தமிழை வாசிக்க வைப்போம்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பது தேசியக் கவியின் ஆசை. ஆனால், தமிழகத்தில் பார்க்கும் இடமெல்லாம் தமிழாக இருக்கிறதா என்பதே ஆய்வுக்குரியது.
Updated on
2 min read

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பது தேசியக் கவியின் ஆசை. ஆனால், தமிழகத்தில் பார்க்கும் இடமெல்லாம் தமிழாக இருக்கிறதா என்பதே ஆய்வுக்குரியது.

இந்தியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அலுவல் மொழியாகவும் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் பேசும் மொழியாகவும் இருக்கிறது தமிழ்.

2,500 ஆண்டு பழமை வாய்ந்த "செம்மொழியாக' தமிழ் இருக்கிறது என்பது தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை தரக்கூடியதாக இருந்தபோதும், உணர்வுப்பூர்வமாக தமிழ் நம்மோடு இருக்கிறதா?

மொழி தெரியாத ஏதோ ஒரு இடத்தில் நாம் தனித்து விடப்படும்போது, உதவிசெய்ய வருபவர் தமிழில் பேசினால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்? நாம் பாதுகாக்கப்பட்டு விடுவோம் என்ற உணர்வே அது. அதாவது தமிழ் மொழி நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பிறக்கிறது அல்லவா? அது மொழியின்மீது நமக்கு உள்ள ஆழ்ந்த உறவைக் காட்டுகிறது. அது நமது முதல் உறவு, நமது அடையாளம்; பிறகுதான் தாய், தந்தை எல்லாம்.

தமிழ் மொழியிலிருந்து தனிமைப்படும்போது பெறுகின்ற அந்த உணர்வை, நாம் தமிழோடு இருக்கும்போது மறந்து விடுகிறோம். நமது அடையாளத்தையே நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். முதலில் நாம் பார்க்கும் இடமெல்லாம் தமிழ் இருக்கிறதா என்று ஒருமுறை சுற்று முற்றும் பார்த்தாலே போதும். வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளின் பெயர்ப் பலகைகள் நம் கண்ணெதிரே தெரிகின்றவை. அவற்றில் நூற்றுக்கு 75 சதவீதம் தமிழ் பிரதானமாக இல்லை.

தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் வலம் வந்தால் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழை விட ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. கொட்டை எழுத்துகளில் ஆங்கிலத்தைப் பிரதானமாக எழுதி வைத்திருக்கின்றனர், அல்லது ஆங்கில மொழியை அப்படியே தமிழ் வார்த்தையாக எழுதிவிடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டதால் ஏற்பட்ட பாதிப்பா, அல்லது ஆங்கிலமே உலக அளவிலான தொடர்பு மொழி என்ற மாயையால் இதைக் கையாள்கின்றனரா என்று தெரியவில்லை. இந்த நிலை நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்றவற்றில் இல்லை.

கேரளத்தில் வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் பெரும்பாலும் மலையாளமே பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது. ஆங்கிலம் இரண்டாவதாக சிறிய அளவில் இருக்கிறது. அண்மையில் திருவனந்தபுரம் சென்றபோது, அவ்வப்போது இது எந்த ஊர் என, தமிழ் மட்டுமே தெரிந்த எங்களுடைய கார் டிரைவர் கேட்டுக்கொண்டே வந்தார். அத்தனை பெயர்ப் பலகைகளிலும் மலையாள மொழியே பெரிதாகக் காணப்பட்டது. ஆங்கிலம் சிறிய எழுத்தில் இருந்ததால் அடையாளம்காண முடியவில்லை.

ஆங்கிலத்தில் பேசுவதையே இன்றைக்கும் தமிழர்கள் நாகரிகமாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும், அழைப்பிதழை ஆங்கிலத்தில் அச்சிடுகின்றனர்.

பள்ளி, கல்லூரி அழைப்பிதழ்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் அச்சிடப்படுகின்றன.

தமிழக அரசு அலுவலகங்களில் இன்னமும் ஆங்கிலம் கோலோச்சுகிறது. நீதிமன்றங்களிலும் ஆங்கிலத்தில்தான் வாதங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழுணர்வு மங்கிப்போகாமல் இருக்க வேண்டுமென்றால் பார்க்கும் இடங்களிலெல்லாம் தமிழை வாசிக்க வைப்பதுதான் நமது மொழியின் வெற்றிக்கு முதல்படியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com