மகாத்மாவை மறப்போமா?

உங்களைப் புரிந்துகொள்ள ஏன் இப்படித் தடுமாறுகிறார்கள்? எளிமையாய் இருந்ததும் இயல்பாய் பேசியதும் உங்களைப் புரிந்துகொள்ளத்
மகாத்மாவை மறப்போமா?

""உங்களைப் புரிந்துகொள்ள ஏன் இப்படித் தடுமாறுகிறார்கள்? எளிமையாய் இருந்ததும் இயல்பாய் பேசியதும் உங்களைப் புரிந்துகொள்ளத் தடைகளாய் இருக்கின்றனவோ? உண்மையைப் பேசியதும் உண்மையாய் நடந்துகொண்டதும் கூட புரியவில்லையே, ஏன்?  களங்கமற்ற அந்த வெள்ளைச் சிரிப்பை உணர முடியாதபடி மனது முடமாகிப் போயிருப்பது ஏன்? உலகமே இன்று உங்களை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு அமைதிக் காவலராய், அகிம்சைப் போராளியாய் (இப்படிச் சொன்னால்தான் சிலருக்குப் புரிகிறது), ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஒரு அடையாளமாய் விளங்கும் உங்களை இந்தியாவில் புரிந்து கொள்ளத் தயங்குவதேன்?

""உங்கள் பிறந்த நாள், நினைவு நாள்களில் உங்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகப் பலர் உங்களுடைய சமாதிக்கு, உங்களுடைய சிலைகளுக்கு மாலை அணிவிக்கச் சம்பிரதாயமாக வந்து போவார்கள். அவர்களுக்கு உண்மையில் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூட இருக்கலாம். ஆனால், உங்களுடைய சிந்தனைகளை உள்வாங்கிச் செயல்படுத்துவதில் சிறிது தயக்கம். காலத்திற்கு ஒவ்வாத பல விஷயங்களைச் சொல்லிவிட்டுச் சென்று விட்டீர்கள் என்று எண்ணுகிறார்கள். எது காலத்திற்கு ஒவ்வாத விஷயம் என்று குழம்பிவிடாதீர்கள்.  உண்மையாக வாழுங்கள் என்று சொன்னீர்களே, அது ஒன்று போதாது காலத்திற்கு ஒவ்வாதது என்பதற்கு.

""தில்லி நிகழ்ச்சிக்குப் பின் எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் பெண்களின் பாதுகாப்பற்ற தன்மை பற்றிய செய்தியாகவே வருகிறதே.  நீங்கள் கூறினீர்களே, ஒரு பெண் தாக்கப்படும்போது, இம்சை, அகிம்சை என்றெல்லாம் அவள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு, அவளுக்குத் தோன்றும் எந்த வழியையும் பின்பற்ற அவளுக்கு உரிமையுண்டு. கடவுள் அவளுக்கு பற்களையும், நகங்களையும் கொடுத்திருக்கிறார்.  தன் பலம் கொண்ட மட்டும் அவள் அவற்றை உபயோகிக்க வேண்டும், அவசியமானால், அந்த முயற்சியில் உயிரையும் விட வேண்டும்.

""சாவைப்பற்றிய பயத்தையெல்லாம் விட்டொழித்துவிடும் ஆணோ, பெண்ணோ தம் உயிரை அர்ப்பணிப்பதன் மூலம் தம்மை மட்டுமின்றி, மற்றவர்களையும் காப்பாற்ற முடியும்.  உண்மையில் சாவுக்குத்தான் நாம் அதிகமாகப் பயப்படுகிறோம். ஆகையால், நம்மிடமிருப்பதைவிட அதிகமானதான பலத்தின் முன்பு இறுதியில் நாம் பணிந்து விடுகிறோம். ஆனால், இம்மாதிரி நம்பிக்கையையும், தைரியத்தையும் ஒரு நாளில் பெற்றுவிடமுடியாது. ஒரு தைரியமான சூழ்நிலை நிலவியிருந்தால் நம் தேசத்தில் மட்டும் எந்த ஒரு ஆண் மகனும் பெண்ணுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு உடன்பட்டிருக்க மாட்டான்.

