இங்கிலாந்தில் "உல்ரிச்' என்ற புறநகரம். மே 22-ஆம் நாள் ராணுவ சிப்பாய் ரிட்லே என்பவர், ""உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு உதவி செய்யுங்கள்'' என்ற வாசகம் தாங்கிய மேலாடை அணிந்து தெருவில் சென்று கொண்டிருந்தபோது அவரை இருவர் பட்டப்பகலில் மடக்கி, கையில் வைத்திருந்த கொடு அரிவாளால் (ரிட்லேயின்) தலையைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்தனர்.
அருகிலிருந்து இதைப் பார்த்து பயந்து பதறிய பொது மக்களை, ""துணிவிருந்தால் படம் பிடியுங்கள்'' என்று சவால் விட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தீவிரவாதிகளையும் சுட்டுப் பிடித்தனர்; இரு தீவிரவாதிகளும் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில்.
ஒசாமா பின் லாடன் அழிக்கப்பட்டாலும் ஒசாமாவின் தாக்கம் அழியவில்லை; இத்தகைய தீவிரவாதச் சிந்தனைகள் கொடிய நோய் போல் பரவுவதற்கு இணையதளம் வழிவிடுகிறது. தன்னிச்சையாக தீவிரவாதத்தில் ஈடுபட உந்தப்படுபவர்களுக்கு உளவுப் பிரிவு இட்ட பெயர், ""தீவிரவாத ஓநாய்கள்!''. அவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா, முஜாஹிதீன், அல்-காய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் தொடர்போ ஆதரவோ தேவையில்லை. இவ்வாறு தீவிரவாத மனநோயால் பாதிக்கப்பட்ட தனி நபர்களை இனம் கண்டு கண்காணிப்பது மிகக் கடினம்.
சி.ஐ.ஏ. அமைப்பானது அமெரிக்காவின் வெளிவிவகாரத் தகவல் சேகரிக்கும் அமைப்பு, வெளிநாடுகளிலிருந்து வரும் எதிர்ப்புகள் உலகநாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், குழுமநலங்கள், தூதரகங்கள் இவற்றின் பாதுகாப்பிற்கு அதிகக் கவனம் செலுத்தியது. உள்நாட்டிலிருந்து பாதுகாப்பிற்கு பாதிப்பு வராது என்ற தைரியம், நம்பிக்கை. ஆனால் 9/11 நியூயார்க் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு எவ்வாறு ஊடுருவப்பட்டது என்பதை அமெரிக்கப் பாதுகாப்பு உயர்நிலைக் குழு ஆராய்ந்தது. பல்முனைகளிலிருந்து வரும் தகவல்கள் ஒருங்கிணைந்து ஆராயப்படுவதில்லை என்பது முக்கிய குறை. ராணுவம், வெளி விவகாரம், உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை போன்ற அமைப்புகளின் உளவுப் பிரிவுகள் தன்னிச்சையாகச் செயல்பட்டன. முழுமையான நிலவரம் புலப்படுவதில் தாமதம் என்பது பிரதான குறைபாடு. அதன் பிறகுதான் அதிபர் புஷ் நிர்வாகம், "தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம்' என்ற அமைப்பை ஏற்படுத்தியது.
இதற்கு, மக்கள் பிரதிநிதிகள் சபைகளின் விவாதத்திற்குப் பிறகு சட்டவடிவம் கொடுக்கப்பட்டது. எந்த ஒரு அமைப்பின் கட்டுக்குள்ளும் இல்லாது சுதந்திரமாகச் செயல்பட வழிவகுக்கப்பட்டது. பல்துறை தகவல் சேகரிப்பு மையங்களின் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு இம்மையத்தில் ஒருங்கிணைக்கப்படும். அதன் மூலம் பாரபட்சமற்ற ஒரு நிலையான, தெளிவான நிலவரம் வெளிவரும்.
இதன் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கை தீவிரவாதத்தை அண்டவிடாது என்பது திண்ணம். அமெரிக்கா இந்த அமைப்பின் மூலம் கடந்த 10 வருடங்களில் உள்நாட்டுப் பாதுகாப்பினை பலப்படுத்தியது. தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முற்படாமலில்லை. ஆனால், அவை தக்க சமயத்தில் முறியடிக்கப்பட்டு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
நமது நாட்டை எடுத்துக்கொண்டால் எண்பதுகளில் பஞ்சாப் மாநிலத் தீவிரவாதம், காவல்துறைத் தலைவர் கே.பி.எஸ். கில்லின் தீர்க்கமான செயலாக்கத்தால் முடிவிற்கு வந்தது. அதன் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த காவல் அதிகாரிகள் பின்பு பல பிரச்னைகளைச் சந்தித்தனர். நிர்வாகம் அவர்களுக்கு உதவவில்லை என்பது தனிக்கதை. அவை காவல்துறையின் பணி சார்ந்த சங்கடங்கள்!
