ஊழல் என்ற வைரஸ்

இந்திய உள்நாட்டு நிலையைச் "சமாளிக்கப்படும் கொந்தளிப்பு' என்று சமூக ஆர்வலர் ஆசிஷ் நந்தி விவரிக்கிறார். இந்தியாவில் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு எல்லையில்லை.  மணிப்பூரில் மாதக்கணக்காக சாலை மறியல், ஆந்திரத
Updated on
4 min read

இந்திய உள்நாட்டு நிலையைச் "சமாளிக்கப்படும் கொந்தளிப்பு' என்று சமூக ஆர்வலர் ஆசிஷ் நந்தி விவரிக்கிறார். இந்தியாவில் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு எல்லையில்லை.

 மணிப்பூரில் மாதக்கணக்காக சாலை மறியல், ஆந்திரத்தில் தெலங்கானா பிரச்னை, சட்டீஸ்கர், பிகார் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் பிரச்னை, ஜம்மு - காஷ்மீரில் தொடர் தீவிரவாதச் சிக்கல் என்று கொந்தளிப்புகளுக்கு முற்றுப்புள்ளியில்லை. ஆயினும் நிர்வாகம் உழல்கிறது, எப்படியோ கொந்தளிப்புகளும் சமாளிக்கப்படுகின்றன.

 உள்நாட்டு விவகாரத்துக்கு அடுத்தாற்போல் நாட்டை எதிர்நோக்கியிருக்கும் பிரச்னை ஊழல். இது உலகளாவிய பரிமாணம் என்று விவரிக்கப்படுகிறது. ஊழலோடு வாழ வேண்டிய நிலை நமது தலைவிதி என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையப் பிரிவு தலைவரை நியமிப்பதில் குளறுபடி, ராணுவ வீரர்களுக்கு வீடு வழங்கும் ஆதர்ஷ் திட்டத்தில் முறைகேடுகள் என்று ஊழல் சமீப ஆண்டுகளில் விசுவரூபம் எடுத்தபோதுதான் மக்கள் விழித்துக் கொண்டனர்.

 காந்தியவாதி அண்ணா ஹசாரேவின் போராட்டம் வலுவடைந்ததற்கு அவர்கள் பின்னால் பலதரப்பட்ட மக்கள் ஆதரவு கொடுத்ததற்கும் இத்தகைய ஊழலின் ஊடுருவல்களை மக்கள் எதிர்க்கத் தொடங்கிவிட்டனர் என்பதற்கும் அடையாளம் என்று கொள்ளலாம். இது வரவேற்கத்தக்க மாற்றம்.

 அக்டோபர் 31 - இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாள். எந்த அளவு இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் படேல் பாடுபட்டார் என்பதைச் சரித்திரம் பறைசாற்றும். அவர் மறைந்தபோது அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணம் ரூ. 247. சொந்த வீடு இல்லை. பொது வாழ்வில் அப்பழுக்கற்ற ஒழுக்கத்தோடு வாழ்ந்த கக்கன்போல் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். கக்கன் அமைச்சர் பதவியைத் துறந்தபோது அரசு ஊர்தியை ஒப்படைத்துவிட்டு தலைமைச் செயலகத்திலிருந்து பொதுப் பேருந்தில் வீட்டுக்குத் திரும்பினார். சொத்து சுகம் ஒன்றும் சேர்க்கவில்லை. மக்கள் பணியில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.

 உயர்ந்த நன்னெறிகள் பொது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதை உணர்த்த படேலின் பிறந்தநாளையொட்டி ஊழல் எதிர்ப்பு வாரமாக வருடா வருடம் அனுசரிக்கப்படுகிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எல்லா அரசுத்துறைகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆண்டு எல்லோருடைய பங்களிப்போடு ஊழலுக்கு எதிரான கூட்டு முயற்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உள்கருத்தை முன்வைத்துள்ளது.

 "விஜி ஐ' அதாவது "விழிப்புக் கண்' என்ற புதிய முயற்சியை ஊழல் கண்காணிப்பு ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் பொதுமக்கள் அரசு மற்றும் பொதுத்துறைகளில் நிகழக்கூடிய ஊழல் பற்றிய புகார்கள் சுலபமாக அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கணினி, செல்போன் மூலமாகத் தகவல் கொடுக்கலாம் என்றும் கையூட்டுப் பரிமாற்றலைப் படம் எடுத்தும் இணையதளம் மூலம் அனுப்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க முயற்சி. இதன்மூலம் இதுவரை 5,532 புகார்கள் பதிவாகியுள்ளன. தகவல் கொடுப்பவர்களின் முகாந்திரம் பாதுகாக்கப்படும். அவர்களுக்கு வேறு பாதிப்பு வராது என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் தகவல் கொடுப்பவர் பாதுகாப்புச் சட்டத்தின்படி தகவல் கொடுப்பவர்களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 ஊழல் விவகாரங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அது உயர் மட்டங்களில் நிகழும் ஊழல்கள்; மற்றொன்று மக்களோடு அதிக தொடர்புடைய துறைகளில் நிகழும் அன்றாட ஊழல் பிரச்னைகள். இரண்டு வகையும் மக்களைப் பாதிக்கும் என்றாலும் இரண்டாவது வகையில்தான் பிக்கல் பிடுங்கல் அதிகம். விலைவாசி ஒருபக்கம் ஏறுகிறது என்றால் கையூட்டு அளவும் கூடுகிறது. அவஸ்தைப்படும் மக்கள் என்ன செய்வார்கள்? இதற்காகத்தான் மக்களோடு இணைந்து செயல்பட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் முயற்சி எடுத்துள்ளது.

