மாலியில் நடப்பது யுரேனியப் போர்!

உள்நாட்டுப் போர் "ஏற்படும்' அல்லது "ஏற்படுத்தப்படும்' நாடுகள் தொடர்பாக, மேற்கத்திய நாடுகள் எடுக்கும் நிலைப்பாடு முழுவதும் அவர்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
Updated on
2 min read

உள்நாட்டுப் போர் "ஏற்படும்' அல்லது "ஏற்படுத்தப்படும்' நாடுகள் தொடர்பாக, மேற்கத்திய நாடுகள் எடுக்கும் நிலைப்பாடு முழுவதும் அவர்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

மேற்காசிய நாடான சிரியாவில் அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் படைக்கு ஆதரவாக ஆயுதங்களுடன் களமிறங்கியுள்ள அதே நாடுகள்தான், மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் புரட்சியாளர்களுக்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் போரில் ஈடுபட்டுள்ளன.

மாலியில், "ஆபரேஷன் செர்வல்' என்ற பெயரில் போர் நடத்தி வருகிறது பிரான்ஸ். மாலி முன்பு பிரான்ஸ் நாட்டின் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்டிருந்தது என்பதால், அங்கு பிரச்னை ஏற்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்க அந்நாட்டுக்குக் கூடுதல் உரிமை உண்டு என்று நியாயம் கற்பித்துக் கொண்டுள்ளனர்.

பிரான்ஸின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், ஸ்பெயின், ஸ்வீடன் என ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. மாலியின் வட பகுதியில் வலுவாக உள்ள "அசாவத்' தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட போராளிகள் குழுக்களுக்கு எதிரானது இப்போதைய போர். "அசாவத்' பகுதியைத் தனிநாடாக அறிவித்து, இடைக்கால அரசு அமைக்கும் அளவுக்கு மக்களிடையே செல்வாக்கு பெற்றது அந்த அமைப்பு.

மக்கள் தொகையில் 90 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ள மாலியில், "அல்-காய்தா' உள்ளிட்ட பயங்கரவாதிகளுடன் இணைந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக "அசாவத்' அமைப்பு போரில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய அரசு குற்றம் சாட்டியது. இந்தப் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்காகவே காத்திருந்த மேற்கத்திய நாடுகள் உடனடியாகச் செயலில் இறங்கின. "தாங்கள் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல, மக்கள் ஆதரவு பெற்ற அமைப்பு' என்று "அசாவத்' தேசிய விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது. எனினும் அந்த அமைப்புக்கு லிபியாவின் மம்மர் கடாபியுடன் இருந்த தொடர்பு, "அசாவத்' பகுதியில் அமலில் உள்ள தீவிரமான இஸ்லாமியச் சட்டங்கள் போன்றவை அவர்களுக்கு எதிராக உள்ளன.

மாலியின் தேசிய அரசுக்கு உடனடியாக ஆதரவுக்கரம் நீட்டிய பிரான்ஸ், படைகளுடன் மாலியில் வந்து இறங்கி போர் நடத்தி வருகிறது. பிரான்ஸின் நவீனகால காலனி ஆக்கிரமிப்பு என்று வர்ணிக்கப்படும் இந்தப் போரின் முக்கிய நோக்கம் பயங்கரவாத ஒழிப்பு அல்ல, மாலியின் வடபகுதியில் பெருமளவில் புதைந்து கிடக்கும் "யுரேனியம்' தான்.

தொடங்கிய உடனேயே முடிந்துவிடும் பெருநகரத்து வாடகை வீடு போன்ற சிறிய அளவிலான மாலியின் வடபகுதியில் இன்னமும் அகழப்படாத எண்ணெய் வளமும், அதைவிட அதிகமாகப் புதைந்து கிடக்கும் யுரேனியத்தையும் அபகரிக்கவே பிரான்ஸ் புகுந்துள்ளதே தவிர அந்நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பயங்கரவாதத்தை வேரறுப்பதற்காகவும் அல்ல என்பதைக் காலம் உணர்த்தும்.

பிரான்ஸ் நாட்டின் மின் தேவையில் பெருமளவில் அணுமின் சக்தி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. இதற்காக மாலியில் கிடைக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம், எண்ணெய் வளத்தைப் பங்குபிரித்துக் கொள்ளலாம் என்பதே படை நடத்துவதின் உண்மையான நோக்கம்.

ராணுவம் புகுமிடமெல்லாம் பெரும் உயிரிழப்புகள், மனித உரிமை மீறல்களும் ஏற்படும் என்பதற்கு மாலியும் விதிவிலக்கு அல்ல. ராணுவ நடவடிக்கை தொடங்கிய கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சில லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

துரத்தியடிக்கப்பட்ட புரட்சியாளர்கள் "கொரில்லா' யுத்தத்தைக் கையில் எடுத்துள்ளனர். இனி அவர்களை அடக்குவதற்காக தங்கள் ராணுவத்தை அங்கு நிலை நிறுத்துவது குறித்து பிரான்ஸ் யோசித்து வருகிறது. இதன் மூலம் மேற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியின்மைக்கு அச்சாரமிடப்பட்டுள்ளது.

எங்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டுவரும் போரை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது. ஆனால், மாலி மீது மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த பிரான்ஸýக்கு வலுவான காரணங்கள் அமையவில்லை.

உலக வரைபடத்தை விரித்து வைத்து, பயங்கரவாதத்துக்கு இலக்காகாத, உள்நாட்டுப் போர் இல்லாத, பிற நாடுகளின் தாக்குதல்களுக்கு இலக்காகாத நாடுகள் உள்ளனவா என்று தேடினால் அவை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட இல்லை.

ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்த முற்படும்போதுதான் உறவுகள் கசந்துவிடுகின்றன, பகைமையுணர்வு ஏற்படுகிறது என்பது தனிநபர்களுக்கு மட்டுமானதல்ல, ஒவ்வொரு இனக் குழுவுக்கும், மதத்துக்கும், நாடுகளுக்கும் பொருந்தும். அனைத்துத் தரப்பினருமே ஆதிக்க மனோபாவத்தையும், பகையுணர்வையும் துறந்து, ஆயுதங்களைக் கைவிட்டால்தான் அமைதியின்மை அதிகரித்து வரும் நாடுகளின் எண்ணிக்கை ஓரளவுக்காவது குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com