நெல்லைச்சீமை தந்த வழிகாட்டி

நெல்லைச் சீமை தந்த நல்ல வழிகாட்டி, கண்ணியமான அரசியல்வாதி, நாட்டுக்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர், எல்லா சமுதாய மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமுதாயத் தலைவர் என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் - ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து போற்றிய தமிழக சட்டசபை "சபாநாயகர்' செல்லப்பாண்டியன்.

நெல்லைச் சீமை தந்த நல்ல வழிகாட்டி, கண்ணியமான அரசியல்வாதி, நாட்டுக்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர், எல்லா சமுதாய மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமுதாயத் தலைவர் என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் - ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து போற்றிய தமிழக சட்டசபை "சபாநாயகர்' செல்லப்பாண்டியன்.

1913-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி மேலச்செவல் கிராமத்தில் பிறந்தார். 80 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். நெல்லையில் தன்னுடைய 25-ஆவது வயதில் வழக்குரைஞராகத் தொழில் தொடங்கினார். சபாநாயகராகப் பதவி வகித்த 5 ஆண்டுகளைத் தவிர சுமார் 50 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணிபுரிந்தார். குறுக்கு விசாரணை செய்வதில் திறமைசாலி என்று பெயர்பெற்றார்.

அந்தக் காலத்தில் வழக்குரைஞர் தொழிலில் அவருடைய சமகாலத்தவர்களான திருச்சி கயிலை அனந்தர், மதுரை பி.டி. ராசன், தர்மராஜ் சந்தோஷம், நெல்லை பாலாஜி, என்.டி. வானமாமலை, நெல்லையப்பப் பிள்ளை ஆகியோர் இணைந்து நடத்திய வழக்குகளில் செல்லப்பாண்டியன்தான் முதலில் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று வழிவிட்டு நின்றார்கள்.

அவரிடம் இளம் வழக்குரைஞராகப் பயிற்சிபெற்ற ரத்தினவேல் பாண்டியன் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். பிரதாப் சிங், பத்மினி ஜேசுதுரை ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பரிணமித்தார்கள். ஆவுடையப்பன் (தி.மு.க.) சட்டப் பேரவைத் தலைவராக வளர்ந்தார்.

அவரால் அடையாளம் காட்டப்பட்ட அருணாசலம், தனுஷ்கோடி ஆதித்தன் இருவரும் மத்திய அமைச்சர்களானார்கள். பீட்டர் அல்போன்ஸ், அழகிய நம்பி ஆகியோர் பொதுவாழ்வில் பரிணமிக்கின்றனர்.

தன்னிடம் வரும் கட்சிக்காரர் ஏழையென்றால் பணம் வாங்காமல் இலவசமாகவே வாதாடுவார் செல்லப்பாண்டியன். விடுதலைப் போராட்ட வீரர்கள் காசிராஜன், ராஜகோபாலன் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளாக தொடுக்கப்பட்ட வழக்கில் மூத்த வழக்குரைஞர்கள் அவர்களுக்காக வாதாட முன்வராதபோது செல்லப்பாண்டியன் அவர்களுக்காக ஆஜரானார்.

குரும்பூர் ரயில் நிலையமும் தபால் நிலையமும் கொளுத்தப்பட்ட வழக்கிலும் தேசியத் தொண்டர்களுக்காக வாதாடினார்.

தென் தமிழ்நாட்டில் பிற்பட்ட சமூகத்தின் இருபிரிவினர் மறவர், பிரன்மலைக் கள்ளர்; இவர்கள் பிரிட்டிஷ் அரசால் குற்றப்பரம்பரையினராக அறிவிக்கப்பட்டதால் காவல்துறையினரின் கொடுமைகளுக்கு ஆளானார்கள். அக் கொடிய குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரோடு இணைந்து போராடி வெற்றியும் பெற்றார்.

செல்லப்பாண்டியன் பிறந்த மேலச்செவல் கிராமத்தில் உயர் சாதியினர் எனக் கருதப்படுவோர் வாழும் தெருவில், பிற்பட்ட வகுப்பினர் (நாடார்கள்) கடை நடத்தக்கூடாது என்ற தடை இருந்தது. அந்தத் தடையை உடைத்து அவர்கள் கடையை நடத்த உதவிகளும் செய்து உரிய பாதுகாப்பும் அளித்தார் செல்லப்பாண்டியன்.