 பல நகரங்களில் தனியார் அமைப்புகள் ஊழலுக்கு எதிராகப் போராட முயற்சி எடுத்து வருகின்றன. பெங்களூரில் ஜனக்கிரஹா என்ற அமைப்பு ஊழலால் பாதிப்படையும் மக்கள் தங்களது அவதிகளை இணையதளம் மூலம் பகிர்ந்துகொள்ள உதவுகிறது. ஒரு சிற்றுண்டி உரிமையாளர் சுமார் மூன்று லட்சம் ரூபாய் உரிமம் பெறுவதற்குச் செலவு செய்ததாகக் கூறியுள்ளார்.

 இன்னொருவர் ஓட்டுநர் உரிமத்துக்கு ரூ. 3,500 செலவு செய்ததைத் தெரிவித்துள்ளார். பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட சேவை பெறுவது, சொத்துப் பதிவு செய்வது, வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் பெறுதல், காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்தல், நிலம் மற்றும் மனைப்பட்டா பெறுதல், அரசு மருத்துவமனை என்று பல இடங்களில் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை பல மாநிலங்களில் உள்ளது.

 மேலும் பெங்களுரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர், சாதாரண மக்கள் அரசு ஊழியர்களிடம் லஞ்சம் கொடுக்காது எப்படி நியாயமான சேவை பெறுவது என்பது பற்றி ஆலோசனை வழங்கி வருகிறார். இதுவும் மக்களின் பங்களிப்பு. விழிப்புணர்வு முயற்சியின் ஒரு வெற்றி.

 ஐந்தாம் தூண் என்ற அமைப்பு பூஜ்ய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து எங்கு அரசாங்க வேலை செய்வதற்கு கை நீட்டுகிறார்களோ அங்கு இதைக் கொடுத்து வாயடைத்து விடுகிறார்கள். பொறுப்பில் உள்ளவர்களும் சுதாரித்துக்கொண்டு கடமையைச் செய்து விடுகிறார்கள்.

 உண்மை, வாய்மை, நேர்மை என்று பிரித்து வியாக்கியானம் செய்தவர்கள் பேசியதை ஒன்றும் கடைப்பிடிக்காததால் ஒதுக்கப்பட்டார்கள். நிர்வாகச் சூழலில் நேர்மையானவர்களைச் சல்லடை போட்டுத் தேடும் நிலைமை. நேர்மையைக் கடைப்பிடிப்பவர்களும் மதில் மேல் பூனையாக இருந்து ஊழல் என்ற சூழலில் சிக்கிவிடுகிறார்கள் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் கூறியுள்ளார்.

 அவர் அரசு அதிகாரிகளை மூன்று வகையாகப் பிரிக்கிறார். அப்பழுக்கற்ற நேர்மையானவர்கள், சந்தர்ப்ப சூழலைப் பொறுத்து நிறம் மாறுபவர்கள், ஊழல் சாக்கடையில் மூழ்கியவர்கள் என்ற மூன்று பிரிவு. அதில் முதல் பிரிவில் உள்ளவர்கள் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துகொண்டே வருகிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

 நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள்தான் அதிக பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். எதற்கும் வளைந்து கொடுக்காததால் நல்ல பதவிகள் கொடுக்கப்படுவதில்லை. எந்தப் பதவியில் இருந்தாலும் நியாயத்துக்குக் கேள்வி கேட்டால் மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லை. அத்தகைய வளைந்து கொடுக்காதவர்கள்மீது வேண்டுமென்றே பொய்ப் புகார்கள் புனையப்படும். ஜோதியில் கலந்துவிட்டால் பிரச்னையில்லை. நேர்மையானவர்களைப் பூப்போல் நெஞ்சில் வைத்துப் பாராட்டுவேன் என்றவர்கள் பூக்களை நசுக்குவதில்தான் குறியாக இருந்தார்கள்.

 ஐக்கிய நாடுகள் சபை ஊழலுக்கு எதிராக உடன்படிக்கை 2003-ம் ஆண்டு நிறைவேற்றியது. மே மாதம் 2011-ல் இந்தியாவும் அதில் கையெழுத்திட்டது. இதுவரை 154 உலக நாடுகள் உடன்படிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளன.

