ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் பாரத நாட்டில் வேரூன்றி ஆட்சி செய்தபோது குஜராத்திலுள்ள ஆமதாபாதில் பிரபல தொழிலதிபராக பிரகாசித்த விக்ரம் சாராபாயின் மகளாகப் பிறந்தவர் அனுசுயாபென்.
அவர் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே (எட்டு வயதில்) அவருக்கு திருமணம் செய்வித்தனர். படிப்பில் கவனமும், கருத்துமின்றி அந்தப் பையன் இருந்ததால் அனுசுயாவின் படிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
புகுந்த வீட்டுக்கு, தக்க தருணத்தில் அனுப்பலாம் என குடும்பத்தினர் நினைத்ததால், வீட்டிலேயே இருந்து வந்தாள். அப்போது அவளது சகோதரனுக்கு, பாடங்கள் சொல்லித்தர ஆசிரியர் வீட்டுக்கு வருவார். அனுசுயா பக்கத்து அறையிலிருந்தவாறே அவற்றைக் கேட்டு, படித்து, எழுதி, கல்வியறிவு பெறுவதை குறிப்பால் அறிந்த ஆசிரியர், அவள் தந்தையிடம் கூறி நேரடியாக, இறுதி ஆண்டுத் தேர்வுக்கு அனுப்பச் செய்தார். அனுசுயா முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார். பெற்றோர் அதிசயித்து மகிழ்ந்தனர். அப்போது அனுசுயாவுக்கு வயது 17.
சுறுசுறுப்பாக வலம்வந்த அனுசுயாவை, ஆசிரியரின் ஆலோசனைப்படி மேலே படிக்க இங்கிலாந்துக்கு அனுப்ப முடிவானது.
தெளிவும், தேர்ச்சியும்பெற்ற, அனுசுயா இங்கிலாந்து செல்லும்முன், கணவரிடமிருந்து அதிகாரபூர்வமாக விடுபட விரும்பி, அவரிடம் நேரில் பேசி அவர் மறுமணம்செய்து கொண்டு வாழ, தனது மனப்பூர்வமான விருப்பத்தை பெற்றோரின் அனுமதியுடன் எழுத்துமூலமாகத் தெரிவித்தார். அன்று இளவயதுத் திருமணம் அனுமதிக்கப்பட்டது. மேலும், இன்றுபோல் விவாகரத்து அமலில் இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பிய அனுசுயா, ஆலைத்தொழிலாளர் குடும்பத்தினரின் அன்றாட அவலங்களையும், அப்பாவித்தனங்களையும் களைய, சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடிவுசெய்தார். அவர்கள் வசிக்கும் இடத்தருகிலேயே தனியாக வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார். முதலில் தொழிலாளர்களின் வாரிசுகளுக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்தார். அவர்களின் மனைவிகளுக்கு தையல் கற்பித்தார். இறுதியாக தொழிலாளர்கள் மாலை நேரத்தை வீணடிக்காமலிருக்க - கைத்தொழில் ஒன்றை - குறிப்பாக, ராட்டையில் நூல் நூற்கப் பயிற்சி அளித்தார். இதனால் அவர்களது குடும்ப வருமானமும் பெருகியது.
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுற்றுப்புறங்களை வைத்துக்கொள்ள அனுசுயா பென் அவர்களுக்குக் கற்றுத்தந்த பாடங்கள் உதவின. ஆலைத் தொழிலாளர்கள், எவ்வித முன்னறிவுப்பும் இன்றி, தங்கள் குறைகளை கோரிக்கைகளை நிவர்த்திக்க, வேலை நிறுத்தம் செய்தனர். நிர்வாகம், உடனடியாக வேலைக்குத் திரும்பாவிட்டால் ஆலையை மூடிவிடுவதாக மிரட்டியது. அஞ்சிய தொழிலாளர்கள், வேலைக்குத் திரும்பினர்.
தொழிலாளர்களின் அச்ச உணர்வைப் பயன்படுத்தி, ஆலை நிர்வாகம், பணிநேரத்தை அதிகரித்தது; குறிப்பிட்ட வயது வரம்புக்கு உள்பட்டவர்களை மட்டும், வேலையில் நீடிக்கச் செய்ததுடன், ஊதியத்தை, விடுமுறைகளை, ஓய்வு நாள்களைக் குறைத்தது.
இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்கள், அனுசுயாபென்னிடம் முறையிட்டு, தீர்வு காண வேண்டினர். "முறைப்படி சட்டப்பூர்வமாக நாம் செயல்படுவதோடு, எவ்விதமான அசம்பாவிதங்களுக்கும் ஆள்படாமல், அறவழியில் - கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒற்றுமையாக இருக்க வேண்டும்' எனத் தொழிலாளர்களிடம் தனது கருத்தைத் தெரிவித்தார் அனுசுயா பென். இதனை ஏற்பதாகத் தொழிலாளர்கள் கூறினர்.
