புறக்கணித்திருக்கக் கூடாது...
By அர்ஜுன் சம்பத் | Published On : 28th November 2012 01:52 AM | Last Updated : 28th November 2012 01:54 AM | அ+அ அ- |

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் சுமார் ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற அமைப்பாக உள்ள பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொடர் முயற்சியால் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 80 பேர் வரை உறுப்பினராக உள்ள தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு (All Party Parlimentary Groups for Tamils) உருவாகியுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்திலேயே, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை குறித்து ஒரு சர்வதேச சுயாதின விசாரணை கோரி (International Independent Ivestigaion) உலகத் தமிழர் மாநாட்டை கடந்த 7,8,9-ஆம் தேதிகளில் லண்டன் மாநகரில் நடத்தினர்.
இந்த மாநாட்டில் பங்கேற்கத் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளுக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் அழைப்பு அனுப்பப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர் அமைப்புகள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இம்மாநாட்டில் பங்கேற்பதாக உறுதியளித்தன.
தமிழகத்திலிருந்து திமுகவின் சார்பில் இம்மாநாட்டில் அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நான்குபேர் பங்கேற்பதாக உடனே அறிவித்துவிட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ""இத்தகைய மாநாடுகளில் நாங்கள் பங்கேற்பதில்லை'' என்று தெளிவாகவே கூறிவிட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் து. ராஜாவும், தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியனும் கலந்து கொண்டனர்.
திமுகவுக்கு அழைப்பு அனுப்பட்டதையே மதிமுக, அதிமுக ஆகிய கட்சிகள் விரும்பவில்லை.
பழ. நெடுமாறன், வைகோ ஆகியோர், "இம்மாநாடு கூட இலங்கை உளவுத் துறையின் சதி வேலையாக இருக்கும்' என சந்தேகம் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.
திமுக பங்கேற்றதால் அதிமுக, மதிமுக, பழ. நெடுமாறன் சார்ந்த அமைப்புகள் வாய்ப்பைப் புறக்கணித்தன.
முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்குப் பிறகு இலங்கையில் எல்லாம் முடிந்துவிட்டது. சுதந்திரம், தமிழீழம், மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இனப்படுகொலை இவற்றைப்பற்றி எல்லாம் இனி தமிழ் மக்கள் பேச மாட்டார்கள், தமிழர்கள் முழுமையாக ஒடுக்கப்பட்டுவிட்டார்கள், தமிழர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்கிற கருத்து பரவலாக இருந்தது. மேலும் இனி தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஈழப்பிரச்னையில் உருப்படியாக எதுவுமே செய்யமுடியாது என்கிற நம்பிக்கையற்ற தன்மை நிலவி வந்தது. அப்படிப்பட்ட சூழலில் பிரித்தானியத் தமிழர் பேரவை, லண்டன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுடன் இணைந்து இம்மாநாட்டை பாராளுமன்றங்களின் தாய் என வர்ணிக்கப்படும் லண்டன் பாராளுமன்ற வளாகத்திலேயே நடத்தியது நம்பிக்கையூட்டும் ஒரு நல்ல முயற்சி.
இத்தகைய ஒரு நிகழ்ச்சியில் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகள், தனி நபர் மாச்சரியங்கள் இவற்றைக் கடந்து, ஈழத்தமிழர் நலன் என்கிற அடிப்படையில் அனைவரும் ஒருங்கிணைந்து நின்றிருக்க வேண்டும். அதிமுக, மதிமுக தொடங்கி எல்லா அமைப்புகளும் இதில் கலந்துகொண்டிருந்தால், திமுக ஓரங்கட்டப்பட்டிருக்கும் என்பது மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் சம்பவத்தின்போது, திமுக எடுத்த நிலைப்பாடு விமர்சிக்கவும், கண்டிக்கவும் பட்டிருக்கும். ஒரு நல்ல வாய்ப்பை இதர கட்சிகள் இழந்துவிட்டது மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் மத்தியில் தான் இழந்துவிட்ட நம்பிக்கையைத் திமுக மீண்டும் பெற அது உறுதுணையாகிவிட்டது.
பிரித்தானியத் தமிழர் பேரவை நடத்திய கூட்டத்தின் நோக்கம், ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை கோருதல் என்பது மட்டுமே. கடந்த வருடம் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது என்பதால், அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குக்கூட அழைப்பு விடுத்து இருந்தனர். சில திருத்தங்களைச் செய்து தீர்மானத்தின் நோக்கத்தை இந்தியா நீர்த்துப்போகச் செய்தது என்கிற குற்றச்சாட்டுகள் இருந்தாலும்கூட, நீண்டகாலத்துக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என்பதுதான் உண்மை.
""அது மட்டுமல்ல, காங்கிரûஸ முழுமையாக ஒதுக்க முடியாது என்பதையும், கடந்த காலத்தில் காங்கிரஸ், ஈழத்தமிழர் தம் நலனுக்கு எதிராக இருந்தது என்கிற பழைய கதையைப் பேசுவதில் இனி பலன் இல்லை என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதே கருத்து திமுக-வுக்கும் பொருந்தும்.
