செம்மொழி அரசியல்

உலகச் செம்மொழிகள் எதையும் எந்த அரசும் எந்தக் காலத்திலும் சட்டம் போட்டோ, அரசாணை பிறப்பித்தோ, அறிவிக்கை வெளியிட்டோ தெரிவித்ததாக வரலாறு இல்லை.
Published on

உலகச் செம்மொழிகள் எதையும் எந்த அரசும் எந்தக் காலத்திலும் சட்டம் போட்டோ, அரசாணை பிறப்பித்தோ, அறிவிக்கை வெளியிட்டோ தெரிவித்ததாக வரலாறு இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஒரு மொழியைச் செம்மொழி என்று அறிவித்த முதல் நிகழ்வு தமிழுக்குரியது.

சமஸ்கிருதத்தைப் போல, மத்திய அரசிடமிருந்து தமிழுக்குச் செம்மொழி அறிந்தேற்பு வேண்டும் என்று தமிழறிஞர்களும் தமிழக அரசியல் கட்சிகளும் கோரிக்கை எழுப்பி வந்தனர். ஆனால் சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசின் செம்மொழி அறிந்தேற்பு, தமிழுக்குப் பிறகே கிடைத்துள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரிதிமாற் கலைஞர் எழுப்பிய குரல், பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் செம்மொழிகளின் பட்டியலில் சமஸ்கிருதத்தைப் போலத் தமிழையும் சேர்க்கவேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்கிறது. அப்போதும் சமஸ்கிருதத்தைச் செம்மொழி என்று எந்த அரசும் அதற்குமுன் அறிவித்ததாகத் தகவல் இல்லை.

பல்கலைக் கழகத்திற்குப் பரிதிமாற் கலைஞர் விடுத்த கோரிக்கை, தமிழறிஞர்களின் விருப்பமாகி, அரசியல் கட்சிகளின் முழக்கமாகி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியாகி, 12-10-2004 இல் மத்திய அரசின் அறிவிக்கையாக வெளிவந்தது. அதன் பின்னர் செம்மொழி அறிந்தேற்பு வேண்டும் என்ற மற்ற மொழிகளின் தகுதி அறிந்து பரிந்துரைக்கக் குழு அமைத்து 1-11-2004 இல் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

அந்தக் குழுவில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக மொழியியல் பேராசிரியர் டாக்டர் அன்விடா அபி, தில்லிப் பல்கலைக் கழக மொழியியல் பேராசிரியர் டாக்டர் கே.வி.சுப்பராவ். மைசூர், இந்திய மொழிகள் ஆய்வு நிறுவன இயக்குனர் பேராசிரியர் உதய நாராயணசிங், கான்பூர் ஐ.ஐ.டி. ஆங்கிலப் பேராசிரியர் (மொழியியல்), டாக்டர் பி.என்.பட்நாயக், ஹைதராபாதிலிருந்து புகழ்பெற்ற மொழியியல் பேராசிரியர் பி.எச். கிருஷ்ணமூர்த்தி, சாகித்ய அகாதமியின் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். "தமிழ்மொழிக்கு இடமில்லையா?' என்ற கேள்வி வந்தது. அதன் பின்னர், 21-12-2004 இல் மேலும் ஓர் அறிவிக்கையின் வழி, டாக்டர் வா.செ. குழந்தைசாமி மற்றும் டி.எஸ்.கே. கண்ணன் ஆகிய இரு மொழியியல் அறிஞர்களை அக்குழுவில் நியமித்து அறிவித்தது. இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுதான் 2005-இல் சமஸ்கிருதத்திற்கும் 2008-இல் கன்னடத்திற்கும் தெலுங்கிற்கும் இப்போது 2013-இல் மலையாளத்திற்குமாக செம்மொழி அறிந்தேற்பு அறிவிக்கைகள் வந்துள்ளன.

இனி அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அட்டவணை மொழிகள் எல்லாம் செம்மொழி அறிந்தேற்பு வேண்டிப் போராட்டம் நடத்தலாம். செம்மொழி அறிந்தேற்புப் பெற்ற மொழிகள், மற்ற மொழிகளுக்குக் கிடைக்கக் கூடாது என்று வழக்காடலாம்.

ஒரு மொழியின் தகுதி என்பதைக் கடந்து, வாக்கு வங்கியும் செல்வாக்கும் அரசியலும் இனி, செம்மொழிக்கானத் தகுதிகளாகலாம் எனும் நிலை உருவாகியுள்ளது.

ஒரு மொழி, செம்மொழியா இல்லையா என்பதற்கு அளவுகோல் என்ன, அளப்பவர் யார், அறிவிப்பவர் யார் என்பவை முக்கியம். வாக்களிப்பதற்குப் பதினெட்டு வயது தகுதி போதும்.

