதமான கூடுதல் உற்பத்தியும் இல்லாமல் உற்பத்தி மதிப்பு மட்டும் அதிகரித்ததன் விளைவுதான் பற்றாக்குறை விகிதம் குறைந்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 பணவீக்கத்தைப் பொறுத்து அதிகரித்துக் காட்டப்பட்ட ரூ. 78.78 லட்சம் கோடியில் தற்போதைய பட்ஜெட்டில் மதிப்பிடப்படும் பற்றாக்குறையான ரூ.4 லட்சம் கோடி என்பது 5.1 சதவீதம். இதைத்தான் பற்றாக்குறை வீதம் குறைந்திருக்கிறது என்று பிரணாப் கூறியிருக்கிறார். பணவீக்கம் உயராமல் இருந்திருந்தால், ரூ.69.35 லட்சம் கோடி உண்மையான உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை மதிப்பு 5.8 சதவீதமாக உயர்ந்திருக்கும். கண்டிப்பாக 5.5 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாகக் குறைந்திருக்காது. இடைக்கால நிதிக் கொள்கை அறிக்கையில் இந்த உண்மை ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதிகரித்துக் காட்டப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பினால்தான் பற்றாக்குறை வீதம் குறைந்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

 உண்மையான ஜிடிபி மதிப்புக்கும் இப்போதைய விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஜிடிபி மதிப்புக்கும் இடையேயான வேறுபாடுதான் பணவீக்கம். 2005-06-ம் நிதியாண்டிலிருந்து இந்த இடைவெளி அதிகரித்துக்கொண்டேதான் வந்திருக்கிறது. 2005-06-ல் இந்த வேறுபாடு 9.4 சதவீதமாக இருந்தது. 2006-07-ல் 16.9 சதவீதமாக உயர்ந்தது. 2008-09-ல் 21.8 சதவீதமாகவும், 2009-10-ல் 31.3 சதவீதமாகவும் அதிகரித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு 2010-11-ல் இந்த மதிப்பு 38 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

 ஒருவேளை, உண்மையான, பெயரளவிலான ஜிடிபி மதிப்புகளுக்கு இடையேயான வேறுபாடு கடந்த 2005-06-க்குப் பிறகு உயராமல் இருந்திருந்தால், 2010-11-ம் ஆண்டில் பற்றாக்குறை 21 சதவீதமாக இருந்திருக்கும். 2009-10 அளவிலேயே தொடர்ந்திருந்தால்கூட 2010-11-ல் பற்றாக்குறை 7.5 சதவீதமாக இருந்திருக்கும். எப்போது பணவீக்கம் மிக அதிகமாக இருக்கிறதோ அப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், நிதிப்பற்றாக்குறைக்கும் இடையேயான விகிதத்தைக் கணக்கிடுவதில் அர்த்தமேயில்லை.

 2005-06-ல் இருந்து பணவீக்கத்தின் காரணமாக பெயரளவிலான ஜிடிபி மதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றாலும், அந்த அளவுக்கு மறைமுக வரி வருவாய் உயரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அதனால், பற்றாக்குறையையும் பெயரளவிலான ஜிடிபியையும் ஒப்பிடுவதே தவறாகிறது.

 இந்தப் பட்ஜெட்டில் வருவாய்க்கான வழிகள் அதிகரிக்கப்படவில்லை என்று நிதியமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி ஏதும் விதிக்காமலேயே பற்றாக்குறையைச் சமாளித்திருக்கிறார் என்று ஊடகங்கள் அவரைப் புகழ்ந்து தள்ளுகின்றன. உண்மை என்னவென்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, எங்கெல்லாம் நியாயமாக வரி வசூலிக்க முடியுமோ அங்கெல்லாம் வரி வசூலிப்பதை நிறுத்திவிட்டது.

 2005-06-ல் உண்மையான ஜிடிபி மதிப்பில் இருந்த உற்பத்தி வரி வசூலின் பங்கு, 2010-11-ல் பாதியாகக் குறைந்திருக்கிறது. இப்போதைய விலையில் கணக்கிடப்படும் ஜிடிபி மதிப்பிலும் இது இன்னும் குறைவுதான்.

 2005-06-லிருந்து ஜிடிபி மதிப்பில் உற்பத்தி வரியின் பங்கு 3 சதவீதமாக இருந்ததாகவும் இது 2010-11-ம் ஆண்டில் 1.5 சதவீதமாகக் குறைந்துவிட்டதாகவும் 2010-11-ம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, 2005-06-ம் ஆண்டில் வசூலித்ததைவிட 2010-11-ம் நிதியாண்டில் உற்பத்தி வரி ரூ.1 லட்சம் கோடி குறைவாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. சுங்கவரி ரூ.43 ஆயிரம் கோடி குறைந்திருக்கிறது. ஆக, ரூ.1.43 லட்சம் கோடி வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 2006-07-ம் ஆண்டில் ரூ.13 ஆயிரம் கோடியும், 2008-09ல் ரூ.63 ஆயிரம் கோடியும், 2009-10-ல் ரூ.81 ஆயிரம் கோடியும் வரிக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

 2007-08-ம் ஆண்டில் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக உற்பத்தி வரியில் ரூ.59 ஆயிரம் கோடியும், சுங்க வரியில் ரூ.41 ஆயிரம் கோடியும் சலுகை வழங்கப்பட்டது. அதைக் கழித்துப் பார்த்தாலும் 2010-11-ம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடிதான் வரிக்குறைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த நிதியாண்டில் ரூ.1.43 லட்சம் கோடி குறைவான வரி வசூல் செய்யப்பட்டிருக்கிறது.

