பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்தவுடனே அடுத்து என்ன என்று யோசிக்கும் இளைஞர் - பெற்றோர்களுக்கு எந்த மேற்படிப்பாக இருந்தாலும் முதல் அச்சம் தருவது, விண்ணப்பக் கட்டணம்தான். அதிலும், இந்தப் படிப்பு - இந்தக் கல்லூரியில் - கிடைக்கிறதோ இல்லையோ எனும் அச்சத்தில் நடுவாந்தரமாக அதாவது, 60 முதல் 80 விழுக்காடு வரை - மதிப்பெண் பெற்ற - மற்றும் பெறக்கூடிய மாணவர்களின் விண்ணப்பச் செலவே சில ஆயிரம் ஆவதும் உண்டு.
சில லட்சம் குடும்பங்களின் இந்தச் சில ஆயிரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் சில பல கோடிகள் நமது அப்பாவி இந்தியக் குடிமக்களுக்குத்தான் விரயம். இதுபற்றிக் கவலைப்பட வேண்டிய நேரம் இதுதான்.
விண்ணப்பிக்கும் 2, 3 படிப்பையும் மாணவர்கள் தொடர முடியாது. ஆயினும், ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் அப்பாவி ஏழைப் பெற்றோர்கள் ஒவ்வோராண்டும் இப்படி விண்ணப்பத்துக்காக விரயம் செய்யும் தொகை எங்கேதான் போகிறது? தனியாருக்கு மட்டும் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள், நமது அரசுகளின் அலட்சியத்துக்கும் இந்த விலையுண்டு.
இதில் இந்தப் படிப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ எனும் குழப்பத்தில் எதற்கும் இந்தப் படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கட்டும் என்று வேறு ஒரு படிப்பையும் தேர்வு செய்து படிக்கச் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், வழக்குரைஞர் படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதியிருந்தார் ஒருவர். இடம் கிடைக்காவிட்டால் இந்த ஆண்டு வீணாகி விடுமே எனும் அச்சத்தில் அரசுக் கலைக் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இரண்டு மாதம் கழித்துத்தான் பி.எல். கிடைத்தது. பின்னர் கலைக்கல்லூரியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இந்தச் செலவைத் தவிர்க்க அன்றைய சூழலில் அவரது தந்தையால் இயலவில்லை. இங்கு அவரது தந்தை என்பது, தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ஆண்டுதோறும் சேரும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பெற்றோருக்கும் பொருந்தும். ஆனால், இதுவே தனியார் கல்லூரி எனில் விண்ணப்பம், கல்லூரிக் கல்விக் கட்டணம் என்று கணக்குப் போட்டால், சில பல ஆயிரமாவது விரயமாகியிருக்காது? இது ஒரு சோற்றுப் பதம்தான்.
தனியார் கல்லூரிகளில் அந்த வசதி இருக்கிறது, இந்த வசதி இருக்கிறது என்று கவர்ச்சியாக விளம்பரம் செய்யும் உத்திகளைப் பார்க்கும்போது, அடேயப்பா! அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படிப்பது போன்ற பிரமை ஏற்படும். ஏற்பட வேண்டும் என்பதுதானே அவர்களின் நோக்கமும். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பதன் முதல் லாபம்தான் விண்ணப்ப வியாபாரம் சூடுபிடிப்பது. இவர்களாக வழவழ அட்டையில் பளபள பக்கங்களில் பலப்பல வண்ணங்களில் விவரக்குறிப்புகள் தயாரிப்பார்களாம். பின்னர் இந்தச் செலவுகளையெல்லாம் சேர்த்து விண்ணப்பத்தின் விலை ரூ 700, ரூ. 1,000 என்பார்களாம்.