"வயதான,  தளர்ச்சியுற்ற, பல் இல்லாத நான்கூட அகிம்சையைச் சொல்லிக்கொண்டு, ஒரு சகோதரி தாக்கப்படுவதை நிர்கதியாகப் பார்த்துக் கொண்டிருந்தால், என்னுடைய மகாத்மா பட்டம் கேலிக்கிடமாகி, அவமானப்படுத்தப்பட்டுவிடும். அந்தப் பட்டத்தையும் நான் இழந்துவிடுவேன். நானோ, என்னைப் போன்ற மற்றவர்களோ குறுக்கிட்டு, அகிம்சை வழியிலோ, பலாத்கார வழியிலோ எங்கள் உயிர்களை விட்டால், நிச்சயமாகப் பெண்ணைக் காப்பாற்றி விடுவோம்? அப்படி இல்லாவிட்டாலும், அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு உயிருள்ள சாட்சிகளாக இருக்க மாட்டோம்' என்றெல்லாம் எழுதினீர்கள், பேசினீர்கள். அவையெல்லாம் காற்றோடு காற்றாக கரைந்து போகச் செய்துவிட்ட பின் இன்றைய இந்தியர்கள் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பதுபற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட பெண்களுக்குத்தான் இப்படி என்றால் குடும்பப் பெண்களுக்கு மற்றுமொரு துயரம் - கணவன்மார்களின் குடிப்பழக்கம்.

""குடித்துவிட்டு குப்பைமேட்டில் குப்புறப் படுத்திருப்பவர்களைத் தாண்டிச்செல்லும் வாய்மூடி மெüனிகளாய் இருக்கிறோம். ஏன் என்றா கேட்கிறீர்கள்? மானத்தைத்தான் அடித்துத் துவைத்து வெயிலில் காயவைத்துவிட்டோமே?

""அரசாங்கத்திற்கு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள பல வழிகள் இருக்கின்றன. ஆனால், ஒரு சாதாரணக் குடும்பத்திற்கு வருமானம் என்பது உழைத்துச் சம்பாதித்துக் கொடுக்கும் ஆண் மகன் மூலம்தான். உழைத்துப் பிழைக்கும் அவர்கள் வாழ்விலும் "இடி'யாய் இறங்கியது "குடி' என்னும் கொடிய பழக்கம். மாலையில் வேலை முடித்துக் குடித்தது போய், "குடித்தால்தான் வேலை செய்யவே முடியும்' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது இன்றைய உழைக்கும் வர்க்கம். குடிப்பவர்களின் சராசரி வயது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து இன்று 15 வயதாகிவிட்டது! ஆணின் இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் சுமையைப் பெண்கள்தாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

""ஏழைக் குடும்பங்கள் தங்களுடைய குடும்ப வருமானங்களை இழந்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழியில்லாது, தரமான கல்வியைக் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியாமல் தவிக்கின்றன. அரசாங்கத்திடம் கையேந்தி நிற்கும் அவலத்தில் உழன்று வரும்போது - மகாத்மாவே, உங்களுடைய மெல்லிய குரல் எப்படிக் கேட்கும்?

""இலவசங்கள் என்றவுடன் அடிதடி சண்டையே நடக்கிறது. இவையெல்லாம் வளமான வாழ்வில் திளைத்திருக்கின்றோம் என்பதன் அடையாளமா? புள்ளி விவரங்களில் மட்டும் நம்முடைய சராசரி வருமானம் கூடிக்கொண்டே வருவதாகக் கூறிவருகிறார்கள். ஆனால் ஆண்டுக்காண்டு நம்முடைய உள்நாட்டுக் கடனும் கூடிக் கொண்டே செல்கிறதே, அதைக் கவனித்தோமா?

