உறுப்பு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கலகலத்துப் போய் உள்ளது ஐரோப்பிய யூனியன். கிரேக்கம், ஸ்பெயின், அயர்லாந்து, போர்ச்சுகல், சைப்ரஸ் என ஒவ்வொரு நாடாக நிதி நெருக்கடியில் வீழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் அரசு ஊழியர்களுக்குக் கூட சம்பளம் கொடுக்க முடியாமல் சில நாடுகள் தத்தளிக்கின்றன. அந்நாடுகளில் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராடும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நெருக்கடிகளின் தொடர் விளைவாக 27 நாடுகளின் கூட்டணியான ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக இருக்கிறது என்பதே இப்போது ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பரபரப்பு.
ஐரோப்பிய யூனியனில் இருப்பதால் பிரிட்டனுக்கு பெரிய லாபம் ஏதுமில்லை. எனவே அதில் இருந்து விலக வேண்டுமென்று பிரிட்டன் சுதந்திரக் கட்சி (யுனைட்டட் கிங்டம் இன்டிபென்டன்ட் பார்ட்டி) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதே கோஷத்தை முன்னிறுத்தி, தேர்தல்களில் களம் காணும் அக்கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிடத்தக்க வகையில் ஆதரவு பெருகி வருகிறது. 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கருதப்படுகிறது. இது ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென்ற அக்கட்சியின் கோஷத்தை பிரிட்டன் முழுவதும் ஓங்கி ஒலிக்கச் செய்கிறது.
இந்நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இப்போதே ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகி மக்கள் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பிரதமர் டேவிட் கேமரூனுக்கு இதில் உடன்பாடு இல்லை. ஐரோப்பிய பகுதியில் சக்தி வாய்ந்த நாடாகத் திகழ ஐரோப்பிய யூனியனில் அதிகாரத்தை தக்கவைக்க வேண்டியது அவசியம் என்பது கேமரூனின் கருத்து.
பிரிட்டன் வெளியேறிவிட்டால் பொருளாதாரம், வர்த்தகம், அரசியல் நடவடிக்கைகள் என அனைத்திலும் தாங்கள் கூறியபடியெல்லாம் ஐரோப்பிய யூனியன் தங்களுடன் ஒத்துப்போகாது என்பது அமெரிக்காவின் முக்கியக் கவலை.
அதே நேரத்தில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஜெர்மனி. ஐரோப்பிய யூனியனில் இப்போது பொருளாதார ரீதியாக வலுவான சக்தியாக உள்ளது ஜெர்மனி மட்டுமே.
இதனால் ஐரோப்பிய யூனியனில் முடிவுகளை எடுக்கும் அதிகார சக்தியாக மாற அந்நாடு ஆசை கொண்டுள்ளதில் தவறு ஏதுமில்லை. அதே நேரத்தில் இதனை வெளிப்படையாக ஜெர்மனி காட்டிக் கொள்ளவில்லை. ஐரோப்பிய யூனியில் இருந்து பிரிட்டன் வெளியேறக் கூடாது என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கருத்துக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் உள்ள பிற நாடுகளை மிரட்டுவதற்காகவே அதில் இருந்து வெளியேறி விடுவோம் என்று பிரிட்டன் மிரட்டுகிறது என்று ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏஞ்சலா மெர்கலின் தீவிர ஆதரவாளர்கள்.
ஜெர்மனிக்கு பதிலடி தரும் விதமாக, ஐரோப்பிய யூனியன் அமைப்பில் சந்தர்ப்பவாதம் அதிகரித்துவிட்டது என்று பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் விமர்சித்துள்ளார்.
அனைத்து நிலைகளிலும் பலம் வாய்ந்த ஒருவர்தான் ஒரு குழுவில் முதன்மை இடத்தைப் பெற வேண்டும் என்பதுதான் பொதுவான விதி. இதன் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனிக்கு முதலிடம் கிடைக்க வேண்டும் என்பது அந்நாட்டின் எதிர்பார்ப்பு. இதற்குத் தடையாக இருக்கும் பிரிட்டனை எதிர்க்கத் தொடங்கியுள்ளது ஜெர்மனி.
பிரிட்டன் வெளியேறக் கூடாது என்று ஐரோப்பிய யூனியனில் உள்ள பிற நாடுகள் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் பிரிட்டனுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. விருப்பம் இருந்தால் இருக்கலாம், இல்லாவிட்டால் வெளியேறலாம் என்று பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய நாடுகள் கருத்துத் தெரிவித்து பிரிட்டனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
"யூரோ சோன்' எனப்படும் ஐரோப்பிய நாடுகளின் மற்றொரு அமைப்பில் பிரிட்டன் இணையாமல் விலகியிருப்பதே அந்நாட்டுக்கு ஆதரவு கிடைக்காததற்கு மற்றொரு காரணம்.
தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்தே மற்ற நாடுகளில் மீது அதிகாரம் செலுத்தியும், காலனி நாடுகளை அடக்கியே ஆட்சி புரிந்தும் பழக்கப்பட்டு வந்த பிரிட்டனுக்கு இது போதாத காலம் என்றே கூற வேண்டும். இன்று பக்கிங்ஹாம் அரண்மனையின் செல்வச் செழிப்பின் பின்னணி என்பது அந்நாட்டால் அடிமைப்படுத்தப்பட்ட இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுரண்டப்பட்டவைதான் என்பதை மறுக்க முடியாது.
சூரியன் மறையாத பேரரசு என்ற பெருமையைப்பெற்ற பிரிட்டன், இப்போது தனது நட்பு நாடுகளாலேயே தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.