வாழ்க்கை வாழ்வதற்கே' என்பதை நமது நீதி நூல்கள் எடுத்துக்கூறிய போதும் அதைப் புரிந்துகொள்ளும் போக்கும் அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் போக்கும் குறைந்து வருகிறது. அறிவியலின் வளர்ச்சியும் ஆன்மிகத்தின் தளர்ச்சியும் காரணமாகக் கூறப்படுகிறது. உலகமயத்தின் நுகர்வு கலாசாரமும் இளைய தலைமுறையைச் சீரழிக்கிறது.
அண்மைக் காலமாகத் தற்கொலை செய்துகொள்வோர் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, குடும்பத்தில் தோல்வி, தேர்தலில் தோல்வி, தொழிலில் தோல்வி என விரிந்து பரந்து வளர்ந்து கொண்டே போகிறது.
ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை, காதல் தோல்வியால் நடிகை தற்கொலை, கணவன்-மனைவி சச்சரவால் குடும்பமே தற்கொலை, மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை, கடன் தொல்லை தாங்காமல் விவசாயி தற்கொலை, கட்சித் தலைவர் கைது எனத் தொண்டர் தீக்குளித்து சாவு என தினமும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆண்-பெண் வேறுபாடு இல்லாமல் இந்த அவசர முடிவுக்கு ஆளாகின்றனர். தங்களை நம்பியிருக்கும் குடும்பத்தைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ யோசிப்பதில்லை.
இது அறியாமையின் செயலா? அவசரத்தின் செயலா? விரக்தியின் செயலா? வீம்பின் செயலா? எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இழந்து போவதன் வெளிப்பாடா? மனநோயின் மறுபக்கமா? எல்லாமும்தானா?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவனும் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது. இளைய தலைமுறையினர் இடையே இந்தத் தற்கொலை நோய் பரவிக் கொண்டிருப்பது வேதனையானது.
இத்தனைக் காலமாகப் படித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிந்துணர்வு இல்லாமல் போனது எப்படி? இது ஒரு கோழைத்தனமான முடிவு என்பது கூடத் தெரியாதா? இந்தக் கல்வி அவர்களுக்குச் சொல்லித் தந்த பாடம்தான் என்ன?
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்தது. வெற்றியும் தோல்வியும் நிறைந்தது. உயர்வும் தாழ்வும் சேர்ந்தது. இனிப்பும் கசப்பும் இல்லாமல் மருந்து ஏது? மேடும் பள்ளமும் இல்லாமல் பூமி ஏது? கல்விக்கூடங்கள் இந்த வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க மறந்தது ஏனோ?
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுப்பதற்காக இதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மத்திய வல்லுநர் குழு ஒன்றை கடந்த மார்ச் மாதம் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கான்பூர் ஐஐடி தலைவருமான ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான இந்தக் குழுவில் 11 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து வரும் ஜூன் மாத இறுதியில் அறிக்கை அளிக்கவுள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
வெளிநாடுகளிலும் இதுபோன்ற மாணவர்களின் தற்கொலைகள் நடைபெறுகின்றன. ஆனால், அவற்றைத் தடுக்க அந்நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியா இப்போதுதான் முயற்சிகளை எடுத்து வருகிறது.
முதலில் ஒரு மாணவரின் வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகள் பற்றி, சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியரிடமோ அல்லது காப்பாளரிடமோ தெரிவிக்க வேண்டும். இதுதான் தற்கொலைகளைத் தடுக்க வாய்ப்பாக அமையும் என்று குழுவின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் கூறியுள்ளார்.
""வாழ்க்கையில் வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்வதெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் ஏற்படும் தடுமாற்றமாகும்'' என்றே உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அந்தக் கணத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு விடுமானால், "தாங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம்' என்று நினைத்து வெட்கப்படுவார்கள்.
காதல் தோல்வியினால் தற்கொலை செய்து கொள்வதைவிட மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம் வேறு எதுவும் இல்லை; காதல் என்பதே வாழ்வதற்கான வடிவம்; இதில் சாவுக்கு வேலை என்ன? காதல் என்பது வெற்றியினால் மட்டுமல்ல, தோல்வியினாலும் வாழ்வாங்கு வாழ்கிறது. "காதல் போயின் சாதல்' என்பது அக்கால மொழி; "காதல் போயின் காதல்' என்பது இக்கால மொழி.
