ஆட்சிமொழிச் சட்டமும் செயல்பாடுகளும்

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு, டிசம்பர் 27ஆம் நாள். தமிழகச் சட்டமன்ற வரலாற்றில் மறக்க முடியாத நாள்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு, டிசம்பர் 27ஆம் நாள். தமிழகச் சட்டமன்ற வரலாற்றில் மறக்க முடியாத நாள். தெருவெங்கும் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர் என்ற பாரதியின் வேண்டுகோளை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்பட்ட நாள். தமிழ்நாட்டில் தமிழே இனி ஆட்சிமொழி என்ற ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட அருமைமிகு நாள்.

ஆட்சிமொழிச் சட்டம் என்பது மொழிப்பற்றை வெளிக்காட்ட கொண்டுவரப்பட்டதன்று. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்களுக்குத் தெரிந்த மொழியில் அரசு இயந்திரம் செயல்படுவதுதான் இயற்கையானது. மக்கள் அரசிடம் கேட்பதும் பெறுவதும் இருவருக்குமான பொது மொழியில் நடைபெற வெண்டும்.

இந்தியாவின் மாநிலப்பிரிவுகள், பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மொழிவாரி மாநில அமைப்பு, அந்தந்த மொழிபேசும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் சிறப்புரிமையாகும். அதன்வழியில் மக்கள் பேசும் மொழியிலேயே அரசை நடத்திச் செல்ல ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1950இல் நடைமுறைக்குவந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 343ஆம் பிரிவு, இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் அறிவித்தது. மேலும் அதன் 2 மற்றும் 3ஆம் உட்பிரிவுகள், அரசியல் சட்டம் நடைமுறைக்குவந்து 15 ஆண்டுகளுக்குப்பின், அதாவது 1965இல் இந்தியாவில் ஆங்கிலம் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

இப்பிரிவு திராவிட மாநிலங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழ்நாடு இதை வன்மையாகக் கண்டித்தது. ஆங்கிலேயர் வரவால் ஏற்பட்ட பாதிப்புகளையும் இழிநிலைகளையும் பழைய வரலாற்றுப் பதிவுகள் தமிழகத் தலைவர்களின் கண்முன் கொண்டுவந்து காட்டின.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு முன்பே சட்டத்துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகியவற்றில் ஆங்கிலம் கோலோச்சியது. 1919 முதல் 1937வரை நடைபெற்ற இரட்டையாட்சிமுறை, சட்டமன்றத்தில் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என கட்டளையிட்டது. உறுப்பினர்கள் வட்டார மொழியில் பேசினால் ஆங்கில மொழிபெயர்ப்பை இணைக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியது.

இக்காலகட்டத்தில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் இருந்த ஆங்கிலம் தெரியாத உறுப்பினர்கள் பேச முடியாது மனம் புழுங்கினர். தம் பகுதிகளுக்கான தேவைகளைக்கூட கேட்டுப் பெறமுடியாத ஊமைகளாய் அமர்ந்திருந்தனர்.

"மாநில சட்டமன்றங்கள் மாநில மொழியில் நடைபெற வேண்டும், நீதிமன்றங்களில் மாநில மொழியே பயன்படுத்தப்பட வேண்டும்' என்று பெல்காம் காங்கிரஸ் மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய உரை தமிழ் உணர்வாளர்களிடையே புதிய வேகத்தை உண்டாக்கியது.

தமிழக சட்டமன்றத்தில் ஆங்கிலத்திற்கு எதிர்ப்பும் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்னும் வற்புறுத்தலும் பெருகத் தொடங்கின. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராசா போன்ற முதலமைச்சர்களும் தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், மறைமலையடிகள், திரு.வி.க, பாவாணர், பாரதியார், பாவேந்தர், அப்பாத்துரையார் போன்றோர் ஆட்சிமொழியாக தமிழ் அமைய வேண்டுவதை நயம்படக் கூறினர். அத்துடன் சென்னை மாகாணத் தமிழ் சங்கம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் போன்ற தமிழமைப்புகளும் இதில் ஆர்வமாக ஈடுபட்டன.

தமிழை ஆட்சிமொழியாக்க விவாதங்கள், தீர்மானங்கள், வேண்டுகோள்கள் போன்றவை தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இந்திய அரசியல் சட்டம் மாநிலங்களுக்கான அலுவல் மொழியைக் குறிப்பிடாததையும் மாநிலங்களே சட்ட மன்றம் மூலமாக மாநில அலுவல் மொழியை தீர்மானித்துக் கொள்ளலாம் என சட்டப்பிரிவு 345 கொடுத்துள்ள அதிகாரத்தையும் நன்கறிந்த தமிழகத் தலைவர்கள் தமிழை ஆட்சிமொழியாக்க அரசை வற்புறுத்தினர்.

இந்நிலையில், 1956, நவம்பர் முதல் நாள், தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காமராசர் அமைச்சரவையில் கல்வியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், 1956 டிசம்பர் 27ஆம்நாள் தமிழ் ஆட்சிமொழிச்சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.

