ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்' எனும் தலைப்பிலான கட்டுரையில் மூன்று செய்திகள், மூன்று கூறுகளாக இடம் பெற்றுள்ளன. முதலாவது ஆயுத பூசை தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்தது என்றும் அதற்கான சான்றுகள் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் உள்ளன என்றும் கூறுவது. இரண்டாவது ஓண நாள்- அதாவது திருவோண நாளில் ஆயுத பூசை கொண்டாடும் காலமாகக் கூறுவது. மூன்றாவது ஆரிய - திராவிடச் சிக்கலில் சிக்கிக் கொள்வது. இம் மூன்று கூறுகளும் தவறான பொருளில், தவறான இடத்தில் கட்டுரையாசிரியரால் விளக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
தொல்காப்பியப் பாடாண்திணையின் பல்வேறு துறைகளில் ஒன்று (மாணார்ச் சுட்டிய வாள்மங் கலமும்) (88 : 11) என்பதாகும். தொல்காப்பியர் குறிப்பிடும் "மாணார்' என்ற சொல்லிற்கு, இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் "பகைவர்' என்றே பொருள் கூறுகின்றனர்.
புறப்பொருள் வெண்பாமாலையும், பாடாண்திணையில், "வாள்மங்கலம்' எனும் ஒரு துறையைக் கூறுகிறது. அங்கும் "கடத்தற்கரிய எதிரியின் யானைப் படையைச் சிதைத்த வெற்றி வேந்தனின் வாளைப் புகழ்வது' எனும் பொருளிலேயே "வாள்மங்கலம்' துறை விளக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் "மாணார்' (டண்ணகரம்) எனக் குறிக்கத் "தினமணி'யின் கட்டுரையாசிரியரோ "மானார்' (றன்னகரம்) என எழுதுவதுடன், "மாணார் என்னும் சொல்லிற்கு, மாண்புடையவர், போர்ப் பயிற்சி பெறும் மாணவர், வெற்றி பெற்றவர் என்றெல்லாம் பொருள்படுத்துகிறார்கள்' என்கிறார். அத்துடன் அமையாது, "ஆனால் அனைவரும் ஒப்புக்கொள்வது இவர்கள் போர்க் கலங்களை நீராட்டிப் பூஜை செய்கிறார்கள் என்பதுதான்!' எனவும் உறுதி செய்கின்றார். இப்படித் தானே ஒரு பொருளைத் தவறாகக் கற்பித்துக்கொண்டு, அதற்கு பொருத்தமற்ற வகையில் விளக்கமும் தருகிறார்.
தொல்காப்பிய நூற்பாவின் எழுத்தை மாற்றிய அவர், பதிற்றுப்பத்தில் பொருளையே மாற்றி விடுகிறார். அவர் தரும் எடுத்துக்காட்டு,
÷தோன்மிசைத் தெழுதரும் விருந்திலங் கெஃகிற்
÷றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
÷போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
÷கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப (66:12-15)
எனும் பாடற்பகுதியாகும்.
÷இந்தப் பாடற் பகுதிக்கும் கட்டுரையாளர் தவறான பொருள் கொள்வதுடன் ஆரிய - திராவிடச் சிக்கலையும் உருவாக்கி விடுகிறார்.
இப்பாடற் பகுதியில் வரும், "தார்புரிந் தன்ன வாளுடை விழவில்' எனும் அடிக்குக் கட்டுரையாளர், தவறாகப் பொருள் கூறுவதுடன் அமையாது, "இந்த விழவு மழைக் காலத்தில் நடந்திருக்க வேண்டும். வாகை மரங்கள், மழைக் காலத்திலும் பூக்கும்' என்றும் ஒரு மேற்கோளுடன் கூறுகிறார். முறையாகத் தமிழ் படித்திருந்தால் இத்தகைய தவறு நேர்ந்திருக்காது.
அத்துடன், "வாளுடை விழவில்' எனும் இரு சொற்களுக்கும், ஆயுத பூசை எனத் தவறாகவும் பொருள் கற்பித்துக் கொள்கிறார். "வாளுடை விழவு' என்பதற்கு, "வீரர்கள் வாளைச் சுழற்றும் இடம்' என்பதுதான் பொருளாகும்.
இப்படிப்பட்ட தவறான புரிதலுடன்தான் புறநானூற்றில் உள்ள (95) ஒளவையார் பாடலையும் அவர் அணுகியுள்ளார். "போர்க் களத்தை அறியாத தொண்டைமானின் படைக்கலங்கள் புத்தம் புதியனவாய் எண்ணெய்ப் பூசப்பெற்று, மயிற்பீலி சூட்டி, மாலை அணிவித்து வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியனின் படைக்கருவிகளோ, அடிக்கடி போரில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் அவை சிதைந்தும் முறிந்தும் போனதால் சரிசெய்யக் கொல்லனின் உலைக்களத்தில் கிடக்கின்றன' என்பது அப்பாடலின் பொருள். அங்கதச் சுவைக்கு நல்ல எடுத்துக்காட்டு ஒளவையாரின் புறப்பாடல்.
