பண்டிகைக் கால மகிழ்ச்சிகளைத் தன்வசம் ஆக்கிவிட்ட தொலைக்காட்சி (டி.வி.) காலத்தில், உறவுகள் உறவாட வழி செய்த "மின்தடை'க்கு பெரியவர்கள் நன்றி உள்ளவர்களாக மாறிவிட்டார்கள்.
தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, தாய் மாமா, அத்தை, பெரியப்பா, அண்ணன், அத்தான், மைத்துனன் என்ற உறவுகள் இன்றைய யுகத்தில் மிகவும் சுருங்கி வெறும் அங்கிள், ஆன்டி, மாம்ஸ் என ரத்தினச் சுருக்கமாக புது அவதாரம் எடுத்துள்ளன. "அப்பாவின் உடன் பிறப்பே' தூரத்துச் சொந்தமாகி சுருங்கி விட்டார்.
உலகம் சுருங்கிவிட்டது என்பது உண்மை. சொக்கம்பட்டியிலிருந்து அமெரிக்காவை அறிந்து கொள்ளும் வசதிகள் பெருகிவிட்டன. செல்போனும், லேப்-டாப்பும், தொலைக்காட்சியும், 3 ஜி செல்போனும் மட்டும்தான் தங்களுக்கு சகலமும் என்ற எண்ண ஓட்டத்தில் கரைந்து விட்டவர்களுக்கு உலகம் மட்டுமல்ல, உள்ளமும் சுருங்கி வருகிறது.
குடும்பம் வசதியாக இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக நகரத்திற்குச் சென்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கிராமத்தின் குதூகலத்தை அறிமுகப்படுத்தாமலேயே அவர்களையும் நகரவாசிகளாக உலா வரச்செய்வது சர்வ சாதாரணம்.
""நாங்கள் கிராமத்தில் இருக்கும்பொழுது என் தம்பி, மாமா பையன், சித்தி பொண்ணு எல்லாரும் வீட்டு திண்ணையில் இருந்துதான் விளையாடுவோம். மொட்டை மாடியில் கதை கேட்டுக்கிட்டே சாப்பிடுவோம். ஆனால் இங்க என்ன இருக்கு?'' என அரக்கப்பரக்கச் சாப்பாட்டை வாயில் அள்ளிப்போட்டுக் கொண்டு தங்கள் பிள்ளைகளிடம் புலம்பும் தந்தைமார்கள், பின்னர் தங்களின் பிள்ளைகளை கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார்களா என்று கேட்டால், பதில் "இல்லை' என்றுதான் வரும்.
மாநகர வாழ்க்கையின் பகட்டிற்கு அடிமையாகிவிட்ட பலர், தங்களின் ரத்த உறவுகளைக்கூட தெரியாமலேயே வளர்ந்து வருகிறார்கள். "கிராமத்தில் சொந்தக்காரங்க இருக்காங்க' என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த விஷயம்.
முன்பெல்லாம் நகரத்தில் வசிப்பவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் குடும்பத்துடன் கிராமத்திற்குச் சென்று தங்கள் தாத்தா பாட்டி போன்ற மூத்த குடும்ப அங்கத்தினரின் வீடுகளில் தங்கியிருந்து மகிழ்ச்சியுடன் பழைய கதைகளை, மலரும் நினைவுகளைப் பேசிச் சிரித்து மகிழ்ந்தார்கள்.
அந்த மகிழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளின் - அதுவும் தனியார் தொலைக்காட்சிகளின் - வரவால் முற்றிலும் மாயமானது. தீபாவளிக்கு வரும் நகரத்து மகன், மருமகள், பேரன், பேத்திகளிடம் தீபாவளி நாளில் சிரித்துப் பேசி மகிழலாம் என்ற கிராமத்துப் பாட்டிகளின் தாத்தாக்களின் எண்ணத்தைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தகர்த்து எறிந்து விட்டன.
காலை முதல் இரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூழ்கிக் கிடக்கும் மருமகள், பேரன், பேத்திகளிடம் பேசும் வாய்ப்புகூட முதியவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதையும் தாண்டிப் பேசினால், ""இன்றைக்கு மட்டும்தான் லீவு; இன்றைக்குக் கூட டி.வி. பார்க்க விடமாட்டேன்கிறீர்களே?'' என்ற விசும்பும் பேத்தியை செல்லமாகக் கன்னத்தில் தட்டிவிட்டு சோகமாகச் செல்லும் நிலைதான் பாட்டிக்கு ஏற்பட்டு வருகிறது.
ஆனால், அதிக நேர மின்தடை இந்த தீபாவளிக்கு நல்லதொரு காரியத்தைச் சத்தமின்றி செய்தது. மின்தடையால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடியாமல் போனது. எனவே தாத்தா பாட்டிகள் பேரன்களோடும் பேத்திகளோடும் பிள்ளைகளோடும் சில மணி நேரம் பேச முடிந்தது. இனி, பண்டிகைக் காலங்களில் கண்டிப்பாக மின்சாரம் வரக்கூடாது என்று கூட பெரியவர்கள் நினைக்கலாம், ஏனென்றால் தொலைக்காட்சி சொல்லாத பாசங்களை, நேசங்களை, நல்லது கெட்டதுகளைச் சொல்பவர்கள் அவர்கள்தானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.