புறக்கணிக்கப்படும் மானுடவியல்

நாம் வாழ்வது அறிவியல், தொழில்நுட்ப யுகம். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் வியக்கத்தக்க

நாம் வாழ்வது அறிவியல், தொழில்நுட்ப யுகம். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகள் கிடைத்திருக்கின்றன. இவற்றால் நமது வாழ்க்கையில், வாழ்வியல் முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில வரவேற்கத்தக்கன; சில சிந்திக்கத்தக்கன.

 கல்வித்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் நாம் எண்ணிப் பார்க்கத்தக்கவை. ஏனெனில், அவை இன்றைய மக்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, எதிர்கால வாழ்க்கையிலும் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. புற மாற்றங்களில் ஏற்படும் குறைகளை, முயன்றால் ஓரளவு சரிசெய்து விடலாம். ஆனால், அக மாற்றங்களை, உளவியல் மாற்றங்களை எளிதாகச் சரிசெய்ய இயலாது. அவை தலைமுறைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

 கல்வியியல், அறிவியல், தொழில்நுட்பக் கல்வியியல், வளர்ச்சி ஆய்வியல் ஆகியவற்றில் ஏற்பட்டு வருகின்ற வளர்ச்சியை, மாற்றங்களைக் கை நீட்டி வரவேற்போம். அவை எல்லாம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு, வளர்ச்சிக்குத் துணை செய்யக்கூடியவை. அவற்றிலும் சில குறைபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தொழில் துறையைப் போன்று வேளாண் துறை வளர்ச்சியில் முழுக்கவனம் செலுத்தவில்லை. இனி சரிசெய்து கொள்ளலாம்.

 ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, கல்வித்துறையில், கலை, மொழி, உளவியல்,  தத்துவம், தர்க்கவியல், வரலாறு, பொருளியல், சமுதாய இயல் ஆகியவற்றை உள்ளடக்கிய மானுடவியலின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

 இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்தப் பாடங்கள் காணாமல் போகலாம். இதனால் மனித குலத்துக்கு ஏற்படக்கூடிய ஈடுகட்ட முடியாத இழப்பைப் பற்றி நாம் எண்ணிப் பார்க்கவில்லை. அதற்கு இது ஏற்ற வேளை.

 முறைசார் கல்வியைத் தொடங்கிய பழம்பெரும் நாடுகளில் நமது பாரதமும் ஒன்று. நமது குருகுலக் கல்வி முறையின் மேன்மை போற்றத்தக்கது. நாளந்தா பல்கலைக்கழகம் நமது வரலாற்றுப் பெருமைக்குச் சான்று. உலகெங்கும் கல்வி வளர்ச்சியில் சில ஒற்றுமைகள் காணப் பெறுகின்றன.

 தொன்மைக் கல்வி முறையில் ஒரு மாணவன், எண்ணையும், எழுத்தையும் அறிவு சார்ந்த, அறம் சார்ந்த அனைத்தையும் கற்றுத் தெளிய வேண்டுமெனக் கருதினர். அக்காலத்தில் மொழி, கணக்கு, தத்துவம், இயற்கை இயல் ஆகியவற்றைக் கற்பதே கல்வி எனக் கருதினர். கலையியல், அறிவியல் என்ற வேறுபாடு தோன்றாத காலம்.

 நமது நாட்டில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இங்கிலாந்துக் கல்விமுறையைச் சார்ந்து, புதிய முறைசார் கல்வியைக் கொண்டு வந்தனர். தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் எனக் கட்டமைத்து, பாடத்திட்டம், தேர்வு முறை, பட்டங்கள் எனக் கல்வி முறையை சட்ட திட்டங்களின் மூலம் வரையறுத்தனர்.

 சென்ற நூற்றாண்டில், சமுதாய இயல், அறிவியல் பாடங்களில் வளர்ச்சி ஏற்பட்டபொழுது, கற்கின்ற பாடங்களையும் உயர்நிலைப் பள்ளிகளிலேயே பகுக்க முற்பட்டனர்.

 ஒன்பதாம் வகுப்பு வரை எல்லா மாணவர்களுக்கும் பொதுக்கல்வியாக எல்லாப் பாடங்களையும் கற்றுக் கொடுத்துவிட்டு, பின்பு விருப்பப் பாடம் என்ற முறையில் கலையியல், கணிதவியல், அறிவியல் என்று பாடங்களைப் பகுத்தனர். அந்த முறைதான் சில மாற்றங்களோடு இன்று வரை புதிய பெயர்களில் தொடர்கிறது.

 நமது நாடு விடுதலைபெற்ற பொழுது உயர் கல்வியில் இவ்வளவு பிரிவுகள் இல்லை. கல்லூரிக் கல்வி இரு பெரும் பிரிவுகளில் அமைந்தன. ஒன்று கலை, அறிவியல் கல்வி. மற்றொன்று தொழிற்கல்வி. மருத்துவம், பொறியியல், சட்டம், கல்வியியல் ஆகியவற்றை உள்ளடக்கியது தொழிற்கல்வி.

