ஓர் அக முகச் சோதனை நாள்

செப்டம்பர் 5 ஆம் நாள். நமது போற்றுதலுக்குரிய முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், வான் புகழ் தத்துவஞானி டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள். ஆசிரியர் திருநாள்.  வழக்கமாக இந்த நாளில் கல்வி நிறுவனங்க
Published on
Updated on
3 min read

செப்டம்பர் 5 ஆம் நாள். நமது போற்றுதலுக்குரிய முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், வான் புகழ் தத்துவஞானி டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள். ஆசிரியர் திருநாள்.

 வழக்கமாக இந்த நாளில் கல்வி நிறுவனங்களில் எல்லாம் ஆசிரியர்களுக்கு விழா எடுப்பார்கள்; பாராட்டுவார்கள்; நன்றி கூறி  கெளரவிப்பார்கள். சிலர் தங்களுக்குக் கற்றுக் கொடுத்த, தங்களை உருவாக்கிய பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை நினைவுகூர்ந்து நன்றி மடல்களை அனுப்புவார்கள். ஆசிரியர்களிடம் நேரில்சென்று வணங்கி ஆசி பெறுகின்றவர்களும் இருக்கலாம்.

 "எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்பது ஆன்றோர் வாக்கு. "மாதா, பிதா, குரு தெய்வம்' என வரிசைப்படுத்தி வணங்குவது நமது மரபு; பண்பாடு.

 புனிதமான ஆசிரியப் பணிக்கு எடுத்துக்காட்டு டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன். அவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிச் சேர்த்த சிறப்பு அவரை வெளிநாட்டுத் தூதுவராக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக, தலைவராக உயர்த்தியது. மேன்மையான ஒழுக்கத்தாலும், உயர்ந்தோங்கிய மெய்ஞ்ஞானத்தாலும் சிறந்து விளங்கியவர் அவர். ஆதலால் அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது ஆசிரியர் தொழிலுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைகின்றது.

 கற்றவர்கள் எல்லாம் அவர்களது பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களை எண்ணிப் பார்த்தால், அவர்களின் தகுதிகளையும், திறமைகளையும் மதிப்பீடு செய்தால், அவர்களில் பெரும்பாலானவர்கள் "நல்லாசிரியர்களாக' இருந்ததை அறிவார்கள்.

  சில ஆசிரியர்கள் பாடங்களைக் கற்றுக் கொடுப்பதோடு கூட, மாணவர்களை மாண்புக்குரியவர்களாக மாற்றி வரலாறு படைத்திருக்கின்றனர். அத்தகைய ஆசிரியர்களுக்கு அவரது மாணவர்களும் சமுதாயமும் நூற்றாண்டு விழாவெடுத்து பாராட்டுவதையும் காண்கிறோம்.

 ஆசிரியர் என்றால் (ஆசு+இரியர்) குற்றங்களைப் போக்குகின்றவர் என்று பொருள். ஆதலால்தான் இதழ்களை நடத்துபவர்களையும், நூல்களைப் படைப்பவர்களையும் "ஆசிரியர்' என்று போற்றுகிறோம்.

  உண்மையில் ஒரு மனிதனின் முதல் ஆசிரியர் மொழியை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டை, ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கின்ற அன்னை.

 அடுத்த நிலையில், கட்டுப்பாட்டைப் போதிப்பவர் தந்தை.

 எண்ணையும் எழுத்தையும் கற்றுத் தந்து, ஞானம் (அறிவு), விஞ்ஞானம் (பகுத்தறிவு), மெய்ஞானம் (மெய்யறிவு) எனப் படிப்படியாக உயர்த்துபவர் குரு.

 சமயக் குருமார்களையும் இந்நிலையில் வைத்து எண்ணிப் பார்க்கலாம்.

 ஆசிரியர் தினம் என்றால் கற்றுக் கொடுத்த அனைவரையும் நன்றியோடு எண்ணிப் பார்க்கும் நாள் என விரிவாகப் பொருள் கொள்ளலாம்.

 ஆசிரியர் என்றால் மழலையர் பள்ளியில் தொடங்கி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என்று பலநிலைகளில் ஊதியம் பெற்றுக்கொண்டு தொழில்முறையில் பணியாற்றுவோர் என்று கொண்டால், இவர்களைப் போற்ற ஒரு தினம் என்று கூறினால், இன்று மக்களிடம் கேள்விக்குறியும், முகச் சுளிப்பும் தோன்றுவதைக் காணலாம்.

 ஏனெனில் கடந்த சில காலமாக ஆசிரியர்களைப்பற்றி வருகின்ற செய்திகள் நம்மை நெஞ்சுருகச் செய்கின்றன. ஆசிரியர் தொழில் தரம் தாழ்ந்து, சமுதாயத்தின் மதிப்பிழந்து போகின்றதோவென்ற அச்சம் எழுகின்றது.

 ஆசிரியர்கள் சமுதாயத்தில் உப்புப் போன்றவர்கள். அவர்களுக்குச் சமுதாயத்தில் தனி மரியாதையும் மதிப்பும் உண்டு.

  "உப்பு சாரமற்றுப் போனால் எதனால் சாரமாக்கப்படும்' என்ற கேள்வி பிறக்கின்றது.  ஆசிரியர்களிடம் காணப்பெறுகின்ற, சுட்டிக்காட்டப் பெறுகின்ற சில தவறுகளைப் பட்டியலிடலாம்.

 ஒழுக்கக் குறைவான சில ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் குடிப் பழக்கம் போதைப் பழக்கம் இருக்கின்றது. அவர்களைப் பற்றி மாணவர்களும் நிர்வாகிகளும் அறிந்திருக்கலாம்.

