பாதை மறந்த பயணங்கள்!

உலகின் நாகரிகத் தொட்டிலாக நைல் நதியை வரலாற்றாசிரியர்கள் வரையறுத்தாலும், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடியாகவே தமிழினத்தைப் பார்க்கிறோம்.  அத்தகைய நாகரிகப் பெருமை மிக்க தமிழினத்தி
Updated on
2 min read

உலகின் நாகரிகத் தொட்டிலாக நைல் நதியை வரலாற்றாசிரியர்கள் வரையறுத்தாலும், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடியாகவே தமிழினத்தைப் பார்க்கிறோம்.

 அத்தகைய நாகரிகப் பெருமை மிக்க தமிழினத்தின் வருங்கால சந்ததிகள் பெருமைக்குரிய குணநலன்களைத் தொடர்ந்து காப்பார்களா என்ற கேள்விக்குறி இப்போது பெரும்பாலானோர் மனதில் எழுகிறது.

 தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் குற்றச் சம்பவங்களைக் கூர்ந்துநோக்கினால், அவற்றின் விபரீதம் புரியும். இவற்றில் பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியைகளும் அதிகமாக இடம் பெற்றிருப்பது ஒருபுறமிருக்க, கணவர்களை கூலிப்படை வைத்துக் கொலை செய்கிற மனைவிமார் குறித்த செய்திகளும் அதிகம் இடம் பெறுவது கவலைக்குரியதாகிறது.

 நமது கலாசாரத்தின் அச்சாணியாக விளங்கும் பெண்கள், அதிலும் குறிப்பாக

 ஆசிரியைகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவது பண்பாட்டுத் தளம் ஆட்டம் கண்டுள்ளதையே நினைவுறுத்துகிறது.

 மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த குற்றங்களில் 95% கொலைகள் பெண்களைப் பின்னணியாகக் கொண்ட பிரச்னை அடிப்படையில் நிகழ்ந்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் கவலைப்படுகின்றனர்.

 பள்ளி ஆசிரியை ஒருவர் ஏற்கெனவே திருமணமான ஆட்டோ டிரைவருடன் நெருங்கிப் பழகியதுடன், ஆட்டோ டிரைவரது இரு குழந்தைகளையும் கொலை செய்ய துணைபோனார் என்கிற செய்தி கல் மனதையும் கலங்க வைப்பதாக உள்ளது. நாட்டின் வருங்காலத் தூண்களை உருவாக்க வேண்டிய ஆசிரியை ஒருவரே கொலைக்குத் துணைபோவதும், காதல் வயப்பட்டு தம்மிடம் பயிலும் மாணவரையே கடத்திச் செல்வதுமான செயல்கள் அதிர்ச்சியடைய வைப்பதாக உள்ளன.

 இதையெல்லாம் பார்க்கும்போது, நமது வாழ்க்கைப் பாதையைத் தவறவிட்டுவிட்டு பயணத்தைத் தொடர்கிறோமோ என்கிற சந்தேகமே எழுகிறது.

 பொருளியல் நோக்கில் வாழத் தொடங்கியதே இப்போதைய பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம் என்பதே சமூக ஆர்வலர்களது கருத்தாகும். அறத்தின் மூலம் பொருள் தேடவும், அதன் மூலம் அடுத்தவரைப் பாதிக்காத வகையில் இன்பத்தைப் பெறவும் நமது முன்னோர் வலியுறுத்தினர். அறம், பொருள், இன்பம் என்ற அடிப்படையிலேயே நமது இலக்கியங்கள் கருத்துகளை வலியுறுத்தின.

 ஆனால், இப்போது, அறத்தை புறந்தள்ளிவிட்டு தேடும் பொருள் மூலம் சிற்றின்பத்துக்கு ஆசைப்படும் போக்கே அதிகரித்து வருகிறது. இத்தகைய பின்புலத்தில்தான் பிரச்னைகளும் உருவாகின்றன.

 "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்ற வள்ளுவரின் இலக்கணத்தைப் பின்பற்றி வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. அதற்குப் பதில் "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பதையே இன்றைய இளைய தலைமுறைக்கு கற்பிக்கும் சூழல் உருவாகிவிட்டது.

 அத்தகைய கருத்தாக்கத்தில் உருவாக்கப்படும் இளைய சமுதாயம், பொருளைப் பெறுவதற்கு எத்தகைய அறத்தையும் மீறிட துணிந்துவிடும் போக்கையே காணமுடிகிறது.

