தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் இப்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு காரணமாக சமூகத்தால் ஒடுக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும் அதிகாரப் பகிர்வு கிடைத்து வருகிறது.
இதனால், ஒரு காலத்தில் பெரும்பாலான இடங்களில் செல்வாக்கு மிகுந்தவர்களிடம் மட்டுமே இருந்து வந்த அதிகாரக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டு, ஏற்றத் தாழ்வு இல்லாத அதிகாரப் பகிர்வு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், 33 சதவீதமாக உள்ள பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுவடைந்து வருவது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் தனித் தொகுதி, இட ஒதுக்கீடு குறித்து நாம் பேசும்போதே பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற சில ஊர்களின் பெயர்களும், அங்கு நிலவிய நிகழ்வுகளும் நம் நினைவில் வந்து செல்லும்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மற்றும் தனித்தொகுதிப் பிரதிநிதிகளில் பலரது செயல்பாடுகளை நாம் இப்போது கவனத்தோடு பரிசீலிக்க வேண்டிய தருணமிது.
புதிதாகத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், அவ்வாறு செய்யப்படும் சரியான பரிசீலனை, மதிப்பீடு, புரிதல் எதிர்காலத்துக்கு உதவியாக அமையலாம்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் இப்போது 28 லட்சத்து 18 ஆயிரம் பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 10 லட்சம் பேர் பெண்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெண் பிரதிநிதிகள் அந்த அமைப்பை நிர்வகிப்பதில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு, பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.
அதேநேரத்தில், பல இடங்களில் பல்வேறு காரணங்களால் அவர்களின் செயல்பாடு பெயரளவில் அமைந்துள்ளதையும், அதன் பின்னணியில் யாரோ ஒருவர் நிர்வாகத்தில் தலையிட்டுச் செயல்படுவதையும், சில இடங்களில் தலையாட்டிப் பொம்மைகளாக நடத்தப்படுவதையும் மறுக்க முடியாது.
தனித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் (ஆதி திராவிடர், பழங்குடியினர்) பிரதிநிதிகளும் இதேபோன்ற நிலையில்தான் பல இடங்களில் உள்ளனர்.
குறிப்பாக, இட ஒதுக்கீடு பெற்ற (தனி) ஊராட்சியின் தலைவராக உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தப் பகுதியில் செல்வாக்குப் பெற்றவர், ஏதோ ஒரு சக்தியின் பின்னணியை மீறி, சுயமாக அதிகாரத்தைப் பயன்படுத்தும் சூழல் வந்துவிட்டது என்று கூறிவிட முடியாது.
பல இடங்களில் இட ஒதுக்கீட்டால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தவர்கள், அரசியல், பணம், செல்வாக்கு உடையவர்கள், ஒப்பந்ததாரர்கள் என பல தரப்பினர் இந்தச் சூழலைத் திட்டமிட்டே ஏற்படுத்துகின்றனர்.
இவர்கள் தங்களுக்குச் சாதகமானவர்கள் வெற்றிபெற தேர்தலில் பெருமளவில் பணத்தைச் செலவு செய்கின்றனர். இதனால், சில இடங்களில் போதிய விழிப்புணர்வு, நிர்வாகத் திறன் குறைந்தவர்களைத் தேர்ந்தெடுக்கச் செய்யும் உத்தியில் அவர்கள் வெற்றியும் அடைகின்றனர். இந்த நிலை போக்கப்பட்டு, பொது நலனில் உண்மையான ஈடுபாடு, நிர்வாகம் குறித்த குறைந்தபட்ச திறன் உடையவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் மட்டுமே இட ஒதுக்கீட்டின் நோக்கம் முழுமையடையும்.
இதில் பெரும் பங்கு வகிக்கும் அரசியல் கட்சிகள், தனது கடமையை வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போதே சரியாகச் செய்ய வேண்டும். ஆனால், நமது கட்சிகளோ விருப்ப மனுவின்போதே பதவிக்குத் தகுந்த தொகையை வசூல் செய்வது முரணாக உள்ளது. இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இதில் விதிவிலக்காக உள்ளன.
பல பொதுநலவாதிகளுக்குப் பணம் இருப்பதில்லை. பணம் கட்ட வசதியுள்ளவர்கள் அனைவருமே பொதுநலவாதிகள் இல்லை என்பதை அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, வாக்காளர்களும் உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.