நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் பணி நாள்கள் 16 மட்டுமே. ஆனால் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் 44. நாட்டு மக்கள் நலன் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் மீது முழுமையாக விவாதம் நடக்குமா விவாதமில்லாமலே மசோதாக்கள் நிறைவேறுமா என கேள்விகள் எழுகின்றன. ஏற்கெனவே, 5 நாள்கள் கூச்சல் குழப்பத்தோடு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இனி வரும் நாள்களிலும், சுமுகமாக நடக்குமா என்பது கேள்விக்குறியே. இத்தகைய சூழலைத்தான் ஆளும் காங்கிரஸ் விரும்புகிறது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியும் துணைபோவது, இந்திய ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றவேண்டிய மசோதாக்களில் முக்கியமானது உணவுப் பாதுகாப்பு மசோதா. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடப்பதற்கு முன்னரே, உணவுப் பாதுகாப்பு மசோதாவை அவசரச் சட்டமாக ஆளும் அரசு பிரகடனப்படுத்தியது. உணவுப் பாதுகாப்பு என்ற சொல்லாடல், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஊட்டக்கூடிய ஒன்று. ஆனால் சொல்லாடலை மட்டுமே வைத்து உள்ளடக்கத்தை முடிவு செய்துவிடக் கூடாது. கல்வி உரிமைச் சட்டம், வேலை உறுதிச் சட்டம் என்று இரண்டு சட்டங்கள் ஏற்கெனவே கொண்டுவரப்பட்டன. அரசியல் சட்டத்தில், நெறிமுறைக் கொள்கை அத்தியாயத்தில் உள்ள இத்தகைய முக்கியப் பொருள்கள் குறித்து, சட்டங்கள் கொண்டுவந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் மார்தட்டிக் கொண்டார்கள். ஆனால், சட்டங்கள் சாதித்தது என்ன?
பெரும்பான்மையான பள்ளிகள் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள போது கல்வி உறுதிச் சட்டம் அமலாகாது. தமிழகத்தின் அனுபவம் இதுதான். ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்திட வேண்டுமென்பது சட்டம். ஆனால், நடைமுறையில் இச்சட்டம், விட்டத்திலேதான் தொங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
வேலை உறுதிச் சட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கு அண்ணல் காந்தியின் பெயரையும் சூட்டி, தங்களுடைய சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள். இந்தச் சட்டத்தினால் பலனில்லை என்று சொல்லமுடியாது. ஆனால் இச்சட்டம் முழுமையாக அமலாகிறதா? இந்த சட்டத்தின்படி மத்திய அரசின் முடிவு, தினக்கூலி ரூபாய் 148. தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் இந்தக் கூலி வழங்கப்படவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. மேலும் வேலை உறுதிச் சட்டம் கிராமப்புறங்களில் மட்டுமே அமலாக்கப்படுகிறது. தமிழகத்தின் மக்கள் தொகையில் 50 சதவிகிதமாக உள்ள, நகர்ப்புற ஏழைகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது. மேலும், நாடு முழுவதும் வேலை கேட்டு பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை பல கோடியைத் தாண்டினாலும், வேலை உறுதிச் சட்டம் அவர்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காது.
மேலை நாடுகளில் வேலை கிடைக்காதோருக்கும், இருந்த வேலையை இழந்தோருக்கும் அரசுகள் உதவித்தொகை அளிக்கின்றன. எல்லா விசயங்களிலும் மேலை நாடுகளை மேற்கோள்காட்டும் மத்திய அரசு, வேலை உரிமையை, படித்து வேலையற்றோருக்கு அமலாக்க மறுப்பது ஏன்?
கல்வி உரிமை, வேலை உரிமை இரண்டு சட்டங்கள் அமலாக்கத்தின் அனுபவத்தை பார்த்தால், உணவுப் பாதுகாப்புச் சட்டமும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதா மீது, எதிர்க் கட்சிகள் கொடுத்த பல திருத்தங்களை அரசு அவசரச் சட்டத்தில் சேர்க்கவில்லை. மசோதாவில் இருந்ததை விட பல மோசமான புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கிராமப்புற மக்கள் தொகையில் 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50 சதவீதம் பேரும் பயன்பெறுவார்கள் என்று இந்தச் சட்டம் கூறுகிறது. நாடுமுழுவதும் பயனடைவோர் சராசரி 67 சதவீதம் என்ற கூற்று உண்மையல்ல.
