அரசியலில் தோற்கும் இளைஞர் சக்தி

கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்சுவோம்' என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் முழக்கமாகத் தொடர்கிறது. இளைஞர்களைக் கட்சியில் இணைப்பதன் மூலமும்,
Updated on
2 min read

"கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்சுவோம்' என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் முழக்கமாகத் தொடர்கிறது. இளைஞர்களைக் கட்சியில் இணைப்பதன் மூலமும், அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவதாலும் கட்சியை இளமையாக்கி வலுப்படுத்துகிறோம் என்பதே இதன் அடிப்படை.

 துடிப்புடன் செயல்படும் இளைஞர்கள் மூலம் சிறப்பான நிர்வாகத்தை அளிக்க முடியும் என்று மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையும், இப்போது நமது நாட்டு மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்குள்பட்டவர்கள் என்பதும் அரசியல் கட்சிகள் இளமைக் கொள்கையைக் கடைப்பிடிக்க முக்கியக் காரணம். கட்சி எனும் சொத்தை, வாரிசுகளிடம் எளிதில் ஒப்படைக்க முடியும் என்பது மறைமுகக் காரணம். தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் இது விஷயத்தில் பெரும்பாலும் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன.

 சமீபத்தில் பாஜக உயர்நிலைக் குழு அறிவிக்கப்பட்டது. இதில் நியமிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் 60 வயதுக்குள்பட்டவர்கள் என்று கூறி தங்கள் "இளமையை'ப் பறைசாற்றியது பாஜக. இப்போது அரசியல் களத்தில் இருக்கும் தலைவர்களின் வயதுகளைக் கணக்கிட்டு இளமையை அளவிட்டால் அரசியலில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் இளைஞர்கள் என்று கூற முடியும்!

 இந்த வகையில் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இளைஞர்கள். ஆனால் இவர்களின் செயல்களை மதிப்பிடும்போது அரசியலிலும், ஆட்சியிலும் இளைஞர் சக்தியால் பெரிய அளவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.

  உத்தரப் பிரதேசத்தில் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார் அந்த மாநிலத்தின் மிக இள வயது (39) முதல்வரான அகிலேஷ் யாதவ். சிறந்த நிர்வாகம், சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டுவோம் என்ற முழக்கத்துடன் பதவியேற்றார். அவரது வெற்றி இளைஞர் சக்திக்குக் கிடைத்த வெற்றியாக வர்ணிக்கப்பட்டது.

 ஆனால் அவரது கடந்த ஓராண்டு ஆட்சிக்கும், மாநிலத்தின் முந்தைய முலாயம் சிங் ஆட்சிக்கும் பெரிய அளவில், எந்த வேறுபாடும் இல்லை. வழக்கமாக சமாஜவாதி ஆட்சியில் இருக்கும் கட்சியினரின் வன்முறையும், குண்டர்களின் அட்டூழியமும் தொடர்வதே அந்த மாநிலச் செய்தியாக உள்ளது.

 டி.எஸ்.பி. ஒருவரை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில் மாநில அமைச்சராக இருந்த ராஜா பையா சிக்கியது, உத்தரப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிவை நாட்டுக்கே வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக இருந்தது. அகிலேஷ் மீதிருந்த நம்பிக்கையையும் தளரச் செய்தது.

 உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜவாதி கட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் வகையில் அமைச்சர்களும், அதிகாரிகளும் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அகிலேஷின் தந்தை முலாயம் சிங், கண்டிப்பான நிர்வாகியாகச் செயல்பட வேண்டுமென்று அகிலேஷுக்குக் குட்டு வைத்தார்.

 இந்தியாவில் மாநிலங்கள்தோறும் பல பிரச்னைகள் இருக்க, பிரச்னைகளே ஒரு மாநிலமாக உருவான ஜம்மு-காஷ்மீரில் 2009-ஆம் ஆண்டு முதல்வர் பொறுப்பை ஏற்றார் 38-வயது இளைஞர் ஒமர் அப்துல்லா. அவரது விவேகமும், செயல் திறனும் காஷ்மீரில் வன்முறையைக் குறைத்து அமைதிக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநிலத்தில் அரசியல்ரீதியாக தங்கள் கட்சியை நிலைநிறுத்திக் கொள்ளவே அவர் முனைப்பு காட்டியதை அவரது பல்வேறு நடவடிக்கைகள் வெளிக்காட்டின.

  காஷ்மீரில் ஆட்சி நிர்வாகமும் மெச்சும்படியாக இல்லை. அத்துடன் ஜம்மு பகுதி புறக்கணிப்பும் தொடர்கிறது.

  பஞ்சாபில் முதல்வராக பிரகாஷ் சிங் பாதல் இருந்தாலும், வயது முதிர்வு காரணமாக அவர் தளர்ந்து விட்டதால், துணை முதல்வரான சுக்பீர் சிங் பாதல்தான் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அவரது நிர்வாகத்தில் பஞ்சாப் மாநிலத்தின் நிகழ்வுகள் பல பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணை போலீஸôர் இருவர் அடித்து விரட்டிய காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாக, அது நாடு முழுவதுமே பஞ்சாப் அரசுக்கு எதிரான கருத்தை உருவாக்கியது.

 இது தவிர ஆளும் சிரோமணி அகாலி தளம் பொதுச் செயலாளர் ஒருவர் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கு, அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் போலீஸ் அதிகாரியைப் பொது இடத்தில் தாக்கிய சம்பவம் ஆகியவை நிர்வாகத்தின் அவலத்தைக் காட்டுவதாகவே உள்ளது.

  அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் என்பது ஏமாற்றத்துக்கு முந்தைய படிநிலை என்பதையே, இளைஞர்களை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்த மக்கள் மீண்டும் உணர்ந்தார்கள்.

 இந்திய அரசியலில் இளைஞர்கள் என்று பேசிவிட்டு, ராகுல் காந்தியைப் பற்றி கூறாமல் இருக்கக் முடியாது. கட்சியை இளமைப்படுத்துவதில் காங்கிரஸ்தான் முன்னோடி. காங்கிரஸில் ராகுல் முக்கியத்துவம் பெற்றபின், மேடைதோறும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். அவரது முயற்சியால் காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் இளைஞர்களுக்குப் பதவிகள் கிடைத்துள்ளன.

 இப்போதைக்குக் கட்சியில் மட்டும் ராகுல் பொறுப்பில் இருக்கிறார். ஆட்சியில் பங்கு வகிக்கவில்லை. எனினும் பிகார், உத்தரப் பிரதேசப் பேரவைத் தேர்தல்களில் ராகுலின் பிரசாரம் எடுபடவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

 எனவே இளைஞர் சக்தியாக இருந்தாலும் சரி, அனுபவம் வாய்ந்த பழைய சக்தியாக இருந்தாலும் சரி, அட்டூழியத்தில் ஈடுபடும் கட்சியினர், முறைகேடுகளுக்கு துணை நிற்கும் அதிகாரிகள், ஊழல், உள்ளிட்ட தீய சக்திகளை ஒழித்துவிட்டு, சிறப்பான நிர்வாகத்தை அளிக்கும் நோக்குடன் செயல்பட்டால்தான் "மக்கள் சக்தி'யின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com