""தமிழ்நாட்டு அரசின் மொத்தக் கடன் ஏறத்தாழ ரூ1,30,000 கோடி. தமிழக அரசு தாம் வாங்கிய கடனுக்கு ரூ.10,945 கோடி வட்டியாக மட்டும் கட்டிவருகிறதே, இது எத்தனை பேருக்குத் தெரியும்?

""2023-இல் இப்பொழுது இருக்கும் வருமானத்தை விட ஆறு மடங்கு உயர்ந்து நம்முடைய ஆண்டு சராசரி வருமானம் ரூ.4,50,000 என்ற இலக்கை அடைய திட்டமிட்டிருக்கிறார்கள். இது ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணங்களையும் இப்பொழுதே அச்சடித்து வைத்திருப்பார்களா அல்லது 2023-இல் இருக்கும் ஆட்சியாளர்கள் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவார்களா, தெரியவில்லை.  தனிநபர் வருமானங்களையெல்லாம் சுரண்டிக்கொண்டு அரசாங்கம் செல்ல, புள்ளிவிவரங்களில் மட்டும் நாம் "பணக்காரர்களாகவே' இருப்போம்!

''மகாத்மா, நாங்கள் எங்கேயோ சென்றுவிட்டோமா அல்லது எங்களையெல்லாம் விட்டு நீங்கள் எங்கோ சென்றுவிட்டீர்களா, தெரியவில்லையே. எளிமைதான் இனிமை என்று கற்றுக் கொடுத்த வித்தையை தொலைத்துவிட்டல்லவா அல்லாடுகிறோம். இது போன்ற வளர்ச்சி சாத்தியமில்லை என்று உங்களுடைய ஆத்மார்த்த சீடர் ஜே.சி. குமரப்பா சொன்ன பொருளாதாரத்தைத்தான் நாங்கள் கல்லூரிப் பாடதிட்டத்திலேயே சேர்க்கவில்லையே? குமரப்பாவை, பொருளாதாரத்தைக் கற்கும் மாணவர்களுக்கும் தெரியாது, அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியாது. கைராட்டையை வைத்துக்கொண்டு பீரங்கிகளையே சத்தமிழக்கத் செய்த உங்கள் சாதுர்யம் இன்று இல்லாமல் போய்விட்டதே?

""இல்லாமை, கல்லாமை, தீண்டாமை ஆகியவை ஒழிய வேண்டும் என்று 18 நிர்மாணத்திட்டங்களில் அன்றிருந்த அரசியல்வாதிகளையெல்லாம் ஈடுபட வைத்தீர்கள். தீண்டாமை என்னும் மனிதநேயமற்ற செயலை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெறிய பாடுபட்டீர்கள். "நீங்கள்தான் இதற்குப் பொறுப்பாளி' என்று, யார் தீண்டாமைக்குக் காரணமோ அந்த மேல் தட்டு மக்களையே சேரிக்குச் சென்று பணியாற்றிடச் செய்த மகாபெரிய சமூகப்புரட்சியைப் புரிந்துகொள்ளும் மனநிலை ஏன் இன்று இல்லாமல் போய்விட்டது?

""நமது சகோதரர்களை அடக்கி ஒடுக்கிய குற்றத்துக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். அவர்களைத் தரையில் ஊர்ந்து செல்லும்படி செய்திருக்கிறோம். அவர்கள் மூக்குகளைத் தரையில் அழுத்தி வணங்கிக் கஷ்டப்படும்படி செய்திருக்கிறோம். கோபத்தால் கண்கள் சிவக்க அவர்களை ரெயில் வண்டிகளிலிருந்து வெளியே பிடித்துத் தள்ளியிருக்கிறோம். இதைக் காட்டிலும் அதிகமாகப் பிரிட்டிஷ் ஆட்சி நமக்கு என்ன கொடுமைகளை இழைத்துவிட்டது?  டயர் மீதும், ஓட்வியர் மீதும் நாம் என்ன குற்றம் சாட்டினோமோ, அதே குற்றத்தை மற்ற நாட்டினரும், நம் சொந்த நாட்டு மக்களும்கூட நம் மீது சாட்ட முடியாதா?

