மண்ணில் வாழும் பெரும்பான்மையான பாக்டீரியா, பூசனங்கள், பூச்சி வகைகளனைத்தும் தங்களது உயிர்வாழ் சக்திக்கு, உயிர்ச் சத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.
நல்ல வளமான பூமியில், ஒரு தேக்கரண்டி அளவுள்ள மண்ணில், சுமார் 6 கோடி நுண்ணுயிர்கள், அதாவது, தமிழக மக்கள்தொகை அளவு இருக்கிறது. இதுபோன்று பூமியில் உயிர்ச்சத்து 4 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும். எனவேதான் அம்மண் அதிக எண்ணிக்கையில் நுண்ணுயிர்களை மகிழ்வாக வாழ வைக்க முடிகிறது.
இவையிரண்டின் செயல்பாட்டின் வெளிப்பாடுதான், அந்த உயிரோட்டமுள்ள மண்ணின் உற்பத்தித் திறன் அதிகரிப்பும், அதன் விளைவான அதிக விளைபொருள் மகசூலும்.
தமிழகத்தில் உள்ள பெருவாரியான விளைநிலங்களில், உயிர்ச்சத்து 1 சதவிகிதத்துக்குக் குறைவாகவும், நுண்ணுயிரின் எண்ணிக்கை 1 கிராமில் 1 கோடிக்குக் குறைவாகவும் உள்ளதால், மண்ணின் ஈரத்தன்மை குறைந்து, உலர்ந்து, நிலத்தின் உற்பத்தித் திறன் மிகக் குறைந்தே உள்ளது.
தொழிற்புரட்சி காரணமாக உலகம் முழுவதும் மாறி வரும், பொய்த்துவரும் பருவமழை, நீரில்லா நதிகள், வளமிழந்த, வளமிழக்கும் மண், இடுபொருள் விலையேற்றம், விலைபொருள் விலைச் சரிவு, உடன் தரமிழக்கும் விளைபொருள்கள், இடைத்தரகர் இடையூறு போன்ற இடையூறுகளால் வரவும், செலவும் சமத்துவ நிலைப்பாட்டையடைந்ததால், கிராமங்களில் வசிப்போர் நகரத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கின்றனர்.
தமிழகத்தில் 6.7 கோடி மக்கள்தொகையில் 46 சதவிகிதம் நகரத்தில் (10 மாநகராட்சிகளிலும், 148 நகராட்சிகளிலும், 561 நகரப் பஞ்சாயத்துகளிலும்) வாழ்கிறார்கள் என்பது சமீபத்திய கணக்கெடுப்பு.
1991-ல் 34 சதவிகித மக்கள் மட்டுமே நகர்ப் பகுதிகளில் வாழ்ந்தனர். இந்தியாவில் 323 பேர் ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் வாழ்வதாகக் கணக்கு, தமிழகத்திலோ 478 பேர் ஒரு சதுர கிலோமீட்டருக்குள் வாழ்கிறார்கள்.
அப்படிப் புலம்பெயரும் கிராமத்து மக்களெல்லாம், நகரங்களில் குறு தொழில்களை நாடி பிழைக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 68 லட்சம் நிலமுடைய விவசாயிகளில், 1 ஹெக்டேருக்குக் குறைவாக நிலம் உள்ளவர்கள் 23 லட்சமும், 2 ஹெக்டேருக்குக் குறைவாக 17 லட்சம் விவசாயிகளும் உள்ளனர். இது, மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் 60 சதவிகிதம் ஆகும்.
இழந்த மண்வளத்தை, இவர்கள் நிலத்திலாவது முதலில் மீட்டிட்டால், வாழ்வு வேர்விட்டுத் தழைத்திடும், பூத்திடும், காய்த்திடும். 600 மில்லியன் ஆண்டுகளாக மண்ணை மேம்படுத்தும் பணியைச் செய்துவரும் திருவாளர் மண்புழுவை அவசர உதவிக்கு அழைத்திடுவோம்.
தாவரங்கள், மண்புழு உரமிடுவதால், 30 முதல் 50 சதவிகிதம் அதிக அளவு நைட்ரஜன் சத்தையும், 100 சதவிகிதம் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தையும் உட்கிரகித்து, வேர் மற்றும் மொத்தமாக செடிகளின் வளர்ச்சியையும், மகசூலையும் அதிகரிக்கும் என அறிவியல் கண்டுபிடிப்புகள் பட்டியலிட்டுள்ளன.
மண்புழு உரம் பெற்ற தாவரங்களின் தரம் காக்கப்படுவதும் உறுதியாகியுள்ளது. மண்புழு உரமிட்ட பூமிகளில் 100 மடங்கு அதிக அளவு நுண்ணுயிர்கள் உள்ளன.
மூன்று ஆண்டுகளில் முள்ளில்லா மூங்கில் தோட்டத்தின் நிழலில், ஆண்டுக்கு மூன்று டன் அளவுக்கு மூங்கில் இலைகள் உதிர்ந்து நிலத்தில் படுக்கையாகப் படிந்திடும்.
ஒரு மாடு, நாளொன்றுக்கு, 10 கிலோ சாணம் வீதம், ஆண்டுக்கு சுமார் 4 டன் எடையளவு சாணத்தை வழங்கிடும், அதைப் பயன்படுத்தி, ஒரு ஏக்கர் மூங்கில் தோட்டத்திலிருந்து, சுமார் 30 டன் மண்புழு உரம் தயாரிக்க முடியும்.