இந்த சட்டத்தினால் பயன்பெற உள்ளோர் 67 சதவீதம் பேர் என்பது, மத்திய திட்டக்குழு வகுத்துள்ள வரையறையின்படி மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக் கூடியதாக உள்ளது. இந்த திட்டத்தில் மாநில வாரியாக பலன்பெறுவோர் விகிதம் குறிப்பிட்ட பட்டியலை (2011 - 2012 அடிப்படையில்) உணவு அமைச்சகத்துக்கு, மத்திய திட்டக்குழு ஏற்கெனவே அனுப்பியுள்ளது.
திட்டக்குழு தயாரித்துள்ள மாநிலவாரியான, மோசடியான வறுமைக்கோட்டு அளவுகோலின் அடிப்படையில் 21 மாநிலங்களில் 13 மாநிலங்களில், உணவுப் பாதுகாப்பு பெறுவோரின் எண்ணிக்கை தேசிய சராசரியான 67 சதவிகிதத்தைவிட குறைவாகவே உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கிராமப்புறத்தில் 62.55 சதவீதம் மக்களும், நகர்ப்புறத்தில் 37.79 சதவீதம் மக்களும் மட்டுமே பயன்பெறுவார்கள். நகர்ப்புறம், கிராமப்புறம் இரண்டும் சேர்த்து தமிழகத்தில் பயன்பெறுவோர் மொத்த மக்கள் தொகையில் 50.55 சதவீதம் பேர் மட்டுமே. தமிழகத்தில் தற்போதுள்ள உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சுமார் 90 சதவீதம் மக்கள் பயனடைகிறார்கள். இதனோடு ஒப்பிடுகையில் உணவுப் பாதுகாப்பு மசோதாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தேசிய சராசரி இலக்கான 67 சதவீதமே மிகவும் குறைவு. இந்த நிலையில், இந்தச் சட்டத்தின்படி தமிழகத்தில் 50.55 சதவீதம் பேருக்கு மட்டுமே உணவுப் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என்று சொல்வது, உணவுப் பாதுகாப்பா அல்லது இருக்கும் உணவுப் பாதுகாப்பை சீர்குலைப்பதா? மாநிலத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கையை, மத்திய அரசு தீர்மானிப்பது கூட்டாட்சி நடைமுறைக்கு எதிரானது அல்லவா?
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில் குடும்பத்திற்கு 35 கிலோ அரிசி வழங்கப்படும் என இருந்தது. ஆனால், அவசரச் சட்டத்தில் அது நபருக்கு 5 கிலோ என்று மாற்றப்பட்டது. இதனடிப்படையில், 5 பேர் உள்ள குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும். கேரளாவைப் போன்று 3 பேர் கொண்ட குடும்பமாக இருந்தால், 20 கிலோ அரிசி, கோதுமை அவர்களுக்கு மறுக்கப்படும். தமிழக மக்கள்தொகையில் 49 சதவிதம்பேர் நகரங்களில் வசிக்கின்றனர். மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள நகர்ப்புற மக்களில் 37.79 சதவீதம் பேருக்கு மட்டுமே உணவு அளிப்பது, தற்போது பலன்பெற்றுவரும் பெரும்பகுதியான நகர்ப்புற மக்களை பொது விநியோக முறைக்கு வெளியே தள்ளிவிடும். புதிய அவசரச் சட்டத்தின்படி (பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் மசோதா) தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் உணவு தானிய அளவீடு குறையும். தற்போது 2 லட்சத்து 96 ஆயிரம் டன் உணவு தானியம் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்கிறது. அவசரச் சட்டத்தின்படி அதில் 1 லட்சம் டன் வரை தமிழகம் இழக்கும். இதனால், இப்பொழுது வழங்கப்படும் உணவு தானிய அளவை தொடர மாநில அரசு வெளிச்சந்தையில் அரிசி வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், மாநில அரசு கூடுதலாக ரூபாய் 3 ஆயிரம் கோடி நிதிச் சுமையை ஏற்க நேரிடும். தமிழகத்து மக்களையும், இதுபோன்ற மற்ற சில மாநில மக்களையும் பாதிக்கக் கூடிய வகையில், இப்படி ஒரு சட்டம் தேவையா?