""நம்மிடையேயுள்ள இந்தக் களங்கத்தை நாம் ஒழித்துக் கட்ட வேண்டும். சக்தியற்றவர்களுக்கும், உதவியற்ற அனாதைகளுக்கும் நாம் பாதுகாப்பு அளித்துத் தீர வேண்டும்.  சுயராஜ்யம் கோருவோர்களில் ஒருவர்கூட, எந்த ஒரு தனி நபரின் உணர்ச்சிகளையும் புண்படுத்துவது சாத்தியம் என்ற நிலைமை இருக்கக் கூடாது. அதுவரையில் சுயராஜ்யத்தைப் பற்றிப் பேசுவது வீணாகும். இதுதான் சுயராஜ்யம் என்பதற்குப் பொருளாகும். இந்த நிபந்தனை நிறைவேற்றப்பட்டாலன்றி, நாம் பெறும் சுயராஜ்யம் அற்ப வாழ்வாக முடிந்துவிடும். நம்மைக் காட்டிலும் பலவீனர்களான சகோதரர்களுக்கு விரோதமாக நாம் இழைத்த பாவங்களிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொண்டாலன்றி, நாம் காட்டுமிராண்டிகளுக்கு ஒப்பாவோம்'' என்று உணரவைத்தீர்கள்.

""ஆனால் இன்னும் "தர்மபுரிகள்' கண்முன் வந்துபோகிறதே? ஆண்-பெண் உறவுகள் பற்றி மனித இயல்பு நிலையில் இருந்து சிந்திக்க மறுப்பதேன்? "தர்மபுரிக்குத் தீர்வு நீங்கள்தான்' என்று தலையங்கம் எழுதினார்கள். ஏனென்றால் ஜாதி ஒழிப்பிற்கு நீங்கள் கொடுத்த ஆலோசனைதான். தீண்டாமை ஒழிப்பிற்காகவும், ஜாதி வேறுபாட்டைக் களைவதற்கும் நீங்கள் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சிகள்தான் அவ்வாறு எழுதத் தூண்டின.

""உங்களுடைய தீண்டாமை ஒழிப்பு, சாதி பற்றிய கருத்துகள், கலந்துண்ணல், கலப்புமணம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் நிறையத் தகவல்களை ஊடகங்களில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். உங்களைப் பற்றி பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. "காந்தியடிகளே இவ்வாறு கூறியுள்ளார் பாருங்கள்' என்று ஆதாரத்தோடு குறிப்பிடுகின்றார்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது, "காந்தியடிகளே இவ்வாறு கூறியிருக்கிறாரே, அப்படியென்றால் இவர்கள் சொல்வது நியாயமாகத்தான் இருக்கும்' என்பதுபோன்ற எண்ணத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். "மகாத்மா என்று கூறுகிறீர்களே, பாருங்கள் அவர் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள். அவருடைய கருத்து இதுதான், ஆகவே அவர் ஜாதியவாதி, மதவாதி, மனுவாதி' என்று ஏதேதோ எழுதி உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள்.

""உங்களை உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்றால் உங்கள் எழுத்துகளை நேரடியாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் படிக்கும்போது எவ்வாறு உங்களுடைய எழுத்துகளை அணுகுவது என்பதற்கு நீங்களே ஒரு வழிகாட்டுதலையும் கொடுத்துள்ளீர்கள்.

""நான் எழுதும் விஷயங்களை விடாமல் வாசித்துவரும் எந்த வாசகருக்கும், அவற்றில் அக்கறையுள்ள மற்றவர்களுக்கும் ஒன்று கூற விரும்புகின்றேன். நான் கூறுவதில் முரண்பாடு தோன்றக்கூடாது என்பதுபற்றி நான் கவலைப்படவில்லை. சத்தியத்தை நாடிச் செல்லும் நான், பல கொள்கைகளை உதறித் தள்ளியிருக்கிறேன், பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். சத்தியம்தான் என் கடவுள். எனவே, நான் எழுதியவற்றில் உள்ள முரண்பாட்டை யாராவது கண்டுபிடித்தால், அவருக்கு என் மனநலத்தில் நம்பிக்கை இருக்குமாயின், ஒரே விஷயத்தைப்பற்றி நான் பிற்பாடு எழுதியதையே அவர் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்''. (ஹரிஜன் 29.4.33)