அதேபோல, சங்க இலக்கியங்களில் இருந்து இல்லாத சான்றுகளைக் காட்டியவர் அடுத்ததாகப் பெரியபுராணத்தில் நுழைகிறார். எறிபத்த நாயனார் புராணத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியை ஆயுத பூசையாகக் காட்டுகிறார்.
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்
என்பது பாடலடியாகும். "நவமிக்கு முதல்நாளாகிய எட்டாம் பிறை (அட்டமி)யன்று' என்பது அப்பாடலடியின் பொருள். இதையும் கட்டுரையாளர் "புரட்டாசி நவமி' என்று அழைத்து வரப்பட்டது' என்று கூறுகின்றார்.
மகா நவமி என்பது புரட்டாசி மாதத்தில் வளர்பிறை முதல்நாள் தொடங்கி ஒன்பது நாள்கள் அம்மையாரை நோக்கிக் காக்கப்படும் சைவ நோன்பு. இதனுள் பூசைச் சிறப்பு இரவிலே நடைபெறுவதால் இதை நவராத்திரி என்று வழங்குவர்.
அடுத்த பத்தாம் நாள் பூசையுடன் இந்நோன்பு முற்றுப்பெறுவதால் அதையும் கூட்டித் தசரா என்பதும், இதில் தேவி பூசை சிறப்பாதலின் 'துர்க்கபூசை' என்பதும் வடதிசையாளர் மரபு என்பது பெரியபுராண உரையாசிரியர் அறிஞர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் கூற்று.
ஆயுத பூசையின் வரலாற்றைத் திரித்தும் புரட்டியும் கூறும் கட்டுரையாளர் அதைத் திருவோணத்துடன் இணைப்பது அறியாமையின் உச்சகட்டம். திருவோணம் என்பது ஒருநாள் மீனின் பெயர். அதற்கு உரிய கடவுள் மாயோனாகிய திருமால். திருவோணத்துக்கும் திருமாலுக்கும் உள்ள தொடர்பில் தமிழரின் வானியல் அறிவு பொதிந்துள்ளது. இத் திருவோண மீனுக்கு "முக்கோல்' என்றும் பெயருண்டு. இதுபற்றி விரிவாக ஆராய்ந்த அறிஞர் குணா,
""திருவோணம் எனும் நாள் மீனைத் திருமாலின் நாளாகவே தமிழர்கள் கருதி வந்தனர். "மாயோன் மேய ஓண நன்னாள்' என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது. அத்திருமாலைத் தலைத்தெய்வமாகக் கொண்டிருக்கும் முக்கோல் (திருவோணம்) மீன் கழுகு வடிவிலானது. இதைக் கழுலன் (கருடன்) என்று கற்பித்து, அந்தக் கழுலனையே திருமாலின் ஊர்தியாக்கினர் என விளக்குவார்.
கட்டுரையாளர் குறிப்பிடும் கல்வெட்டில் "சித்திரைத் திங்கள் சித்திரையும் பிரட்டாதி ஓணமும் ஆகிய இரு நாள்களிலும் ஒவ்வோர் ஆண்டும் திருக்காற் கற்றளிப் பெருமானடிகட்கு நீராட்டுச் செய்வதற்காக விடப்பட்ட கொடையைக் குறிப்பதாகும்.
பூம்புகாரில் சித்திரைத் திங்கள், சித்திரை நாள் மீனில் முழுநிலாவின்போது, இந்திர விழா கொண்டாடப்பட்டது என்பதை, "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தன' எனச் சிலப்பதிகாரம் குறிக்கும்.
எனவே, மேலே காட்டிய கல்வெட்டில் குறிக்கப்பெறும் சித்திரை நாள்விழா, இந்திர விழாவையோ அல்லது அதன் எச்சத்தையோ குறிக்கலாம்.
அதைப்போல புரட்டாசி மாதம் திருவோண நாள் திருமால் வழிபாட்டின் அடையாளம் ஆகும். அதனால் திருவோண நாளை, கட்டுரையாளர் "விஜயதசமி'யாகக் கருதுவது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகும்.
தனிமனித வசைபாடலுக்குத் தமிழையும், இலக்கியத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்பவர்கள், தெளிந்த தமிழறிஞர்களாக இருப்பது அவசியம். அரைகுறையாக இலக்கியத்தைப் படித்துத் தேர்ந்து, ஆத்திரத்தில் வசைமாறி பொழிந்தால் அதனால் தவறான விளக்கங்கள் அச்சுவாகனமேறி நாளைய தலைமுறையை அச்சுறுத்தும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.