 நியாயமாக வசூலிக்க வேண்டிய வரியைக்கூட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வசூலிக்க மறுக்கிறது என்பதுதான் இதன் பொருள். இவ்வளவு வரிக்குறைப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டாலும், பணவீக்கம் என்னவோ அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. இப்போது திடீரென 2007-08-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வரிக்குறைப்பு நடவடிக்கைகளை ரத்து செய்தால், பணவீக்கம் மேலும் உயரக்கூடுமோ என்கிற அச்சம் வேறு அரசை ஆட்டிப் படைக்கிறது.

 வரிகள் குறைக்கப்படும் அளவுக்குப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றும் நெருக்கடியில் இருக்கவில்லை. அந்த நிறுவனங்களின் லாபக் கணக்கைப் பார்த்தாலே இது புரியும். பெரும்பாலான நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்திருக்கின்றன. வரிவிதிப்புக்கு முந்தைய நிலையில் நிறுவனங்களின் லாபம் 2005-06-ல் ரூ.4.08 லட்சம் கோடியாகவும், 2007-08-ல் ரூ.7.11 லட்சம் கோடியாகவும், பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட 2008-09-ல் ரூ. 6.68 லட்சம் கோடியாகவும்,2009-10-ல் ரூ.8.24 லட்சம் கோடியாகவும் இருந்தது.

 2008-09-ம் நிதியாண்டைக் காட்டிலும் 2009-10-ல் நிறுவனங்களுக்கு 23.35 சதவீதம் அதிக லாபம் கிடைத்திருக்கிறது. வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் பொதுமக்களைச் சென்றடையவில்லை என்பதையே இந்தக் கொள்ளை லாபங்கள் நமக்குக் காட்டுகின்றன. அதனால், இன்னமும் வரிச்சலுகைகளைத் தொடர்ந்து கொண்டிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகைகள் இத்துடன் முடியவில்லை. வரிவிலக்கு என்பது ஒருபுறம் இருக்க, சட்டப்படியான வரிவிகிதத்தைவிடக் குறைவான அளவிலேயே இவை வரி செலுத்துகின்றன. 2005-06-ல் இருந்தே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது.

 2005-06-ல் 50 சதவீதமாக இருந்த சலுகை அளவு 2010-11-ல் 72 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2010-11-ம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை மட்டும் ரூ.5.12 லட்சம் கோடியாகும். இதுதவிர, வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட வரிவிலக்கு ரூ.1 லட்சம் கோடி, வரிக்குறைப்பு ரூ.43 ஆயிரம் கோடி. இதனால், சிறிய நிறுவனங்களைக் காட்டிலும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த அளவு வரி மட்டும் செலுத்தி தப்பித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த அளவுக்குச் சலுகை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் 58 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வேளாண்மை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் மொத்த மூலதன மதிப்பீட்டில் விவசாயம், 2005-06-ம் ஆண்டிலிருந்து வெறும் 7.5 சதவீத அளவில் எவ்வித வளர்ச்சியுமில்லாமல் தேங்கியிருப்பதாக இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. வேளாண்துறை பிழைக்க வேண்டுமானால், பெருமளவு முதலீடு செய்யப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கை பரிந்துரைத்திருக்கிறது.

 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகையில் ஒரு சிறு பகுதி மட்டுமே வேளாண்மையின் சீரான வளர்ச்சிக்குப் போதுமானது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. அப்படியிருந்தும் இதை சாமான்ய மக்களுக்கான பட்ஜெட் என்று கூறிக்கொள்கிறார்கள்.

 வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கும் பட்ஜெட் உரையில் பிரணாப் முகர்ஜி அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஜனவரி 25-ம் தேதி செய்தியாளர்களிடம் எதைச் சொன்னாரோ அதையே தனது பட்ஜெட் உரையில் மீண்டும் ஒருமுறை கூறினார். சம்பிரதாயத்துக்காக ஊழல் பற்றியும் பேசினார்.

 கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 66 திட்டங்களில் வெறும் 25 திட்டங்கள் மட்டுமே நிறைவடைந்திருப்பதாக அவரே ஒப்புக்கொண்டார். மற்றவையெல்லாம் காகிதத்தில்தான் இருக்கின்றனபோலும். மிக முக்கியமான இந்த அம்சத்தை ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை.

 இந்தப் பட்ஜெட்டில் சில நல்ல அம்சங்களும் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அவற்றை மட்டுமே ஊதிப் பெரிதாக்கி மக்கள் நலனுக்கான பட்ஜெட் இது என்பதுபோன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்திவிட்டன. உண்மையில், இது ஏழைகளுக்கான பட்ஜெட் அல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான நிதிநிலை அறிக்கை.

 இதனால் பயன்பட இருப்பது சாமானிய இந்தியக் குடிமக்களோ, சிறு தொழில் முனைவோரோ, விவசாயிகளோ, மாத வருமானம் பெறும் ஊழியர்களோ அல்ல. பன்னாட்டு நிறுவனங்களான கார்ப்பரேட் நிறுவனங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com