 கலை, அறிவியலைக் கற்றுத் தருகின்ற கல்லூரிகள்தான் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தன. தொழிற் கல்லூரிகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தன. அவரவர் தகுதி, திறமை, விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தனர். பெரும்பாலும் படித்தவர்கள் எல்லோருக்கும் வேலை கிடைத்தது.

 அரசுப் போட்டித் தேர்வுகள் எழுதி அரசுப் பணிக்குச் செல்வது பெருமையாகக் கருதப் பெற்றது. முதுகலைப் படிப்பு இருந்த கல்லூரிகள் தங்களது மாணவர்கள் ஆண்டுதோறும் எத்தனை பேர் இந்திய நிர்வாகப் பணியில் தேர்வு பெற்றனர் என்பதைப் பெருமிதத்தோடு கூறிக் கொண்டன.

 ஆங்கிலம், பொருளியல், அரசியல், வரலாறு, சட்டம் பயின்றவர்கள் இத்தேர்வுகளில் சிறந்து விளங்கினர். ஆதலால் இந்தப் பாடங்களும் மேன்மையானவைகளாகக் கருதப் பெற்றன.

 மொழி, வரலாறு, பொருளியல், அரசியல், தத்துவம் ஆகிய கலையியல் (மானுடவியல்) பாடங்களும், கணிதம், வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல் போன்ற அறிவியல் பாடங்களும் ஆதாரப் பாடங்களாகக் கருதப்பெற்றன. பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அரசுப் பணிக்கும், ஆசிரியப் பணிக்கும் சென்றனர். பாடங்களுக்குள் மிகுதியான ஏற்றத்தாழ்வு இல்லை.

 1965-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டது. அறிவியல் படித்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து விடுவதாகவும், ஆதலால் அறிவியல் பாடங்கள் உயர்ந்தனவென்றும் கருதப்பெற்றன. மேல்நிலைப் படிப்பில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே அறிவியல் பாடங்கள் படிக்க வாய்ப்பளித்தனர்.

 மொழி மற்றும் மானுடவியல் பாடங்களைப் படிக்கின்றவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாகக் கருதுகின்ற மனப்பான்மை வளர்ந்தது. வாணிபம், வாணிப நிர்வாகம் ஆகிய பட்டங்ளுக்குத் தனி மதிப்பு ஏற்பட்டது.

 1985-க்குப் பிறகு மற்றுமொரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. கணினி பழக்கத்திற்கு வந்த பிறகு தொழில்நுட்பத்தில் பெரிய புரட்சி ஏற்பட்டது. தொழில்நுட்பப் பொறியியல் படித்தவர்களுக்கு, வெளிநாட்டில், குறிப்பாக அமெரிக்காவில் லட்சக்கணக்கில் ஊதியத்தோடு வேலை கிடைக்குமென்ற நிலை வந்தது. அமெரிக்கக் கனவு பொறியியல் படிப்பின் தேவையைக் கூட்டியது. அரசு கல்விக் கதவுகளைத் தனியாருக்குத் திறந்துவிட்டது. சுயநிதிக் கல்லூரிகள் கணவேகத்தில் பெருகின.

 கல்வி, குறிப்பாகப் பொறியியல் கல்வி மிகப்பெரிய வாணிபமாயிற்று. இப்பொழுது இருக்கின்ற கல்லூரிகளில் மிகுதியானவை பொறியியல் கல்லூரிகள். இவை உருவாக்கியிருக்கும் "மாயை'தான் நமது சமுதாயத்தை ஆட்டிப் படைக்கிறது.

 பொதுவாக, மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் அறிவியல் பயின்று மிகச் சிறந்த மதிப்பெண்கள் 99.75% பெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வார்கள். அதற்கு அடுத்த நிலையில் மதிப்பெண் பெற்றவர்கள் அரசு பொறியியல் கல்லூரி, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி, சுயநிதிக் கல்லூரி எனச் சேர்ந்து பொறியியல் பயில்வார்கள். நிதி படைத்தவர்களுக்கு பெற்ற குறைந்த மதிப்பெண் தடையாக இருப்பதில்லை. அவர்கள் விரும்பிய பாடத்தைப் பயில்வார்கள்.

