ஆயுதம் செய்வோம்
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் ஆயுத வணிகத்தில் வியாபாரிகள் வெகுசிலர்தான். ஆயுதங்களை வாங்குபவர்கள்தான் அதிகம்.
ஒவ்வொரு நாட்டு பட்ஜெட்டிலும் பாதுகாப்புச் செலவு என்பது முக்கிய இடத்தையும், முதலிடத்தையும் பிடிக்கிறது. பாதுகாப்புச் செலவு என்பதில் பெரும்பகுதி ஆயுதங்களை வாங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
நாடுகள் தோறும் வறுமை, பட்டினிச் சாவு, சுகாதாரச் சீர்கேடு, வேலையில்லாத் திண்டாட்டம் என பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3-ல் ஒரு பங்கு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கவே செலவிடப்படுகிறது.
நாடுகளுக்கு இடையிலான போர் என்ற நிலை மாறி பயங்கரவாதத்துக்கு எதிரான போர், உள்நாட்டுப் புரட்சி போன்ற காரணங்களுக்காகவே இப்போது ஆயுதங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற போர்களில் ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களைவிட அப்பாவி மக்களே அதிகம் உயிரிழக்கின்றனர்.
உலகில் இப்போதுள்ள நவீன ஆயுதங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் 10 பேருக்கு ஓர் ஆயுதம் என்ற அளவில் ஆயுத உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நவீன ஆயுதங்களால் கொல்லப்படுகின்றனர்.
ஐ.நா.வில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஆயுத வர்த்தக கட்டுப்பாடு ஒப்பந்தத்துக்கு 154 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. சிரியா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்தன. அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியா, எகிப்து, கனடா உள்ளிட்ட 23 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. ஆயுத வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளன.
ஒரு நாட்டின் ஓராண்டு ஆயுத ஏற்றுமதி, இறக்குமதியை ரூ.7,000 கோடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். பயங்கரவாதிகள் மற்றும் போராளி குழுக்கள் பயன்படுத்தும் கண்ணிவெடி, ராக்கெட் குண்டுகள், கொத்து வெடிகுண்டு, சிறிய ரக ஏவுகணைகள், ரசாயன ஆயுதங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி இந்த ஒப்பந்தத்தின் மூலம் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
பெருகி வரும் பயங்கரவாதம் சட்ட விரோத ஆயுதக் கடத்தல் போன்றவற்றைத் தடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று இது வர்ணிக்கப்படுகிறது.
ஆயுத ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகியவை ஆயுத வர்த்தக ஒப்பந்த வாக்கெடுப்பில் விலகியிருந்தது ஆச்சரியமில்லை. அதே நேரத்தில் அமைதியை விரும்பும் நாடாக வர்ணிக்கப்படும் இந்தியா, இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்காதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆனால், இதற்கு இந்தியா தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. ஐ.நா.வின் ஆயுத வர்த்தக கட்டுப்பாடு ஒப்பந்தம் அதிக அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு சாதகமாக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் செயல்படும் நக்சல் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளவும், எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்கவும் பெருமளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாது என்பது இந்தியாவின் நிலைப்பாடு.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி குறித்து தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. உலக அளவில் ஆயுத இறக்குமதியில் முதல் இடத்தில் உள்ள நாடு இந்தியா என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
கடந்த 3 ஆண்டுகளாக ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது. சர்வதேச அளவில் ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் 12 சதவீதம் இந்தியாவுக்கு வருகிறது. அடுத்தடுத்த இடங்களில் சீனா (6 சதவீதம்), பாகிஸ்தான் (5 சதவீதம்), தென் கொரியா (5 சதவீதம்) சிங்கப்பூர் (4 சதவீதம்) ஆகிய ஆசிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஆயுத இறக்குமதியில் 2-வது இடத்தில் உள்ள சீனா ஏற்றுமதியில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
சர்வதேச அளவில் பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இதற்காக நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் செலவிடப்படுகிறது.
இந்தியாவில் ஆயுத இறக்குமதி அதிகரிப்பதற்கு உள்நாட்டில் ஆயுத உற்பத்தி அதிகரிக்காததும், அதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சி எடுக்காததுமே முக்கியக் காரணம். ஆயுதத் தயாரிப்பில் தனியார் துறையை அரசு அனுமதிக்காததும், இந்தியாவில் இருந்து ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்திருப்பது உள்ளிட்ட அரசின் முடிவுகளே நமக்குத் தேவையான ஆயுதங்களைக் கூட நம்மால் தயாரித்துக் கொள்ள முடியாததற்கு முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
அதே நேரத்தில் பாதுகாப்புத் துறையில் 26 சதவீதமாக உள்ள அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆயதத் தொழிற்சாலைகள் அமைத்து, இங்கேயே உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும். இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை, எதிர்க்கவுமில்லை. ஆனால் விலகியிருந்தது இந்தியாவின் ராஜ தந்திர முடிவாக இருக்கலாம். ஆனால் இது தீர்வாக இருக்கமுடியாது. ஆயுதமற்ற உலகைப் படைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பும் கணிசமாக இருக்க வேண்டியது அவசியம்.
அதே நேரத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆயுத உற்பத்தி அவசியம். அதை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியில் இந்தியா தீவிரம் காட்ட வேண்டும். இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். மாறிவரும் சூழலுக்கேற்ப நமது கொள்கைகளை மாற்றுவதோடு, ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்த தீர்மானத்தில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரலாம் என பரிந்துரைப்பது இந்த விஷயத்தில் பிற நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக இருக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
