இதுதான் இந்தியா

உலக ஊனமுற்றோர் ஆண்டு 1981-இல் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் விழாவுக்காக சிறப்பான ஏற்பாடு! அன்றைய முதலமைச்சரே கலந்துகொண்டார்.

உலக ஊனமுற்றோர் ஆண்டு 1981-இல் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் விழாவுக்காக சிறப்பான ஏற்பாடு! அன்றைய முதலமைச்சரே கலந்துகொண்டார். வரவேற்புரை நிகழ்த்த வேண்டிய பொறுப்பு சமூக நல இயக்குநருக்கு. அவருக்கோ தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியாது. அழகிய தமிழில் வரவேற்புரை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு தரப்பட்டது.

தமிழில் நான் தயாரித்த உரையை, நான் சொல்ல அதனை அப்படியே மலையாளத்தில் எழுதிக் கொண்டார், அப்பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி. பலமுறை படித்துப் பார்த்துக் கொண்டார். விழா நாளில் வரவேற்புரைக்கு நல்ல வரவேற்பு, கைதட்டு கிடைத்தது. தமிழ் தெரியாமலே தமிழில் பேசி "சபாஷ்' பெற்றுவிட்டாரே! அன்று அதிசயமாக இருந்தது எனக்கு!

இதைவிடப் பெரிய அதிசயம் ஒன்று உண்டு! 1996-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள். இந்தியாவின் ஐம்பதாவது சுதந்திரத் திருநாள். தில்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து தேசமக்களுக்கு உரை நிகழ்த்த வேண்டும். ஏற்கெனவே எட்டு பிரதமர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை தளத்தில் நின்று உரை நிகழ்த்தியிருக்கிறார்கள். 49 முறை பிரதமர் உரை நிகழ்த்தப்பட்டுள்ளன. அது ஒன்றும் புதிதல்ல.

அன்றைய நிகழ்ச்சி இரண்டு விதத்தில் வித்தியாசமானது! அன்றுதான் முதல் முறையாக ஒரு தென்னிந்தியர் - கர்நாடக மாநிலத்தைச் சோந்த தேவகவுடா - இந்தியப் பிரதமராக தேசியக் கொடியை ஏற்றுகிறார், அடுத்து, பிரதமர் சுதந்திர தின உரையை இந்தியில் நிகழ்த்துவதுதான் மரபு. ஆனால் பிரதமர் தேவகவுடாவுக்கோ இந்தி மொழி தெரியாதே, என்ன செய்வது? பிரதமரின் பேச்சு இந்தியில் தயாரிக்கப்பட்டது. இந்தி வாசகங்கள் கன்னடத்தில் எழுதப்பட்டன. எழுதியதைப் படித்து முடித்தார் பிரதமர்!

"இந்தி'யில் பேசிவிட்டதாக பிரதமருக்கு திருப்தி. பெரும்பான்மையான மக்களுக்கும் மகிழ்ச்சி; இது இந்தியாவில்தான் நடக்கும்; வேறு எங்கும் நடக்க முடியாது.

அறிவிக்கப்பட்ட "ஆட்சி மொழி'யை அறியாத ஒருவரை பிரதமராக ஏற்கும் பண்பும், பாங்கும், தேச உணர்வும், தேசப் பற்றும் நமக்கு உண்டு. இதுதான் இந்தியாவின் பரந்த மனம்; பன்முகத்தன்மை. இது ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் ஆழப் பதிந்து கிடக்கும் உணர்வு!

திரையுலகப் பின்னணிப் பாடகர்களில் கொடி கட்டிப் பறப்பவர் கே.ஜே. ஜேசுதாஸ். இனிமையும், லயமும் இழைந்தோடும் அவரது குரலில்! அவருக்கோ இந்தி தெரியாது! இந்திப் பாடல்களை மலையாளத்தில் எழுதிக் கொடுப்பார்களாம்! அவரது இசைமழையில் இந்திபேசும் மக்கள் நனைந்து நனைந்து மூழ்கித் திளைப்பார்களாம்! பாடுபவர் இந்திமொழி தெரியாதவராயிற்றே - என்று பாகுபாடு பார்ப்பவர்கள் அல்ல நாம்!

இப்போதெல்லாம் பல பின்னணிப் பாடகர்கள் மும்பையிலிருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அவர்கள் இந்தியில் எழுதி வைத்துக் கொண்டு தமிழில் பாடல்கள் பாடுகிறார்கள். இதுவும் நடப்பது இந்தியாவில்தான்!