சில உயர்நுட்ப விண்ணப்பங்களோடு குறுந்தகடுகளும் உண்டு. இந்த உயர்வகை விண்ணப்பங்களைக் குறிப்பிட்ட வங்கியில் சென்று பணம்கட்டித்தான் வாங்க முடியும். என்ன நாடகமிது? விண்ணப்பத்துக்கு விண்ணப்பிக்க ஒரு விண்ணப்பம். அலைச்சல் புரிகிறதா? நாக்குத் தள்ளிப் போகும். ஒரு நாலாந்தரக் குடிமகனின் "கல்வி - அடிப்படை உரிமைச் சட்டம்' பற்றிக் கேட்க உச்ச நீதிமன்றத்துக்கா ஓட முடியும்?
"அனைவருக்கும் கல்வி - அனைவருக்கும் சம உரிமைக்கான உத்தரவாதம்' என்று முழக்கமிடும் அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக் கொண்டு விண்ணப்ப வணிகத்தில் ஏழைப் பெற்றோர்களைக் கசக்கிப் பிழிவதுதான் பெருங்கொடுமை. இதில் அரசுக் கலைக்கல்லூரிகளில் மட்டும்தான் 25 ரூபாய் அல்லது அதிகபட்சம் 50 ரூபாயில் விண்ணப்பம் கிடைக்கும். அதிலும் ஒரே விண்ணப்பத்தில் இரண்டு பிரிவுகளுக்குக்கூட விண்ணப்பித்து விடலாம்.
இயற்பியல் கிடைக்கவில்லை என்றால், வேதியியல் படிக்கலாம் எனும் மாணவர்க்கு அரசுக் கல்லூரிகளில் மட்டுமே இந்த ஆதரவு.
இதிலும் சில தனியார் கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனி விண்ணப்பம், தனித்தனி செலவு, தனித்தனி அலைச்சல், தனித்தனி சிபாரிசு. ஆனால், இதன் தனித்தனி லாபம் மட்டும் கல்விக்காவலரான அந்த ஒருவருக்கே!
ஒவ்வொரு விண்ணப்பத்தோடும் இணைப்பாக வைக்க வேண்டிய சான்றிதழ் நகல்கள் ஒரு பத்தாவது தேறும். இதனால், எதற்கும் இருக்கட்டுமே என்று மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், நடத்தைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், தேர்வு நுழைவுச்சீட்டு நகல், பிறப்புச் சான்றிதழ், வருகைச் சான்றிதழ். அப்புறம் தனித்திறன் சான்றுகள் என சுமார் பத்துச் சான்றிதழ்களிலும் பத்துப் பத்து நகல் எடுத்து அனைத்துக்கும் மேலொப்பம் பெற்று - கையில் வைத்துக்கொண்டு சீட்டு வேட்டைக்குக் கிளம்பும் மாணவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
மேம்போக்காகப் பார்த்தால் இப்படி அலையும் இவர்கள் பொழுதுபோக்காகச் சுற்றுவதுபோலத் தெரியும். தனித்தனியே கூப்பிட்டு விசாரித்துப் பார்த்தால், அவர்கள் அலையும் அலைச்சலைக் கேட்டால், உயர்கல்வி நிறுவனம் அனைத்தின் மீதும் எரிச்சலாய் வரும்.
இந்த ஆண்டு சீசன் ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு பல்கலைக்கழகமாக விளம்பரங்கள் வந்தவண்ணமுள்ளன. ஒன்றிலாவது ரூ. 300-க்குக் குறைவாக விண்ணப்பப் படிவம் வழங்குவதாகத் தெரியவில்லையே. பி.ஏ. படிப்பு முதல் பி.எல் படிப்பு வரை எல்லாவற்றுக்கும் விண்ணப்பித்து வைப்போம். எது கிடைக்கிறதோ அதைப்பிடித்து முன்னேறப் பார்ப்போம் என்று குறைந்தது 2, 3 படிப்புக்காவது விண்ணப்பிக்கவும் வேண்டித்தான் இருக்கிறது. தென் மாநிலங்களிலேயே அதிகமான பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் இருப்பதால் விண்ணப்பமும் அதிக அளவில் விநியோகமாவது ஒன்றும் வியப்பல்லவே!