 அதன்படி ஊழலை எவ்வாறு தவிர்ப்பது, தடுப்பது, சட்ட அமலாக்கம் எவ்வாறு பலப்படுத்துவது, சர்வதேச ஒத்துழைப்பு, ஊழல் மூலம் ஏய்க்கப்பட்ட பணத்தை மீட்பது, தகவல் பரிமாற்றம் போன்ற ஷரத்துகள் இதில் அடங்கும்.

 உலக அளவில் பொருளாதாரப் பரிவர்த்தனையில் 5 சதவிகிதம் ஊழல் மூலமாகவும், 65 சதவிகிதம் பொருளாதாரக் குற்றங்கள் மூலம் நேர்மையற்ற வகையில் பணம் கையாடல் செய்யப்படுகிறது என்பதும் அதிர்ச்சியூட்டும் தகவல். பொருளாதாரக் குற்றங்களில் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதைக் கட்டுப்படுத்தத் தேவையான சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது முக்கியமான நடவடிக்கை.

 இந்திய தண்டனைச் சட்டத்தில் ஊழலுக்குத் துணைபோகும் தனியார் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சட்ட மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் ஊழல் சட்டம் 2010 நிறைவேற்றப்பட்டது.

 நமது நாட்டில் 1988 பினாமி சொத்து சேர்த்தல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவரை இந்தச் சட்டம் சரிவர அமல்படுத்தப்படவில்லை. "எபிúஸôடிக் ஊழல்' என்ற வகையில் மிகப்பெரிய அளவில் ஊழலில் ஈடுபடுபவர்கள் சொத்துகளை முடக்க வெளிநாடுகளில் அதற்குரிய சட்டம் உள்ளது. பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் நிச்சயமாக வரி ஏய்ப்பு செய்திருப்பார்கள்.

 இதுவும் ஓர் ஊழல் குற்றம் என்ற வகையில் அவர்களது சொத்து முடக்கப்படுகிறது. அவற்றை அரசுடைமையாக்குவதற்குப் நடவடிக்கை எடுக்க சில நாடுகளில் சட்டம் வரையப்பட்டுள்ளது.

 சமீபத்தில் பிகாரில் ஊழல் குற்றத்தில் சிக்கிய ஓர் அரசு அதிகாரியின் வீட்டை அரசுடைமையாக்கி அதில் அரசு பள்ளிக்கூடம் நடத்தப்படுவதைப் பற்றி செய்தி வந்தது. இத்தகைய சட்டம் வரவேற்கத்தக்கது.

 சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் முக்கியமாக நிர்வாகத்தில் இருக்கக்கூடிய குறைபாடுகள் பற்றியும், எந்த அளவுக்கு ஊழல் ஊடுருவியிருக்கிறது என்பது பற்றியும், இவற்றை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

 சாதாரண மக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு அரசுத்துறைகளை நாட வேண்டியிருக்கிறது. ஒரு பொது மனிதர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இந்நாட்டில் சாதாரண நிலையில் உள்ளவர்க்கு மதிப்பில்லை; எதற்கெடுத்தாலும் சிபாரிசு தேவை என்று சொல்லியது மனதை நெருடுவதாக உள்ளது. அரசு அலுவலகங்களில் பொதுமக்களைக் கண்ணியமாக நடத்தவேண்டியது கடமை. அது பொதுமக்களின் அடிப்படை உரிமையும்கூட.

 ஊழலைக் கட்டுப்படுத்த நிர்வாகம் வெளிப்படையாக அமைய வேண்டும். சட்ட திட்டங்கள், விதிகள் தெளிவாக இருந்தால் நீக்குபோக்குக்கு வழியில்லை, எங்கு விதிகளில் சந்தேகம் உள்ளதோ அவை ஊழலுக்கு ஊற்றாக அமைகிறது. ஒரு தொழிலோ, தொழிற்சாலையோ தொடங்குவதற்கு எதற்காகப் பல இடங்களில் தடையின்மை சான்றிதழ் பெறவேண்டும்? விதிகள் சரிவரக் கடைப்பிடித்து தொழில் தொடங்க ஏன் அனுமதிக்கக் கூடாது? விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக விதிகளை மதிப்பவர்கள் எதற்காகச் சங்கடப்பட வேண்டும்?

 கறுப்புப்பணத்தை வெளியில் கொண்டு வருவதற்குத் தன்னிச்சையாகத் தெரிவிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு வரி 30 சதவிகிதம். ஆனால், நேர்மையாகப் பணம் ஈட்டியவருக்கு வரி 40 சதவிகிதம். பொய்மைக்கு வழி நேர்மைக்கு இடி. என்ன முரண்பாடு?

 ஊழல் என்பது ஏதோ தூரத்தில் நடப்பது அல்ல. ஒவ்வொரு நிகழ்விலும் அது ஊடுருவியிருக்கிறது. இதைத் தூரத்து இடி முழக்கம் என்று விட்டுவிட முடியாது. இது ஒரு வைரஸ். வேரூன்றிய நோய். நாம் விழிப்புணர்வோடு இருந்து இதை ஒழிக்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com