இந்தியாவின் பருவ மழைகள்

இந்த ஆண்டு நம் நாட்டில் தென் மேற்குப் பருவ மழை பலவிடங்களில் வழக்கத்தைவிட அதிகமாகவே பெய்திருக்கிறது. தென்மேற்கிலிருந்து வீசும் காற்றில் ஏறி வருவதால் அதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. வழக்கமாக தென் மேற்குப் பருவ மழை மே இறுதியில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும்.
Updated on
4 min read

இந்த ஆண்டு நம் நாட்டில் தென் மேற்குப் பருவ மழை பலவிடங்களில் வழக்கத்தைவிட அதிகமாகவே பெய்திருக்கிறது. தென்மேற்கிலிருந்து வீசும் காற்றில் ஏறி வருவதால் அதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. வழக்கமாக தென் மேற்குப் பருவ மழை மே இறுதியில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும்.

ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவ மழை பெய்வதென்பது சுமார் ஆறு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் துவங்கியிருக்க வேண்டும் என வானிலை அறிவியலார் அனுமானிக்கின்றார்கள். இந்தியத் துணைக் கண்டத்தை ஒட்டிய கடலில் தரையைக் குடைந்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதிலிருந்த டயாட்டம் என்னும் ஒற்றை ùஸல் தாவரம், ரேடியோலாரியா என்னும் ஒற்றை ùஸல் உயிரி ஆகியவற்றின் புதைப் படிவங்களைப் பகுப்பாய்வு செய்தனர்.

கடலில் அலைகள் கொந்தளித்து எழும் வகையில் மணிக்கு சுமார் 50 கி.மீ. வேகத்தில் பருவக் காற்று வீசுகையில் இந்த நுண் உயிரிகள் கடலின் மேற்பரப்பில் வீசப்படுகின்றன. அவை இறந்த பின் அவற்றின் சடலங்கள் கடலடித் தரையில் இறங்கி அடுக்குப் படலங்களாக ஆகின்றன. அந்த அடுக்குகளின் அடிமட்டப் படலங்களிலுள்ள உயிரி புதைப் படிவங்கள் ஆறு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கண்டறியப்பட்டது. இமயமலை, திபேத் பீடபூமி ஆகியவையும் இதே கால கட்டத்தில்தான் தோன்றின. எனவே அவை உருவான பின்னர்தான் பருவ மழைகளும் துவங்கியிருக்க வேண்டும் என அறிவியலார் கருதுகிறார்கள்.

இந்தியத் துணைக் கண்டம் அமைந்துள்ள கண்டத் தகடு வடக்கில் பயணித்து ஆசியக் கண்டத் தகட்டுடன் மோதியபோது அவற்றின் விளிம்புகள் மேல் நோக்கி வளைந்து எழும்பியதால் இமயமலைத் தொடரும் திபேத் பீடபூமியும் தோன்றின. கோடையில் வெப்பமும் உயரமும் அதிகமான திபேத் பீட பூமியின் தென் புறத்தில் வெப்பம் குறைந்த இந்தியக் கடல் உள்ளதால் தெற்காசிய நிலப் பிராந்தியத்திலிருந்து சூடான காற்று வானில் எழுகிறது. அது இருந்த இடத்தை இட்டு நிரப்புவதற்காக இந்து மாக்கடலிலிருந்து ஈரக்காற்று வீசுகிறது. அது தென் மேற்குப் பருவக் காற்றாக மழையைச் சுமந்து வருகிறது.

இதற்கு நேர் மாறாக குளிர்காலத்தில் வடகிழக்கிலுள்ள நிலப்பரப்பிலிருந்து காற்று கடலை நோக்கி நவம்பர் மாத வாக்கில் வீசத் தொடங்கும். வங்கக் கடலைக் கடந்து வரும் இக்காற்று இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் மழையைப் பொழிவிக்கிறது.

இமயமலைத் தொடர் 1.5 முதல் இரண்டு கோடியாண்டுகளுக்கு முன் மேலெழும்பத் தொடங்கி ஆறு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இன்றிருக்கும் அளவுக்கு உயர்ந்து தென்மேற்கிலிருந்தும் வடகிழக்கிலிருந்தும் வீசிய காற்றுகளை மடக்கிப் பருவமழைக் காற்றுகளாக மாற்றியிருக்க வேண்டும் என அறிவியலார் கருதுகிறார்கள்.

உலகிலேயே இந்தியத் துணைக் கண்டத்திலும் தெற்காசியப் பகுதிகளிலும்தான் தீவிரமான பருவ மழைக் காற்றுகள் வீசுகின்றன. "மெüசிம்' என்ற அரபுச் சொல்லுக்கு ""ஒரு குறிப்பிட்ட பருவம்'' என்று பொருள். அது ஆங்கிலத்தில் "மான்சூன்' என உருமாறியது. ஆறு, ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அராபிய மாலுமிகள் தென்மேற்கிலிருந்தும் வடகிழக்கிலிருந்தும் பருவத்துக்குப் பருவம் திசை மாறி வீசுகிற காற்றுகளை இச் சொல்லால் அழைக்கத் தொடங்கினர். இந்தியாவில் மான்சூன் என்பது பருவ மழையையே குறிக்கிறது. இந்தியாவின் விவசாயமும் பொருளாதாரமும் பருவமழைகளை நம்பியிருப்பவை. இதன் காரணமாகவே இந்தியத் துணைக் கண்டம் பருவமழை நாடு என்று அழைக்கப்படுகின்றது.

கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் கோடை காலத்தில் நிலப்பரப்பு கடலை விட அதிகச் சூடாகவும் குளிர்காலத்தில் கடலை விட அதிகக் குளிர்ச்சியாகவும் ஆகிறது. கோடையில் கடலிலிருந்தும் குளிர்காலத்தில் நிலத்திலிருந்தும் காற்றுகள் வெப்பச் சலனம் காரணமாகத் தென்மேற்குத் திசையிலிருந்தும் வடகிழக்குத் திசையிலிருந்தும் வீசத் தொடங்குகின்றன. நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று பின்வாங்கும் பருவக் காற்று எனப்படும்.

நம் நாட்டில் விவசாயத்திலும் பொருளாதாரத்திலும் பருவமழையின் தாக்கம் கணிசமானது. பருவமழை பொய்க்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்த பிறகே நம் நாட்டு நிதி மந்திரிகள் ஒவ்வோராண்டும் வரவு செலவு அறிக்கையை எழுதத் தொடங்குகிறார்கள். பருவ மழை சரிவரப் பெய்தால்தான் ஆறுகளிலும் ஏரிகளிலும் குளங்களிலும் நீர் பெருகி விவசாயத்துக்கும் மின் உற்பத்திக்கும் உதவும். பருவ மழை பொய்த்தால் நாடே தவித்துப் போய் அரசுகள் ஆட்டம் காணத் தொடங்கி விடும்.

பருவக் காற்று மழையை முழுமையாக நம்ப முடிவதில்லை. 1970-இல் பருவ மழை பொய்த்து பெரும் வறட்சி தோன்றியது. அடிக்கடி கனமழை கொட்டி வெள்ளப் பெருக்கெடுக்கும் மாநிலங்களில் கூடச் சில ஆண்டுகளில் மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டதுண்டு. சில ஆண்டுகளில் வறண்ட பாலைவனங்களில் கனமழை கொட்டி வெள்ளம் வந்து உயிருக்கும் உடைமைகளுக்கும் சேதமேற்படுத்தியதுமுண்டு.

மழையளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும் பருவ மழையின் கால அட்டவணையை உறுதியாக நிர்ணயிக்க முடியாததையும் கருத்தில் கொண்டு அரசு பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிற போதிலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டதைப் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு விடுகின்றன. பருவ மழையின் போக்கைக் கண்காணிக்கிற ராக்கெட்டுகளும், பலூன்களும் செயற்கைக் கோள்களும் பருவமழையைத் தீர்மானிக்கிற இயற்கைச் செயல்பாடுகளைப் பற்றி உடனுக்குடன் வானிலை மையங்களுக்குத் தகவல்களை அனுப்பியவாறு உள்ளன. என்றாலும் ""ஓரிரு இடங்களில் லேசான அல்லது பலத்த அல்லது நடுத்தரமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது'' என்ற அளவில்தான் வானிலை முன்னறிவிப்புச் செய்ய முடிகிறது.

ஜூன் மாதம் தொடங்கியதுமே இந்திய விவசாயிகள் ஆவலுடன் வானத்தைப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள் தொலைக்காட்சிகளும் வானொலியும் செய்தித்தாள்களும் "வரப் போகிறது', "வந்து கொண்டிருக்கிறது', "வந்து விட்டது' என்று பருவ மழை பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன. பருவமழையின் விஜயமே கருத்த பெரும் மேகங்களும் புயல்களும், இடி மின்னல்களும் பங்கு கொள்ளும் ஒரு பிரமிப்பூட்டும் நாடகக் காட்சியாக உள்ளது. பருவமழை பொழிவதை வேடிக்கை பார்ப்பதற்காகவே அரபு நாட்டுப் பயணிகள் இந்தியாவின் மேற்குக் கரை நகரங்களுக்கு வருகிறார்கள்.