ஒருவருக்குப் பதினெட்டு வயது ஆகிவிட்டதா என்பதைத் தீர்மானிக்கப் பிறந்த நாள் சான்று போதும். மொழிக்குப் பிறந்த நாள் சான்று யார் தருவது? அதனால், அந்த மொழியில் எழுதப்பட்ட இலக்கிய, இலக்கணத் தொன்மை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சியின் விருப்பமோ, பெரும்பான்மைக்குப் பயன்படும் அரசியல் கட்சியின் நெருக்கடியோ செம்மொழிக்கான தகுதிகளாகிவிடக் கூடாது. ஆட்சிமொழி எது, பாடமொழி எது, பயிற்றுமொழி எது என்று தீர்மானிக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது. ஆனால் செம்மொழி எது என்பதைத் தீர்மானிப்பது மொழி அறிஞர்களாக இருக்கட்டும். கட்டுரையாளர் தமிழ் வளர்ச்சி இயக்குநராக இருந்தபோது பேராசிரியர் மறைமலை இலக்குவனார், சமஸ்கிருதத்தைப் போல் தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க மறுப்பது ஏன் என்று கேட்டார். அப்போது, செம்மொழிக்கான தகுதிகள் குறித்த வரையறையை அவரிடம் கேட்டபோது பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டுக்கு எழுதிக் கேட்டுச் சொல்கிறேன் என்றார். அவருக்கு மின் அஞ்சல் அனுப்பினார்.

உலக அளவில் செம்மொழிகளாக அறியப்பட்டுவரும் மொழிகளின் தகுதிப்பாடுகளைக் கண்டறிந்து, டாக்டர் ஜார்ஜ் ஹார்ட் பதில் அனுப்பியிருந்தார். அந்த மின் அஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்த செம்மொழியின் தகுதிகளே இணையம் வழி எல்லோருக்கும் தெரியவந்தன.

சமஸ்கிருத மொழியை மத்திய அரசு எந்த ஆண்டுச் செம்மொழியாக அறிவித்தது என்று ஆதாரம் தேடப்பட்டது. சட்டமோ,அரசாணையோ,அறிவிக்கையோ கிடைக்கவில்லை. இருந்தால்தானே கிடைப்பதற்கு? அப்படி ஒரு அறிவிப்பு சமஸ்கிருதத்திற்கு இல்லை என்று தெரிந்ததும், சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்படவில்லை என்றால் பரவாயில்லை, தமிழை அறிவிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும் என்றார்கள். தமிழைச் செம்மொழியாக அறிவித்தால்தான் சமஸ்கிருதம் போலத் தமிழுக்கும் மத்திய அரசின் நிதி கிடைக்கும் என்ற கருத்து இருந்தது. ஆனால் செம்மொழியாக அறிவிக்காமலே மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு நிதி வழங்கி வந்திருக்கிறது. இது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

1956-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி தமிழ் மட்டுமே தமிழ் நாட்டின் ஆட்சி மொழி. இருமொழிக் கொள்கை எல்லாம் கல்விக்குத்தான்.

எந்த தேசத்திலும் எந்தக் காலத்திலும் சமஸ்கிருதம் தேசபாஷையாகப் பேசப்படவில்லை என்று தெரிகிறது என்று சங்கராச்சாரியார் (சமஸ்கிருத பாஷா பிரயோஜனம், 29.10.1932, ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அருளிய நன்மொழிகள்,சங்கர விஜயம் பாகம்-2, ப. 4.) கூறியிருப்பதைப் போல சமஸ்கிருதம் எந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாகவும் அப்போது ஆகவில்லை. இப்போது, உத்தரகண்ட் மாநிலம் உருவான பின்னரே அந்த மாநிலத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக சமஸ்கிருதம் ஆக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தியப் பண்பாட்டுத் தரவுகளைக் கொண்டிருப்பதோடு ஆட்சி மொழியான ஹிந்திமொழியின் சொல் வளத்திற்குக் கருவூலமாகவும் சமஸ்கிருதம் இருப்பதாகக் கூறி, சமஸ்கிருத வளர்ச்சிக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள்பற்றி ஆய்வு செய்து,1956-57-ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிக்கை பெற்றிருக்கிறது. அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு சமஸ்கிருத வாரியம் அமைத்துள்ளது. வாரியத்தின் பரிந்துரையின்படி சமஸ்கிருத சன்ஸ்தான் 15-10-1970-இல் உருவாக்கபட்டுள்ளது. அதன்வழி சமஸ்கிருதத்திற்கு இந்தியாவில் 14 பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் மத்திய அரசின் முழு உதவியுடன் செயற்பட்டு வருகின்றன. இவை எல்லாம் செம்மொழியாக சமஸ்கிருதம் அறிவிக்கப்படாத காலத்தில் நடந்தவைதாம்.