ஓர் இதயத்தை மட்டும் காதலிப்பதைவிட மானிடப்பரப்பையே காதலிப்பது சுகமல்லவா! "ஆதலினால் காதல் செய்வீர்!' என்று பாரதி பாடியதும் மானுடத்தின் மீது கொண்ட அளப்பரிய அன்பினால்தான்.
இந்தியாவின் பசியைப் போக்கும் விவசாயப் பெருமக்கள் ஏராளமான பேர் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
காலை முதல் மாலை வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு விவசாயம் செய்துவிட்டு, அறுவடை நேரத்தில் கணக்குப் பார்த்தால், "கையும் காலும்தான் மிச்சம்' என்றால் அவனால் என்ன செய்ய முடியும்?
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்' என்ற வள்ளுவனின் வாக்கு பொய்யாகிவிட்டது. "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' என்ற பாமரனின் வார்த்தைகளே மெய்யாகி நிற்கின்றன.
கடன்காரன் வந்து நெருக்கும்போது மானத்தோடு வாழ்ந்து பழக்கப்பட்ட விவசாயி என்ன செய்வான்? தற்கொலையை அணைத்துக் கொள்ளுகிறான்.
இது ஒரு தேசத்துக்கு மாபெரும் அவமானமாகும். "இந்தியா ஒரு விவசாய நாடு என்றும், இந்நாடு கிராமங்களில்தான் வாழ்கிறது' என்றும் பேசுவதெல்லாம் வெறும் விளம்பரத்துக்காகத்தானா?
விவசாய நிலங்களையெல்லாம் பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு அளிக்கப்படுகின்றன. விவசாயிகளையும், வேளாண்மையையும் வளர்ப்பது இப்படித்தானா?
இத்தனை காரணங்கள் இருந்தாலும் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உழவர்களின் உழைப்பும், உயிர் வாழ்க்கையும் தேசத்துக்காகவே. எத்தனை தடைகள் வந்தாலும் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. இருட்டுக்குப் பிறகும் ஒரு வெளிச்சம் தெரியும்தானே!
வாழ்க்கை என்பது நாம் மட்டும் வாழ்வதற்கானது அல்ல; நம்மைச் சுற்றியிருக்கும் சமுதாயத்துக்காகவும்தான். மனித இனத்துக்கு நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டால் தற்கொலை செய்து கொள்ளத் துணிவார்களா?
வியட்நாம் நாட்டில் அமெரிக்கப் போரை எதிர்த்து புத்த பிக்குகள் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்துவதற்காக முத்துக்குமார் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழுக்காகவே தாளமுத்துவும், நடராசனும் உயிரை விட்டனர்; தாய்நாட்டின் விடுதலைக்காக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தங்கள் உயிர்களையே தியாகம் செய்தனர்.
இவற்றையெல்லாம் இந்தத் தற்கொலைப் பட்டியலில் சேர்த்துவிடக் கூடாது. இவை தியாகமாக மதிக்கப்பட்டாலும், இந்த விலைமதிப்பற்ற உயிர்கள் தேசத்துக்குத் தேவைப்படுகிறது.
அறிவியல் அசுர வளர்ச்சியை அடைந்துவிட்ட போதும், ஓர் உயிரை உருவாக்க முடியாத மனிதன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவும் உரிமை இல்லை. இது வடித்தெடுத்த கோழைத்தனம் மட்டுமல்ல, சுயநலத்தின் மொத்த செயல்வடிவம்; இது மனிதர்கள் வெறுக்கத்தக்க செயல்பாடு.
"தோன்றிப் புகழொடு தோன்றுக' என்றார் வான்புகழ் வள்ளுவர். இந்த உலகில் புகழோடு வாழ முடியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல் இகழ்பவர்களை நொந்து கொள்ளுவதால் என்ன பயன்? என்றும் கேட்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
""வாழ்க்கையை முடிந்தால் அழகுபடுத்து; இல்லாவிட்டால் அசிங்கப்படுத்தாமலாவது இரு''- எழுத்தாளர் அகிலன் இவ்வாறு கூறினார். தற்கொலை செய்து கொள்பவர்கள் தங்கள் வாழ்க்கையை அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள். இது தாமதமின்றித் தடுக்கப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.