பண்பாட்டுச் சீர்குலைவில் பயிராகும் வன்கொடுமைகள்

2012   டிசம்பர் திங்கள் பொதுவாக உலகை, குறிப்பாக நமது தாய்த்திருநாட்டை, உலுக்கிய, குலுக்கிய, அதிர வைத்த

2012   டிசம்பர் திங்கள் பொதுவாக உலகை, குறிப்பாக நமது தாய்த்திருநாட்டை, உலுக்கிய, குலுக்கிய, அதிர வைத்த மாதம். அதன் அதிர்ச்சியிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை. உலகம் வன்முறைக்கு ஆட்பட்டு, வாழ்வியல் விழுமங்களை இழந்து வழிதவறிப் போவதை எண்ணிக் கலங்கினோம். இந்திய நிகழ்வுகள் நம்மைத் தலைகுனியச் செய்கின்றன.

 டிசம்பர் 14-இல் அமெரிக்காவில் கனெக்டிகட் மாநிலத்தில் சாண்டி ஹுக் பள்ளியில், ஆதம் லான்சா என்ற இளைஞன் நுழைந்து ஆறு, ஏழு வயதிலான இருபது சிறுவர்களையும் ஆசிரியர்கள் உள்பட ஆறு பெரியவர்களையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். அவனது தாயையும் கொன்றவன், தன்னையும் மாய்த்துக் கொண்டான். அவனது தாய் நான்சி லான்சாவுக்கு வகை வகையான துப்பாக்கிகளைச் சேர்த்து வைப்பது பொழுதுபோக்கு. மனப்பிறழ்வுக்கு ஆளான மகன், அன்னையின் துப்பாக்கிக் களஞ்சியத்திலிருந்து ஒன்றை எடுத்து ஆடிய கோரத்தாண்டவம் பச்சிளங் குழந்தைகளின் உயிர் கொள்ளையில் முடிந்தது.

தன்னலம் பேணும் பணக் கலாசாரத்தின் விளைவுதான் இந்த வன்முறைக் கலாசாரம் என்றே பலரும் கூறினர். இந்தப் போக்கைத் தடுக்காவிட்டால் உலகம் பேராபத்தில் சிக்கித் தவிக்கும் என்று எச்சரித்தனர்.

இந்நிலையில் தில்லியில் டிசம்பர் 16-ஆம் நாள் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை அமெரிக்க வன்முறைச் செயலை மறக்கடித்துவிட்டது.

எல்லாப் பாலியல் வன்கொடுமைகளும் செய்தித்தாள்களில் வருவதில்லை. மானத்திற்கு, பணம் - மிருக பலத்துக்கு அஞ்சி, மறைக்கப்படுபவை ஏராளம்.

இதுவரை நமது நாட்டில் நடந்திருப்பது என்ன? இங்கு பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. துணிச்சலாகக் காவல்துறையை அணுகி வழக்குப் பதிந்தாலும் நீதி கிடைக்குமென்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில், 2010-ஆம் ஆண்டில் பதிவான பாலியல் தொடர்பான குற்ற வழக்குகள் 487. இவற்றில் விசாரணை முடிவானவை 432. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 105. 2001-ஆம் ஆண்டு இறுதியில் நிலுவையில் இருக்கும் மொத்த பாலியல் குற்ற வழக்குகள் 1,497. இதுதான் இன்றைய நிலை.

பாலியல் குற்ற வழக்குகளில் விசாரணையென்பது கொடுமையிலும் கொடுமை என்று கூறப் பெறுகின்றது. குற்றவாளிகளை விடுவிக்க வாதிடும் "கில்லாடி' வழக்கறிஞர்கள் எப்படியும் கேள்விகள் கேட்பார்கள். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பெண்ணை, மறுபடியும் நீதிமன்றத்தில் நொந்து போகச் செய்யும் சோதனைகள் எவ்வளவு? இறுதியில் குற்றவாளி தண்டிக்கப்படுவாரா என்பதும் கேள்விக்குறி.

நமது சமுதாயத்தில் பெண்களுக்குச் செய்யும் வன்கொடுமைகளில் பாலியல் வன்கொடுமைகள் ஒரு பகுதிதான். மொத்தத்தில் பல நிலைகளில் பெண்களின் வாழ்வைச் சீர்குலைக்கும் கொடுமைகள் எல்லோருக்கும் தெரிந்தே தொடர்கின்றன.

ஒருபக்கம், பெண்கள் கல்வியில் முன்னேறி வருகின்றனர். பல்வேறு துறைகளிலும் பெண்கள் பணியாற்றுகின்றனர். பொது வாழ்க்கையிலும் பெண்களின் பங்களிப்பு கூடி வருகின்றது. உள்ளாட்சித் தலைமைப் பொறுப்புகளில் ஒதுக்கீட்டின் காரணமாக பெண்கள் உயர்ந்து நிற்கின்றனர். பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சி போற்றத்தக்கதாக உள்ளது. இது ஒளிமயமான பகுதி.