1992 அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு மதவாதப் பிரச்னை தலைதூக்கியது. 1993-இல் மும்பை தொடர் குண்டுவெடிப்பும், 1998 கோயம்பத்தூர் மதக்கலவரமும் உளவுத்துறையின் தகவல் சேகரிப்பில் உள்ள தொய்வுகளை முன்னிறுத்தியது. "நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல் கொடுக்கப்படவில்லை' என்று உள்ளூர் காவல் நிர்வாகமும், "தகவல் கொடுக்கப்பட்டது, நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்று மத்திய உளவுத்துறையும் ஒன்றை ஒன்று குற்றம் கூறி தத்தம் நிலையைக் காப்பாற்றிக்கொள்ள முற்பட்டன.
1999-இல் நடந்த கார்கில் யுத்தம், தேசிய அளவில் தகவல் ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்த்தியது. நவம்பர் 26, 2008-இல் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு "தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம்', அமெரிக்காவில் இயங்குவதுபோல அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
கார்கில் போருக்குப் பிறகு மத்திய அமைச்சர்கள் குழு, தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பிற்கு பல்துறை மையம் (மல்டி ஏஜென்சி) அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதன்பேரில் "எம்.ஏ.சி.' என்ற அமைப்பு 2000-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையம், தீவிரவாத எதிர்ப்பு மையத்தில் உளவுத்துறை பணியாளார்கள் மட்டுமின்றி மற்ற உளவுத்துறை பிரிவுகளான "ராணுவம், வெளிநாட்டு உளவுப்பிரிவு, மாநில உளவுப் பிரிவு' ஆகியவற்றிலிருந்தும் நிபுணர்களை இணைத்துச் செயல்பட வேண்டும் என்று செய்த பரிந்துரையும் இதுவரை செயல்படுத்தப்படுவதில்லை.
தகவல் சேகரிப்பில் மாநில உளவுத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. மொழிப் பரிச்சயம், நாட்டு நடப்பு, மக்கள் மனநிலை இவை உணர்ந்த மாநில உளவுத்துறையை விட்டு மத்திய உளவுப்பிரிவை முன்னிலைப்படுத்தி ஓர் ஒழுங்கற்ற பூதாகரமான துறையை உருவாக்குவது பயனளிக்காது என்பது நிபுணர்களின் கருத்து.
மேலும், அரசியல் சாசனப்படி "சட்டம் - ஒழுங்கு' பராமரிப்பு மாநில அரசின் ஆளுகைக்கு உள்பட்டது. அவ்வாறு இருக்கையில் மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகத் ""தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம்'' ஏற்படுத்தியது தவறான அணுகுமுறை.
பல்துறை மையம் 2000-த்தில் தோற்றுவிக்கப்பட்டாலும், 2008-இல்தான் நடைமுறைகள் வகுக்கப்பட்டன. அதுவும் முழுமையாகச் செயல்படுத்தாத நிலையில், மேலும் ஒரு மையத்தை ஏற்படுத்தும் நோக்கம் தெளிவுபடுத்தப்படவில்லை.
பயங்கரவாதத்தை முழுமையாக எதிர்ப்பதற்கு, மாநில அளவில் மையங்களை ஏற்படுத்தி, அவற்றைப் பலப்படுத்தி, மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். மத்திய உளவுத்துறை, மாநில உளவுப் பிரிவுகளோடு ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் துல்லியமான தகவல்கள் கிடைக்கும். தடுப்பு நடவடிக்கையையும் எடுக்க முடியும்.
"தேசிய பயங்கரவாத எதிப்பு மையம்', நிர்வாக ஆணையாக - "சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் 1967' மூலமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதற்கு வழக்கு விசாரணை, கைது செய்தல், சோதனை செய்தல் போன்ற காவல்துறைக்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நுண்ணறிவுப் பிரிவிற்கு இத்தகைய அதிகாரம் கொடுப்பது தவறு. அது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு வாய்ப்புள்ளது.