கர்நாடக இசைப் பாடகர்கள், திரை இசைப்பாடகர்கள் தங்கள் தாய் மொழியில் பாடுவது இயற்கையே. ஆனால் இன்று, தன் தாய்மொழி தவிர்த்த பிறமொழிப் பாடல்களையும் தங்கள் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகிறார்கள்! இந்த மாற்றத்தை மக்களும் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இந்தியாவில் மொழி மக்களைப் பிரிப்பதில்லை. அதிலும் இசை நம்மை இணைக்கிறது; ஒன்றுபடுத்துகிறது, இது தான் இந்தியா!

இன்னொரு சுவையான நிகழ்ச்சி. பிரிட்டிஷ் அரசாங்கம், 1999-ஆம் ஆண்டில், மைக்கேல் ஹெரிட்ஜ் என்பவரை தென்பிராந்திய துணைத் தூதராக நியமனம் செய்தது. அவரும் அவரது துணைவியாரும் நான்கு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தார்கள். தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகினார்கள். அரசாங்கத்தோடும் மக்களோடும் கணவர் மைக்கேல் நல்லுறவை வளர்த்தார். மனைவி எலிசபெத் மைக்கேல் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் ஈடுபட்டார்.

நான்கு ஆண்டு பணிமுடிந்து தங்கள் தாய்நாடு திரும்புமுன் சென்னை மாநகரின் முக்கிய பிரமுகர்களிடம் அவர்கள் பேசினார்கள்:

""நான்கு ஆண்டுகளில் அன்னியர் என்ற உணர்வே ஏற்படவில்லை. எங்கள் நாட்டில் இருப்பது போன்ற எண்ணம்தான் நிலவியது. உண்மையில் தமிழ் மக்களோடு நெருங்கிப்பழகி, அவர்களைப் புரிந்து கொள்ள விரும்பினோம். அதற்காக இங்கு வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அக்கறையோடு தமிழ் கற்றோம், சென்னைக்கு வந்தோம். தமிழில் பேசத் தொடங்கினோம். ஆனால், சென்னைவாழ் மக்களோ ""நாங்கள் ஆங்கிலம் நன்றாகப் பேசுவோமே! (ரஉ நடஉஅஓ எஞஞஈ உசஎகஐநஏ ஏஉதஉ) என்று சொல்லிவிட்டார்கள் ரஏஅப அ ரஅநபஉ? நாங்கள் படித்த தமிழ் வீணாகிவிட்டதே!'' என்று தங்கள் வருத்தத்தை, ஏக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். இப்படி நடப்பதும் இந்தியாவில்தான்!

இந்தியாவின் வரலாற்றை, பூகோளத்தை, நன்கு அறிந்தவர், பண்பாட்டை, கலாசாரத்தை, தேசிய உணர்வை வளர்த்தெடுத்த, ஈடு இணையற்ற பாரதப் பிரதமர் பண்டித நேரு இந்தியாவைக் கண்டுபிடித்தது ஆங்கிலத்தின் மூலமே! இந்திய தேசிய உணர்வை ஊட்டுகின்ற அவரது மிகச் சிறந்த இலக்கியப் படைப்பான ""டிஸ்கவரி ஆப் இந்தியா'' (இந்தியாவைக் கண்டுபிடித்தேன்) - என்ற நூலை ஆங்கிலத்தில்தானே எழுதினார். இந்தியிலோ அல்லது இந்திய மொழிகள் ஒன்றிலோ எழுதவில்லையே? இதுவும் இந்தியாவில்தான் நடக்கும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சிறுபான்மையினரின் நலனும் உரிமையும் பேணிக் காக்கப்பட வேண்டும். உண்மையில் இந்தியாவில் எல்லாருமே ஒருவகையில் சிறுபான்மையினரே. ஆம்! உண்மையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, குஜராத்தி, மராத்தி, பெங்காலி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளைப் பேசுவோர் ஒருவகையில் மொழியால் சிறுபான்மையினரே! அதேபோல் மதத்தால், ஜாதியால், பண்பாட்டால், பழக்க வழக்கத்தால் பார்த்தால், ஒவ்வொரு பகுதியினரும் சிறுபான்மையினரே! நாம் சிறுபான்மை பிரிவா இல்லையா என்று எவரும் பார்ப்பதில்லை! "நான் இந்தியன்' என்ற உணர்வுதான் உள்ளத்தின் அடித்தளத்தில் உள்ளது. இதுதான் இந்தியா!