கோரிக்கைகளை மனுவாகத் தயாரித்து ஆலை நிர்வாகத்துக்கு அனுப்பி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண விரும்புவதாகக் கடிதம் எழுதினார் அனுசுயா. ஒரு வாரம் பொறுத்தபின் எவ்வித பதிலும் வராததால் சட்டப்பூர்வமாக வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டு, 4-12-1917 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்ற முடிவை தெரிவித்தார். தொழிலாளர்களின் கட்டுப்பாடும், ஒற்றுமை உணர்வும், நிர்வாகத்தைக் கதிகலங்கச் செய்தன.
வேலைநிறுத்தம் தொடரும் நிலை கண்டு, ஆலையின் அதிபரும், அனுசுயா பென்னின் உடன்பிறந்தவருமான அம்பாலால் சாராபாய், சபர்மதி ஆசிரமத்தில் முகாமிட்டுள்ள அண்ணல் காந்தியடிகளைக் கண்டு முறையிட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவி கோரினார். கோரிக்கைகளை ஏற்பதாகவும் உறுதிமொழி அளித்தார்.
அனுசுயாபென்னின் சமூக சேவைகளையும், நிர்மாணத் திட்டங்களைச் செயல்படுத்தும் விதத்தையும் அப்போது காந்திஜி அறிந்து மகிழ்ச்சியடைந்தார். நியாயமான கோரிக்கைகளுக்காக, நாணயமான தலைமையில் நேர்மையாக அறவழியில் எவருக்கும் எவ்விதமான பாதிப்புமின்றி நடந்து வரும் வேலை நிறுத்தத்தை அனுசுயாபென்னை அழைத்துப் பேசி, சுமுகமாக முடித்துவைத்தார்.
இந்தத் தொழிலாளர்களின் வெற்றிகளைக் கண்ட மற்ற ஆலைத் தொழிலாளர்களும், அனுசுயாபென்னை அணுகி, அவரின் தலைமையை ஏற்பதாகக் கூறியதால், 1920-இல் ஆலைத் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது.
அனைத்துத் துறை தொழிலாளர்களின் கூட்டமைப்பாக உருவான "அகில இந்திய
தொழிற்சங்க காங்கிரஸ்', ஆமதாபாத் தொழிற்சங்கத்தையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ள விரும்பி அனுசுயாபென்னை அணுகியது. அவர் அண்ணல் காந்திஜியின் ஆலோசனையை நாடினார்.
"வர்க்கப் போராட்டத்தை' அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு இயங்கும் அமைப்போடு சேருவதை விரும்பாது, வர்க்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என வற்புறுத்தியதோடு, முதலாளிகளும், தொழிலாளர்களும், அதாவது நிர்வாகமும், சங்கமும்' தொழில்துறையில் பங்குதாரர்களாகச் செயல்பட்டு, இருவரும், தார்மிக அடிப்படையில், முழுமையாகச் செயல்பட வேண்டும் என்றார் காந்திஜி.
கருத்து வேற்றுமைகள் உருவாகலாம், ஆனால், அது கடும் பகைக்கு வித்தாகவும் வேராகவும் அமைந்து விஷ விருட்சமாகி விடாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். வேலைநிறுத்தம் எனும் ஆயுதத்தை, இறுதியாக நன்கு சிந்தித்துப் பயன்படுத்த வேண்டும் என்றார். இல்லையெனில், இருவரும் அல்லல்படுவர்; காலப்போக்கில் அழிவர் என அண்ணல் கருதியதால், இணைப்பு முயற்சி கைவிடப்பட்டது என்று காந்தியவாதிகள் கூறுவர்.
பண்டித ஜவாஹர்லால் நேரு, ஆமதாபாத் வந்தபோது, அனுசுயாபென்னைக் கண்டு, அவரது தொழிற்சங்கச் சேவையைப் பாராட்டி, புகழ்ந்து, "ஏன், மே தினத்தைப் புறக்கணிக்கிறீர்கள்?' என்று கேட்டபோது, அனுசுயாபென், "அந்நாள் மேலை நாட்டிலிருந்து இறக்குமதியானது, ஆனால், ஆமதாபாத் ஆலைத் தொழிலாளர்கள் முதன்முதலில் சட்டப்பூர்வமாக, 4-12-1917இல் செய்த காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தை நினைவுகூறும் முகத்தான், அந்நாளை ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறோம்' என்றாராம். அப்படிப்பட்ட சுத்த சுதேசியான சங்கம் அது.
அண்ணல் காந்தியடிகளாரின் மனதுக்கு உகந்த "மதுவிலக்கை' உணர்வுப்பூர்வமாகக் கடைப்பிடித்து வரும் மக்கள் வாழும் குஜராத் மாநிலம் என்னும் நந்தவனத்தில் 1885-இல் பூத்த மலரான அனுசுயாபென் என்ற மல்லிகை - செல்வமும், செல்வாக்கும் ஒருங்கே பெற்ற குடும்பத்தில் பிறந்து, தனக்குரிய உரிமைகளைத் துறந்து, சமூக சேவையை வலிந்து ஏற்று, குறிப்பாக பொது வாழ்விலும், சிறப்பாக தொழிற்சங்தத் தொண்டிலும், தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அப்பழுக்கற்று, நறுமணம் பரப்பி வாழ்ந்து 1971இல் தனது 86ஆவது வயதில் உதிர்ந்தது.
கட்டுரையாளர்: கண்காணிப்பாளர், தென்னக ரயில்வே (ஓய்வு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.