காக்க, காக்க இளைஞரைக் காக்க

ஒரு நாட்டின் உண்மையான வளங்களில் மனித வளம் முக்கியமானது; அதிலும் இளைஞர்களின் பங்கு மகத்தானது. இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். அவர்களுடைய உடல் ஆரோக்கியமாகவும் மனது தூய்மையாகவும் இருப்பது மிகமிக அவசியம

ஒரு நாட்டின் உண்மையான வளங்களில் மனித வளம் முக்கியமானது; அதிலும் இளைஞர்களின் பங்கு மகத்தானது. இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். அவர்களுடைய உடல் ஆரோக்கியமாகவும் மனது தூய்மையாகவும் இருப்பது மிகமிக அவசியம்.

 மூதறிஞர் இராஜாஜி மாணவர்களை - சிறுவர்களை, ""விதை நெல்'' என்று கூறி அவர்களைக் கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இளைஞர்கள் பாழ்பட்டால் நாட்டுக்கு வருங்காலம் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள்.

 இப்போது நம் நாட்டில் முதியவர்களைவிட வளர்இளம் பருவத்தில் உள்ள பெண்களும் பையன்களும் எண்ணிக்கையில் அதிகம். எனவே இந்தியாவின் மனித வளத்தை உலகம் பொறாமையோடு பார்க்கிறது.

 ஆனால் நம்முடைய இளைஞர்கள் குறித்து நாம் படிக்கும் பத்திரிகைச் செய்திகளும் கேட்கும் தகவல்களும் நம்மை அச்சுறுத்துகின்றன.

 சமீபத்தில் இளைஞர் நல, விளையாட்டு அமைச்சகம் நட்புறவை வளர்ப்பதற்காக நூறு இளைஞர்களை சீனாவுக்கு 10 நாள்களுக்கு சுற்றுப் பயணம் செய்ய அனுப்பியது. இவர்கள் நேரு இளைஞர் மையம் மற்றும் தேசிய அரசியல் கட்சிகளின் இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இந்தக் குழுவில் ஆண்களும் பெண்களும் அடங்குவர். இதிலிருந்த ஆடவர்களில் பலர் உடன் வந்த பெண்களிடமும், வழிகாட்டியாக வந்த சீனப்பெண்களிடமும் தரக்குறைவாக நடந்து கொண்டனராம். இவர்களைக் கட்டுப்படுத்த முடியாததால் பயணம் பாதியில் முடிந்தது.

 மதுரையில் பிளஸ் டூ தேர்வில் 1,100 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருக்கிறார். ஜூலை முதல் வாரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு செல் போனில் ஆபாசப்படங்களையும் குறுஞ்செய்திகளையும் அனுப்பியிருக்கிறார். தன்னை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக 9 சிம் கார்டுகளையும் 2 செல்போன்களையும் பயன்படுத்தியிருக்கிறார். கைது செய்யப்பட்ட அவர் பொறியியல் கல்லூரியில் சேருவதற்குப் பதிலாக இளஞ்சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இப்படிப் பல செய்திகள் அடுத்தடுத்து வருவது வேதனையைத் தருகிறது.

 கல்லூரியில் படிப்பவர்கள், படித்து முடித்து வேலை தேடுகிறவர்கள், நல்ல வேலையில் சேர்ந்த இளைஞர்கள் என்று பலதரப்பட்ட இளைஞர்கள் குறித்து இத் தகவல்கள் வருவது வேதனையை அதிகப்படுத்துகிறது. பெண்களிலும் சிலர் இப்படி தவறு செய்யத் துணிகின்றனர் என்று செய்திகள் வருகின்றன.

 அரசு திறந்துள்ள மதுக்கடைகளைக் கவனித்தால் வாடிக்கையாளர்களில் "கணிசமானவர்கள்' இளைஞர்கள், அதிலும் படித்த இளைஞர்கள் என்பதைக் கண்டு மனம் பதைக்காமல் இருக்க முடியாது.