இந்திய ரூபாய் நோட்டை ஒருமுறை உற்றுப் பாருங்கள். அதன் மதிப்பு எத்தனை மொழிகளில் அச்சடிக்கப்பட்டிடுக்கின்றன என்று எண்ணிப்பாருங்கள். 15 மொழிகளில்! நமது பன்முகத்தன்மைக்கு இது ஒன்றே எடுத்துக்காட்டு. நமக்கு பன்முகத்தன்மை இருக்கலாம்; ஆனால் பார்வை - இந்தியன் என்ற பார்வை - ஒன்றுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

பிரான்ஸ் நாட்டுக்காரன் பிரெஞ்ச் மொழி பேசுகிறான், ஜெர்மானியன் ஜெர்மனி பேசுகிறான், ஆங்கிலேயன் ஆங்கிலம் பேசுகிறான், அமெரிக்கன் ஆங்கிலம் பேசுகிறான், இப்பொழுது ஸ்பானிஷ் மொழி பேசுவதும் வளர்ந்து வருகிறது.

ஆனால் இந்தியர்களோ இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி என்று அவர்கள் பேசும் மொழி மாறுபடலாம்; இந்தியன் என்ற உணர்வு மாறுபடுவதில்லை. இந்திய தேசிய உணர்வு என்பது உண்மையானது. உள்ளத்தின் ஆழத்தில் பதிந்து கிடப்பது. அது மொழிகளுக்கும் மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் அப்பாற்பட்டது; பிராந்திய எல்லைகளைத் தாண்டி நிற்பது. அதுதான் இந்தியா.

இந்த அரிய உணர்வை, ஒற்றுமையை உலகில் வேறு எங்கும் காண முடியாது. இதைத்தான் "வேற்றுமையில் ஒற்றுமை' என்றார் பண்டித ஜவஹர்லால் நேரு. அதற்கு ஒருபடி மேலே போய் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனப் பாடினார் புறநானூற்றுப் புலவர்.

""இந்தியத் தலைவர்கள் வைக்கோலைப்போல் உறுதியில்லாதவர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அது உடைந்து சுக்கு நூறாகச் சிதறிவிடும்'' என்றார் பிரிட்டனின் போர்க்காலப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.

""இந்தியா சிதறுண்டு போகாமல்கூட தப்பிவிடலாம். ஆனால் படிப்பறிவில்லாத மக்களுக்கு வாக்குரிமை வழங்கியிருப்பதால், அங்கு ஜனநாயகம் நிற்காது, நிலைக்காது. ராணுவ சர்வாதிகார ஆட்சி வருவது உறுதி'' என்றார் மேலை நாட்டின் அரசியல் விமர்சகர் ஒருவர்.

இன்னொரு அரசியல் வித்தகரோ, ""இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகையைப் பார்த்தால், வாழும் மக்களுக்கு உணவு அளிக்க முடியாமல், வறுமையாலும், பசியாலும், பட்டினியாலும் மக்கள் மாண்டு போவார்கள்'' என்றார்.

இப்படிப்பட்ட அனைத்து அரசியல் ஆரூடங்களும் பொய்த்துப் போய்விட்டனவே! ஏன்?

""ஆயிரம் உண்டிங்கு சாதி! எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?'' எனக் கேட்டான் பாரதி. இங்கு ஆயிரம் பிளவுகள் இருக்கலாம்; பல்லாயிரம் பிரச்னைகள் இருக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் தாண்டி இந்தியன் என்ற உணர்வுதான் ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் ஓங்கி நிற்கும். சீனப் படையெடுப்பின்போதும், பங்களா தேஷ் போரின்போதும் கார்கில் ஊடுருவலின்போதும் அதை கண்கூடாக கண்டோமே! அதுதான் உண்மையான இந்தியா!

சுருங்கச் சொன்னால் பரந்துகிடக்கும் நிலங்களாலும் உயர்ந்து நிற்கும் மலைகளாலும் ஓடும் ஆறுகளாலும் பேசும் மொழிகளாலும் ஏற்றுக்கொண்டிருக்கும் மத நம்பிக்கைளாலும் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் ஜாதிய உணர்வுகளாலும் பிரிக்கப்பட முடியாதது இந்தியா!

கட்டுரையாளர்: மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத்துறை இயக்குநர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com