""இதைவிடத் தெளிவாக எப்படிக் கூறமுடியும்? இதற்குப் பின்னரும் தாங்கள் கூறியதில் பின் கூறியதை விட்டுவிட்டு, ஆரம்ப காலத்தில் கூறியவற்றை எடுத்து, அவர்கள் "நினைக்கும் காந்தியை' கட்டமைக்க நினைக்கிறார்களே ஒழிய, உங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதது ஏமாற்றமளிப்பதாகத்தானே உள்ளது? இப்போது கூடப் பலரும் சொல்ல யோசிப்பதை விளக்கமாகக் கூறிவிட்டீர்கள். சொன்னது மட்டுமின்றி அதற்கான சமூகச் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியிலும் நீங்கள் தீவிரமாக ஈடுபட்டுச் செயல்பட்டு வந்ததன் விளைவுகளை இன்றும் உணருகின்றோம். 

""ஒரு ஹரிஜனப் பெண், ஒரு ஜாதி ஹிந்துவை மணம் செய்து கொள்ளுவதைக் காட்டிலும், ஒரு ஜாதி ஹிந்துப்பெண் ஒரு ஹரிஜனைத் திருமணம் செய்து கொள்ளுவதே சிறந்ததென்பதை ஒப்புக் கொள்ளுவேன். என் இஷ்டப்படி நடக்குமாயின், என் செல்வாக்கிற்கு உட்பட்ட எல்லா ஜாதி ஹிந்துப் பெண்களையும் ஹரிஜன ஆண்களையே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துவேன். அது மிக மிகக் கஷ்டமான காரியம் என்பதை நான் அனுபவ வாயிலாக அறிகிறேன். பழைய விருப்பு வெறுப்புகளைக் களைவது கடினமாகும். அத்தகைய விருப்பு வெறுப்புகளைக் கண்டு நகைப்பதும் கூடாது. பொறுமையுடன் அவைகளை அகற்றி வெற்றி பெற வேண்டும்.

""ஒரு பெண், ஒரு ஹரிஜனை மணம் செய்து கொள்ளுவதுடன் தன் கடமை முடிந்துவிட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுவது தவறாகும். விவாகத்திற்குப் பிறகு "போக' வாழ்க்கையின் மயக்கத்திற்கு இலக்காகிவிடுவது இன்னும் அதிக மோசமாகும். எனவே, ஒவ்வொரு திருமணத்தின் இறுதியான சோதனை என்னவெனில், தம்பதிகளிடம் அது எவ்வளவு தூரம் தொண்டு உணர்ச்சியை அபிவிருத்தி செய்கிறது என்பதேயாகும். ஒவ்வொரு கலப்பு மணமும், அதனதன் தரத்துக்குத் தகுந்தவாறு, அத்தகைய திருமணங்களுக்குக் கற்பிக்கப்படும் களங்கத்தை அகற்றுவதாக இருக்க வேண்டும். பின்னர் இறுதியாக, "பங்கி' என்ற அழகான பெயரில் ஒரே ஜாதிதான் இருக்கும். அந்தப் பெயருக்கு, "சீர்திருத்தவாதி' அல்லது "எல்லா அழுக்கையும் அகற்றுபவர்' என்பதே பொருளாகும். மகிழ்ச்சியைக் கொடுக்கும் அத்தகைய ஒரு நன்னாள் விரைவில் உதயமாகும் என்று நாமெல்லோரும் பிரார்த்திப்போமாக''.

""புரட்சிகரமான இந்த யோசனையைப் புரிந்துகொள்ள ஏன் மறுக்கிறோம்? ஜாதியை பற்றிக்கொண்டு ஜாதியை ஒழிக்க எப்படி முடியும்? இப்படித்தான் இருப்போம் என்று கங்கணம் கட்டி வாழ்வதைப் பார்த்துத்தான் நீங்கள் எங்களையெல்லாம் விடுத்து வெகு தூரம் சென்று விட்டீர்களோ?