 ஆசிரியர்களில் சிலர் உடன் பணியாற்றுபவர்களிடம், மாணவ, மாணவிகளிடம் தரக் குறைவாக நடந்து, கூனிக் குறுகி நின்று, தண்டனை பெறுவதை செய்திகளில் படிக்கிறோம்.

 மாணவர்களை அடிக்கவோ, அவமானப்படுத்தவோ கூடாதென்பது அரசின் திட்டவட்டமான ஆணை. மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தார்கள், தற்கொலை செய்யுமளவுக்கு அவமானப்படுத்தினார்கள் என்பன போன்ற பதைபதைக்கும் செய்திகள் வருகின்றன.

 அரசுப் பணி பொதுத்தேர்வு கேள்வித்தாள் வெளியானதில் சில ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

 77 பள்ளித் தலைமையாசிரியர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கிய உதவித் தொகையைக் கையாடல் செய்ததாக மாட்டிக் கொண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 சாதி, சமய அடிப்படையில் ஆசிரியர்கள் பாகுபாடு காட்டுவதாகவும், தேர்வுக் காலங்களில் நேர்மையாக நடந்து கொள்வதில்லை என்றும், தேர்வுத்தாள்களைக் கவனமாகத் திருத்துவதில்லை என்றும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

 எல்லாவற்றுக்கும் மேலாக, பாடங்களில் முழுமையான அறிவின்றி, தெளிவாகப் பாடம் நடத்த இயலாத ஆசிரியர்களும் இருப்பதை மாணவர்களே சுட்டிக்காட்டுகின்றனர். இப்போது அரசு நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு ஓரளவுக்கு இதனை உறுதிப்படுத்துகிறது.

 குற்றச்சாட்டுப் பட்டியல் மேலும் தொடரலாம்.

 நல்ல, திறமையான, உண்மையாகவே ஆசிரியப் பணியைத் தொண்டாகச் செய்கின்ற ஆசிரியர்கள், மேலே குறிப்பிட்ட அரை குறை ஆசிரியர்களுக்காக வருந்தலாம். தங்கள் தொழிலில் ஏற்பட்ட களங்கம் என்று கலங்கலாம்.

 ஆசிரியத் தொழிலில் இன்று ஏற்பட்டுவரும் சரிவுக்கான காரணங்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் வெளியில் சொல்லத் தயக்கம்.

 சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை ஆசிரியத் தொழிலின் புனிதத்துவம் பெருமளவுக்குக் காப்பாற்றப்பட்டதற்குக் காரணம், கற்றுக் கொடுப்பதில் ஆர்வமும், ஈடுபாடும், திறமையும் உள்ளவர்கள்தாம் ஆசிரியர் பணிக்கு வந்தனர். அப்போது ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு.

 மக்களாட்சியில் அனைவருக்கும் கல்விதரும் நோக்கில் அரசு நிறையப் பள்ளிகளை நிறுவியது. திறமையானவர்கள் ஆசிரியப் பணிக்கு வர வேண்டுமென்பதற்காக ஊதியத்தை உயர்த்தியது. அரசுப் பணியின் கவர்ச்சி ஆசிரியப் பணிக்கும் வந்தது. வருவாய்தரும் தொழிலாக ஆசிரியப் பணியைப் பார்க்கும் மனப்பான்மை தோன்றியது.

 சறுக்கல் முதன்முதலில், பள்ளி ஆசிரியர் பயிற்சியில் தொடங்கியது. நிறையப் பேர் பயிற்சியில் சேர முன் வர, ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள் நிறையப் பணம் வாங்கிக் கொண்டு இடம் தரத் தொடங்கின.

 ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நடத்துவது நல்ல வருவாய் தரும் தொழிலாயிற்று. சுயநிதிக் கல்வி நிறுவனங்களை நடத்த அரசு "உரிமம்' வழங்கிய பிறகு, பெரும்பாலான ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் "பெயருக்கு'ச் செயல்படத் தொடங்கின. விளைவு ஆசிரியப் பயிற்சியின் தரம் தாழ்ந்தது.

 அரசுப் பள்ளிகளிலும், அரசின் உதவிபெறும் பள்ளிகளிலும் ஊதியம் மிகுதி. ஆதலால் இவற்றில் வேலைபெற இலட்சக்கணக்கில் பணம் தர வேண்டுமென்ற நிலை வந்தது.

  ஆசிரியர் பயிற்சிக்குப் பணம் கொடுத்து, வேலைக்குப் பணம் கொடுத்து, ஆசிரியராக வருகின்றவரிடம், எப்படியாவது செலவிட்ட பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது.

 தனியாகச் சொல்லிக் கொடுத்தோ, பள்ளி நேரம் தவிர மற்ற நேரத்தில் வேறு தொழில்செய்தோ பணம் சம்பாதிக்க முயல்கின்றனர்.

 கல்வி வாணிபமான நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், "நூற்றுக்கு நூறு' மாணவர்கள் தேர்ச்சிபெற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, ஆசிரியர்கள் - மாணவர்கள் ஒழுக்கம் கட்டுப்பாட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

 இன்றையச் சூழலில், ஆசிரியர் தினத்தன்று, கல்வியில் தொடர்புடைய அனைவரும் ஆசிரியர்களைப் பற்றி எண்ணிப் பார்ப்பது தேவை.

  ஒவ்வோர் ஆசிரியரும் "அக முக சோதனையாக'த் தங்களது தொழில் நிலை பற்றி மதிப்பீடு செய்வது காலத்தின் கட்டாயமாகும். ஆசிரியர் தொழிலின் மேன்மையைச் சுட்டிக்காக்கும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com