ஆனால் பல ஆண்டுகளில் பருவ மழை இவ்வளவு அமர்க்களத்துடன் தொடங்குவதில்லை. முதலில் வெயிலின் உக்கிரம் அதிகமாகிறது. பிறகு லேசாகத் தூறல் தொடங்குகிறது. பின்னர் சில நாள்களுக்கு மப்பும் மந்தாரமுமாக இருந்துவிட்டு படிப்படியாக மழை வலுக்கத் தொடங்குகிறது. ஆனால் அசாம், வங்காளம், ஒடிசா, பிகார் ஆகியவிடங்களில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஏப்ரல், மே மாதங்களில் பயங்கரமான இடி மின்னல்களுடன் கூடிய புயல்கள் வீசும். இதை "காலா பைசாகி' என்கிறார்கள். இவை வளிமண்டலத்தில் கடும் குழப்பங்கள் ஏற்பட்டதன் அறிகுறி. சில ஆண்டுகளில் இத்தகைய இடியும் புயலும் கடுமையாகத் தோன்றும்போது மழையும் பெய்து பருவமழை எப்போது தொடங்கியது என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.

பருவமழை பொதுவாக அரபிக் கடல் பருவமழை, வங்கக் கடல் பருவமழை எனப் பிரிக்கப்படுகிறது. அரபிக் கடல் பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் கேரளக் கடற்கரையை எட்டும். பின்னர் ஜூன் இரண்டாவது வாரத்தில் மும்பையை அடையும். அசாதாரணமான வளிமண்டலக் குழப்பங்களின் காரணமாகப் பருவமழை சில நாட்கள் முன்போ, பின்போ வரலாம்.

வங்கக் கடல் பருவமழை வடமேற்காகப் பயணித்து அசாம், வங்காளம் ஆகியவிடங்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் வந்து விடும். இமய மதிலின் தென் விளிம்பில் அது மோதி மேற்கே திரும்பும். அங்கிருந்து அது கங்கைச் சமவெளியை நோக்கிப் பயணிக்கும். பருவமழை மும்பையை விடச் சற்று முன்னதாகவே கொல்கத்தாவுக்கு வந்து விடும். அது வழக்கமாக ஜூன் முதல் வார முடிவில் கொல்கத்தாவை அடைகிறது.

அரபிக் கடல் பருவமழை ஜூன் மத்தியில் இந்தியாவின் மத்திய மாநிலங்களில் பரவுகிறது. அதன் பின் வங்கக் கடல் காற்றோட்டமும் அரபிக் கடல் காற்றோட்டமும் ஒன்றாகக் கலந்து உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் பருவமழையாகப் பொழியத் தொடங்கும்.

டெல்லிக்குப் பருவமழை வருவது விந்தையாக இருக்கும். முதல் மழை கிழக்கிலிருந்தும் சமயங்களில் தெற்கிலிருந்தும் மாறி மாறி வரும். ஜூலை நடுவில் அது காஷ்மீருக்கும் ஹிமாசலப் பிரதேசத்துக்கும் பரவி விடும். அவ்விடங்களில் இரண்டு மூன்று மாதங்களுக்கு மழை நீடிக்கும்.

மலைத் தொடர்கள் பருவமழையின் போக்கை வெகுவாகப் பாதிக்கின்றன. வங்கக் கடல் பருவமழை கரையைக் கடந்ததும் அசாமின் குன்றுகளாலும், காரோ, ஜயந்தியா மலைகளாலும் மேற்குத் திசையில் திருப்பி விடப்படுகிறது. அதன் காரணமாக அசாமுக்கு ஏராளமாக மழை கிடைக்கிறது. மீதமுள்ள பருவமழையை இமயத் தொடர் மேலும் மேற்கில் திருப்பிவிட்டு சிக்கிம் முதல் காஷ்மீர் வரை தொடர்ந்து மழை பெய்யச் செய்கிறது.

 தென் பகுதியில் ஒன்று முதல் இரண்டு கிலோ மீட்டர் வரை உயரமான முகடுகளைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகள் அரபிக் கடல் பருவக் காற்றை மறித்துப் பெருமளவு மழையைக் கறந்து விடுகின்றன. மீதமுள்ளதே தக்காணத்துக்கும் மத்தியப் பிரதேசத்துக்கும் போகிறது.

பல நூற்றாண்டுகளாகவே அரபு வணிகர்கள் தென்மேற்குப் பருவக் காற்றின் உதவியுடன் பாய்மரக் கப்பல்களைச் செலுத்தி மலையாளக் கரைக்கு வந்து வியாபாரம் செய்து விட்டு வடகிழக்குப் பருவக் காற்றின் உதவியுடன் அரேபியாவுக்குத் திரும்பிப் போய் விடுவார்கள். அதன் காரணமாக அவற்றுக்கு வணிகக் காற்றுகள் என்ற பெயரும் வழங்கப்பட்டது.

தமிழ் மன்னர்களும் தெற்காசிய நாடுகளுக்குப் படையெடுத்துச் செல்லப் பருவக்காற்றுகள் உதவியிருக்கும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வரை கூட தமிழ் வணிகர்களின் பாய்மரக் கலங்கள் சென்றிருக்க வாய்ப்புண்டு. இந்தோனேசியா, பாலி போன்ற நாடுகளில் இந்திய மதங்களும் கலாசாரமும் பரவிட பருவக் காற்றுகள் உதவியுள்ளன.

கட்டுரையாளர்:பணி நிறைவுபெற்ற பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com