நதிநீர் இணைப்பு ஒரு தேசியத் தேவை!

நம் நாட்டின் நிலப்பரப்பு உலகப்பரப்பில் 2 விழுக்காடு மட்டுமே. ஆனால், மக்கள்தொகையோ உலக மக்கள்தொகையில் 16 விழுக்காடு. அதுதான் நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்னை. இந்த நிலையில் நம் நாட்டில் ஓடும் நதிக

நம் நாட்டின் நிலப்பரப்பு உலகப்பரப்பில் 2 விழுக்காடு மட்டுமே. ஆனால், மக்கள்தொகையோ உலக மக்கள்தொகையில் 16 விழுக்காடு. அதுதான் நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்னை.

இந்த நிலையில் நம் நாட்டில் ஓடும் நதிகளின் நீர் அனைத்தையும் நாம் பயன்படுத்தி, ஓர் அங்குல நிலம்கூட தரிசாகக் கிடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உலகில் உள்ள நீரில் 97 விழுக்காடு கடலில் உப்புத் தண்ணீராக இருக்கிறது. மீதமுள்ள 3 விழுக்காட்டை நூறாக்கினால் அதில் 77 விழுக்காடு பனியாக உறைந்து கிடக்கிறது. உலக மலைகளிலும் தென்துருவ, வடதுருவங்களிலும் பனிப்பாறைகளாக இருக்கும். இவற்றுள் அடைபட்டுக்கிடக்கும் தண்ணீர் இன்று உலகிலுள்ள ஆறுகளனைத்தும் 700 ஆண்டுகள் கொண்டு செல்லும் தண்ணீருக்குச் சமமாகும். ஆனால், பயிர் செய்யவோ உயிர்காக்கவோ பயனில்லாமல் இப்பனிப்படலங்கள் அமைந்துள்ளன.

22 விழுக்காடு நிலத்தடி நீராகப் பூமியிலிருக்கிறது. ஆக எஞ்சியிருப்பது ஒரு விழுக்காடுதான். இந்த ஒரு விழுக்காடுதான் ஆறுகளில், ஏரிகளில், குளங்களில் நீராகப் பயன்படுத்தத்தக்கதாக இருக்கிறது.

எனவே, நீர் அரிதினும் அரிய பொருளாகிவிட்டது. நம்நாட்டில் பெய்யும் அளவு மழைதான் அமெரிக்காவிலும் பெய்கிறது. ஆனால், அவர்கள் நாம் சேமிப்பதைவிட ஆறுமடங்கு அதிகமாகச் சேமித்து வைக்கிறார்கள்.

நம் நாட்டிலேயே வற்றாத ஜீவ நதிகள் இருக்கின்றன. மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் தரும் நதிகளும் இருக்கின்றன. ஒருபுறத்திலே வெள்ளப்பெருக்கால் சேதமேற்படுகிறது. மறுபுறத்தில் வெள்ளமில்லாமல் பயிர்கள் கருகி, பஞ்சமும் பசியும் ஏற்படுகின்றன.

இவற்றுக்கு நிரந்தரத் தீர்வு நம்நாட்டில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திரா நதிகள் தொடங்கி, தெற்கே ஓடும் வைகை, தாமிரபரணி வரையும் அதற்கும் தெற்கே ஓடும் பழையாறு வரையும் இணைப்பதுதான்!

ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்த நேரத்தில் அவரால் விரும்பி அழைக்கப்பட்டு அமைச்சராகப் பொறுப்பேற்ற கே.எல். ராவ் நதிகளை இணைப்பது சாத்தியம் என்றே செயல்பட முனைந்தார். கங்கை - காவிரி இணைப்பு என்று திட்டமிட்டார்.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, 1979-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி ""கங்கை - குமரி இணைப்பு வேண்டும், மக்களுக்கு உணவளிக்கும் பயிர் வளர்ப்பதோடு ஒரு தேசிய நீர் வழிச்சாலையும் நமக்குக் கிடைக்கும்'' என்று பேசினேன்.

அந்த உரையைக் கேட்ட ஆர். வெங்கட்ராமன், சி. சுப்பிரமணியம், பாகனேரி ஆர்.வி. சுவாமிநாதன் ஆகியோர் பெரிதும் பாராட்டினார்கள்.