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடிக்கு அருகில் உள்ள அய்யாபுரம் என்ற ஊரில் ஹரிஜனங்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு ஒருதரப்பில் 6 பேர் உயிரிழந்தனர், மறு தரப்பில் 20 வீடுகள் எரிந்து சாம்பலாயின. எவரும் அங்குசெல்ல முடியவில்லை. காவல்துறையினர் கூட கால்பதிக்கத் தயங்கினர்.

ஹரிஜனங்களின் தலைவர் ஆறுமுகம் எம்.பி.யை உடன் அழைத்துக்கொண்டு செல்லப்பாண்டியன் அந்த ஊருக்குள் நுழைந்து, தவறு செய்தவர்களைத் தாட்சண்யம் பாராமால் சாடினார். பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் சொன்னதுடன், பாதுகாப்பாக நான் இருக்கிறேன் என்று கூறி அங்கேயே தங்கினார். கடவுளையே நேரில் கண்டதைப்போல அக் கிராமத்து ஏழை மக்கள் நிம்மதி அடைந்து வெகு விரைவில் அமைதி திரும்ப அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

இதேபோல முதுகுளத்தூரில் மூண்ட சாதித் தீ, நெல்லைச் சீமையை நெருங்காமல் தடுத்த பெருமை செல்லப்பாண்டியனுக்கு உண்டு. அப்போதைய முதல்வர் காமராஜருடன் பேசி நெல்லை, ராமநாதபுரம் எல்லையை மூடி அடியாட்களோ, ஆயுதங்களோ ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல முடியாமல் தடுக்கச்செய்தார். அத்துடன் மக்களைச் சந்தித்து, ""நெல்லை மக்களாவது நிம்மதியாக வாழ வேண்டும், அதற்கு உதவுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார். நெல்லை மண்ணில் அன்று நிலவிய அமைதிக்கு அவரே காரணமாக இருந்தார். காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். காமராஜர் இறக்கும்வரை அவருடனேயே இருந்தார். பிறகு ஜி.கே. மூப்பனாருக்குத் துணையாக, அவருடைய அரசியல் ஆலோசகராக விளங்கினார்.

1952 பொதுத் தேர்தலில் வெற்றி, 1957-இல் தோல்வி. 1962 பொதுத் தேர்தலில் வெற்றி, 1967-இல் தோல்வி அவருக்குக் கிட்டின. வெற்றிக் களிப்பில் மிதந்ததும் இல்லை, தோல்வியில் துவண்டதும் இல்லை. தோல்வி அடைந்த மறுநாளே "கேஸ்' கட்டை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்துக்குச் சென்றுவிடுவார்.

""சபாநாயகர் பதவியை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று காமராஜர் கூறியபோது, ""அதனை வேண்டுமென்று கேட்பவர்களுக்குக் கொடுங்களேன்'' என்று பதில் அளித்தாராம்.

1967-இல் தோற்று சபாநாயகர் பதவியைத் துறந்தபோது, ""தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று காமராஜர் சொல்ல, ""ஐயா, வக்கீல் வேலைபார்த்தால்தான் நான் வாழ்க்கை நடத்த முடியும், நான் ஊருக்கே போகிறேன்; அங்கே தொழிலையும் பார்ப்பேன், கட்சியையும் வளர்ப்பேன்'' என்று பதில் அளித்தார் செல்லப்பாண்டியன்.

1967 முதல் அவர் மறைந்த 1993 வரை 6 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸýக்காகக் கடுமையாக உழைத்தார். இளைஞர்கள் பலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார்.

1971-இல் அவருடைய சொந்தத் தொகுதியான சேரன்மாதேவியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டார். எதிர்த்து தி.மு.க. வேட்பாளராகக் களம் கண்டவரோ அவருடைய சொந்த மைத்துனர். மைத்துனரிடம், ""தேர்தல் முடிவு வரும்வரை வீட்டுக்குள் அடி எடுத்துவைக்கக்கூடாது'' என்று ஆணை பிறப்பித்தார்.

கடுமையாக வேலைசெய்து காங்கிரûஸ வெற்றிபெற வைத்தார், மைத்துனர் தோற்றார். உறவைவி ட கட்சியை அதிகம் நேசித்தவர் செல்லப்பாண்டியன்.

