நம் நாட்டில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் மக்களுக்குப் பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான புதிய வாகனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கின்றன. வாகனம் வாங்குவதற்கு வட்டியில்லா கடன் உதவி, அதனையும் மாதத் தவணைகளில் செலுத்துவது போன்ற வசதிகளை வாகன விற்பனையாளர்களே செய்து கொடுக்கின்றனர். இதன் காரணமாக மிகச்சுலபமாக வாகனங்களை மக்கள் வாங்கி உபயோகிக்கின்றனர். ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருப்பது சர்வசாதாரணமாக உள்ளது. வாகனங்களை நிறுத்த வீட்டில் வசதி இல்லையென்றாலும் பொதுஇடங்களிலும், சாலைகளிலும் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர்.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும் மாநகரப் பகுதிகளிலும் ஏன் கிராமப்புறங்களிலும்கூட போக்குவரத்து நெரிசல் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கிறது. குறித்த இடத்துக்குச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியவில்லை. அவசர உதவி வாகனங்கள்கூட சரியான நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் செல்வது இன்றையச் சூழலில் இயலாத ஒன்றாகவே உள்ளது.
வாகனங்கள் பெருகியுள்ள காரணத்தால் அதற்கு ஈடாக விபத்துகளும் பெருகியுள்ளன. தமிழகத்தில் வாகன விபத்தின் காரணமாக ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக 13 பேர் உயிரிழப்பதாகக் கூறுகின்றனர். போதாக்குறைக்கு மது விற்பனை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதே வேகத்தில் வாகன விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் கூடி வருகிறது. மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுகின்றவர்களால்தான் பெரும்பாலும் விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன.
சாலை விபத்துகளில் பெரியவர்களைவிட குழந்தைகளும், மாணவர்களும், இளைஞர்களுமே அதிகம் பலியாகின்றனர். உலக அளவில் மூன்று நிமிடத்துக்கு ஒருமுறை சராசரியாக இரண்டு குழந்தைகள் வீதம் சாலைவிபத்தில் உயிரிழப்பதாகக் கூறுகின்றனர். அடுத்த ஆண்டுக்குள் சாலை விபத்தின் காரணமாக பலியாவோர் எண்ணிக்கை மேலும் இரண்டு மடங்காக உயரும் என்று கருதப்படுகிறது. ஆண்டுதோறும் உலக அளவில் போரினாலும், பயங்கரவாதத்தாலும் பலியாகின்றவர்களின் எண்ணிக்கையைவிட சாலைவிபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிமாகும்.
வருமானத்தில் ஒரு பகுதி வாகனங்களுக்கான எரிபொருளுக்காகச் செலவிட வேண்டி உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப எனக் குடும்ப வருவாயில் ஒரு பகுதியைச் செலவழிப்பதுபோல நமது நாட்டின் வருவாயிலும் பெரும்பகுதி வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யச் செலவாகிறது. இதன் காரணமாக அன்னியச் செலாவணி கையிருப்பு கரைகிறது.
மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் கோடி முதலீடு செய்து புதிய புதிய வடிவமைப்பில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களைத் தயாரிக்கின்றனர். இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படும் அளவுக்குக் கார் உற்பத்தித் தொழிற்சாலைகள் சென்னையில் அதிகமாக உள்ளன. கார் தொழிற்சாலைகள் அதிகரிப்பதையே தமிழகத்தின் தொழிற்வளர்ச்சி என அடையாளம் காட்டுகின்றனர்.
கார் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் டாடா, மகேந்திரா போன்ற இந்திய பெரு நிறுவனங்களும் தமிழகத்தில் ஏராளமான வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. குறிப்பாக, சிறிய ரக கார்கள் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தச் சிறிய ரக கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வியாபாரத்தைப் பெருக்குவதற்கு வழிதேடாமல் உள்நாட்டிலேயே சந்தைப்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கி வருகின்றனர்.
இந்த வாகனங்களை இயக்க கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கடந்த ஆண்டு செலவழிக்கப்பட்ட தொகை ரூ. 7.5 லட்சம் கோடியாகும். எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்திக்கொண்டே செல்கின்றன. இதன் காரணமாக, விலைவாசி உயர்வு விஷம்போல் ஏறி வருகிறது. மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தியா போன்ற வளரும் நாட்டுக்கு இது தேவைதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இந்தியாவில் தற்போது வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 14 கோடியே 20 லட்சம் ஆகும். இந்த வாகனங்களை இயக்குவதன் மூலம் காற்று மண்டலம் புகைமண்டலமாக மாறுகிறது. சுற்றுச்சுழல் மாசுபடுகிறது. புவிவெப்பமயமாதல் வேகமாக நடைபெறுகிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு சாலைகளை விரிவாக்கம் செய்து பல்வேறு விதமான போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றினாலும், சாலைகளில் அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் சமாளிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
நான்கு வழிச்சாலைகள், ஆறு வழிச்சாலைகள், புறவழிச்சாலைகள், பறக்கும்சாலைகள், கிராமப்புற இணைப்புச்சாலைகள், வெளிச்சுற்றுச்சாலைகள் என பலவகை வசதியான சாலைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் சாலைகள் போதுமானதாக இல்லை. போதாகுறைக்கு சாலைகளை அகலப்படுத்துகிறோம் எனும் பெயரில் ஏராளமான மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளனர். அதற்கு ஈடாக மரங்களை நட்டு வளர்க்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டதாகத் தகவல்கள் ஏதும் இல்லை.
