""காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது'' எனக் கூறுவதுண்டு. காலத்தின் அருமை கருதி நாம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளோமா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கும். காலத்தைத் தங்களின் ஆளுமைக்குக் கொண்டுவந்து, திட்டமிட்டுச் செயல்படுவர்கள் மிகச் சிலரே.
ஒவ்வோர் ஆண்டும் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள், தமது வாழ்க்கையில் மேலும் ஒரு வருடம் போய்விட்டது என்ற உண்மையை உணருவதில்லை. பணத்தைக் கொடுத்து இந்த உலகில் பலவற்றை விலைக்கு வாங்கலாம். ஆனால், கடந்துபோன காலத்தை அதாவது நேரத்தை விலைக்கு வாங்க முடியுமா?
உலகில் உள்ள அனைவருக்கும் செல்வம், ஆரோக்கியம், அதிகாரம் ஆகியவற்றில் வேறுபாடு உண்டு. ஆனால் நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் முதல், சாதாரண மனிதன்வரை அனைவருக்கும் பொதுவானது நேரம் மட்டுமே. தேசப்பிதா காந்திஜி கால நேரம் பார்க்காமல் நாட்டின் சுதந்திரத்துக்காக உழைத்தார். எளிமை விரும்பியான அவரே, அந்தக் காலத்தில் ஆடம்பரமாகக் கருதப்பட்ட கடிகாரத்தை பயன்படுத்தி வந்தார். அவர் கடிகாரத்தை இடுப்பில் கட்டியிருந்தார். ஏனெனில், நேரத்தை திட்டுமிட்டுச் செலவிட வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.
சிலர், ""எனக்குக் குடும்பத்தினருடன் வெளியில் செல்ல நேரமில்லை; காலையில் எழுந்தால் தினசரி பத்திரிகையைக் கூடப் படிக்க நேரமில்லை'' என பெருமையாகக் கூறுவர். குடும்பத்தினர் மீது அக்கறை இல்லை என்பதையும் பத்திரிகைப் படிப்பதில் உண்மையான ஆர்வம் இல்லை என்பதையும்தான் இப்படிக் கூறுகின்றனர்.
இப்போது பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்த, மிக்ஸி, கிரைண்டர், குக்கர் போன்ற சாதனங்கள் வந்துவிட்டன. அலுவலகத்திலும் கணினி வந்துவிட்டது. தகவல் தொடர்புக்கு இ-மெயில், கூரியர், இணையதளம் ஆகியவை உள்ளன. இதுபோல பல பொருள்கள் நமது நேரத்தை மிச்சப்படுத்தி மதிப்பு பெறும்போது, நாம் நமது நேரத்தைச் சரியாக நிர்வாகம் செய்தால் வாழ்வில் வெற்றிகரமான மனிதராகத் திகழலாம்.
ஊரிலும், கோவில் திண்ணைகளிலும் அமர்ந்து அரட்டை அடிப்பவர்களை பார்த்திருப்பீர்கள். அவர்களில் பெரும்பாலோனோர், ""எனக்கு வீட்டில் நேரம் போகவில்லை. எனவே, இங்கு வந்தேன்'' எனக் கூறுவார்கள். நேரம் என்பது நாம் எங்கு இருந்தாலும் போய்க்கொண்டேதான் இருக்கும். வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை எனக் கூறக் கூடாது என்பதற்காக "நேரம் போகவில்லை, எனவே இங்கு வந்தேன்' எனக் கூறுவார்கள்.
பொதுவாக, உணவில் 20 சதவீதத்தையும், பணத்தில் 30 சதவீதத்தையும், திறமையில் 40 சதவீதத்தையும், நேரத்தில் 60 சதவீதத்தையும் வீணடிக்கிறோம் என ஓர் ஆய்வு கூறுகிறது.
சராசரியாக ஒரு மனிதன் 6 மணி முதல் 7 மணி நேரம்வரை தூங்கினால் போதுமானது. ஆனால், பத்து மணி நேரம் வரை தூங்குபவர்கள் உள்ளனர்.
குறைந்த நினைவாற்றலால், நாம் வைத்த பொருள்களை நாமே தேடுகிறோம். இதனால் நமது நேரம் வீணாகிறது. எனவே, எந்த ஒரு பொருளையும், ஒரே இடத்தில் எடுத்து வைக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
நமது வாழ்நாளில் 29 ஆண்டுகள் தூங்குவதற்கும், 10 ஆண்டுகள் வருவாய் ஈட்டுவதற்கும், 9 ஆண்டுகள் பொழுதினை வீணடித்தலிலும், 2 ஆண்டுகள் பிறருக்காக காத்திருப்பதிலும் செலவிடுகிறோம் என ஆய்வு கூறுகிறது. நொடிப்பொழுது முதல், நிமிடம், நாள், மாதம், வருடம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும்.
நொடிப்பொழுதில் வாய்ப்பை இழ்ந்தவர்களும், உயிர் பிழைத்தவர்களும், வெற்றி பெற்றவர்களும் உலகில் உண்டு. ஒட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களைக் கேளுங்கள், ஒரு வினாடி முந்தி வந்ததால் வெற்றி பெற்றேன் என்பார்கள். நேரத்தை நீங்கள் நிர்வகியுங்கள். நேர நிர்வாகத்துக்கு அன்றாடம் என்னென்ன செய்தீர்கள் என்பதையும் அதற்கு எவ்வளவு நேரம் செலவிட்டீர்கள் என்பதையும் தொடக்க கட்டமாக எழுதுங்கள். (அதற்கே நிறையநேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள்!) தேவையில்லாமல் நேரத்தை வீணடித்திருப்பதை உணர்வீர்கள். இந்தப் பயிற்சி மாணவர்களுக்கு மிகமிக அவசியம்.
நேரம் உங்களை நிர்வகிக்க விடாதீர்கள். ஓய்வுக்கு சற்றுநேரம் ஒதுக்கி சோர்வை விரட்டுங்கள். குடும்பத்திற்கு, சமூகத்திற்கு, நண்பர்களுக்கு, தொழிலுக்கு என நேரத்தைப் பிரித்துச் செயல்படுங்கள். இன்றைய பொழுதின் மதிப்பை உணருங்கள். வேலையைத் தள்ளிப் போடாதீர்கள். உடனடி வேலை நெருக்கடியைத் தவிர்க்கும். "நாளை நமதே' என்பதை மாற்றி, "இன்றும் நமதே' என்னும் மனநிலையை உருவாக்கி வெற்றி பெறுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.