சட்டப்பேரவைத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் (1962-67) கனிவும் கண்டிப்பும் நிறைந்தவராகத் திகழ்ந்தார். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று பேதம் பார்க்காமல் அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்தார். அவர் அளித்த தீர்ப்புகள் சட்ட நுணுக்கங்கள் நிறைந்ததாக, அவையின் சம்பிரதாயங்களைப் பேணிக் காப்பதாக அமைந்தன.

ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சஞ்சீவையா சென்னை வந்தபோது காங்கிரஸ் தலைவர்கள் விருந்தளித்தார்கள். முதல்வரும் அமைச்சர்களும் கலந்துகொண்ட அந்த விழாவுக்கு சபாநாயகரான செல்லப்பாண்டியனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ""காங்கிரஸ்காரர்கள் கொடுக்கும் விருந்தில் சபாநாயகர் கலந்துகொள்ளக் கூடாது'' என்று கூறி கலந்துகொள்ள மறுத்துவிட்டார் அவர். அந்த அளவுக்கு நடுநிலையாளராகத் தமது பணிக்குக் களங்கம் ஏற்படாமல் பாதுகாத்தார்.

சட்டப் பேரவையின் இறுதிக்கூட்டம் முடிந்த பிறகு பிரிவுபசார நிகழ்ச்சி நடந்தது. ""நீங்கள் நடுநிலை தவறாத நல்ல சபாநாயகர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடாமல் சுயேச்சையாகத் தேர்தலில் நின்றால் நாங்கள் உங்களுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த மாட்டோம், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உங்களையே சபாநாயகராகத் தேர்ந்தெடுப்போம்'' என்று தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள் என்றால் எந்த அளவுக்கு நடுநிலையாளராக செல்லப்பாண்டியன் சபையை நடத்தி இருப்பார் என்று பார்த்துக் கொள்ளலாம்.

1967 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக அண்ணாதுரை பதவியேற்றார். நிகழ்ச்சிக்குச் செல்ல முடியாதபடி, காங்கிரஸ் தலைவர் காமராஜுக்கு கார் விபத்தில் காயம் ஏற்பட்டுவிட்டது. பல காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் தோல்வி காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லவில்லை. செல்லப்பாண்டியன் பங்கேற்றார். ""நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், முதலமைச்சர் பொறுப்பில் வெற்றிபெற வாழ்த்துகள்'' என்றார் செல்லப்பாண்டியன்.

""வந்ததற்கு மகிழ்ச்சி, வாழ்த்துக்கு நன்றி'' என்று பதில் அளித்தார் அண்ணாதுரை.

தனது மகன்கள் ஜெயராம், பாலசுப்ரமணியன் இருவரும் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு கல்லூரியில் சேர விண்ணப்பித்தபோது, ""தகுதி இருந்தால் இடம் கிடைக்கட்டும். நான் பரிந்துரைக்க மாட்டேன்'' என்று நெறி காத்தவர் செல்லப்பாண்டியன்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வீட்டு மனைகள் ஒதுக்கீடுக்கு விளம்பரம் செய்தது. அவருடைய மூத்த மருமகன் விண்ணப்பிக்க முயன்றபோது, ""உங்களுக்கு ஒதுக்கீடு தானாகக் கிடைத்தாலும் அது என்னுடைய தலையீட்டால்தான் கிடைத்தது என்று நினைப்பார்கள், எனவே நான் சபாநாயகர் பதவி வகிக்கும்வரை நீங்கள் மனுச்செய்யக்கூடாது'' என்று மருமகனுக்கே அனுமதி மறுத்தார் செல்லப்பாண்டியன்.

பெரும்புலவர் இ.மு. சுப்பிரமணி பிள்ளையின் பெரு முயற்சியால் நெல்லையில் "சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்' உருவானது. அவர் மறைந்த பிறகு அச்சங்கத்தின் தலைவராக 1978 முதல் 1993 வரை செயலாற்றினார்.

பொது வாழ்க்கையில் ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் செல்லப்பாண்டியன். சுதந்திரப் போராட்டத் தியாகியான அவருக்கு நூற்றாண்டு விழா தொடங்கும் இந்த நாளில், வருங்காலச் சந்ததியினருக்கு இவரைப் போன்ற பெரியவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நாம் வழிகோல வேண்டும்.

கட்டுரையாளர்: செல்லப்பாண்டியனின் மூத்த மருமகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com