சாலை வசதிகளைப் பெருக்கும் அதேநேரத்தில் வாகனப் பெருக்கத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். 18 வயதுக்கு உள்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் வாகனங்களை இயக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்.
நம்மைப்போலவே போக்குவரத்து நெரிசல் மிக்க நாடுகளில் வாகனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளனர்.
சிங்கப்பூர் ஒரு சிறிய நாடாக இருந்தாலும், அங்கு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வெற்றி கண்டுள்ளனர்.
குறிப்பிட்ட நேரத்தில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளைப் பயன்படுத்துவோருக்குக் கட்டணம் நிர்ணயித்து வசூல் செய்கின்றனர். வாகனங்களை நிறுத்துவதற்கும் நேரத்துக்குத் தக்கபடி கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர். போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் கணினி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக்கணக்குகளிலிருந்து உடனடியாக அபராதம் அரசின் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளப்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கையின் காரணமாக அரசுக்கு வருவாய் பெருகுகிறது. சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பொது வாகனங்களைப் பயன்படுத்துகிற கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். பொது வாகனங்களில் பயணம் செய்வோருக்குப் பாதுகாப்பும், வசதிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நடைமுறையை நமது அரசும், பின்பற்ற வேண்டும்.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மோட்டர் வாகனங்களைப் பயன்படுத்துவதைவிட மிதிவண்டிகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில் மக்கள் மத்தியில் பொது வாகனங்களைப் பயன்படுத்துவது, மிதிவண்டி பயன்படுத்துவது, நடந்து செல்வது ஆகிய நல்ல பழக்கவழக்கங்கள் குறைந்து போய்விட்டன. வாகனங்கள் நமது உடல் உழைப்பையே குறைத்து விடுகின்றன. எனவே நாம் நடைப்பயிற்சிக்கும், உடற்பயிற்சிக்கும் தனியாக நேரம் ஒதுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காந்தியப் பொருளாதார அறிஞர் குமரப்பா தனது அறையில் ஓர் ஏழை விவசாயியின் படத்தை மாட்டி வைத்து அதில், "மை மாஸ்டர்ஸ் மாஸ்டர்' என எழுதி வைத்திருந்தார். அதாவது, "எனது குருநாதர் காந்தியடிகள். ஆனால், காந்தியடிகளின் குருநாதர் இந்த ஏழை விவசாயிதான்' என்றார். ஏனென்றால், அக்காலத்து விவசாயி எங்கு சென்றாலும் நடந்து செல்வார் அல்லது மாட்டுவண்டிகளைப் பயன்படுத்துவார்.
உழவுப் பணிகளுக்கு டிராக்டரைப் பயன்படுத்துவதைவிட மாடுகளைப் பயன்படுத்துவதே லாபகரமானது என சான்றுகளுடன் விளக்குவார் ஜே.சி. குமரப்பா. அண்ணல் காந்தியடிகள் பொதுமக்கள் அதிகமாகப் பயணம் செய்யும் சி வகுப்புகளிலேயே ரயில் பயணங்களை மேற்கொள்ளுவார். நடைப்பயணம் மூலமாகவே பல இடங்களுக்குச் செல்வதை காந்தியடிகள் விரும்பினார்.
நமது முன்னோர்கள் பெரும்பாலும் நடந்தே சென்று, ஆரோக்கியமுடன் வாழ்ந்து வந்தனர் என்பது வரலாறு. சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது சாஸ்திர விரோதம் என்று காஞ்சி மகாபெரியவர் தன் வாழ்நாள் முழுவதும் பாதயாத்திரையாகவே பாரதம் முழுவதும் பயணம் செய்தார்.
முன்பெல்லாம் வண்டிமாடு, பசுமாடு, குதிரை என வீடுதோறும் விலங்குகளை வைத்து பராமரித்தும் பயன்படுத்தியும் வந்தனர். அதற்காக நாம் கட்டைவண்டி காலத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறவில்லை. மோட்டார் வாகனங்களை நமது தேவைக்குப் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். ஆனால், ஆடம்பரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மிதிவண்டியை ஓட்டுவது உடலுக்கு ஆரோக்கியமானதாகவும், சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதாகவும் அமைகிறது. நம் நாட்டில் கல்வி நிறுவன வளாகங்கள், அரசு அலுவலக வளாகங்கள் போன்றவற்றின் உள்ளே மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். அருகாமையில் உள்ள அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குச் செல்வோர் நடந்து செல்வதே ஆரோக்கியமானது. ஆரோக்கியம் அவருக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும்தான்.
மக்கள் பொது வாகனங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும். அரசும் அதற்குத் தக்கபடி பொதுவாகனங்களில் பாதுகாப்பை உறுதி செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வசதிகளையும் அதிகப்படுத்த வேண்டும்.
பொதுப் போக்குவரத்துத் துறை நிர்வாகக் கோளாறாலும், ஊழலாலும் நஷ்டத்தில் செயல்படுவதுதான் தவறே தவிர, பொதுமக்களுக்கு வசதியான சேவையை அளிப்பதால் இழப்பைச் சந்தித்தால் தவறல்ல. பெட்ரோல் டீசலுக்கான மானிய இழப்புக்குப் பதிலாகப் பொதுப்போக்குவரத்து நஷ்டத்தில் நடப்பதால் அதில் தவறில்லை.
பொதுவாக, வாகனங்களைக் குறைத்திட அரசு நடவடிக்கை மேற்கொள்வதோடு பொதுமக்களும் இது விஷயத்தில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். வாகனங்களைக் குறைத்து வாழ்க்கை காத்திட ஆவன செய்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.