 பஸ்கள், ரயில்கள், திரையரங்குகள், பொது இடங்கள் என்று எல்லா இடங்களிலும் அநாகரீகமாகக் கத்துவது, குதிப்பது, பாடுவது என்று இளைஞர்கள் - அதுவும் படித்த இளைஞர்கள் - நடந்துகொள்ளும்போது வருத்தமாக இருக்கிறது.

 நம்மை எல்லாம் எச்சரிக்கும் மணிபோல, ""போதை மருந்துகளுக்கு பஞ்சாபை இழந்துகொண்டிருக்கிறோம்'' என்றொரு கட்டுரை ஆங்கில நாளிதழில் வெளியாகியிருக்கிறது. வேளாண்மை, தொழில் வளர்ச்சி இரண்டிலும் முன்னேறிய மாநிலமான பஞ்சாபில் ராணுவத்துக்கும் துணை நிலை ராணுவத்துக்கும் ஆள் எடுத்தால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் முன் நிற்பார்கள். இப்போது அப்படி வரும் ஒரு சிலநூறு பேர்களும் போதை மருந்து சாப்பிடுவதனால் உடல் தகுதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று படிக்கும்போது மனம் பதறாமல் இருக்காது. பஞ்சாபில் இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாகிவருகிறது.

 பாகிஸ்தான் எல்லையிலிருந்து கடத்தப்படும் இந்த போதை மருந்துகள் இளைஞர்களை எளிதாக அடைய முடிவது எதனால் என்று ஊகிக்க நேரம் பிடிக்காது. ஆம் அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணியால்தான் இந்தச் சீரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

 நம்முடைய எதிரிகளால் நம்மை நேரடியாகத் தாக்கி அழிக்க முடியாததால் இந்த வழியைக் கையாள்கிறார்கள். அதற்கு நம்மவர்களே பணத்துக்காகத் துணை போவதைப் பார்த்தால் இளைய சமுதாயத்தையே இழந்துவிடுவோமோ என்று தோன்றுகிறது.

 பஞ்சாபில் போதை மருந்து என்றால், தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது. இதன் தீவிரத்தை ஆட்சியாளர்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லையா அல்லது புரிந்தும் பணம்தான் முக்கியம் என்று கருதுகிறார்களா தெரியவில்லை.

 மதுரை மாவட்டத்தில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரின் கண்டிப்பான நடவடிக்கை காரணமாக 33 இடங்களில் பள்ளிக்கூடத்துக்கு அருகில் புகையிலை தொடர்பான போதைப் பொருள்களை விற்ற 108 கடைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை மாவட்டம் முழுக்க நடத்தியிருந்தால் ஆயிரக்கணக்கில் கைதாகியிருப்பார்கள் என்று தெரிகிறது. அப்படியானால் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் பழக்கம் அதிகமாக இருக்கிறது என்றே தெரிகிறது. இந்த இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று ஊகிக்கக்கூட அச்சமாக இருக்கிறது.

 தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகள் மூலம் 2003-04-ல் வெறும் ரூ.3,639.93 கோடியாக இருந்த வருவாய் 2011-12-ல் ரூ.18,081.16 கோடியாக உயர்ந்துவிட்டது என்பதற்காக நாம் மகிழ்ச்சி அடைய முடியுமா? மக்களைக் குடிகாரர்களாக்கும் இந்த விற்பனை நமக்கு ஒரு சாதனையா?

 முன்பெல்லாம் ஆபாச திரைப்படங்களைப் பார்க்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு சில திரையரங்குகளைத் தேடிப்போவார்கள். இப்போது வீட்டிலிருக்கும் தொலைக்காட்சியிலேயே பார்க்கும் வசதி ஏற்பட்டுவிட்டது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களும் நேரடி ஒளிபரப்பு உண்மை நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கையே இல்லை. இதிலே ""ஜோடி ஆட்டங்கள்'' வேறு! இவையெல்லாம் வளர் இளம் பருவத்து மாணவ, மாணவியரின் நெஞ்சங்களில் நஞ்சை வளர்க்கும் என்று தெரிந்தும் இதைக் கண்டிக்கும் தார்மிக துணிச்சல் இந்தச் சமுதாயத்தில் இல்லாமல் போய்விட்டதே!