உலகிலேயே, ஊட்டச் சத்து குறைவானவர்களை அதிக அளவு கொண்டுள்ள இந்தியாவில், உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவதற்காக சட்டம் வேண்டுமென்று கோருகிறபோது, இருக்கும் உணவுப் பாதுகாப்பையும் பறிக்கும் வகையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றிட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது. நாட்டின் பெரும்பகுதி மக்களை பொது வினியோகத் திட்டத்திலிருந்து வெளியேற்றுவதாகவே இது அமைந்துள்ளது.
நாடு விடுதலையடைந்தபிறகு, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய புதிய முழக்கத்தை வைத்து ஆட்சியைப் பிடித்தார்கள். "வறுமையே வெளியேறு' என்ற முழக்கம் எழுப்பப்பட்டதால் வறுமை ஒழியவில்லை, "ஆம் ஆத்மி' என்று ஆரவாரமாகப் பேசியதும் பலனளிக்கவில்லை, "இந்தியா ஒளிர்கிறது' என முழங்கியதும் பலனளிக்கவில்லை. மத்தியில் இன்று ஆள்வோர் கொண்டுவர முயற்சிக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்டம், இருக்கும் உணவுப் பாதுகாப்பையும் பறிப்பதாகவே அமைந்துவிடும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொடுத்துள்ள கீழ்க்கண்ட திருத்தங்களை சேர்த்தால் மட்டுமே இந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.
அத்திருத்தங்கள்:
1. வருமான வரி செலுத்துபவர்களைத் தவிர மற்ற அனைவரும் உணவுப் பாதுகாப்பு வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
2. மசோதா உணவுதானியத்தை மட்டுமே குறிப்பிடுகிறது. தேவையான அளவு சர்க்கரை, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவையும் சேர்க்கப்பட வேண்டும்.
3. ஒரு நபருக்கு மாதத்திற்கு 7 கிலோ அல்லது குடும்பத்திற்கு 35 கிலோ இதில் எது அதிகமோ அதை வழங்க வேண்டும்.
4.மசோதாவின் அட்டவணை - 1இல் ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கு தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு தரப்பட வேண்டும்.
5. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை, மூன்றாண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அதன்பிறகு உணவுதானிய விலையின் அடிப்படையில் புதிய விலை தீர்மானிக்கப்படும் என்றும் மசோதா கூறுகிறது. இது உணவு மானியத்தொகையை வெட்டவும் உணவு தானியங்களுக்கு தரப்படும் ஆதார விலையை குறைக்கவுமே பயன்படும். எனவே இந்தப் பிரிவை நீக்க வேண்டும்.
6. இந்த சட்டத்தின் அனைத்து பிரிவுகளிலும் செலவுத்தொகையை பகிர்ந்து கொள்வது உட்பட மத்திய அரசு எதேச்சதிகாரமாக முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் ஆலோசனைகளுடன் அனைத்தையும் தீர்மானிக்க வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுடன் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த அவசரச் சட்டமும் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பாக இருக்கும் நிலையில் மாநில அரசுகளின் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும்.
7. சமூக சமையல் கூடம் போன்ற திட்டங்களின் வழியாக பலன் பெறுபவர்களை மசோதா நீக்க முயல்கிறது. எனவே ஒடுக்கப்பட்ட பிரிவினர் பலன் பெறும் வகையில் அதற்கான செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
8. இப்போதுள்ள உணவுதானிய ஒதுக்கீடு குறைக்கப்படாது என்பது உத்தரவாதப்படுத்தப்படவேண்டும்.
9. உங்கள் பணம் உங்கள் கையில், ஆதார் அட்டை ஆகிய பிரிவுகள் மசோதாவிலிருந்து நீக்கப்பட வேண்டும். "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில், ஜெகத்தினை அழித்திடுவோம்' என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதி. இருக்கும் உணவைப் பறிக்கும் சட்டத்தை என்ன செய்வதென்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்: மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.