""அனைவரையும் நேசிக்க வேண்டும் என்று கருதியதால்தான் உங்களை நேசிக்க மறந்துவிட்டார்களோ? ஹிந்துக்கள் உங்களை "முஸ்லிம்களின் நண்பன்' என்கிறார்கள்.  முஸ்லிம்கள் உங்களை "ஹிந்து' என்கிறார்கள். மேலைநாட்டுக் கிறிஸ்துவர்களோ உங்களை "கிறிஸ்துவின் மறுபிறப்பாக'ப் பார்க்கிறார்கள். மதங்களைக் கடந்து மனித நேயத்தை வளர்த்தெடுக்க நீங்கள் செய்த பணியை உற்று நோக்கி எதிர்கால இந்தியாவை வடிவமைக்கத் தவறி விட்டோமோ?

""இந்திய ஒருமைப்பாட்டின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்ய பல முனைகளில் செயல்படுகிறார்கள். அவர்கள் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.  உங்களுடைய கருத்துகளைச் சிதைக்காமல், உங்களைப்பற்றிய மதிப்பீடுகளைத் தகர்க்காமல், இந்திய ஒருமைப்பாட்டை அசைக்கக் கூட முடியாது என்பதை தெரிந்துதான் உங்கள் மீதும்  உங்கள் கருத்தாக்கத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் நீங்கள் சந்திக்காத விமர்சனங்களும் எதிர்ப்புகளுமா இப்போது புதிதாக முளைத்துவிட்டன? ஆனால், அப்பொழுது எழுந்த விமர்சனங்களும் எதிர்ப்புகளும் உங்களுடைய உண்மையான, தூய்மையான பணிகளுக்கு மத்தியில் வலுவிழந்து வீழ்ந்தன.

""ஆனால், கருத்துகளை எதிர்க்க வலுவில்லாதவர்கள், உங்களுடைய உண்மையின் ஜொலிப்பை, தாங்கிக்கொள்ள முடியாமல் உங்களை வீழ்த்தத் தலைப்பட்டார்கள். உங்களை வீழ்த்தவில்லை, உண்மையையல்லவா வீழ்த்திவிட்டார்கள்?

""வீழ்ந்த உங்கள் உடலை எரிக்கும் நேரத்தில், நீங்கள் எங்களுக்குக் கொடுத்த தைரியத்தையும், உண்மையையும், போராடும் குணத்தையும் சேர்த்து எரித்து விட்டோமா?

""ஒளி மறைந்துவிட்டது என்று நான் சொன்னது தவறு.  இத்தனை காலமாக சுடர்விட்டு வந்த அந்த ஒளி சாதாரண ஒளி அல்ல. இத்தனைக் காலமும் சுடர்விட்டுப் பிரகாசித்த அந்த ஒளி தொடர்ந்து பல ஆண்டுகள் பிரகாசிக்கும், ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நம் தேசத்தில் அந்த ஒளியைக் காணலாம், இந்த உலகத்திலும் காணலாம்.  அந்த ஒளி பலருடைய மனதுக்கு ஆறுதல் தரும். அந்த ஒளி வாழும் உண்மைக்கு, அழியாப் பேருண்மைக்கு எடுத்துக்காட்டு.  நம்மைத் தவறுகளிலிருந்து மீட்டெடுத்து, சரியான பாதையை நமக்கு நினைவூட்டி இந்தப் பழமையான தேசத்தை உண்மையான சுதந்திர நாடாக்கும்''  என்று ஜவாஹர்லால் நேரு கூறியதுதான் இன்று நினைவுக்கு வருகிறது.

""இதய சுத்தியோடு அஞ்சலி செலுத்துகிறோம். இந்த நாளில் உங்கள் ஆசி எங்கள் மனத்தில் உள்ள அழுக்கை அகற்றி ஆன்மாவை சுத்தம் செய்யட்டும்''.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com