திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா...

சமீப காலமாக கணினி, செல்போன், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களின் விலை 

Updated On :3 ஜனவரி 2024, 3:22 pm IST

சமீப காலமாக கணினி, செல்போன், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களின் விலை  ஸ்திரமடைந்துவரும் நிலையில், உணவுப் பொருள்களின் விலை அதற்கு நேர்மாறாக உள்ளது. கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளில் அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றின் விலை 2 மடங்குக்கும் மேல் உயர்ந்துவிட்டது.

 ஆனால், இந்த விலைவாசி உயர்வால், உணவு தானியங்கள், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைகிறார்களா? பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாய விலை எப்போதும் கிடைப்பதில்லை. அவரே தன்னுடைய தேவைக்காக அதே விளைபொருளைச் சந்தையில் வாங்கச் சென்றால் அதிக விலைதான் கொடுக்க வேண்டிய அவலம் நிலவுகிறது.

  சில மாதங்களுக்கு முன்னால் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்த விவசாயிக்கு 1 டன்னுக்கு ரூ.3,000 - அதாவது ஒரு கிலோவுக்கு ரூ.3 தான் - கிடைத்தது. ஆனால் சென்னையிலோ ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு அப்போது விற்ற விலை கிலோவுக்கு ரூ.20!

 உற்பத்திசெய்த விவசாயிக்குக் கிடைக்கும் விலையைவிட நுகர்வோர் சுமார் 7 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விவசாய விளைபொருள்களின் விலையும் இப்படித்தான்.

 வட்டிக்குக் கடன் வாங்கி, பல மாதங்களாகக் கஷ்டப்பட்டு அறுவடை செய்த விவசாயிக்கு நியாயவிலை கிடைக்காததால் பல நேரங்களில் நஷ்டம்தான் ஏற்படுகிறது. புயல், பெருமழை, வறட்சி ஆகிய இயற்கைச் சீற்றங்கள் வந்தால் முதலுக்கே மோசம் வந்துவிடுகிறது.

 அதே உதாரணத்துக்குச் செல்வோம்; மரவள்ளி பயிரிட்டவருக்கு என்ன லாபம் கிடைத்தது தெரியுமா? லாபமே இல்லை - நஷ்டம்தான்.

  3  ஏக்கர் பயிரிட்டதில் செலவான தொகை ரூ.50 ஆயிரம். அறுவடையில் கிடைத்தது ரூ.46,000. ஆக, நஷ்டம் ரூ.4,000. அவர் செய்த முதலீடு, உழைப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டால் மொத்த இழப்பு மேலும் கூடிவிடும்.

 ஆனால், விவசாயிகளிடமிருந்து விளைபொருளை வாங்கிய அடுத்த நிமிடத்திலேயே இடைத்தரகர்கள் லாபம் பார்த்து விடுகின்றனர். அவர்கள் எந்த வகையிலும் நஷ்டமடைவதில்லை.

 அடுத்தபடியாக, இப்போது அரிசி விலையும் தங்கத்தைப் போல தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் பயனடைவது யார்? நெல் உற்பத்தி செய்யும் விவசாயிக்குப் பயன் இல்லை என்பது மட்டும் நிச்சயம். நல்ல ரக சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் போய்விடும் என்ற அச்சம் இப்போது நிலவுகிறது.

 உற்பத்தி செய்த விளைபொருளைச் சேமித்து வைப்பது மற்றும் போக்குவரத்து செலவைத் தவிர வேறு ஒன்றும் பெரிய அளவில் செலவு இல்லை. அப்படி இருக்கும் நிலையில் ஒரு நாளைக்கு ஒரு விலையை வியாபாரிகள் நிர்ணயிப்பது எப்படி? இதை எல்லாம் எப்படி, யார் ஒழுங்குபடுத்துவது?

 முன்பெல்லாம், ஒரு பொருள் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரைச் சென்றடைவதற்குள் 4 அல்லது 5 நிலைகளில் "கை' மாறும். இப்போது ஊக வியாபாரிகள் எதிர்காலச் சந்தைக்கும் சேர்த்து விலையை மாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். இதை ஒழுங்குபடுத்தாதவரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது.

  இதனால்தான் சமீப காலமாக, கிராமத்தவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் குறைந்து வருகிறது. விவசாயிகள் வேறு வேலைக்குச் சென்று விடுகிறார்கள். 

  எதிரும் புதிருமாக இருந்த பாஜக, இடதுசாரிகள் கூட கருத்து வேறுபாடுகளை மறந்து, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக கைகோத்துள்ளதைப் பார்க்கும்போது ஆறுதலாக உள்ளது. சிறு வர்த்தகர்களுக்காகப் போராடும் அரசியல் கட்சிகள், விவசாயத்துறை சார்ந்த 70 கோடி மக்களுக்காகவும் இதே போலத் தீவிரமாகப் போராட முன்வருவார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.