ஓய்வுபெற்று தில்லி சரோஜினி நகரில் வாழ்ந்து கொண்டிருந்த கே.எல். ராவைச் சந்தித்துப் பேசியபோது இப்போதும் நதிகளை இணைப்பது சாத்தியமே என்று உறுதிபடக் கூறினார்.

மும்பை சென்று பிளிட்ஸ் ஏட்டின் ஆசிரியர் ஆர்.கே. கரஞ்சியாவைக் கண்டபோது ""எத்தனையோ பேரறிஞர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றக் கனவு கண்டார்கள். நேரு, காமராஜ் முதற்கொண்டு இந்திரா காந்தியும் விரும்பினார்கள் ""நான் கனவு காணும் இந்தியா'' என்ற நூலிலும் இதுபற்றி எழுதியுள்ளேன். எங்கள் ஏடு இத்திட்டத்துக்கு எப்போதும் ஆதரவு தரும்'' என்று கூறி உற்சாகப்படுத்தினார்.

நாங்கள் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்று தனியமைப்பு வைத்திருந்த நேரத்தில், நாகர்கோவிலில் நீர்ப்பாசன மாநாடு நடத்தினோம். மாநாட்டின் முகப்பில் தென்னை; பனை; கரும்பு; வாழை முதலிய மரங்களை நட்டு ""மக்களே! நீர்வாழவே; நாங்கள் வாழ விரும்புகிறோம். நீர்வாழ; எங்களுக்கு நீர்; நீர் தருவீரா?'' என்று எழுதிய அட்டைகளை அம்மரங்களில் கட்டித் தொங்க விட்டிருந்தோம்.

இரண்டு மைல் நீளத்துக்கு ஊர்வலம் நடத்தினோம். மாநாட்டில் நதிகள் தேசிய மயமாக்கப்பட்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.

குமரி முனையில் வங்காள விரிகுடா கடலும், இந்து மகா சமுத்திரமும் அரபிக் கடலும் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் ஒரு குடத்தில் நீர் எடுத்தோம்.

தில்லிக்கு ரயில் மூலம் தொண்டர்களோடு சென்று வழியெங்குமுள்ள ரயில் நிலையங்களில் துண்டறிக்கைகளை விநியோகித்துக் கொண்டே சென்றோம்.

தில்லியில் யமுனையிலிருந்தும் கங்கையிலிருந்தும் இருகுடங்களில் கொண்டு வந்த நீரையும்; குமரியில் முக்கடலும் கூடுமிடத்தில் எடுத்த நீரையும் குடங்களில் வைத்து நாடாளுமன்றத்தின் முன்பு 1986-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று காலைமுதல் மாலைவரை ""இந்திய நதிகளை இணைப்போம். இந்தியர் ஒன்றென நினைப்போம்'' -என்று எழுதிய அட்டைகளை ஏந்தி உண்ணா நோன்பிருந்தோம். நிறைவாகப் பெரிய பாத்திரத்தில் அனைத்து நீரையும் கலந்தோம்.

அப்போதிருந்த நீர்ப்பாசன அமைச்சர் சங்கரானந்த்தைச் சந்தித்து மனுக் கொடுத்தோம். பாரதப் பிரதமர் ராஜீவைச் சந்தித்து எங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும்போது, ""கொள்கை அளவில் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம். முதலில் விந்தியத்துக்குத் தெற்கேயிருக்கும் நதிகளை இணைப்போம். பின்னர் கங்கை உள்ளிட்ட வடபுல நதிகளை இணைப்போம். பின்னர் இரண்டு திட்டங்களையும் இணைத்து ஒன்றாக்குவோம்'' என்று உறுதிமொழி அளித்தார்.

இது நடந்தது 1986-ல். அதன்பிறகு, பல ஆண்டுகள் கடந்த பின்பும் இது நிறைவேறாமலிருந்ததால் ஒருமுறை நானும் தோழர்களும் சென்னை கோட்டையில் சத்தியாகிரகம் செய்யப் புறப்பட்டோம். மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் வெள்ளி வேலொன்றை என் கையில் கொடுத்து இது வெற்றிவேலாக அமையட்டும் என்று வாழ்த்தினார். கோட்டையை அடையும் முன்பே நாங்கள் கைது செய்யப்பட்டோம்.

