வெயிலின் அருமை வியாதியில் தெரியும்

அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது, வெயிலின் பாதிப்பும் குறைந்துவிட்டது. மழை பெய்யாதா, குளிர்ந்த சூழல் வராதா
Updated on
2 min read

அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது, வெயிலின் பாதிப்பும் குறைந்துவிட்டது. மழை பெய்யாதா, குளிர்ந்த சூழல் வராதா என்றே ஏங்குகிறோம்.

  ஆம்...இப்போதெல்லாம் நாம் அனைவருமே ஏப்ரல், மே வந்துவிட்டாலே மனதளவில் வெயிலை நினைத்து அஞ்சத் தொடங்கிவிடுகிறோம். வெயில் என்றாலே அதை  எதிரிப்படையை விட கொடுமையானதாகவே நினைக்கிறோம்.

  சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து திரிந்து உழைப்போர் இன்றைக்கும் நம்மில் இருக்கிறார்களே! அவர்கள் வெயிலை என்றைக்குமே வெறுத்ததில்லை. வெயில் வெறுக்கத்தக்கதும் அல்ல.

  வெயில் இல்லாவிடில் உலகில் உயிர்களே இல்லை என்பதுதான் உண்மை!

வெயிலில்தானே நமது தாவரங்கள் தமக்குத் தேவையான உணவை (ஸ்டார்ச்), இலைகள் மூலம்  உற்பத்திசெய்கின்றன. அந்தத் தாவரங்கள் மூலம் கிடைக்கும் காய்கறிகளைத்தானே நாமும் உணவாக உட்கொள்கிறோம். வெப்பச் சலனம் ஏற்பட்டால்தானே அது மழை பெய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்?

 அனைத்துக்கும் ஆதாரமானது வெயில் என்பதை உணர்த்துவதற்காக ஹிந்து மதத்தில், "சூரிய நமஸ்காரம்' என்ற பெயரில் கதிரவனை தினமும் காலையில் வணங்கச் சொல்லப்பட்டுள்ளது. இது அறிவியல் பூர்வ உண்மை என்பதை இப்போது அனைத்து மருத்துவர்களும் கூறிவருகிறார்கள். ஐரோப்பியர் வருகைக்கு முன்பெல்லாம் வெயிலைப் பற்றிய அச்சம் நம்மிடம் இருந்ததே இல்லை. கொடைக்கானல் வெப்பத்தையும், கோடை வெயிலையும் சரிசமமாகவே பாவித்து வந்துள்ளோம்.

  50 ஆண்டுக்கு முன்பெல்லாம் நம்மவர்கள் குளிர்சாதன வசதியை நினைத்துப் பார்த்ததுண்டா? வீட்டுக்குள் குளிர்சாதனப் பெட்டிகள் இருந்தது உண்டா? பெரும்பாலான வீடுகளில் மின்விசிறிகூட அவசியப்படவில்லை. ஆக, இயற்கை நமது உடலை சூழலுக்கு ஏற்பவே படைத்திருக்கிறது. நமது நாடு வெப்பமண்டலத்தில் இருப்பதால் நமது உடலும் வெப்பத்தைத் தாங்கும் வகையிலே இருந்தது.

  ஆனால், நாம் நமது வாழ்க்கைமுறையை மாற்றிவிட்டோம். வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மரங்களது எண்ணிக்கையைக் குறைத்துவிட்டோம். மனிதத் தலைகளை விட மரங்களின் கிளைகள் அதிகமாக இருக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டோம். விளைவு நம்மால் இயற்கை வெப்பத்தைக் கூட ஏற்கமுடியாத உடல் அமைப்பினராகிவிட்டோம்.

 தென்னை ஓலை, மஞ்சம் புல் ஆகியவற்றிலான கூரை வீடுகளையும் மங்களூர் ஓடு,  நாட்டு (சொருகு) ஓடுகளால் கூரை வேய்ந்த மண் சுவரால் ஆன வீடுகளையும் விட்டுவிட்டு சிமென்டை இழைத்துப் பூசிய, டைல்ஸ் பதிக்கப்பட்ட "கொதி அடுப்பு - புறாக் கூண்டு' வீடுகளைக் கட்டிக்கொண்டுவிட்டோம். வாணலியில் வறுபடும் சுண்டெலிகளாக வெந்துபோகிறோம்.

  வெப்பம் என்பது வெறும் சுற்றுச்சூழல் மட்டுமல்ல. அது நமது உடலுக்குத் தேவைப்படும் இயற்கை சக்தி. ஆம்... சூரிய வெயில் மூலம் நமது உடல் நமக்குத் தேவையான வைட்டமின் "டி'யை உற்பத்திசெய்கிறது. தோலுக்கு கீழ் உள்ள கொழுப்பில் வெயில்பட்டால் அது வேதிவினையில், வைட்டமின் "டி' ஆகிறது. அதன் மூலம் நமக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. 

 உடல் என்பதே பல்வேறு தாதுப் பொருள்களால் ஆனதே! அதன்படி ஒவ்வொரு தாதுவும் அந்தந்த அளவுக்கு இருக்கவேண்டியது அவசியம். இதில் ஏதாவது ஒரு தாது, அளவு குறைந்தாலும் அதற்கேற்ப உடல்நலம் கெடும். தாதுக்களைச் சீர்படுத்தும் வகையிலேயே சிகிச்சை முறையும் உள்ளது. ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை வைட்டமின் "டி'யே நிர்ணயிக்கிறது. கால்சியம் அளவு சரியாக இருந்தாலே நமது எலும்பு உறுதியாக இருக்கும். கால்சியம் குறைவால் எலும்பு வலு குறைந்து குழந்தைகளுக்கு "ரிக்கெட்ஸ்' எனும் பாதிப்பும், முதியோருக்கு மூட்டு வலி உள்ளிட்டவையும் ஏற்படும்.

 கால்சியம் குறைந்தால் தசை இறுக்கம் மற்றும் நரம்பு வலுவிழத்தல் பாதிப்பு ஏற்படும் என்பதும் மருத்துவர்களது கருத்து.

 ஆக வெப்பத்தை நாம் வெறுத்து நிழலில் மட்டுமே வாழ்ந்தால் பல்வேறு உடல் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

 முன்பெல்லாம் பள்ளிக்கும், பணிக்கும் நடந்துசெல்லும் வாய்ப்பு இருந்தது. இதனால் நமது உடல் மீது சூரிய ஒளிபட்டது. ஆனால், இப்போதெல்லாம் உடலில் சூரியன் நேரடியாகப் படுவதே அரிதாகிவிட்டது.

 சமீபகாலமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை சுமார் 75 சதவிகிதம் பேருக்கு வைட்டமின் "டி' குறைபாடால் ஏற்படும் பாதிப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 முன்பெல்லாம் அறுபது வயதைத் தாண்டியவர்களுக்கு வரும் மூட்டுவலி தற்போது 45 வயதினருக்கே வந்துவிடுகிறது!   "வெயிலின் அருமை நிழலில் தெரியும்' என்பது பழமொழி. "வெயிலின் அருமை வியாதியில் தெரியும்' என்பது புதுமொழி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com