பெருமழைசூழ் கேதாரமே...

குற்றாலம் நீர்வீழ்ச்சியைப் பார்த்தால் மனதில் ஒரு கிளுகிளுப்பு. சாரல் நமது முகத்தில் விழுவதுபோல் உணர்வு ரம்யமானது. பசுமைச் சூழலில் மலையிலிருந்து நெளிந்துவரும் நதி, தெளிந்த நீர்நிறைந்த குளத்தில் பூத்த அல்லி மலர்கள் - இத்தகைய நீர்நிலைகள் எல்லோரது நெஞ்சையும் அள்ளும் காட்சிகள்.
Updated on
4 min read

குற்றாலம் நீர்வீழ்ச்சியைப் பார்த்தால் மனதில் ஒரு கிளுகிளுப்பு. சாரல் நமது முகத்தில் விழுவதுபோல் உணர்வு ரம்யமானது. பசுமைச் சூழலில் மலையிலிருந்து நெளிந்துவரும் நதி, தெளிந்த நீர்நிறைந்த குளத்தில் பூத்த அல்லி மலர்கள் - இத்தகைய நீர்நிலைகள் எல்லோரது நெஞ்சையும் அள்ளும் காட்சிகள். ஏன், மழை நீர் நெரிசல் நிறைந்த சாலைகளில் சுதந்திரமாகப் புரண்டாலும் மகிழ்ச்சிதான். ஆனால், அதே பஞ்சபூதத்தில் ஒன்றாகிய நீர் பிரமிக்க வைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது என்பது சில நேரங்களில்தான் உணர முடியும்.

இமாலய மலைச்சரிவில் உள்ள மாநிலம் உத்தரகண்ட். புனிதமான கங்கையும் யமுனையும் உற்பத்தியாகும் இடங்கள் கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரி, கேதாரம், ஜோதிர் மடம், கெüசர் போன்ற பூஜிக்கும் இடங்கள் நிறைந்த மாநிலம். யாத்ரிகர்கள் மட்டுமில்லாது சுற்றுலாப் பயணிகளும் மலைகளின் குளிர்காற்றைச் சுவாசிக்கவும், பரம்பொருளை உணரவும் வருடா வருடம் வந்து குவிகின்றனர். அலக் நந்தா, பாகீரதி, சரஸ்வதி போன்ற பல புனித நதிகள் மலையிலிருந்து பொங்கிவரும் காட்சி கண்கொள்ளாதது.

தூரத்தில் இடி முழக்கத்தோடு பீரிட்டுப் பெய்த மழை மலைகளை அரித்து சமவெளியை நோக்கிப் பொங்கி விழுந்து பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது. இது எவரும் எதிர்பார்க்காததுதான். இம்மாதிரி நிகழ்வுகள், இயற்கைப் பேரிடர்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால், அதன் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது, சமாளிக்க வேண்டியது நமது கையில்; அது அரசாங்கத்தின் கடமையும் கூட.

பேரிடர் தாக்கினால், வருடக்கணக்காக கட்டிக்காத்த வளர்ச்சி சில மணித்துளிகளிலே பாழடைந்துவிடும். பேரிடர்களை எவ்வாறு சமாளிப்பது, எவ்வாறு சமன் செய்வது? இயற்கைச் சீற்றங்கள் எனப்படும் பூகம்பம், இடைவிடாத மழை, சுழற்காற்று, சூறாவளி அவ்வப்போது தோன்றுவதைத் தடுக்க முடியாது. ஆனால், சீரிய திட்டமிடுதல் மூலம் சீற்றத்தின் சினத்தைத் தணிக்கலாம். பேரிடர் ஏதோ விதிவசத்தால் ஏற்படுகிறது என்று சோர்வடைந்து சரணடையாமல் சமாளிக்கும் வழிவகைகளை ஆராய்ந்து துல்லியமான நடவடிக்கை எடுப்பதுதான் சிறந்த ஆளுமை.

1990 முதல் 2000 வரையிலான பத்து ஆண்டுகளை பேரிடர் விளைவுகளைத் தடுக்கும் ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. துரதிருஷ்டவசமாக அந்தப் பத்து ஆண்டுகள்தான் அதிகமான பேரிடர்களை உலக நாடுகள் சந்திக்க நேர்ந்தது.