÷தமிழ் மொழிக்கு மத்திய அரசின் நிதி கிடைக்கும் என்பது மட்டும் செம்மொழி கோரிக்கைக்குக் காரணம் என்று சொல்ல முடியவில்லை.

ஒரு மாநில அரசு தன் நிதி நிலை அறிக்கையில் தன் மொழிக்கு இவ்வளவுக்குமேல் செலவு செய்யமுடியாது என்ற கட்டுப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியை வளர்த்தெடுக்க அரசமைப்புச் சட்டம் குறுக்கே நிற்பதாகவும் தெரியவில்லை.

தமிழ்மொழி, நிதிக்காக அல்ல, தனக்குரிய தகுதிக்கான இடத்திற்காகப் போராடியது. புதிய பெருமைக்காகச் செம்மொழி அறிந்தேற்பைக் கோரவில்லை. தன்மீது கவிந்து கிடந்த சிறுமையைக் களைய செம்மொழி அறிந்தேற்பை வேண்டிப்பெற்றது.

÷எந்த மாநிலத்திலும் ஆட்சி மொழியாக இல்லாமல், ஆனால் இந்தியாவின் ஆட்சிமொழியாகிய ஹிந்தியை வளர்த்தெடுக்க சமஸ்கிருதத்தால் மட்டுமே முடியும் என்பதால் மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு அதிக நிதியைச் செலவிட்டு வந்திருக்கிறதே தவிர, சிலர் நினைத்ததைப் போலச் செம்மொழியாக மத்திய அரசு சமஸ்கிருதத்தை அறிவித்துவிட்டு அதனால் அதிக நிதியை ஆண்டுதோறும் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கவில்லை என்பதைப் போட்டிப் போட்டுக்கொண்டு செம்மொழி அறிவிப்புக்கு ஏங்கும் மொழிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

÷பெருமை மறுக்கப்பட்ட மொழிக்குக் கிடைத்த உரிமை, மாநில சுயாட்சி போல எங்கள் மொழிக்கும் வேண்டும் என்று வாதாடுவது அரசியல். ஒரு சில மொழிகளைச் செம்மொழி என்று மத்திய அரசு அறிவித்ததால், எங்கள் மொழிகளையும் அறிவிக்கவேண்டும் என்று அந்தந்த மாநிலத்தின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு கோரிக்கைகள் வருகின்றன. செம்மொழி அறிந்தேற்பு இல்லாத மொழிகள் "சிறப்பில்லாத மொழிகள்' என்ற கருத்தாக்கம் உருவாகியிருக்கிறது.

அவரவர்க்கு அவரவர் தாய்மொழி உயர்வானதுதான். இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்தும் போக்கையோ, இழிவுபடுத்தும் நோக்கையோ பண்பாடு பாராட்டாது. நேற்று வரை இந்தப் போக்கு இருந்திருக்கலாம்; இன்றும்கூட சிலரிடம் இருக்கலாம். அதற்காக அப் போக்குகளை மேலும் தொடர்வது அறிவுக்குப் பொருந்தாது.

ஒரு மொழியில் உள்ள கருத்துகளுடன் மாறுபடுவது வேறு, மொழியைச் சிறுமைப்படுத்துவது வேறு. இந்த அரசியலிலிருந்து மொழிகளை விடுவிக்க வேண்டும். மொழிகளின் தனித் தன்மைகள் காப்பாற்றப்பட வேண்டும்.

ஒரு மொழியைச் செம்மொழி என்று கூறும் உரிமை உலக அறிஞர்களிடம் இருந்தது, இருக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியும் உலக அறிஞர்களைத் தங்கள் மொழியைச் செம்மொழி என்று சொல்லுங்கள் என்று கட்டாயப்படுத்த முடியாது. அரசியல் அழுத்தங்களால், ஆய்வறிஞர்களைக் கட்டுப்படுத்த முடியாது.

÷தகுதி இல்லாத மொழிகளுக்கு நெருக்கடிகளால் வெளியிடப்படும் அறிவிக்கைகளால் மத்திய அரசின் நிதி கிடைக்கலாம். ஆனால் உலக அறிஞர்களின் அறிந்தேற்பு கிடைக்க வேண்டாமா? அரசியல், எந்த மொழியையும் செம்மொழி என்று அறிவிக்கச் செய்யலாம். அதனால் மட்டும் ஒரு மொழி செம்மொழி ஆகிவிடுமா என்ன?

கட்டுரையாளர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com