 இஷ்டப்படி உடை அணிவதும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போய் வருவதும் பெண்ணுரிமையாக பேசப்படும் நேரத்தில் இதையெல்லாம் கண்டிக்க மகளிர் அமைப்புகள் முன்வருமா என்ன?

 இந்த நிலையில் நம்முடைய இளைஞர் சமுதாயத்துக்கு வழிகாட்டப் போவது யார்? பெற்றோர்களா, உறவினர்களா, சம வயது நண்பர்களா, ஆசிரியர்களா, அரசியல் தலைவர்களா, திரைப்பட நாயகர்களா?

 திரைப்படங்களில் இப்போது சித்திரிக்கப்படும் நாயக, நாயகியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்? யதார்த்தத்தைத்தான் சித்திரிக்கிறோம் என்கிறார்கள் திரைப்படத் தயாரிப்பாளர்கள். தமிழ்நாடு அவ்வளவு பயங்கரமாகவா மாறியிருக்கிறது?

 பெரும்பாலான தமிழ் செய்தித்தாள்கள், வார, மாத இதழ்களில் எல்லாம் திரைப்படச்செய்திகள்தான் பெரும்பாலான பக்கங்களை ஆக்கிரமித்துள்ளன.

 குடிப்பது, குத்தாட்டம் போடுவது, போலீஸிடம் அகப்படாமல் குற்றச் செயல்கள் புரிவது, மரபுகளை, ஒழுக்கங்களை மீறுவது, வீட்டைவிட்டு ஓடிப்போவது, கொலை வெறியோடு பழிதீர்ப்பது என்கிற காட்சிகளே தொலைக்காட்சிகளில் தொடர்ந்து காட்டப்படுகிறது. இளைய சமுதாயத்துக்கு நாம் காட்டும் வழி இதுதானா?

 இந்த நிலையில் மக்களை அதிலும் குறிப்பாக இளைஞர்களை மீட்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறது. சீன நாட்டு மக்கள் ஒரு காலத்தில் அபினுக்கு அடிமையாகிவிட்டார்கள். அவர்களை சீன ஆட்சியாளர்கள்தான் கண்டிப்பான சட்டங்கள், நேர்மையான நடைமுறைகள் மூலம் மீட்டார்கள். இப்போது சீனா உலகின் முன்னணி நாடாகத் திகழ்கிறது.

 இளைஞர்களை மீட்க மதுக்கடைகளை மூடிவிட வேண்டும். அதனால் ஏற்படும் வருவாய் இழப்பு "நஷ்டமே' அல்ல; இளைஞர்கள் குடிப்பதால் கிடைக்கும் வருவாய் "லாபமே' அல்ல.

 கல்வி நிலையங்களை வியாபாரிகளிடமிருந்து மீட்டு கல்வியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.

 திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் கண்டிப்பாக தணிக்கை அவசியம்.

 சொந்த உழைப்பில்தான் வாழவேண்டும் என்ற உறுதி தமிழர்களிடத்திலே ஏற்படவேண்டும். இலவசம் என்று எதற்காகவும் யாரும் யாரிடமும் கையேந்தக் கூடாது. வேலை இல்லாதவர்கள் அரசிடம் உரிமையுடன் கோரி வேலை செய்ய வேண்டும்.

 அரசியல் கட்சிகள் தங்களுடைய இளைஞர் அமைப்புகளை "அடியாள் படைகளாக' வளர்க்காமல் நல்ல அறிவும் ஒழுக்கமும் உடல்வலுவும் உள்ள பயனுள்ள குடிமக்களாக உருவாக்கவேண்டும். எல்லோரும் இணைந்தால்தான் இளைஞர்களைக் காக்க முடியும்; இளைஞர்களைக் காப்போமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com