மறுபக்கம், இருண்ட நிழல் பகுதி நீண்டு நெடியதாக, மிகக் கொடுமையானதாக மாறி வருகின்றது. வரதட்சணைக் கொடுமை வளர்ந்திருக்கிறது. ஸ்டவ் வெடித்து மருமகள் சாவது பழைய கதை. கொடுமை தாங்காமல் திருமண விலக்கு வழக்குகள் தொடர்வது புதிய கதை.

படிக்கின்ற மாணவியிலிருந்து அரசுப் பணியாற்றும் பெண்கள் வரை இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

 பெண்கள் தெருக்களில் நடப்பதோ, பேருந்துகளில் பயணம் செய்வதோ பாதுகாப்பாக இல்லை.

பெற்ற தாய், தந்தை இல்லை என்றால் பெண்களை விலைபேசி விற்கும் கொடுமை இன்றும் இருக்கிறது. தனியாக வீடுகளில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

ஆசிரியர், கொத்தனார், வங்கி ஊழியர், பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பையன்கள் என எல்லாத் தொழில் செய்வோரும், எல்லா வயதினரும் இந்த வன்கொடுமைகளில் ஈடுபடும் மிருகங்களாக இருக்கின்றனர்.

 இப்பொழுது தமிழகத்தில் சில தொழில் நகரங்களில் "சுமங்கலி வேலைத் திட்டத்தின்' மூலம் வளரிளம் பெண்களைக் கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தும் வன்கொடுமை வளர்ந்து வருகிறது. இது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்தே நடைபெறுகிறது. வாட்டும் வறுமையால் பெற்றவர்களே பெண்களைச் "சுமங்கலி' படுகுழியில் தள்ளுகின்றனர்.

இதற்குக் காரணம் தெளிவாகத் தெரிகிறது. நமது பண்பாடு, வாழ்வியல் விழுமங்கள் சீர்குலைந்து, வாடி, வதங்கி கருகுகின்றன. இங்குள்ள வறுமை, ஏற்றத்தாழ்வு, நகர நாகரிக வளர்ச்சி, பண்பை வளர்க்காத கல்வி, தன்னலம் பேணும் பணப் பொருளாதாரம், வழிமுறையைப் பற்றிக் கவலைப்படாத வாழ்க்கை முறை, நுகர்வுக் கலாசாரம், உழைக்காமல் பொருள் சேர்க்கும் அரசியல் சூதாட்ட முறை, தரமற்ற தொலைக்காட்சி, பொறுப்பற்ற ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து நமது பண்பாட்டை அரிக்கின்றன. இதனால் இங்கு வன்முறை பயிராகின்றது.  அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம்; இங்கு கொலைவெறிக் கலாசாரம். இதன் விளைவுதான் பெண்களின் வாழ்வை, வளத்தை, நலத்தைச் சிதைக்கும் வன்கொடுமைகள்.

காட்டு வாழ்க்கைக்கும் நாட்டு வாழ்க்கைக்கும் வேறுபாடு உண்டு.

காட்டில் விலங்குகள் எப்படியும் வாழும். ""இப்படித்தான் வாழ வேண்டும்'' என்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்வதுதான் சமுதாய வாழ்க்கை; நாட்டு வாழ்க்கை. அதுதான் உண்மையான சுதந்திர வாழ்க்கை.

சமுதாயத்தின் அடிப்படை, குடும்பம். இன்று மாற்றங்களுக்குள்ளான சூழலில் குடும்பம் தனது அடிப்படைத் தன்மையைச் சிறிது சிறிதாக இழந்து வருகிறது. "பணம், பணம்' என்று அலையும் குடும்பங்களில் சிறுவர்களுக்கு முதியவர்களுக்கு, பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது. குடும்பம்தான் பண்பாட்டின் தொட்டில். அது ஆட்டம் காண்கின்றது.

சமுதாயம், ஏழை - எளியவர்களுக்கு, மெலிந்த நலிந்த மக்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு வேலியாக, பாதுகாவலாக இருக்க வேண்டும். எங்கோ ஒருவருக்கு கொடுமை இழைக்கப்படுமானால் அருகிலுள்ளவர்கள் அதை வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தால் அந்தச் சமுதாயம் கேடுகெட்டதாகிவிடும்.

"பாஞ்சாலி சபதத்தில்' அத்தகைய அச்சமுற்ற அப்பாவிகளைக் கொண்ட ஒரு சமுதாயத்தை மகாகவி பாரதியார்  நம் கண்முன் நிறுத்துகின்றார். பாஞ்சாலியை துரியோதனன் தம்பி துச்சாதனன் கூந்தலைப் பற்றி தெருவில் இழுத்துச் செல்கின்றான். மக்கள் கூட்டம் செயலற்று வேடிக்கை பார்க்கின்றது. மகாகவி பாரதியார் பொங்கி எழுந்து,

 ""ஊரவர்தங் கீழ்மை உரைக்கும் தரமாமோ?

  வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன்

  தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே

  பொன்னையவள்  அந்தப் புரத்தினில் சேர்க்காமல்

  நெட்டை மரங்களென நின்று புலம்பினார்,

  பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?''

என்று கேட்கின்றார். இது இன்றைய நிலையில் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வியாக ஒலிக்கின்றது.

இன்றைய சமுதாயம் மெலிந்தவர்களுக்கு, நலிந்தவர்களுக்குத் துணையாக இல்லை. வலியவர்களின், செல்வர்களின் கையில் அதிகாரம் குவிந்திருக்கின்றது. சமுதாயம் அவர்களைக் கண்டு அஞ்சுகின்றது; குழைகின்றது.

அரசின் மூன்று பிரிவுகளான நிர்வாகம், சட்டமியற்றும் நாடாளுமன்றம், அறம் கூறும் நீதிமன்றம் ஆகியவை எப்படிச் செயல்படுகின்றன?

காவல்துறை உள்ளிட்ட நிர்வாகத் துறையில் நல்லவர்கள், வல்லவர்கள் சிலர் இருக்கின்றனர். பாதுகாப்புத் தேடிப்போன காவல் நிலையங்களிலேயே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான வழக்குகள் நமக்குத் தெரியும். நேர்மையாய் நடைபெறும் நிர்வாகம் இல்லையேல் வேலியே பயிரை மேயும் கதை தொடரும்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு கொலைத் தண்டனை, ஆயுள் தண்டனை எனக் கடுமையான தண்டனைகள் வேண்டுமென்கிறோம். இதை யார் வாங்கித் தருவது? வழக்குப் பதிவு, விசாரணை நடத்துவது, குற்றவாளியைக் கைது செய்து கூண்டிலேற்றி கடுமையான தண்டனை வாங்கித் தருவது எல்லாம் நிர்வாகத் துறையினரின் கடமை. இதைச் சரியாகவும், முறையாகவும் செய்யாவிட்டால், குற்றவாளிகள் எப்படி அஞ்சுவார்கள்; கட்டுப்படுவார்கள்?

நமது சட்டமன்றங்களும் நாடாளுமன்றங்களும் எப்படிச் செயல்படுகின்றன? இவற்றின் உறுப்பினர்கள் எப்படிப்பட்டவர்கள்? சமீபத்தில் ஒரு செய்தி. நமது நாட்டிலுள்ள 4,835 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களில் 1,448 பேர்மீது பாலியல் வன்கொடுமை, வேறு குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளனவாம். அதாவது நூற்றுக்கு முப்பது பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்டவர்கள் எப்படி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவார்கள்?

நமது நீதித்துறையில் இருப்பவர்களும் நம்மவர்கள்தானே. சில வேளைகளில் சில நீதிபதிகள் துணிச்சலாகத் தீர்ப்புக் கூறுகின்றனர். அந்தத் தீர்ப்புகளும் இறுதியானவை அல்ல. மேல் முறையீடுகளில் மாறலாம். பல குற்ற வழக்குகள் பதிவாகும்பொழுது, ""ஆகா, ஓகோ'' என்று ஆர்ப்பரிக்கின்றோம். லஞ்ச ஊழல் வழக்குகள் சான்று. நீதிமன்றங்களில் லஞ்ச ஊழல் வழக்குகள் தொடர, தலைவர்களாக வெளியில் உலா வருகின்ற "பெரிய மனிதர்களைப்' பார்க்கிறோம். இந்நிலையில் யாரை நம்புவது?

சமுதாயம் விழிப்புணர்வோடு, எழுச்சியோடு, நீதிக்காகப் போராடும் உணர்வோடு இருந்தால்தான் ஓரளவாவது வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த முடியும். தில்லி மாணவி பாதிக்கப்பட்டபோது நாடே கொதித்து எழுந்ததால்தான் இந்த அளவிலாவது வழக்குத் தொடர்கிறது. இல்லையேல், அந்தப் பெண்ணோடு வழக்கையும் என்றோ குழிதோண்டிப் புதைத்திருப்பார்கள்.

நமது நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கும், வன்கொடுமைகளுக்கும் எதிரான போர் - போராட்டம் - தொடர வேண்டிய ஒன்று. இதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. இங்குள்ள குறைகளைக் களைவோம். குடும்பத்தில் தொடங்கி நாட்டளவில் பண்பாட்டை வளர்ப்போம். வன்கொடுமை நடக்கும்பொழுது நெட்டை மரங்களென நின்று புலம்ப மாட்டோம். நமது சக்திக்கேற்பச் செயல்படுவோம்.

இணைந்து நிற்போம்; உறுதி கொள்வோம். ஒளிபடைத்த இந்தியாவை உருவாக்குவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com