இந்தியாவில் 50 மைல்களுக்கிடையே ஏதேனும் ஒரு நதி ஓடுகிறது. அவற்றைச் சீரமைத்து ஒன்றோடொன்று இணைப்பது எளிது. சிலர் விந்தியமலை குறுக்கே நிற்கிறதே என்கிறார்கள். தொழில்நுட்ப வல்லுநர்கள் விந்தியத்துக்கு மேல் நீரை ஏற்றுவதற்கு எவ்வளவு மின்சக்தி தேவையோ அதே அளவு சக்தியையோ அதைவிட அதிகமான சக்தியையோ அது மறுபக்கம் அருவியாய்க் கொட்டும்போது நீர் மின் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்கின்றனர்.

வேறு சில நிபுணர்கள் விந்தியத்தை நெருங்காமலே கூட இணைப்புத்திட்டக் கால்வாயை வெட்டிக் கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.

தேசிய நீர் வழிப்பாதை அமைந்துவிட்டால் பல்லாயிரம் கோடிக்கணக்கில் எண்ணெய்க்கு அந்நியச் செலாவணியை அதிகமாகச் செலவு செய்ய வேண்டியதில்லை.

தேசிய நில வழிச்சாலை வந்துவிட்டதைப்போல்; தேசிய நீர் வழிச்சாலை அமைந்துவிட்டால் மக்களின் பயணச் செலவும்; சரக்குகளைக் கொண்டு செல்லும் செலவும் வெகுவாகக் குறைந்துவிடும்.

சான்றாக, ஒரு குதிரை சக்தியைக் கொண்டு; தரை வழியில் 150 கிலோ பாரத்தைக் கொண்டு செல்ல முடியும் என்றால், இதே ஒரு குதிரை சக்தியைப் பயன்படுத்தி 500 கிலோ பாரத்தை ரயில் மூலம் கொண்டு போகலாம். இதே ஒரு குதிரை சக்தியைப் பயன்படுத்தி நீரின் மேல் கப்பலில் ஐயாயிரம் கிலோ பாரத்தைக் கொண்டு செல்லலாம்.

எவ்வளவு அந்நியச் செலாவணி மிச்சமாகும் என்று சிந்தித்துப் பார்ப்போமாக. கடலோர ஊர்களுக்கு மட்டுமல்லாமல் நதியோர ஊர்களுக்கும் மக்கள் பெரிய கப்பலிலோ சிறிய கப்பலிலோ செல்ல முடியும். ஆண்டுதோறும் சாலைப் பராமரிப்புக்குச் செலவிடும் தொகையும் கணிசமாகக் குறையும்.

சுற்றுச்சூழல் மாசுபடாமல்; மக்கள் நலம் பேணும் இத்திட்டத்தைச் செயல்படுத்த நம் அரசு தீர்மானிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் பத்து ஆண்டு காலத்துக்குள் செயல்படுத்துங்கள் என்று கூறிய கால எல்லை தாண்டிப் பல ஆண்டுகள் ஆகின்றன.

நமது நாட்டு நதிகளில் ஓரடி உயரத்தில் 250 கோடி ஏக்கர் பரப்பளவில் உள்ள நீரில் நாம் 30 விழுக்காடுமட்டும்தான் பயன்படுத்துகிறோம். மீதி நீரெல்லாம் கடலுக்குப் போகிறது.

எந்தவொரு மாநிலத்தின் தேவையையும் புறக்கணிக்காமல் கடலுக்கு வீணாகச் செல்லும் நீரில் ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்படும் நீரைத் தேசியத் திட்டத்துக்குத் திருப்புவதும்; வீணாகும் நீரைத் தடுப்பதுமே இத்திட்டம்.

எல்லா மாநிலங்களும் பயனடையுமே தவிர, எந்தவொரு மாநிலத்துக்கும் பாதகம் ஏற்படாது.

தேசிய நீரோட்டமும் வேண்டும். தேசமெங்கும் நீரோடவும் வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com