பல பேரிடர்களை, "விதியே' என்று சுதந்திரம் அடைந்த 50 ஆண்டுகளுக்கு மேல் தாங்கிவிட்டு, 1999-இல்தான் பேரிடர்களைச் சமாளிப்பதற்கும், வழிமுறைகளை அறிவதற்கும் 31 அங்கத்தினர்கள் கொண்ட குழு, ஓய்வுபெற்ற உயர் அரசு அதிகாரி ஜே.சி. பந்த் தலைமையில் அமைக்கப்பட்டது. பந்த் கமிட்டி, பேரிடர்களை ஐந்து வகையாகப் பிரித்து ஆராய்ந்து அவை முறையே 1) நீர் நிலை, வானிலை மாற்றங்கள், 2) புவியியல், பூமி, மலைகளின் கீழ்மட்டப் பாறை அடுக்குகளின் அசைவுகள், 3) ரசாயன, அணுமின் நிலையங்கள், பிற தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள், 5) ஏனைய விபத்துகள் 6) உயிரியல் பேரிடர்கள் என்று வகைப்படுத்தியிருக்கிறது.

கமிட்டியின் முக்கியமான பரிந்துரைகள்: தேசிய அளவில் பேரிடர்களைச் சமாளிக்க ஆணையம் அமைத்தல், தேசியப் பேரிடர் ஆளுமைப் பயிற்சி மையம் மற்றும் செயலாக்க மையம் அமைத்தல், பேரிடர்களைக் கையாளும் நெறிமுறைகளை வகுக்க சட்டங்கள் இயற்றுதல், முக்கியமாக சட்டங்களைக் கடுமையாக அமலாக்குதல் இதில் அடங்கும்.

பேரிடர் ஆளுமையில் முக்கியமான அங்கங்கள் தடுப்பு நடவடிக்கை, தாக்கத்தைக் குறைக்கும் வழிகள் மற்றும் சவால்களைச் சமாளிக்கத் தயார் நிலை, அபாயங்களின் தன்மை அறிதல், இடர் கணக்கிடல் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்குச் சிறப்பான பயிற்சி அளித்தல், செயலாக்க முறைகளின் பட்டியல் தயாரித்தல்; இவை இடைவிடாது கவனிக்க வேண்டிய பணிகள்.

இந்தியத் துணைக் கண்டத்தின் கடற்பகுதி சுமார் 7,600 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. 2009-இல் "சுனாமி' என்ற "ஆழிப்பேரலை' தாக்கிய பின்தான் அதன் தன்மையைப்பற்றி நிபுணர்களே ஆராய்ந்தனர். சுனாமி பேரிடரில் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால், நிவாரணப்பணிகள் மற்றும் சேதத் தணிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச அளவில் பாராட்டையும் பெற்றது. 2005-இல் அமெரிக்காவைத் தாக்கிய "கத்ரினா' சூறாவளி, கணக்கில் அடங்கா சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால், நிவாரணப்பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என்ற குறை இருந்தது. பேரிடர் பாதுகாப்பில் சேதத் தணிப்பு முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பேரிடர் ஆளுமைச் சட்டம் 2005-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அதில் பேரிடர் ஆபத்துக் காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அதிகாரங்கள், அவசரகால நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு பிரதமர் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது (என்.டி.எம்.ஏ.). இதில் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர். பேரிடர் ஆளுமைச் சட்டம் பிரிவு 44(1) -இன் கீழ், தேசியப் பேரிடர் நிவாரணப் படை (என்.டி.ஆர்.எப்) அமைக்கப்பட்டுள்ளது இப்படை என்.டி.எம்.ஏ, ஆளுகைக்கு உட்பட்டுச் செயல்படும். பத்து பட்டாலியன்கள் - ஒவ்வொரு பட்டாலியனிலும் 1,149 பேர் கொண்ட படை முக்கியமான மாநிலங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரக்கோணத்தில் ஒரு பட்டாலியன் பணியில் உள்ளது. பருவமழைக் காலத்தில் ஊட்டி, கொடைக்கானலில் நிலச்சரிவு ஏற்பட்டபோது இப்படை சிறப்பாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. ஒவ்வொரு பட்டாலியனிலும், 18 வீரர்களைக் கொண்ட 45 பிரிவுகள் தயார் நிலையில் உள்ளன. நவீன உபகரணங்களும் அதி நவீனப் பயிற்சியும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இப்போது கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேதாரம் 3,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு. அதற்கு மேல் மலைகள், மனித வாசமே இல்லாத வெட்டவெளி. வாகனம் செல்லக்கூடிய கடைசிப் பகுதி கெüரிகுண்ட். அதிலிருந்து 14 கிலோ மீட்டர் நடைப் பயணமாக கேதாரத்திற்குச் செல்ல வேண்டும். ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஞானசம்பந்தரும் சிவனடியார்களும் எப்படி கேதாரம் சென்று தரிசித்துப் பாடியிருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. ஆனால் இப்போது கேதாரம் சோகத்தில்.

