‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

களையிழக்கும் தேர்தல் திருவிழா

தேர்தலுக்குக் குறைந்த நாள்களே உள்ள நிலையிலும், முழுமையாகக் கூட்டணி உறுதி செய்யப்படாமை, வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமை, தேர்தல் கமிஷனின் கடுமையான நெருக்கடிகள் என பல்வேறு காரணங்களால் பேரவைத் தேர்தல் பணிகள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:15 am

வை. இராமச்சந்திரன்

தேர்தலுக்குக் குறைந்த நாள்களே உள்ள நிலையிலும், முழுமையாகக் கூட்டணி உறுதி செய்யப்படாமை, வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமை, தேர்தல் கமிஷனின் கடுமையான நெருக்கடிகள் என பல்வேறு காரணங்களால் பேரவைத் தேர்தல் பணிகள் கிராமப்புறங்களில் களை இழந்து காணப்படுகின்றன.

 முன்பெல்லாம் பேரவைத் தேர்தலானாலும் சரி, மக்களவைத் தேர்தலானாலும் சரி, தேர்தல் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே தேர்தல் வேலைகள் களைகட்டிவிடும். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைப் போலத் தேர்தலும், கிராமப்புற மக்களுக்குத் திருவிழா போன்று காட்சியளிக்கும்.

 தேர்தலையொட்டி, ஆங்காங்கே தங்களது விருப்பமான கட்சி, வேட்பாளர்களுக்கு அவர்களிடம் இருந்து எதையுமே எதிர்பார்க்காமல் சுவர்கள் தோறும் தொண்டர்கள் விளம்பரம் எழுதத் தொடங்கிவிடுவர்.

 வாக்களிக்கத் தகுதிபெறாத சிறுவர்கள் முதல் வாக்களிக்கத் தகுதி படைத்த இளைஞர்கள், முதியோர்கள் எல்லாம், தாங்கள் விரும்பும் கட்சிகளின் கொடிகளை மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கட்டிச் செல்வதும், சட்டைப் பையில் பேட்ஜ், தலையில் தொப்பி அணிந்து செல்வதும், தேர்தல் சின்னங்களைத் தலைமுடியில் அலங்காரம் செய்து வலம் வருவதும், தேர்தல் அலுவலகம் அமைத்துக் கொடி, தோரணங்கள் கட்டி அசத்துவதும், பெருந்தலைவர்களின் படங்களை வைத்து அலங்கார விளக்குகளால் அலங்கரிப்பதும், கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை அமைத்து தங்கள் கட்சிப் பாடல்களையும், கட்சி சார்ந்த நடிகர்களின் பாடல்களையும் ஒலிபரப்பி மகிழ்வதும், தினசரி நாளிதழ்கள் வாங்கிப் படிப்பதோடு, அவரவருக்குத் தெரிந்த அரசியல் பேசி மகிழ்வதும், தேர்தலுக்கு சுமார் 2 மாதங்கள் முன்னரே நிகழ ஆரம்பித்துவிடும்.

 இதன் மூலம் அப்போதெல்லாம் தேர்தல் என்றாலே கிராமப்புறங்களில் ஒரு திருவிழாபோன்று காட்சிதரும். ஆனால், இப்போது தேர்தல் மிகவும் களையிழந்து காணப்படுகிறது. காரணம் தேர்தல் கமிஷன், தேர்தலுக்காக குறித்த கால அவகாசம் மிகக் குறைவு. அதோடு எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் கடுமையான விதிமுறைகளைக் கடைபிடிப்பது என இவைகளெல்லாம் ஒருபுறம்.

 அரசியல் கட்சிகளோ, கூட்டணி அமைப்பதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி எல்லாமே மிக அதிக அளவில் காலம் கடத்தினர். இதனால் கூட்டணி அமைவதிலும், வேட்பாளர்கள் நியமனத்திலும் சுணக்கம் ஏற்பட்டது மறுபுறம்.

 தேர்தல் கமிஷன் கெடுபிடியால் துண்டுப் பிரசுரங்கள்,சுவரொட்டிகள், பூத் சிலிப்புகள் தயார் செய்யும் அச்சகங்கள், சுவர் விளம்பரம் எழுதி வாழ்க்கை நடத்தும் தொழில் செய்யும் பெயிண்டர்கள், கொடிகள், டிஜிட்டல் பதாகைகள் தயாரிக்கும் சிறு சிறு நிறுவனங்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 மேலும் நிலம் வாங்கச் செல்பவர்களும், நகை வாங்கச் செல்பவர்களும், தொழில் சம்பந்தமாக செல்பவர்களும், ஏன் ஏ.டி.எம். மெஷின்களில் பணம் வைக்கச் செல்லும் தனியார் நிறுவனங்களும்கூட இந்தத் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், எந்த அரசியல்வாதியும் இதுவரை பணத்துடன் பிடிபடவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை.

 அரசியல்வாதிகள் உண்மையிலேயே பணம் கொண்டு செல்லவில்லையா? இல்லையென்றால் பணம் கொண்டு செல்லும்போது, அதிகாரவர்க்கத்தின் மிரட்டலால் காவல்துறையும், வருவாய்த்துறையும் பணிந்து விடுகிறதா என்பன போன்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 தேர்தல்நேர முறைகேடுகள் ஏதும் நடைபெற்றாலும்கூட, அதிகாரிகள் அந்த விஷயத்தை மழுங்கடிக்கும் முயற்சியிலேயே ஈடுபடுகின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் உள்ள சாதாரணத் தொண்டன் கொடி கட்டினால், தோரணம் அமைத்தால் தேர்தல் கமிஷன் விதி விளையாடி விடுகிறது.

 தேர்தல் கமிஷன் எவ்வளவு கெடுபிடி செய்தாலும், அரசியல்வாதிகள் தங்கள் விருப்பம் போலத்தான் செயல்படுகின்றனர். அதிலும் ஆட்சி அதிகாரம் கையில் இருப்பவர்கள் பகிரங்கமாகவே தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றனர். இதற்கு உதாரணமாக தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களைக் குறிப்பிடலாம். மொத்தத்தில் தேர்தல் கமிஷன் கெடுபிடிகளால் உண்மையில் பாதிக்கப்படுவது தேர்தல் நேரத்தில் உழைக்கும் வர்க்கத்தினர்தான்.

 வேட்பாளர்களோ சுமார் பத்தே நாள் பிரசாரத்தில் குறைந்த செலவில் தேர்தலில் கலந்து கொள்வதோடு, பதவி கிடைத்தவுடன், கார், பங்களா என கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், பொதுமக்கள்தான் தங்கள் வேட்பாளரின் விவரங்கள் குறித்துத் தெளிவாக அறியும் முன்னரே தேர்தல் முடிந்து விடும். இதனால் பொதுமக்களிடம் தேர்தல் குறித்த ஆர்வம் இல்லாமல் போய்விடும்.

 தேர்தல் கமிஷன் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு உரிய தண்டனையாக, கட்சிகளுக்கு அங்கீகாரம் ரத்து, உறுப்பினர்களின் பதவிபறிப்பு, தேர்தலில் நிற்பதற்கே தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை விரைவிலேயே அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் தேர்தல் கமிஷன் மீதான நம்பிக்கை மக்களிடம் இருக்கும். இல்லையெனில் இவர்கள் விதிமுறைகளை அரசியல்வாதிகள் காற்றில் பறக்க விட்டுவிட்டு, அரசியல் லாபத்தை நோக்கிச் சென்று விடுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.