 மருத்துவம், பொறியியல், வேறு தொழிற்கல்வி ஆகியவற்றில் சேர முடியாதவர்கள், இடம் கிடைக்காதவர்கள் மட்டும்தான் கலை, அறிவியல் கல்லூரிகளில் காலடி எடுத்து வைப்பார்கள். அங்கும் படித்து முடித்துக் கிடைக்கும் வேலைவாய்ப்பை ஒட்டி பாடங்களுக்குத் தேவை (கிராக்கி) இருக்கும். அதற்கும் மதிப்பெண், ஜாதி அடிப்படையில் போட்டி இருக்கும். அறிவியல் பாடங்களில் கணினி, வேதியியல், இயற்பியல், கணிதவியல், உயிரியல், தாவரவியல் எனத் தரவரிசை இருக்கும். அறிவியல் பாடங்கள் எண்ணிக்கையில் கூடியுள்ளன.

 மானுடவியல் பாடங்களில் மொழியில் ஆங்கிலம் முன்னணியில் இருக்கிறது. வேறுபாடங்களில் இடம் கிடைக்காதவர்கள் தமிழ் கற்பார்கள். (ஒரு சிலர் விதிவிலக்கு - விரும்பியே படிக்கிறார்கள்.) வாணிப நிர்வாகம், வாணிபப் பாடங்களுக்கு மதிப்பு இருக்கிறது. அடுத்து பொருளியல். இப்பொழுது தத்துவம், வரலாறு, அரசியல், உளவியல் போன்ற பாடங்களை எந்தக் கல்லூரியிலும் கற்றுக் கொடுப்பதில்லை. சமூகப் பணி போன்றவற்றைத் தனிக் கல்லூரிகளில் கற்பிக்கின்றனர். இதுதான் இன்றைய கலை, மானுடவியல் பாடங்களின் நிலை.

 தொழிற்கல்வியில் தமிழை ஒதுக்கிவிட்டனர். ஆங்கிலத்தை முதலாண்டுப் படிப்போடு ஓரங்கட்டி விட்டனர். கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முதலிரண்டு ஆண்டுகள் மொழி கற்பார்கள். அதற்குப் பிறகு மொழி கற்க மாட்டார்கள்.

 இதனால் பெரும்பாலான பட்டம் பெற்ற இளைஞர்களால் தாய்மொழியாம் தமிழும் ஆங்கிலமும் பிழையின்றி பேச, எழுத முடிவதில்லை. இரு மொழிகள் தெரியுமென்று கூறிக் கொள்வார்கள். அவ்வளவுதான்.

 வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை

""இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

  உணர விரித்துஉரையா தார்'' - (650)

என்கின்றார். அதாவது, தாம் கற்றவற்றை பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர் என்கின்றார்.

  மொழியாற்றல் இல்லையேல் இன்று எந்தத் துறையிலும் ஒளிர்விட இயலாது. செய்தித் தொடர்பு, விற்பனை, கற்பித்தல், நிர்வாகம், அரசியல் என்று எந்தத் தொழிலிலும் சிறந்து விளங்க மொழி வேண்டும். சொல்லாற்றல் மிக்கவர்கள் பொதுவாழ்வில் பெற்ற வெற்றிகளை நாமறிவோம்.

  வறுமை ஒழியவில்லை; தொடர்கின்றது. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெருகுகின்றது. லஞ்சமும் ஊழலும் வேர்கள் விட்டு, கிளைகள் பரப்பி, விழுதுகள் ஊன்றி பரந்து விரிகின்றன. செல்வர்கள், அதிகாரிகள், அரசியல் ஆட்சியாளர்கள் ஆகியவர்களின் முக்கூட்டு சூழ்ச்சியால் இயற்கைச் செல்வங்கள் கொள்ளை போகின்றன. நாடு அடிமைப்பட்ட வரலாற்றை மறந்து நமது தலைவர்கள் அன்னிய முதலீட்டுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கின்றனர். இதை எல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் மகாகவி பாரதியார், "படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோன்னு போவான்' என்றார்.

 நமது பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப. சிதம்பரம், மேற்கத்தியப் பொருளியல் கற்ற மேதைகள்; கீன்சியப் பொருளாதாரத்தை நம்புகின்றவர்கள்.  இவர்கள் காந்தியப் பொருளியலை எப்பொழுதாவது பேசுகிறார்களா? காந்தியப் பொருளியலறிஞர் டாக்டர் குமரப்பா கூறிய மக்கள் நலப் பொருளியல் கருத்துகள் தெரியாதா?

 காந்தியடிகள் "பண்பாடற்ற கல்வி சமுதாயப் பாவம்' என்றார். மனித நேய அரசியலில்தான் மக்களாட்சி பிழைக்குமென்பதை வலியுறுத்தினார்.

 அன்பை, அறத்தை, கட்டுப்பாட்டை, ஒழுக்கத்தை, பண்பாட்டை வாழ்வியல் விழுமங்களைக் கற்றுத் தரும் சமுதாய இயல் பாடங்களை மறுபடியும் கற்றுத் தருவோம். பழம்பெரும் நாடான பாரதம் பாருக்குள் நல்ல நாடாக விளங்க ஏற்ற கல்வியைத் தருவோம். இது நமது தலையாய கடமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com