

அண்மைக்காலமாக நாடாளுமன்றத்திலும் நீதிமன்றங்களிலும் நேரத்தையும், மக்கள் வரிப் பணத்தையும் வீணடிக்கும் சரித்திர நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.
பணத்துக்கும், பதவிக்கும், பதவியில் தொடரும் ஆசைகளுக்கும் என்றும் உள்ளத்தில் இடம் தராத உத்தமத் தலைவர்கள் அரசியல் கட்சிகளிலும் அரசு அமைப்புகளிலும் இடம் பெற வாய்ப்பில்லாத புதிய அரசியல் ஆதிக்க நிலை தோன்றி வளர்ந்து வருகின்றது. இதில் மாற்றம் ஏற்பட்டு பணபலம் இல்லாத அரசியல் மலர்ந்திட வேண்டும்.
அரசியலில், அரசு அமைப்புகளில் லஞ்ச ஊழல்களை ஒழித்திட வேண்டும் என்று தொடர்ந்து பேசப்படுகின்றது. இது உலகம் முழுதும் பேசப்படும் கருத்தாகும்.
இதற்குப் புதிய சட்டம் வேண்டும் என்பதைவிட நடைமுறையில் இருந்து வருகின்ற லஞ்சத் தடுப்புச் சட்டத்தைத் தேவையான திருத்தங்களுடன் விரைவாகச் செயல்படுத்தும் தலைவர்கள், அதிகாரிகள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தாலே மக்களுக்கும் நாட்டுக்கும் விடிவு காலம் பிறந்திடும்.
1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் அமைச்சர்களுக்கு நடைமுறைகள் வகுத்தார்.
1959-ம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை பிறப்பித்திருந்த உத்தரவைப் பின்பற்றி அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் சொத்துகள் வாங்குவது, தொழில்கள் செய்வது கூடாது என்று வழிமுறை வகுத்தார். இதை நேர்மையாகச் செயல்படுத்தினாலே அரசியல் லஞ்சம் அகற்றப்படும்.
தமிழக அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தவறுகள் செய்ததற்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையும் பெற்றுள்ளார்கள்.
லஞ்ச ஒழிப்புச் சட்டம் நேர்மையாகச் செயல்படுத்தப்பட்டது. புதிய சட்டம் எதுவும் தேவையில்லை. சட்டத்தைத் தேவையான திருத்தங்கள் செய்து நேர்மையாக அமல்படுத்தும் ஆட்சியாளர்களைத்தான் மக்கள் உருவாக்க வேண்டும். இன்றைய அரசியலிலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், நீதிமன்ற விவாதங்களிலும் பெரிதாகப் பேசப்படுவது மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறையில் நடந்த "லைசன்ஸ் ராஜ்'யத்தால் நேர்ந்த நிகழ்ச்சியாகும்.
2ஜி, 3ஜி என்று பேசப்படும் சாதாரண மக்களும் பயன்படுத்தும் தொலைத் தொடர்புத்துறைக் கருவிகளின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் அந்தத் தொழில்துறை வளர்ந்தது. தொழிலதிபர்களின் லாப நோக்கம் பெருகியது. அதைப் பயன்படுத்தி ஆட்சி அமைப்புகளில் பணபலம் பயன்படுத்தும் நிலை தோன்றலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
"லைசன்ஸ் ராஜ்'யத்தை அகற்றி, மத்திய அரசின், தொலைத் தொடர்புத்துறை பிரமாண்ட அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதைப் பயன்படுத்தி அனைத்து உரிமங்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கே தர வேண்டும் என்ற கொள்கை நிறைவேற்றப்பட்டால், "லைசன்ஸ் ராஜ்'ய ஊழல் ஒழிக்கப்படும் என்ற கொள்கை பேசப்படவில்லையே என்ற கவலை ஏற்படுகின்றது.
அதற்குப் பதிலாக, உரிமங்கள் ஏலம் விட வேண்டும். அதிகத் தொகை கொடுக்கும் முதலாளிகளுக்கு உரிமங்கள் கிடைக்க வேண்டும். அதனால் அரசுக்கு வருமானம் பெருகிடும் என்று பணத்தைக் குறிவைத்துப் பேசப்படுகிறது. மக்களைப் பாதிக்குமே என்ற உண்மை பேசப்படவில்லை.
2001-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசால் தொடர்ந்து பின்பற்றப்பட்ட முறை, ஏலம் விடாமல், அரசு நிர்வாக அமைப்பே விலையை நிர்ணயித்து, தகுதியானவர்களுக்கு, விதிமுறைகளைப் பின்பற்றி உரிமங்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த முறையைப் பின்பற்றித்தான் 2ஜி உரிமங்களும் வழங்கப்பட்டன. இந்தக் கொள்கை முடிவை மத்திய ஆட்சியில் பதவியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் செயல்படுத்தி வந்துள்ளனர்.