அப்போது அவர் தமது உரையில், "ஐம்பது ஆண்டுகளாக எடுக்கப்பெற்ற ஓயாத முயற்சியின் பயனாக, தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்கும் என்று பிரகடனம் செய்வதில் நாம் பெரிய முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளோம். இதை அவையில் சமர்ப்பித்து சட்டமாக்குவதற்கு நான் ஒரு கருவியாக அமைந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்' என்று குறிப்பிட்டார். சட்டமன்றத்திலிருந்த உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவோடு ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அது, 1957 சனவரி 19இல் ஆளுநரின் இசைவைப்பெற்று, 1957, சனவரி 23 அன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சிமொழி என்னும் தன்னிகரற்ற நிலை ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சிமொழிச் சட்டத்தை செயல்படுத்துவதற்காக முதலில் ஆட்சிமொழிக் குழுவும் தொடர்ந்து 1971இல் தமிழ்வளர்ச்சித் துறையும் அமைக்கப்பட்டன. இவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்ட மூவாண்டு முனைப்புத் திட்டத்தின்படி, அரசுத்துறை தலைமை அலுவலகங்களிலும் தொடர்ந்து செயலகத் துறைகள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள், மாநகராட்சி போன்ற தன்னாட்சி நிறுவனங்களிலும் ஆட்சிமொழிச் செயலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அலுவலகங்களுக்கு தேவையான தட்டச்சு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

அரசு அலுவலகங்களில் பதிவேடுகள், படிவங்கள், அலுவலக முத்திரைகள் ஆகிய அனைத்தும் தமிழிலேயே இருக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அனைவரும் தமிழில் பெயர் எழுதவும் கையொப்பமிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அன்றாட அலுவலகப் பணிகளில் பிறமொழி கலவாது தமிழையே பயன்படுத்த அரசு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

கணினியை காரணம் காட்டி ஆங்கிலம் மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் மென்பொருள் ஏற்றப்பட்ட கணினிகள் வழங்கப்பட்டன. ஊழியர்களுக்கு உதவும் வகையில் ஆட்சிச்சொல் அகராதிகள், மாதிரி வரைவுகள் போன்ற நூல்களும் படிவங்களும் வெளியிடப்பட்டன.

திட்டச் செயலாக்கத்தில் ஏற்படும் தடைகளைப் போக்கவும் வழிகாட்டவும் மாவட்டந்தோறும் பயிலரங்குகளும் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அலுவலர்களுக்கு தேவையான பயிற்சிகள் தரப்படுகின்றன.

பொதுமக்கள் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை மேற்கொள்ளும் வகையில் வணிக நிலையங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவும் ஊர்திகளில் தமிழ் எண் பலகை பொருத்தவும் தனித்தனி அரசாணைகள் இயற்றப்பட்டுள்ளன.

ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்கு தமிழ்வளர்ச்சித் துறை உற்ற தோழனாய் இருந்து வழிகாட்டியபோதும், அலுவலகங்களில் நூறு விழுக்காடு நிலை ஏற்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. சட்டம் நடைமுறைக்கு வந்து 57ஆண்டுகளாகியும் நிறைவேற்றும் நிலைமை முழுமை பெறாதது வருத்தத்திற்குரியதே.

வருவாய், சலுகைகள் தொடர்பான அரசாணைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆட்சிமொழி தொடர்பான அரசாணைகளுக்குக் கொடுக்கப் படுவதில்லை. பெயர்ப்பலகை வைப்பதிலும் கையொப்பமிடுவதிலும் அலுவலர்களிடையே மறுப்பும் விருப்பமின்மையும் காணப்படுகின்றன. மாவட்டங்களில் பணியாற்றும் தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள் அலுவலகங்களை ஆய்வு செய்யும்போது காணும் குறைபாடுகளே இதற்குச் சான்று.

தமிழில் பிழையின்றி எழுதுவதிலும் வாக்கிய அமைப்பிலும் போதுமான பயிற்சி இல்லை. மறுப்பு, பாதுகாப்பு என்னும் சொற்கள் தெரிந்திருந்தாலும் ஆட்சேபணை, பந்தோபஸ்து என்னும் பிறமொழிச் சொற்களை தயக்கமின்றி கோப்புகளில் பயன்படுத்துகின்றனர். பெயரை எழுதும்போது தமிழில் முன்னெழுத்திட வேண்டும் என்பதை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, எஸ் என்று எழுதும்முறை நகைப்பிற்குரியதாக உள்ளது.

வணிக நிலையங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகை பற்றிய ஆணையை பொதுமக்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சிற்றூர்களில் ஆங்கிலப் பெயர் தாங்கிய பலகைகளையே காண முடிகிறது. அதேபோன்று ஊர்திகளில் தமிழ் எண் பலகை என்பது சிறிதளவும் நடைமுறைக்கு வரவில்லை.

ஆட்சிமொழிச் சட்டமும் அரசாணைகளும் எள்ளவும் பணிச்சுமையாகாது. அவை அன்றாட வாழ்க்கைமுறையோடு இயைந்தவை. தமிழ் மொழியைப் பயன்படுத்த விழைவதிலும் அரசாணைகளை மதித்துப்போற்ற வேண்டுமென்பது அனைவரின் முதற்கடமையாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியாது ஆவணங்களாய் நிற்கத் தகுந்த அலுவலகக் குறிப்புகளும் மக்களின் மொழிச் செயல்பாடுகளும் தாய்மொழியாகிய தமிழில் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் உணரவேண்டும். காலந் தாழ்ந்ததாயினும் தாழ்வில்லை. இனியேனும் எழுச்சி கொள்வோம்.

கட்டுரையாளர்: தமிழாசிரியர் (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com