ராணுவம், காவல்துறை, தேசிய மீட்புப்படை இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு சுமார் இரண்டு லட்சம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் எண்ணிக்கை ஆயிரங்களைத் தாண்டும். சேதம் அடைந்த பகுதியிலிருந்து உள்ளுர் மக்களைப் பாதுகாப்பான இடத்தில் அமர்த்துவது, சடலங்களை அடையாளம் கண்டு உரியவருக்குத் தெரிவிப்பது, அடையாளம் தெரியாத சடலங்களை அப்புறப்படுத்தி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வது போன்ற தொடர் அவசரப் பணியில் சீருடைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த செந்தில் ஆவுடை கிருஷ்ணராஜ் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி உத்தரகண்ட் மாநில ரிஷிகேஷ் பகுதிக் காவல்துறைக் கண்காணிப்பாளர். கெüரிகுண்டிலிருந்து கேதாரம் வரை யாத்ரிகர்கள் பாதுகாப்பிற்காக போடப்பட்ட காவலர்களில் பதினான்கு பேர் முதல் நாளிலேயே பணியில் மாண்டனர். கெüரிகுண்ட் உதவி ஆய்வாளர் ஹேமந்திர ராவத் இடைவிடாது மீட்புப்பணியில் நூற்றுக்கணக்கானவரை காப்பாற்றி எல்லோருடைய பாராட்டையும் பெற்றார். இம்மாதிரி தருணங்களில் கயவர்கள் கொள்ளையில் ஈடுபடுவார்கள். இவ்வாறு மக்களின் துன்பத்திலும் அவர்களது உடமைகளைத் திருடியவர்களைப் பிடித்துச் சிறப்பாகப் பணி செய்துள்ளார். கோடிக்கணக்கான கோயில் சொத்து நகைகளைக் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், தஞ்சை, கும்பகோணம் மாவட்டங்களிலிருந்து அதிகமாக வந்த பயணிகளுக்கு செந்தில் உதவி செய்துள்ளார். "மொபைல் போன்' உபயோகித்தவர்கள் தொலைபேசி "டவர்' மூலம் தகவல் எடுத்து, காணாமல் போனவரைப் பற்றி அறியவும் உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

நித்யானந்தன் என்ற என்.டி.ஆர்.எப். அணியைச் சேர்ந்த அதிகாரி தனது உயிரைப் பிணை வைத்து மக்களைக் காப்பாற்றியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில் அவர் வீர மரணம் எய்தினார். ஏனோ, உண்மையாகப் பணி செய்பவர்களுக்கே பிரச்னை வருகிறது. ஆனால், அவர்கள்தான் போற்றுதலுக்குரிய நாயகர்கள்.

பேரிடர் ஆளுமையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை - "பேரிடர் தாக்குவதற்கு முன்', "பேரிடர் தாக்கிய பின்' - என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பேரிடர் தாக்குவதற்கு முன்னால் தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து நிலை நிறுத்தல், பாதிப்பு தணிப்பு முயற்சிகள், கடும் பயிற்சியோடு தயார் நிலை. இம் மூன்றும் முக்கியம். பேரிடர் தாக்கிய பிறகு உடனடி மீட்புப்பணி நிவாரணம், சேதமடைந்த பாதைகள் செப்பனிடுதல் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

அவசர காலத்தில் அரசு இயந்திரம் சிறப்பாகச் செயல்படும். இந்திய நிர்வாகத் திறமையின் வலிமையைப் பாராட்ட வேண்டும். ஒவ்வொரு பேரிடரும் பல அனுபவங்களைக் கொடுக்கும். அதிலிருந்து குறைபாடுகளை உணர்ந்து நமது பதில் நடவடிக்கைத் திறனை வலிமை பெறச் செய்ய வேண்டும்.

""அடுக்க நின்ற(வ்) அறஉரைகள் கேட்டு ஆங்கவர் வினைகளைக்

கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே''.

என்று நெஞ்சுருக திருஞானசம்பந்தர் இத்திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார். ஆனால், இப்போது பெரும் மழை கேதாரத்தைச் சூழ்ந்து சேதாரத்தை விளைவித்துள்ளது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட, பெருமான் உறைகின்ற கேதாரம் கோயில் மட்டும் ஸ்திரமாக நிற்கின்றது. இயற்கைக்கு முரணாகச் செயல்படாமல் அதனை வியந்தும் பயந்தும் ஆதாரிப்பதில்தான் நமக்குப் பெருமையும் பாதுகாப்பும்.

கட்டுரையாளர்: முன்னாள் காவல் துறைத் தலைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com