அதிமுக-வைப் பொருத்தவரை ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் இதைவிட வலிமையான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. அதாவது "ராஜபட்சவை போர்க்குற்றவாளி என அறிவிக்க வேண்டும்; இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும்; கச்சத்தீவை மீட்க வேண்டும்' என்றெல்லாம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இப்போது லண்டன் மாநாட்டில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை கோரித்தான் தீர்மானம் உள்ளது. எனவே அதிமுக பங்கேற்றிருக்கலாம் என்று பிரித்தானியத் தமிழர் பேரவையினர் ஆதங்கப்பட்டனர். திமுக பங்கேற்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக அதிமுக இந்த மாநாட்டைத் தவிர்த்துவிட்டதில் பலருக்கும் வருத்தம்.
உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் இம்மாநாட்டில் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என மிகவும் எதிர்பார்த்தனர். இவர்கள் பங்கேற்காதது உலகத் தமிழர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது என்பதை நேரில் பார்க்க முடிந்தது.
ஏனெனில் வைகோ நல்ல நாடாளுமன்ற அனுபவம் பெற்றவர். இப்பிரச்னையில் தீவிர ஈடுபாடு கொண்டவர். கட்சி வேறுபாடுகளைக் கடந்து இவர்கள் பங்கேற்றிருக்க வேண்டும்.
புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் என்னிடத்தில் பேசும்போது, ""ஏன் ஐயா, இந்திய நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் உறுப்பினராக உள்ளார்கள். திமுக இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உள்ளது என்பதற்காக ஏனையோர் நாடாளுமன்றத்திற்குப் போகாமலா இருக்கிறார்கள்? அங்கே ஒரே அவையில் கூடுகின்றனர். இங்குவர மட்டும் தயக்கம் காட்டுவது ஏன்?'' என்று கேட்டபோது எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கட்சிகளான அதிமுக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகள் இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்தது உண்மையிலேயே வருத்தத்தைத் தந்தது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. ராஜா, தா. பாண்டியன், பாமக சார்பில் கோ.க.மணி, பசுமைத்தாயகம் சார்பில் அருள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, காந்திய மக்கள் இயக்க நிர்வாகி குமரய்யா, திராவிடர் விழிப்புணர்ச்சி கழகத்தைச் சேர்ந்த விடுதலை ராஜேந்திரன் மற்றும் சில தமிழ் இயக்கங்களின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திமுக சார்பில் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருமே ஒருமனதாக சர்வதேச சுயாதீன விசாரணை தீர்மானத்தைச் சில திருத்தங்கள் செய்து ஏற்றுக்கொண்டு இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் கொடுத்தனர்.
நான்கு கட்டமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் நாள் அதாவது 6-ஆம் தேதி தீர்மானம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தரப்பில் ஸ்டாலின், பாலு ஆகியோர் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் அனைவரும் "போர்க்குற்றம்' என்கிற வார்த்தைக்குப் பதிலாக "இனப்படுகொலை' எனத் திருத்தம் செய்தனர்.
தா. பாண்டியன் சர்வதேச ஊடகங்களை இலங்கையில் அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை இத்தீர்மானத்தில் சேர்க்கும்படி வேண்டுகொள் வைத்தார். அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு தீர்மான முன்வரைவு நிறைவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே திமுக வருகைக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கடும் அதிருப்தியும் ஆட்சேபணையும் காணப்பட்டது. ஸ்டாலினுக்குக் கருப்புக் கொடி காட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
7-ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சிமோன் பெக்டொனல்டு, ரோபர் ஹெஸ்பன்ட், டெரோமித் கோபன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.
சிங்கள இனத்தைச் சார்ந்த பேராசிரியர் ஜிட்லால் பெர்னான்டோ இலங்கை அரசின் இனவெறிக் கொள்கைகளை விளக்கிப் பேசியது அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
மு.க.ஸ்டாலினிடம், முள்ளிவாய்க்கால் சம்பவத்தின்போது திமுக நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பி முற்றுகையிட அங்கு குழுமியிருந்த பெண்கள் முயன்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிகச் சிரமப்பட்டு இதைத் தவிர்த்தனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் ஒரு பத்து நிமிடம் தான் எழுதி வைத்திருந்த ஆங்கில உரையைப் படித்தார். இதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகள் எதிலும் ஸ்டாலினும் பாலுவும் பங்கேற்கவில்லை. திமுக சார்பில் மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர்.
