பாலஸ்தீனத்தில் தொடரும் அவலம்...

பாலஸ்தீனத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தையைப் புதைக்கும் சவப்பெட்டியின் கடைசி ஆணியையும் அடித்துவிட்டது இஸ்ரேல். கிழக்கு ஜெருசலேம், மேற்குக்கரைப் பகுதியில் புதிதாக 3 ஆயிரம் வீடுகளைக் கட்டி யூதர்களை அங்கு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது.
Updated on
2 min read

பாலஸ்தீனத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தையைப் புதைக்கும் சவப்பெட்டியின் கடைசி ஆணியையும் அடித்துவிட்டது இஸ்ரேல். கிழக்கு ஜெருசலேம், மேற்குக்கரைப் பகுதியில் புதிதாக 3 ஆயிரம் வீடுகளைக் கட்டி யூதர்களை அங்கு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது.

பாலஸ்தீனத்தை இறையாண்மைபெற்ற தனிநாடாக ஐ.நா. அங்கீகரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.வின் அங்கீகாரம் கிடைத்த அடுத்த நாளே இந்த குடியேற்றத் திட்டத்தை அறிவித்துவிட்டது.

இந்த நடவடிக்கை மூலம், ஏற்கெனவே பதற்றம் அதிகமுள்ள பாலஸ்தீனப் பகுதியில் அடுத்ததொரு போருக்கு அழைப்பை விடுத்துள்ளது இஸ்ரேல். ஆனால் இந்த முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆசி இஸ்ரேலுக்குக் கிடைக்கவில்லை என்பது மட்டும் ஒரே ஆறுதல். எப்போதுமே ஆதரவளிக்கும் அமெரிக்காகூட இந்தப் புதிய குடியமர்வு விஷயத்தில் இஸ்ரேலை ஆதரிக்கவில்லை. தனது முடிவை இஸ்ரேல் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றே கூறியுள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் கூட இஸ்ரேலின் இப்போதைய நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளன. ஆனால் பாலஸ்தீனர்களுடன் அடுத்த மோதலுக்குத் தயாராகிவிட்ட இஸ்ரேல் இதைச் சிறிதும் செவி மடுக்கவில்லை.

இஸ்ரேல் மேற்கொண்டுள்ள முயற்சி மேற்குக் கரைப் பகுதியை இரு துண்டுகளாகப் பிரிப்பதுடன், பாலஸ்தீனர்களை ஜெருசலேமில் இருந்து முற்றிலுமாகத் துண்டித்துவிடும் வகையில் உள்ளது. இது பாலஸ்தீனர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர பாலஸ்தீனர்களுடனான தங்கள் வன்மத்தை நேரடியாகவே வெளிப்படுத்தியுள்ளது இஸ்ரேல். "பாலஸ்தீனத்தைத் தனிநாடு என்று ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துவிட்ட நிலையில் இஸ்ரேலைப் பாதுகாத்துக் கொள்ளவும், எங்களை வலிமைப்படுத்திக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகிவிட்டது' என்று அந்நாடு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே "பாலஸ்தீனம்' என்ற வார்த்தையையே வெறுக்கும் இஸ்ரேல், இப்போது அதற்குத் தனிநாடு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதால் வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டது.

பாலஸ்தீனம் - இஸ்ரேல் பிரச்னை என்பது இருநாடுகள் தொடர்புடையது மட்டுமல்ல, அதையும் தாண்டி 3 மதங்கள், இனம், அரசியல், மக்களின் உணர்வுகள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியது. இவற்றுக்கு நடுவே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் குறுக்கீடும் உண்டு.

இஸ்ரேல் இதுபோன்று அடாவடி நடவடிக்கைகளை மேற்கொள்வது புதிதல்ல. 1967-ஆம் ஆண்டு மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேமின் ஒருபகுதியை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்த பிறகு பல்வேறு கட்டமாக சில லட்சம் யூதர்களை அங்கு குடியேற்றியுள்ளது.

சர்வதேச சட்டப்படி இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றாலும், அதனைத் தட்டிக் கேட்க யாருமில்லை. ஏனெனில் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இஸ்ரேலுக்கு உள்ளதே முக்கிய காரணம். சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறிவிட்ட பாலஸ்தீனர்களுக்கு, ஐ.நா.வின் அங்கீகாரம் புதிய நம்பிக்கையை அளித்தது. ஆனால் அதனைக் தகர்க்க களமிறங்கிவிட்டது இஸ்ரேல்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பாலஸ்தீனத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றன பாலஸ்தீனத்துக்காகப் போராடும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதம் ஏந்தும் குழுக்கள்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸô பகுதியில் இருந்து விரைவிலேயே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இஸ்ரேல் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.

சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையே பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள நிலையில், இனியும் பாலஸ்தீனர்களைப் புறந்தள்ளுவது மனிதநேயத்துக்கு எதிரான செயல். இது தொடர்வதற்கு உலக சமுதாயம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com