இன்று (ஜூன் 14) உலகக் குருதிக் கொடையாளர் தினம். வேகமான உலகில் நொடிப்பொழுதில் எதுவும் சாத்தியம் என்பதை உறுதிப்படுத்துவதற்காகப் பல்வேறு பணிகள் நவீன தொழில்நுட்பத்துடன் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மனிதன் மற்றும் அவன் வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருள்கள் மற்றும் இதர பொருள்கள் உள்ளிட்டவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்ல ஏதுவாக, வாகனங்களின் வேகத்தைக் கூட்டும் நோக்கில் நல்ல சாலைகளை அரசு அமைத்தது. நோக்கம் நிறைவேறினாலும், அதன் விளைவாக விபத்துகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாத, விலை மதிப்பற்ற குருதியும், குருதிக் கொடையும் அதிமுக்கியத்துவம் பெறுகின்றன. அதற்காக உலக சுகாதார நிறுவனம் ஜூன் 14-ஆம் தேதியை உலக குருதிக் கொடையாளர் தினம் என்று அறிவித்து, ஒவ்வோராண்டும் கடைப்பிடித்து வருகிறது.
இந்த ஆண்டின் குருதிக் கொடையாளர் தின நோக்கமாக, ஒவ்வொரு குருதி நன்கொடையாளரும் ஒரு கதாநாயகன் என்று அறிவித்துள்ளது.
குருதி நன்கொடை செய்வதன் மூலம் ஒவ்வொருவரும் ஒரு கதாநாயகனாகிறார்.தங்கள் குருதியை நன்கொடை செய்து, மற்றவர்களை வாழவைத்து, ஓசையின்றி, பாடலைப் பாடாத கதாநாயகர்களாக இவர்கள் அங்கீகரிக்கப்படுகின்றனர்.
இந்த நோக்கம், உலகம் முழுவதும் உள்ள மக்கள் குருதிக் கொடையைத் தன்னார்வத்துடன் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
குருதிக் கொடை வழங்குவோரை கதாநாயகர்களாக ஆக்குவதற்காக, குருதிக் கொடை பெறுவதில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் 62 நாடுகளில் 100 சதவிகிதம் தன்னார்வ நன்கொடை மூலமே குருதி பெறப்படுகிறது.
இருப்பினும், 40 நாடுகளில் பணம் கொடுத்தே குருதி வாங்கப்படுகிறது. அங்கு 25 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே குருதி நன்கொடை அளிக்கின்றனர்.
அதனால், உலகம் முழுவதும் 2020-ஆம் ஆண்டுக்குள் தன்னார்வக் குருதி நன்கொடையாளர் மூலமே குருதியைப் பெறுவதே எங்கள் இலக்கு என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் 18 முதல் 24 வயதுக்கு உள்பட்டோர் 52.83 சதவிகிதமும், 24 முதல் 45 வயதுக்கு உள்பட்டோர் 28.38 சதவிகிதமும், 45 முதல் 64 வயதுக்கு உள்பட்டோர் 18.78 சதவிகிதமும் குருதிக் கொடை அளிக்கின்றனர்.
இவர்களில் 94 சதவிகிதம் ஆண்களாகவும், 6 சதவிகிதம் பெண்களாகவும் இருக்கின்றனர் என்று தெரிய வருகிறது. எனவே, குருதிக் கொடையில் தன்னிறைவு பெற 24 வயதுக்கு மேற்பட்டவர்களும், அதிக எண்ணிக்கையிலான பெண்களும் குருதிக் கொடை அளிப்பதற்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டியுள்ளது.
அனைத்துத் தரப்பினரும் குருதிக் கொடையை கல்லூரிகளை இலக்காக வைத்தே நடத்துகின்றனர். இதனாலேயே இளைஞர்கள் குருதிக் கொடை அளித்ததற்கான சதவிகிதம் அதிகமாக உள்ளது.
திரைப்படங்களில் காட்டப்படுவது போல, ஒருவர் உடலில் இருந்து நேரடியாக அடுத்தவர் உடலுக்குக் குருதி செலுத்தப்படுவதையே குருதிக் கொடை என்று பலரும் நம்பி வருகின்றனர்.
இதைத் தவிர்க்க குருதிக் கொடைக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வரும் வேலூர் மாவட்டத்தைப்போல, அனைத்துத் தரப்பு மக்களும் கூடும் திருமணங்களில் குருதிக் கொடை அளிக்கும் நிகழ்வை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும்.
இதன் மூலம், உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கை எட்ட 2020 வரை காத்திருக்கத் தேவையில்லை. ஒரு சில ஆண்டுகளிலேயே எட்டிவிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.