இந்தக் கொள்கை முடிவை ஆதரித்து இதன் பயனால் கோடிக்கணக்கான மக்கள் செல்போன்களைப் பயன்படுத்தும் நிலை தோன்றியுள்ளது என்ற புள்ளிவிவரங்கள் நாட ôளுமன்றத்தில் மத்திய அரசாலேயே விளக்கிச் சொல்லப்பட்டது. அதிக வசதிகள் கொண்ட 3ஜி செல்போன்கள் ஏலத்தில் விடப்பட்டதால் மத்திய அரசுக்கு, வருமானம் குவிந்தது.
அதுபோல் 2ஜி செல்போன்களும் ஏலத்தில் விட்டால் வருமானம் பெருகும் என்று வாதிடப்படுகிறது. அதன் விளைவாகச் சாதாரண மக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்ற வாதம், பிரதிபலிக்கவில்லை.
ஆடு, மாடு மேய்ப்பவர்களும் வயல்களில் கூலி வேலை பார்ப்பவர்களும் தெருவில் குப்பைகளைக் கூட்டுபவர்களும் செல்போன்களைப் பயன்படுத்தும் காட்சிகளை எடுத்துக்கூற இயலாத நிலை தோன்றி விட்டது.
ஏலம் விடக்கூடாது என்ற மத்திய அரசின் கொள்கை தவறு. ஏலம்தான் விட வேண்டும் என்று அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறாக கொள்கை முடிவு தவறாக அமல்படுத்தப்பட்டால்தான் அதை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருந்து வந்துள்ளது.
ஏலம் விடுவதிலும் தில்லுமுல்லுகள் நடப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இதையெல்லாம் தவிர்ப்பதற்கு உரிமங்கள் பெற்றுள்ள நிறுவனங்களைத் தேசியமயமாக்க வேண்டும் என்று கூறிட சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்கள் இல்லையே என்ற கவலைதான் ஏற்படுகிறது.
ஆட்சியில் உள்ளவர்கள் செய்த தவறுகளுக்காகத் தொழில் தொடங்கி பெரு முதலீடு செய்தவர்களின் உரிமங்களும் பறிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
2ஜி செல்போன்கள் உற்பத்தி செய்து மக்களுக்கு விற்கும் உரிமங்கள் வழங்கப்பட்டன. மத்திய அரசு அமைப்புகள் நிர்ணயித்த பணமும், அரசால் வசூலிக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற ஏழை மக்களும் பயன் பெற்றுள்ளனர்.
உரிமங்கள் வழங்கும்போது சலுகைகள் காட்டப்பட்டுள்ளன. இதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதுதான் பரிசீலிக்க வேண்டிய பிரச்னையாகும்.
இந்த நிலை ஏற்படாதிருக்க விதிமுறைகளை வகுக்க வேண்டும். ஆனால், ஏல முறையைக் கொண்டு வந்து அரசு கஜானாவில் பணம் குவிக்க வேண்டும் என்பது சாதாரண மக்களைப் பாதிக்கும் முடிவாகும். மாறாக, தனியார் துறையே வேண்டாம், மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையே இந்த உரிமங்களையும் பெற்று உற்பத்தி செய்வதுதான் உண்மையான தேவையான தீர்வாக அமையும்.
லஞ்சம் பற்றிய விவாதங்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடக்கின்றன. ஆட்சி அதிகார அமைப்புகளில் லஞ்சம் இல்லாமல் ஒழித்திட வேண்டும்.
சாதாரண மக்கள் அதிகார மையங்களை அணுகும்போதும் லஞ்சம் தோன்றுகிறது. ஆனால், ஆட்சிகளை நடத்திட வரும் அரசியல் கட்சிகளே லஞ்சம் வாங்கும் நிலை புதிய சரித்திரமாகும்.
அரசியல் கட்சித் தலைவர்களையும் ஆட்சியிலே இருப்பவர்களையும் ஆட்சிக்குவர இருப்பவர்களையும் தொழில் அதிபர்களும் பணவசதி உள்ளவர்களும் சந்தித்துத் தேர்தல் நிதி வழங்குவது தொடர்கிறது. தேர்தல் காலத்தில் அதிக அளவில் நடக்கின்றது.
சட்டப்பேரவைத் தேர்தல்களில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவழித்த காலம் மாறி, கோடிக்கணக்கில் செலவு செய்யும் காலம் தோன்றியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணமே செலவழிக்காமல் மக்களைச் சந்தித்து, கொள்கைகளைத் திட்டங்களை விளக்கிக் கூறிடத் தேவையான வசதிகளைத் தேர்தல் ஆணையமே செய்து கொடுத்துப் பண ஆதிக்கத்தை ஒழித்திட்டாலே அரசியல் லஞ்சம் அழிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.