 சமூகத்தின் ஒழுக்கம், அற வாழ்க்கை முறை என்பதெல்லாம் மொழி வழியே கற்பிக்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது மொழி வழி இலக்கியங்கள் மூலம் நல்ல கருத்துகளும், பொது நலனுக்கான சிந்தனைகளும் கற்பிக்கப்படுவது குறைந்துவிட்டது. காட்சி ஊடகங்கள் மூலம் பொருள் தேடும் சிந்தனையே வளர்க்கப்படுகின்றன.

 முன்னோர் நமக்கு மொழி வழியாகக் கற்றுத்தந்த நல்ல விஷயங்களை நம் பிள்ளைகளுக்குக் கற்பித்திருக்கிறோமா என்பதைச் சிந்திப்பது அவசியம்.

 தமிழகத்தில் அரசியல், மொழி, கலை, இலக்கியம் என அனைத்து நிலைகளிலும் கடந்த பல ஆண்டுகளாக திசை மாறிப் பயணித்து விட்டோம் என்பதே உண்மை. அறத்தின் அடிப்படையான சமூகத்தை வளர்க்க வேண்டிய மொழியை தங்கள் அரசியல் ரீதியான வளர்ச்சிக்கு மட்டுமே சிலர் பயன்படுத்திக் கொண்டனர். இதனால் மொழி மூலம் உலக அறிவைப் பெற வேண்டிய ஒரு தலைமுறையை மொழி வெறி ஆக்கிரமித்துக் கொண்டது. யாதும் ஊரே என்கிற சித்தாந்தத்தைக் கூட "ஊர்கள் யாவையும் தனதே' என்ற சுயநலத்துடன் சிந்திக்கும் பொருள் தேடும் போக்கு வளர்ந்துவிட்டது.

 "அண்டை வீட்டான் பகையும் அடுத்த ஊர்க்காரன் உறவும் ஆபத்து' என்பது கிராமத்துச் சொலவடை. அதுபோலத்தானே நமது நாட்டு பிற மாநில மொழிகளை எதிரியாகப் பாவித்தோம். அன்னிய தேசத்து மொழியான ஆங்கிலத்தை அளவுக்கு அதிகமாகவே அரவணைத்தோம். இத்தகைய நமது போக்கால், தமிழையே பின்னுக்குத் தள்ளியுள்ளது அந்த அன்னிய மொழி. ஆங்கில வழிக் கல்வி பயிலும் நமது குழந்தைகள் ஆடையில் மட்டுமா ஆங்கிலேயர் போல மாறியிருக்கிறார்கள்! அன்பைப் பரிமாறுவது முதல் அனைத்திலும் அன்னிய நாட்டவர்களாகி விட்டனர் என்பதே நடைமுறை.

 "கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்ற நமது எளிய வாழ்க்கையை அறியாத இளைய தலைமுறை, காசு இல்லாவிடினும் ஓசியில் மது குடி என்ற இழி நிலைக்குச் சென்று விட்டார்களே!

 வாழ்வில் ஒருவரைத் தனித்து அடையாளப்படுத்துவது அவரது கலையும், பண்பாடும்தான். தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவருக்கொரு குணமுண்டு எனப் பாடிய பாரதிதாசனின் வரிகள் இன்று சுயநலக் குணமுண்டு என்ற நிலையில் மாறி வருகிறது. இது நல்லதல்ல.

 தமிழரின் பொருளாதாரம், கலை, பண்பாடு அனைத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அந்த மாற்றங்கள் வளர்ச்சிக்குப் பதில் வீழ்ச்சிக்கே அழைத்துச் செல்கின்றன என்பதே அதிர்ச்சியாக உள்ளது. வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது போல, இன்றைய பிரச்னைகளுக்கு நாமே அடித்தளம் அமைத்து விட்டோம் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

 மாறிவரும் காலச் சூழல்களைக் கருத்தில் கொண்டு நமது பண்பாட்டை, கலாசாரத்தை மாற்றாமல் பயணிப்பதற்கான வழிமுறைகளைக் கைக்கொள்வதே இப்போதைய பிரச்னைகளில் இருந்து நாம் மீள்வதற்கு உதவும்.

 அறநெறிகளைப் பக்தியுடன் சேர்த்து நமது மொழி வழியாக இளைய தலைமுறையினருக்குக் கற்பிக்கும் வகையில் நமது செயல்கள் அமையுமானால், அதுவே இன்றைய பிரச்னைகளில் இருந்து நம்மைக் கரைசேர்க்கும் கலங்கரை விளக்காக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com