தேசிய புலனய்வுப் பிரிவு (என்.ஐ.ஏ.) மும்பை குண்டு வெடிப்பிற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டது. அதன் அமைப்பே மாநில அரசின் அதிகார வரம்புக்கு பாதகம் விளைவுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பி.எஸ்.எஃப். (எல்லை பாதுகாப்புப் படை) சட்டம் எல்லைப்பகுதி மட்டுமில்லாது உள்நாட்டுப் பகுதியிலும் சில சட்டங்களை அமலாக்கவும், கைது செய்யவும் அதிகாரங்கள் பெறும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவையெல்லாம் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் வரையப்பட்டுள்ள மாற்றங்கள். பல மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்தியப் புலனாய்வுத்துறை, மாநில அரசின் அனுமதியின்றி வழக்குப் புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது. ஆனால், என்.ஐ.ஏ. அதற்கு விதிவிலக்கு. வழக்குகளை தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம். இந்தப் புலனாய்வுப் பிரிவு எற்படுத்திய பிறகும் எந்த அளவிற்குச் சிறப்பாகச் செய்லபட்டது என்பதை அளவிடாத நிலையில், மேலும் ஒரு அமைப்பை ஏற்படுத்த என்ன காரணம்?
மேற்கண்ட வாதங்களை தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பதில் உள்ள சிக்கல்களை தமிழக முதலமைச்சர் தில்லியில் நடந்த மாநாட்டில் தமது உரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உளவுப்பிரிவின் செயல்பாட்டிற்கே அது உகந்தது அல்ல; கைது என்றால் மனித உரிமைப் பிரச்னைகள் எழும். நீதிமன்றத்தில் வழக்குகளின் முடிவுகளைத் தெரிவித்து நீதிமன்ற விசாரணையில் பங்குகொள்ள வேண்டும். உளவுத்துறையின் முக்கியப் பணியான தகவல் சேகரிப்பு தடைப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் உளவுப்பிரிவிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்தச் சலுகை கேள்விக்குறியாகும்.
அன்றாடம் காவல் நிலையங்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டும். சண்டை சச்சரவுகள், மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் ஒழுங்குபடுத்துதல் போன்றவை ஒரு வகை. இரண்டாவது, வட்டாரக் குற்றங்கள்,அந்தப் பகுதிக்கே உரித்தானவை. மூன்றாவது வகை, வட்டார ஆளுகைக்கு அப்பாற்பட்ட குற்றங்கள், வேறு இடங்களின் நிகழ்வுகளின் தாக்கத்தால் ஏற்படும் வன்முறைகள். மூன்றாம் வகைதான் தீவிரவாத மதவாத நிகழ்வுகள்.
இதைக் கணக்கிட்டு தகுந்த தடுப்பு நடவடிக்கையும் அமைதி நிலை நாட்டும் வழிகாட்டுதலையும் ஆராய்ந்து நடைமுறைப்படுத்தும் முக்கிய பொறுப்பு உயர் காவல் அதிகாரிகளுடையது.
ஆனால், எந்த அசம்பாவிதமாக இருந்தாலும் கொலை, கொள்ளை, தீவிரவாதம், ஜாதிச்சண்டை, இனக்கலவரம், வன்முறை எதுவாக இருந்தாலும் உள்ளூர் காவல் நிலையம்தான் சந்திக்க வேண்டும். நேரடியாகக் களத்தில் உள்ளவர்களுக்கு வலிமை சேர்க்காது. உயர்நிலை அமைப்புகள் நிறுவினால் அதனால் பயன் இல்லை. காவல் களப்பணியாளர்கள் கரத்தைப் பலப்படுத்த வேண்டும். எண்ணிக்கையால் மட்டுமல்ல, ஆயுதங்களின் அதிகரிப்பில் இல்லை - புத்திக்கூர்மையான நடவடிக்கையில் இருக்கிறது. முன்கூட்டியே தகவல் சேகரிக்கும் நுட்பம் மேம்பட வேண்டும்.
அமைதிப்பாதையை வகுக்கும் பாதையே அமைதியற்றது. அமைதியற்ற போராட்டங்கள் தவிர்க்க முடியாது. சமரச விதைகள் வேரூன்ற எல்லோரும் பாடுபடவேண்டும். சமுதாய வேற்றுமைகளை வைத்து ஆதாயம் தேடுவதிலேயே சிலர் குறியாக இருக்கின்றார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண விழைவதே விவேகம். அதன்மூலம்தான், "தீய ஓநாய்களை' அழிக்க முடியும்.
கட்டுரையாளர்: முன்னாள் காவல் துறைத் தலைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.