செயற்கைத் தட்டுப்பாடு

தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறையைப் போலவே மக்களை வாட்டி வதைக்கும் மற்றொரு பிரச்னை சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை. பதிவுசெய்த நாளில் இருந்து அதிகபட்சமாக ஒரு வாரத்துக்குள் விநியோகம் செய்யப்பட்ட
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறையைப் போலவே மக்களை வாட்டி வதைக்கும் மற்றொரு பிரச்னை சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை.

பதிவுசெய்த நாளில் இருந்து அதிகபட்சமாக ஒரு வாரத்துக்குள் விநியோகம் செய்யப்பட்ட சிலிண்டர்கள், இப்போது வீடுகளுக்கு வந்துசேர 30 நாள்களுக்குமேல் ஆகிறது.

இரண்டு சிலிண்டர்கள் வைத்திருப்போர் ஒருவழியாகச் சமாளித்தாலும், ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்திருப்பவர்கள் படாதபாடுபடுகிறார்கள். இந்தப் பற்றாக்குறைக்கு கேஸ் டேங்கர் லாரிகள் கடந்த மாதம் மேற்கொண்ட வேலைநிறுத்தம் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், வேறு காரணமும் இருக்கிறது.

மின் வழித்தட இழப்பால் எப்படி மின் விநியோகம் பாதிக்கப்படுகிறதோ, அதேபோல, சமையல் சிலிண்டர் விநியோகத்திலும் "வழித்தட இழப்பு' ஏற்படுகிறது.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டரை வணிக உபயோகத்துக்குப் பயன்படுத்துவது சட்டப்படி தவறு, ஆனால், அந்தத் தவறைப் பலரும் துணிந்து செய்கிறார்கள். பெரிய ஹோட்டல்கள் முதல் தள்ளுவண்டி கடைகள்வரை சமையல் பயன்பாட்டுக்கு வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்துவது நாடு முழுவதும் பரவலாக நடக்கிறது. இது மட்டுமன்றி, வாகனங்களுக்கு வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.

போலி குடும்ப அட்டைகள்போல, ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கேஸ் இணைப்பை "எப்படியோ' பெற்றுக்கொண்டுள்ளவர்கள், தமது உபயோகம்போக மற்ற சிலிண்டர்களை 2 மடங்கு விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஒரு சிலிண்டர் விலை இப்போது ரூ.420-க்கு கிடைக்கிறது என்றால், கள்ளச் சந்தையில் இரண்டு மடங்கு லாபத்துக்கு, அதாவது ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.

14 கிலோ கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரை ரூ.800-க்கு வாங்கிப் பயன்படுத்தி காரை இயக்கினால், குறைந்தபட்சம் 300 கி.மீ. தொலைவுவரை செல்ல முடிகிறது. அதே தொலைவுக்கு பெட்ரோலைப் பயன்படுத்திச் செல்ல வேண்டுமானால், ரூ.1,400 வரை செலவாகும் என்பதால், கார்களில் வீட்டு உபயோக சிலிண்டர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கார்களில் உள்ள கேஸ் கிட்-களுக்கு வீட்டு உபயோக சிலிண்டரிலிருந்து எரிவாயுவை நிரப்புவது சட்டவிரோதச் செயல். இருப்பினும், அதற்கு என ரூ.50 அல்லது 100 பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக நிரப்பிக் கொடுப்பதற்கும் ஊருக்கு ஊர் ஆள்கள் இருக்கிறார்கள். பலர் இந்த எரிவாயுவை நிரப்பும் உபகரணத்தையே சொந்தமாகவும் வாங்கி வைத்துக்கொண்டு வீடுகளிலேயே நிரப்பிக் கொள்கிறார்கள்.

உண்மையிலேயே தேவை இருந்து இரண்டு சிலிண்டர்களை முறையாகப் பயன்படுத்துவோரைத் தவிர்த்து, ஒரு சிலிண்டரையே மாதக்கணக்கில் பயன்படுத்துவோரைக் குறிவைக்கின்றனர். அவர்களுக்கு 100 அல்லது 200 அதிகமாகக் கொடுத்து சிலிண்டரைப் பெற்றுக்கொண்டு மேலும் 200 அதிகமான விலைக்குக் கள்ளச்சந்தையில் விற்கின்றனர். கேஸ் ஏஜென்சிகள் சிலவும் இதற்கு உடந்தை.

சிலிண்டர் விநியோகத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தி, அந்த இடைவெளியில் சிலிண்டரை ஏஜென்சி ஊழியர்கள் வெளியில் விற்றுவிடும் செயலும் நடக்கிறது.

முறைகேடான வழியில் லாபமடைவதற்காக யாரோ செய்யும் சட்டவிரோதச் செயல்களால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தாம். பொதுவிநியோகத் திட்ட முறைகேடுகளையும் விஞ்சியுள்ள இந்த முறைகேட்டைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு வருவாய்த் துறை, எண்ணெய் நிறுவனங்கள், கேஸ் ஏஜென்சிகளுக்கு உண்டு.

எந்தெந்த வழிகளில் சமையல் சிலிண்டர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது இந்த மூன்று துறை அதிகாரிகளுக்கும் நன்றாகத் தெரியத்தான் செய்யும். ஆனால், இப்படி முறைகேடாகப் பயன்படுத்தும் சிலிண்டர்களை எங்கேயாவது எப்போதாவது பறிமுதல் செய்வதுடன் நடவடிக்கை முடிந்து விடுகிறது.

உணவுப்பொருள் பதுக்கல் எப்படி தேசிய அளவிலான பிரச்னையாகப் பார்க்கப்படுகிறதோ, அதேபோல இந்த சமையல் சிலிண்டர் முறைகேடும் பார்க்கப்பட வேண்டும். போதிய அளவு உற்பத்தி இருந்தும் ஒரு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, சமூக விரோதிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை இனியும் எத்தனை காலம்தான் அரசும் அதிகாரிகளும் வேடிக்கை பார்ப்பார்கள்?

ஏற்கெனவே சமையல் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிக்கும் நிலையில், இப்போது வாடகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டேங்கர் லாரிகள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளன. இதனால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை வேலைநிறுத்தத்தை நீடிக்கவிட்டு பிரச்னையை பூதாகரமாக்கியதுபோல் அல்லாமல், இப்போதாவது பிரச்னையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், இந்த செயற்கைத் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com