உறுதிமொழி எடுக்கும் தருணம்!

இவ்வாண்டு 35-வது புத்தகக் கண்காட்சி களைகட்டத் தொடங்கிவிட்டது. புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும், பல நல்ல-சிறந்த எழுத்தாளர்களையும், சொற்பொழிவாளர்களையும், மிகச் சிறந்த பத்திர
Updated on
4 min read

இவ்வாண்டு 35-வது புத்தகக் கண்காட்சி களைகட்டத் தொடங்கிவிட்டது. புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும், பல நல்ல-சிறந்த எழுத்தாளர்களையும், சொற்பொழிவாளர்களையும், மிகச் சிறந்த பத்திரிகையாளர்களையும், தொழிலதிபர்களையும் நாம் ஒருங்கே சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது இந்தப் புத்தகக் கண்காட்சியின் சிறப்பம்சம். பல்வேறு இடங்களில் உள்ள பதிப்பகங்களைத் தேடிச்சென்று அலைந்து திரிந்து புத்தகங்களை வாங்குவதைக் காட்டிலும் அனைத்து பதிப்பகத்தின் புத்தகங்களையும் ஒரே இடத்தில் கண்டு வாங்குவதற்காகவே இங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்பது இன்னொரு சிறப்பு.

 கடந்த ஆண்டு 8 லட்சம் புத்தகங்கள் விற்பனையானதாகவும், இந்த ஆண்டு 10 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த 10 லட்சம் இலக்கு என்பதுகூட சென்னையைப் பொறுத்தவரை மிகவும் குறைவுதான்.

 என்னதான் இணையதளத்தில் பட்டனைத் தட்டியதும் நமக்குத் தேவையான புத்தகங்களை வாசிக்கலாம் என்ற நிலைமை வந்துவிட்டாலும், ஒரு தலைசிறந்த புத்தகத்தைப் படிப்பதுபோல்- வைத்திருப்பதுபோல் ஆகாது. சிறந்த புத்தகங்கள் அறிவு ஞானத்தை அளிக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. தாய்-தந்தை ஊட்டாத அறிவை சிறந்த புத்தகங்கள் ஊட்டக்கூடும்.

 * "தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்கப்பட்டபோது, "புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்' என்று கூறினாராம் ஜவாஹர்லால் நேரு.

 * பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது, "புத்தகங்கள்தான் வேண்டும் எனச் சற்றும் தயக்கமின்றி லெனின் கூறியவுடன், குவிந்த புத்தங்கள் பல லட்சமாம். அப்படி உருவானதுதான் மாஸ்கோ லெனின் நூலகம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம் தான் உலகிலேயே மிகப் பெரிய நூலகம்.

 * "என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப்புழு உறங்குகிறதென்று' என்றார் பெட்ரண்ட் ரஸல்.

 * "மனிதர்களின் பெரிய கண்டுபிடிப்பு எது?' என்று கேட்கப்பட்டபோது சற்றும் யோசிக்காமல், "புத்தகம்' என்று பதிலளித்தார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

 * குடும்பத்தைவிட்டு வெளியேறுங்கள் எனத் தூக்கியெறியப்பட்டபோது அறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.

 * தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

 * எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் சென்றபோது தோழர்கள் கேட்டபோது, "எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.

 * ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம்' கட்டுவேன் என்று பதிலளித்தார் அண்ணல் மகாத்மா காந்தியடிகள்.

 இவை எல்லாம் நம் பெரியோர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் அல்ல... அவர்களைப் புனிதர்களாக உருவாக்கிய புத்தகங்களின் வரலாறு. இதைவிட பலரும் அறிந்துகொள்ள வேண்டிய ஓர் அற்புதமான மாமனிதரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். முன்பே படித்தவர்கள் நினைவுகூரட்டும்; படிக்காதவர்கள் மனதில் பதியவைத்துக் கொள்ளட்டும்.

 எல்லோரும் அண்ணாந்து பார்த்து அதிசயிக்கும் அந்த மாமனிதர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். 2011 பிப்ரவரி 16 அன்று இந்திய சர்வதேச மையத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்த உருக்கமான புத்தகப் பதிவு இதோ:

 ""1954-1957-ஆம் ஆண்டுகளில் சென்னை குரோம்பேட்டையில் மெட்ராஸ் தொழிற்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்.ஐ.டி) படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் என்னுடைய படிப்பின் இரண்டாவது ஆண்டில் 1955 டிசம்பரில் படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன்.

 எனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையில் தங்களது ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். நான் குறிப்பிட்ட பாடத்தில் சரியாகத் தெளிவடையாமல் இருந்தேன். ஆகவே, அடுத்து வரவிருந்த தேர்வுக்கு அந்தப் பாடத்தில் என்னைத் தயார் செய்வதற்கு விடுதியில் தங்குவதற்கு முடிவு செய்திருந்தேன்.

 அந்தக் கோடை விடுமுறையின்போது ஒருநாள் என்னுடைய மைத்துனர் அகமது ஜலாலிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர், ராமேஸ்வரத்தைக் கடுமையான சுழல்புயல் தாக்கியதாகவும், என்னுடைய பெற்றோர்கள் என்னை உடனடியாகப் பார்க்க விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

 நானும் உடனடியாக ராமேஸ்வரம் சென்று என்னுடைய பெற்றோர்களையும் மற்றவர்களையும் பார்க்க விரும்பினேன். மாதக் கடைசி என்பதால், என்னிடம் பணம் இல்லை. எனக்குப் பணம் அனுப்புவதற்கு என்னுடைய குடும்பத்துக்கும் கால அவகாசம் இல்லை. என்னுடைய பயணத்திற்கு எப்படி ஏற்பாடு செய்வதென நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

 அந்தச் சமயத்தில் என்னிடம் ஒரே ஒரு சொத்து மட்டும்தான் இருந்தது. அது என்னவெனில், எனது இரண்டாம் ஆண்டு படிப்பின்போது ஏரோடைனமிக்ஸ் என்ற பாடத்தில் எனது சிறப்பான தேர்வைப் பாராட்டி மெட்ராஸ் தொழிற்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிர்வாக கவுன்சில் தலைவர் டாக்டர். லட்சுமணசாமி முதலியாரால், பரிசாக அளிக்கப்பட்ட மிக உயரிய புத்தகமாகும். அந்தப் புத்தகத்தின் பெயர் "தி தியரி ஆஃப் எலாஸ்டிசிடி'. அந்தப் புத்தகம் திமோ ஷெக்கோ, குட்லியர் ஆகியோரால் எழுதப்பட்டது. அந்தக் காலத்திலேயே அதனுடைய விலை ரூ.400 ஆகும்.

 என்னுடைய படிப்புத் திறமைக்காகப் பரிசளிக்கப்பட்ட அந்தப் புத்தகத்தை விற்பது குறித்து முடிவெடுப்பது எனக்கு சிரமமாக இருந்தது. என்னுடைய ஊருக்குச் செல்லக் குறைந்தபட்சம் ரூ.60 தேவைப்பட்டது. எனவே, நான் குரோம்பேட்டையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியிருந்த மூர்மார்க்கெட்டிற்கு மின்சார ரயிலில் சென்றேன். நான் இதற்கு முன்னதாக லைட் ஃப்ரம் மெனி லேம்ப்ஸ் என்ற புத்தகத்தை வெறும் ரூ.20க்கு வாங்கியிருந்தேன். அந்தப் புத்தகம் என்னுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆன்மாவாக விளங்கியது. அந்தப் புத்தகத்தை நான் வாங்கிய பழைய புத்தகக்கடை பாரம்பரியக் குடுமியோடு இருந்த ஒரு பயபக்தியான பிராமணரால் நடத்தபட்ட கடை.

 நான் அவரை அணுகி, ""என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. நான் அதை விற்கவேண்டியுள்ளது. ஏனென்றால் சொந்த ஊருக்கு அவசரமாகச் செல்வதற்கு பணம் தேவைப்படுகிறது'' என்று கூறினேன்.

