ஏமாற்றத்தில் இருந்து மாற்றத்துக்கு...

கடந்த கால ஏமாற்றங்களின் விளைவாகவும், வருங்கால மாற்றங்களுக்கான மக்களின் எதிர்பார்ப்புகளாகவும் தேர்தல் முடிவுகள் அமைகின்றன.
Updated on
2 min read

கடந்த கால ஏமாற்றங்களின் விளைவாகவும், வருங்கால மாற்றங்களுக்கான மக்களின் எதிர்பார்ப்புகளாகவும் தேர்தல் முடிவுகள் அமைகின்றன.

மேற்கத்திய நாடுகள் உருவாக்கியுள்ள, "சண்டித்தனம்' செய்யும் நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஈரானின் அதிபராக, சீர்திருத்தவாதியாக அறியப்படும் ஹசன் ரூஹானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடிப்படைவாதத்தைக் கொள்கையாகக் கொண்ட அகமதி நிஜாத் ஆட்சியால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் இருந்து விடுபட்டு மாற்றம் வேண்டும் என்ற நோக்கிலேயே சீர்திருத்தக் கொள்கைகளைக் கொண்ட ரூஹானியை ஈரான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இஸ்ரேல், மேற்கத்திய நாடுகளுடனான உறவைக் கொதிநிலையில் வைத்திருந்ததன் மூலமாகவே அதிகம் பிரபலமானவர் அகமதி நிஜாத். அணு ஆயுதத் தயாரிப்பில் அகமதி நிஜாத் காட்டிய ஆர்வம் ஈரான் மீது மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளைக் கடுமையாக்கியது.

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைத் தடுப்பது உள்பட அடுக்கடுக்காக ஐ.நா.வும், அமெரிக்காவும் விதித்த தடைகளால் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, நாணய மதிப்பு சரிவு உள்ளிட்ட பிரச்னைகளை ஈரான் மக்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

சர்வதேச அளவில் எண்ணெய் வளத்தில் 4-ஆவது இடம், இயற்கை எரிவாயு வளத்தில் 2-ஆவது இடத்தைக் கொண்டிருந்தபோதிலும் ஈரானின் பொருளாதாரம் இறங்கு முகமாகவே உள்ளதற்கு நிஜாத்தின் ஆவேசமான வெளியுறவுக் கொள்கைகளே காரணமாக அமைந்தன.

"ஹமாஸ்' உள்ளிட்ட அமைப்புகளுக்கு நேரடியாக நிஜாத் அளித்த ஆதரவு கடந்த ஆண்டு இறுதியில், அடுத்து ஓர் உலகப் போர் ஏற்படும் அளவுக்கு பதற்றத்தை அதிகரித்தது. ஈரான் மீதான இஸ்ரேலின் பகையுணர்வு எப்போதுமே மாற்ற முடியாததாகிவிட்டது.

ஈரான் நாட்டு சட்டப்படி அதிபராக இருப்பவர் தொடர்ந்து இரு முறைக்கு மேல் அப்பதவிக்கு போட்டியிட முடியாது என்பதால் அகமதி நிஜாத் போட்டியில் இல்லை. இதுவரை அவர் கடைப்பிடித்து வந்த கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கையுடைய ரூஹானி அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈரானின் தலைமை மாற்றத்தை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வரவேற்றுள்ள நிலையில், அந்நாட்டுக்கு எதிரான தடைகளில் எவ்விதத் தளர்வையும் காட்டக் கூடாது என்று இஸ்ரேல் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத் தடைகளை நீக்கி, ஈரானை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதே தனது முதல் பணி என்று கூறியுள்ள ரூஹானி, "அணுசக்தி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படும். அணுசக்திக் கொள்கையில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்போம்' என மேற்கு நோக்கி வெள்ளைக் கொடியைக் காட்டியுள்ளார். அதனை ஆமோதிக்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

எனினும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் எவ்வளவு விரைவில் தளர்த்திக் கொள்ளப்படும் என்பதும், அதற்காக எந்த மாதிரியான நிபந்தனைகள் விதிக்கப்படும் என்பதுமே அடுத்து எழும் கேள்வி. எனினும் நிலைமை முன்பு இருந்தது போன்று மோசமான நிலையை எட்டாது என்பது உறுதி.

அணு ஆயுதம் தயாரிக்கிறது என்ற ஒரே குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. பல ஆயிரம் உயிரிழப்புகளுக்குப் பின்பு, இராக்கில் அணு ஆயுதம் ஏதுமில்லை என்பது தெரியவந்தது. அப்போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை இராக் மக்கள் இன்றுவரை அனுபவித்து வருகின்றனர்.

சி.டி.பி.டி. எனும் முழுமையான அணு ஆயுத சோதனைத் தடை உடன்படிக்கை 1996-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பு 1945 முதல் 1996-வரை சர்வதேச அளவில் 2,000-க்கும் மேற்பட்ட அணு ஆயுதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 1000-க்கும் மேற்பட்டவை அமெரிக்காவிலும் 700-க்கும் மேற்பட்டவை ரஷியாவிலும், 200-க்கும் மேற்பட்டவை பிரான்ஸிலும் நடந்தவை. சீனா, பிரிட்டனால் தலா 50-க்கும் மேற்பட்ட அணு ஆயுதச் சோதனைகள் நடைபெற்றுள்ளன. தங்கள் தரப்பில் எல்லாச் சோதனைகளையும் முடித்த பின்பு பிறநாடுகள் அணு ஆயுதச் சோதனை நடத்தத் தடை விதிக்கும் ஒப்பந்தத்தை ஆதிக்க நாடுகள் கொண்டுவந்தன.

எனினும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் பொருளாதாரத் தடைக்கு ஈடு கொடுக்க முடியாத சூழ்நிலையில்தான் ஈரான் உள்ளது. எனவே, ஈரான் அதிபர் எடுத்துள்ளது புத்திசாலித்தனமான முடிவு; அந்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஈரானில் தேர்தல் மூலம் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அந்நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக மாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com