உத்தரப் பிரதேசத்தில், தனியார் நிறுவனமொன்று, ஒரு ஏக்கர் மூங்கில் தோட்டத்தில் 70 டன் மண்புழு உரம் ஓராண்டுக்கு உற்பத்தி செய்துள்ளது, மத்திய அரசின் பேம்பூ மிசன் என்ற மூங்கில் திட்டத்தின் கீழ் நடைபெற்ற செயல்விளக்கத்தில் வெளிப்பட்டுள்ளது.
ஒரு டன் மண்புழு உரம் ரூ. 3,000 என்ற குறைந்த விலையில் விற்றால்கூட, ஆண்டுக்குக் குறைந்தது ரூ. 50,000 வரை லாபம் ஈட்டிட வழிவகை செய்வதாலும், ஏக்கரில் 10 டன் மூங்கில் ஆண்டுக்கு அறுவடை செய்வதில் ரூ. 30,000 கிடைப்பதாலும், ஏற்ற தொழில் நுட்பம், தக்க மண்புழு வகைகள் எளிதில் தமிழகத்திலேயே கிடைப்பதாலும், இது ஒரு லாபகரமான செயலாக விவசாயிகள் மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள 4 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களில், 1 லட்சம் குழுக்களுக்கு, குழு ஒன்றுக்கு ஒரு ஏக்கர் மூங்கில் தோட்டம், சொட்டுநீர்ப்பாசன வசதியுடன் நிறுவிட வழிவகை செய்தால் ஆண்டுக்கு 30 லட்சம் டன் மண்புழு உரம் உற்பத்தி செய்திட முடியும்.
ஆண்டுக்கு ஏக்கருக்கு 1 டன் வீதம், 30 லட்சம் ஏக்கருக்கும், இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள 60 லட்சம் ஏக்கர் மானாவாரி மற்றும் நிலங்கள் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கிட இயலும்.
மூங்கில் தோட்டங்களின் நிழலில் அவற்றின் உலர்தழையையே பயன்படுத்தி, உண்ணத்தக்க காளான் வளர்க்கலாம் என்று யோசனை தெரிவித்தேன். விவசாயப் பல்கலை இதை ஏற்றது.
இதன்மூலம் ஏக்கருக்கு, ஓராண்டுக்கு ஒரு டன் உண்ணும் "சிப்பிக் காளான்' மகசூல் உற்பத்தி செய்ய முடியும்.
ஜப்பானில் ஒரு லட்சம் டன் "தாவரக்கரி' அல்லது "அக்ரிசார்' என்றும் பெயரிடப்பட்டுள்ள "விவசாயக்கரி' மண்ணிலிடப்படுகிறது.
பிரேசில் நாட்டின் பழங்குடியினர் பின்பற்றிய இச்சிறந்த தொழில் நுட்பம் தற்போது உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மண்புழு உரம் தாவரக்கரியோடு நன் நுண்ணுயிர்களை அடி உரமாக இட்டால், மண்ணின் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகரித்திடலாம்.
"பயோசார்' இடுவதால் மண்ணின் ஈரம், கடும் கோடையிலும், மற்ற இடாத மண்ணைக் காட்டிலும் 40 சதவிகிதம் அதிகமாக உள்ளதையும், 80 சதவிகிதம் குறைந்த ரசாயன உரப் பயன்பாட்டிலேயே, இரண்டு மடங்கு அதிக மகசூல் கிடைத்துள்ளதையும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மண்ணை, பொன்னைவிட இன்றியமையாத கண்ணைப்போல போற்றிக் காத்திட வேண்டும்.
ஓர் ஏக்கரில், ஓராண்டில் மிக வேகமாக வளர்ந்து, உலக சாதனையாக 40 டன் எடை மகசூல் தமிழகத்தில் தந்துள்ள மலைவேம்பு மரத்தை, விவசாயக் கரியாக உருமாற்றினால், 10 டன் தாவரக்கரி கிடைத்திடும்.
இதை கோமியம் மற்றும் நுண்ணுயிர் கலவைகளில் கலந்து ஏக்கருக்கு இரண்டு டன் வீதம் ஐந்து ஏக்கருக்கு ஆண்டு ஒன்றுக்கு அடியுரமாக மண்ணிலிடலாம். ஒருமுறை இட்டாலே, 50 முதல் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்து தாவரக்கரி பயன் அளித்துக்கொண்டே இருக்கும் என "லெக்மென்' போன்ற அறிவியல் வல்லுநர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 145 லட்சம் ஏக்கர் மொத்த விளைநிலங்களில், வளம் குன்றி, தரம் தாழ்ந்த, மானாவாரி பூமிகளும், குறைந்த அளவே நீர்ப்பாசன வசதியுடைய நிலங்களும் சுமார் 70 லட்சம் ஏக்கர் உள்ளன. இதுபோன்ற தரமிழந்த நிலங்களின் வளத்தை நிச்சயம் மேம்படுத்தலாம்.
தமிழகத்திலுள்ள ஏற்றமிகு விவசாயிகள், இளைஞர்கள், அமைப்புகள், வரப்போரம் மரம் நட்டு, இயற்கையுரம் கிடைக்கச் செய்யலாம்.
மண்மாற்றத்தைச் செம்மைப்படுத்தி, வளத்தையும், நலத்தையும் ஒருங்கிணைக்கவல்லதால், அறிவியலையும், உளவியலையும் கலந்து, வாழ்வியலைச் செம்மைப்படுத்திடும் அந்தப் புனிதச் செயல் விரைவில் தமிழகத்தில் தவழ்ந்திட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.