8-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஒரு கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானத்தை அவரவர் நாட்டில் எப்படி செயல்பாட்டிற்குக் கொண்டுவருவது என்பது பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. அன்றைய தினம் பெவிலியன் அரங்கில் நடைபெற்ற மாலை நேர விருந்துபசார நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
மறுநாள் 9-ஆம் தேதி அதே பெவிலியன் அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, பாரீசில் நடைபெற்ற படுகொலைச் சம்பவம் காரணமாக நிகழ்ச்சி ரத்து என்கிற செய்தி பரவிய காரணத்தால் கூட்டம் குறைவாக இருந்தது. அதனால், கேள்வி பதில் நிகழ்ச்சியாக இக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக-வை நம்பலாமா, புலிகள் மீதான தடையை நீக்க நாடாளுமன்றத்தில் பேசுவீர்களா போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கு டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பதில் திருப்திகரமாக இருக்கவில்லை.
காங்கிரஸ் கூட்டணியில் திருமாவளவன் தொடர்வது ஏன் என்ற தர்மசங்கடமான கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்தது. பொதுவாகத் திமுக தலைவர்களிடமும் தொல். திருமாவளவனிடமும் ஈழத் தமிழர் விவகாரத்தில் அவர்களது கடந்த கால அரசியல் செயல்பாடுகள் குறித்து தர்மசங்கடமான கேள்விகள்தான் கேட்கப்பட்டன.
பல்வேறு கருத்துகளையும் அணுகுமுறைகளையும், மாறுபாடுகளையும் கொண்ட தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
தமிழகத்தில் திமுக சார்பில் மு.க. ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு மற்றும் விளம்பரங்கள் மீண்டும் திமுக, ஈழத்தமிழர் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்கிற சந்தேகத்தை நடுநிலையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் ஐ.நா சபையில் சென்று "டெசோ' தீர்மானங்களைக் கொடுத்துவிட்டு வருவது ஒன்றும் பெரிய சாதனையல்ல. ஐ.நா-வில் ஒரு கருத்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று சொன்னால் ஐ.நா. உறுப்பு நாடுகளின் சார்பில் அந்தக் கருத்து முன்வைக்கப்பட வேண்டும். உறுப்பு நாடுகளைத் தவிர ஏனைய நபர்கள் கொடுக்கும் மனுவைப் பரிசீலிக்கக்கூட மாட்டார்கள். இது அலுவல் பூர்வமான முறையும் அல்ல.
மு.க. ஸ்டாலின் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனைச் சந்தித்துத் தீர்மான நகலைக் கொடுப்பதற்குப் பதிலாக, திமுக இந்திய அரசு மூலம் "டெசோ' தீர்மானங்களை ஐ.நா -வில் கொடுத்திருக்க வேண்டும். மத்திய ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, இந்திய அரசின் சார்பில் இப்படி ஒரு தீர்மானத்தை ஐ.நா.வில் எழுப்பியிருந்தால், அதன் பரிமாணமே வேறு. அது, பலனளிக்கும் தீர்மானமாகவும் இருந்திருக்கும். அதைச் செய்யாமல் வெறும் விளம்பரம் தேடும் முயற்சியில்தான் திமுக ஈடுபட்டிருக்கிறது என்பது அந்த மாநாட்டுக்கு வந்திருந்த பலரின் பரவலான குற்றச்சாட்டு.
இதில் இன்னொரு விபரீதமும் நிகழ்ந்திருக்கிறது. விஜய நம்பியார் மூலமே ஐ.நா. சபை துணைச்செயலாளரிடம் நேரம் கேட்டு வாங்கி "டெசோ' மனுவைச் சமர்ப்பித்திருக்கிறார் மு.க. ஸ்டாலின். அந்த விஜய நம்பியார்தான் ஏற்கெனவே முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்லி தமிழக மக்களின் எதிர்ப்புக்கு ஆளானவர்.
பிரித்தானியத் தமிழர் பேரவையின் சார்பில் நடைபெற்ற மாநாட்டையும், அதற்கு முன்னால் சென்னையில் நடத்திய "டெசோ' மாநாட்டையும் பயன்படுத்தி, ஈழத்தமிழர் பிரச்னையில் ஆட்சியில் இருக்கும்போது தான்செய்த துரோகத்துக்கும், நயவஞ்சனைக்கும் பரிகாரம் தேடிக்கொள்ள முயல்கிறது திமுக என்பது தெரிகிறது.
அதேபோல, ஈழத்தமிழர் பிரச்னையில் நமது ஈடுபாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளத் தவறிவிட்டது அதிமுக. அரசியல் மனமாச்சரியங்களை மறந்து, தமிழகத்திலுள்ள எல்லா கட்சிகளும் ஈழத்தமிழர் நலன் என்கிற பொதுக் குறிக்கோளுடன் செயல்பட்டு இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தினால் மட்டுமே, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரு நியாயமான விடியல் வரும்.
மிகுந்த எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் லண்டன் மாநாட்டுக்குப் போய்த் திரும்பியபோது, எனக்குள் ஏற்பட்ட மன உளைச்சல் கொஞ்சமல்ல. உலகளாவிய அளவில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கே தமிழகத்தில்தான் நாம் பிரிந்து கிடக்கிறோமே என்பதுதான் அதற்குக் காரணம்.
கட்டுரையாளர்: இந்து மக்கள் கட்சியின் தலைவர்.