விண்ணப்பம் என்பதென்ன? பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த ஒருவர் உயர் படிப்பு அல்லது துறைசார் படிப்புப் படிக்க இடம் வேண்டும் என்று கேட்பதுதானே? இதற்கு ஏன் இவ்வளவு கட்டணம்? 95 விழுக்காட்டினருக்கு இல்லை என்று சொல்லப்போவது உறுதி.
சில ஆயிரம் பேர் தேர்வாகப் போகும் தேர்வுக்குப் பல லட்சம் விண்ணப்ப விநியோகம் என்பது வியாபாரமில்லையா? ஒரு தாளை அச்சடித்துத் தர 50 ரூபாய் என்பது அதிகமில்லையா? இதன்வழியாக மட்டும் ஒரு விண்ணப்பம் ரூ.50 வீதம் 16 லட்சம் விண்ணப்பம் விற்றால் லாபம் எட்டு கோடி ரூபாய் அல்லவா! இது ஆட்டுக்கு மருத்துவம் செய்ய அதன் வாலையே வெட்டி சூப் வைத்துத் தருவதுபோல உள்ளது.
விண்ணப்பம் தவிர தேர்வுக்கட்டணம் வேறு 500 ரூபாய், அதற்கான வங்கிக் கட்டணம் 50 ரூபாய் என ஏற்கெனவே நொந்து கிடக்கும் அந்தப் பாவப்பட்ட மக்களிடமே மேலும் பணம் பார்ப்பது ஜனநாயக அரசுக்கு அழகுதானா?
எனவே, பல நூறு கோடி ரூபாய்களை மக்களுக்கு இலவசங்களாக வாரி வழங்கிப் புகழ்பெற்ற நமது தமிழக முதல்வரிடம் வைக்கும் விண்ணப்பம் இதுதான்: வேலைக்கோ உயர் படிப்புக்கோ விண்ணப்பிக்கும் எந்த ஒரு விண்ணப்பமும் இனி 10 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என முதல்வர் ஆணையிட வேண்டும் அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சமீபத்திய அறிவிப்புப்போல, இலவசமாக இணைய தளத்தில் கிடைக்குமாறு செய்துவிட வேண்டும். அந்தச் செலவுகளை, வேலைதேடும் அல்லது உயர்கல்வி படிக்க ஆர்வமாக இருக்கும் இளைஞர்களுக்காக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். ரூ. 800, ரூ. 1,000 என எகிறும் கல்லூரிகளின் விண்ணப்ப விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டியாக வேண்டும்.
இதுதான் லட்சோப லட்சம் தமிழக இளைஞர்களின் இன்றைய எதிர்பார்ப்பு. கல்லூரி-பல்கலைக்கழகங்களின் அடுத்த - 2012-2013-கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு தொடங்கியிருக்கும் நேரம். இந்த நேரத்தில் முதல்வரின் அறிவிப்பு பசித்த வயிற்றுக்கு முதலில் பால் வார்த்ததாக இருக்கட்டும்.
தம் பிள்ளைகளின் உயர் கல்வி, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்தும் பெற்றோர் அதைச் செலவு என்ற பட்டியலிலா வைப்பார்கள்? குடும்பத்தின் எதிர்கால நன்மைக்கான முதலீடு என்றுதானே நினைப்பார்கள். இதேபோல ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவியர்க்கு தமிழக முதல்வர் ஒவ்வொரு பிரிவினர்க்கும் - ஏதாவது சில இலவசங்களைத் தந்துகொண்டே இருக்கிறார்.
நமது முதல்வர், அடுத்து உதவ வேண்டிய பிரிவு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம்தான். அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி. தேர்வுக் கட்டணங்களைக் குறைப்பதும் போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பத்தை இலவசமாக வழங்குவதும்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.