 புத்தகத்தைக் காட்டுமாறு கேட்டதும், எனக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்று கேட்டார். மிகக்குறைவாகத்தான் கொடுப்பார் என்று கருதினேன். ஆனாலும் எனக்கு ரூ.60 தேவைப்படுகிறது என்று கூறினேன். அவர் அந்தப் புத்தகத்தைத் திறந்து பார்த்தார். முதல் பக்கத்தில் இந்தப் புத்தகம் அப்போதைய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரான டாக்டர் லட்சுமணசாமி முதலியாரால் முதல் பரிசுப் புத்தகமாகக் கொடுக்கப்பட்டது என்ற விவரத்தைப் படித்தும் பார்த்தார். தான் அந்தப் புத்தகத்தை வாங்கப் போவதில்லை என்றும், அந்தப் புத்தகம் பேரா.லட்சுமணசாமி முதலியாரால் பரிசளிக்கப்பட்ட புத்தகம் என்பதால் எனக்கு ரூ.60 தருவதாகவும், நான் பணத்தைத் திரும்பக் கொடுக்கும்வரை புத்தகத்தை பத்திரமாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 ஒரு சிக்கலான சமயத்தில் எனக்கு உதவுவதற்கு மகத்தான ஆன்மா ஒன்று முயற்சிக்கிறது என்பதிலும், படிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தை அவர் புரிந்துகொண்டார் என்பதிலும் நான் மகிழ்ச்சியடைந்தேன். அவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு நான் ராமேஸ்வரம் சென்றேன். அங்கு இயற்கையின் கொடூரத்தைப் பார்த்தேன். ஆனால் என் எண்ணமெல்லாம் அந்தப் புத்தகத்தைத் திரும்ப வாங்குவதிலேயே இருந்தது.

 ராமேஸ்வரத்திலிருந்து திரும்பியவுடன் மூர்மார்க்கெட்டுக்குச் சென்று பணத்தைக் கொடுத்து அந்தப் புத்தகத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன். கொஞ்ச காலத்திற்குத் தனது மகனை இழந்திருந்த தாய், தன் மகனை திரும்பப் பெற்றபோது ஏற்படும் அனுபவம் போன்றிருந்தது. விருதுகள் பெறும் சாகித்ய அகாதெமியின் பல புத்தகங்கள், வீட்டு நூலகத்தின் மிக உயரிய சொத்துகளாகும். அவை இளம் சிந்தனையாளர்களை மகத்தான வித்வான்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், அறிவியலாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், எழுத்தாளர்களாகவும், தலைவர்களாகவும் மாற்றும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்'' என்று புத்தகம் பற்றித் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வைப் பதிவு செய்துள்ளார் அப்துல்கலாம்.

 ""நான் 2009-ம் ஆண்டு ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகக் காட்சியின்போது அங்கு 2 லட்சம் மக்களுக்கு மேல் திரண்டிருந்ததைக் கண்டு பிரமித்தேன். அவர்களிடம் வீட்டில் நூலகம் இருக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். அந்தப் பெருந்திரளான கூட்டம் முழுமையும் உற்சாகத்துடன் கீழ்க்கண்ட அந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டது.

 இன்றிலிருந்து நான் 30 புத்தகங்களுடன் ஒரு வீட்டு நூலகத்தைத் தொடங்குவேன். அவற்றில் 10 புத்தகங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களாக இருக்கும்.

 என்னுடைய மகளும் மகனும் இந்த வீட்டு நூலகத்தை 200 புத்தகங்களாக விரிவுபடுத்துவார்கள்.

 என்னுடைய பேரக்குழந்தைகள் வீட்டு நூலகத்தை 2,000 புத்தகங்களுடன் விரிவுபடுத்துவார்கள்.

 நான் என்னுடைய நூலகத்தை எங்களுடைய குடும்பத்தின் வாழ்க்கை முழுமைக்குமான செல்வமாகவும் விலைமதிப்பற்ற சொத்தாகவும் கருதுகிறேன்.

 நாங்கள் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து படிப்பதற்கு வீட்டு நூலகத்தில் குறைந்தது 1 மணி நேரம் செலவழிப்போம்.

 இந்த உறுதிமொழி வாசகங்கள், ஈரோடு மக்களுக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் குறிப்பாக, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வரும் ஒவ்வொருவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழியாகும்.

 இந்த ஆண்டு 10 லட்சம் புத்தகங்கள் விற்கலாம் என்று இலக்கு நிர்ணயித்துள்ளதை 20 லட்சத்துக்கும் அதிகமாக அதிகரிக்கச் செய்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு, நம் சந்ததியினருக்கு அறிவுச் செல்வத்தை மட்டுமே விட்டுச் செல்வது என்ற மிக முக்கியமான இந்த உறுதிமொழியையும் ஒவ்வொரு பெற்றோரும் இந்தப் புத்தாண்டில் (2012) எடுத்தால், இந்திய நாடு அறிவுச்சுடர்மிக்க நாடாக மிளிரும்.

 அப்துல்கலாம் வாக்கை ஆசீர்வதிக்கப்பட்டவரின் வாக்காக ஏற்றுச் செயல்பட்டால், வருங்காலத்தில் எத்தனையோ அப்துல் கலாம்களை உருவாக்கலாமே...

 இன்று சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com