காலாவதியாகும் கரன்ஸி புழக்கம்!

சூரியனை' மையமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட கிரகங்கள் சுற்றி வருகின்றன என்பதுபோல, பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் "பணத்தையே' மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.
Updated on
2 min read

சூரியனை' மையமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட கிரகங்கள் சுற்றி வருகின்றன என்பதுபோல, பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் "பணத்தையே' மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்தப் பணம் உருவான கதை மிக நீண்டது என்றாலும், பண்டமாற்று முறை தொடங்கி காகிதப் பணம் பயன்பாட்டுக்கு வந்த விதம் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த வரலாறுதான்.

பண்டங்களையும், சேவைகளையும் மக்கள் தங்களுக்குள் எளிதாகப் பரிமாறிக் கொள்ள இணையான மதிப்பாக அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள ஆவணம் என்பதே காகிதப் பணத்துக்கான எளிதான விளக்கம். மன்னராட்சிக் காலத்தில் உலோகங்களால் ஆன நாணயங்களாக வார்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பணம், கால ஓட்டத்தில் காகிதத்திலும் அச்சிடப்பட்டு மக்களிடையே புழக்கத்துக்கு வந்து நீண்டகாலமாக நிலைபெற்றுள்ளது.

பின்னர் காசோலை, கேட்பு வரைவோலை (டிமாண்ட் டிராஃப்ட்), போஸ்டல் ஆர்டர், மணி ஆர்டர் என பணம் பல வடிவங்கள் பெற்றாலும், அவை தொடர்ந்து காகித வடிவிலேயே இருந்தன. "பணம்' என்றாலே அதற்குக் காகிதம் ஒன்றே வடிவம் என்பது அனைவரது மனதிலும் இப்போதும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.

ஆனால், தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனால் கடந்த நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்த ""பிளாஸ்டிக் கரன்ஸி'' என்று அழைக்கப்படும் டெபிட், கிரெடிட் கார்டுகள், ஏடிஎம் கார்டு, கிளப் கார்டு, பெட்ரோல் கார்டு, குளோபல் கார்டு உள்ளிட்டவை சர்வதேச அளவில் காகிதப் பணத்தின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்கத் தொடங்கின.

இந்தியாவில் கூட இப்போது வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவருக்குமே குறைந்தபட்சம் ஏடிஎம் கார்டு மட்டுமாவது வழங்கப்படுகிறது. சிறு நகரங்களில் உள்ள கடைகளில் கூட "ஸ்வைப்பிங் மிஷின்கள்' வந்து விட்டன. மணிபர்ஸ்களில் பணம் பிடித்திருந்த இடங்களை டெபிட், கிரெட் உள்ளிட்ட கார்டுகள் ஆக்கிரமிக்கத் தொடங்விட்டன.

தொழில்நுட்ப வளர்ச்சி அடுத்த கட்டமாக காகிதப் பணத்தின் பயன்பாட்டை மேலும் குறைக்க வழி செய்திருப்பது "எலெக்ட்ரானிக்' பணம். மின்னணுத் தொழில்நுட்பம் மூலம் பணத்தை இன்டர்நெட் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளும் முறைதான் இது.

இன்டர்நெட், மொபைல் பேங்கிங் மூலம் பணத்தை நமது வங்கிக் கணக்கில் இருந்து அடுத்தவர் கணக்கில் செலுத்துவது, செல்போன் கட்டணம், மின் கட்டணம் முதல் வெளிநாட்டில் இருப்பவர்களுக்குப் பணம் அளிப்பது வரை நமது வங்கிக் கணக்கு மூலம் மின்னணுத் தொழில்நுட்பத்தில் பணப் பரிமாற்றம் செய்து கொள்வதில் சாத்தியமாகியுள்ளது. உள்ளங்கையில் இருக்கும் செல்போனை வைத்துக் கொண்டு உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பணத்தை வழங்க முடியும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்புவரை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.

காகிதப் பணத்தைக் கைவிட்டு மின்னணு பணத்தை மட்டுமே பரிமாற்றம் செய்யும் சேவையை அளித்து வரும் பேபால், வெப் மணி, கேஷ் யூ உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் பெரும் வரவேற்புடன் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.

கிரெடிட் கார்டுகளில் பணத்தைத் திரும்பச் செலுத்தக் கிடைக்கும் சலுகை நாள்களுக்காக, "கார்டு அக்செப்டட்' கடைகளுக்கு மட்டுமே செல்லும் நடுத்தர வகுப்பினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நமது பெருநகரங்களில் பணப் பரிமாற்றம் அனைத்துமே மின்னணுப் பரிமாற்றமாகிவிட்ட நிலையில் காகிதப் பணத்தை கையால் தொடாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போதைய சூழ்நிலையில் ""காஃபி டே''யில் கண் விழித்து, ""கேஎஃப்சி''யில் உணவு முடித்து, ""பிவிஆரில்'' பொழுதைக் கழிப்பவர்கள் மட்டும்தான் காகிதப் பணத்தைத் தொடாதவர்கள் என்ற நிலை இருந்தாலும், வெகு விரைவில் சாமானிய மனிதர்கள் மத்தியிலும் காகிதப்பணப் பயன்பாடு பெருமளவில் குறையும்.

சிறு நிறுவனங்களில் கூட சம்பளம் என்பது வங்கிக் கணக்கு மூலம் செலுத்தப்படுவது, கிராமப் புறங்களில் ஏடிஎம், டெபிட் கார்டு பயன்பாடு அதிகரித்திருப்பது உள்ளிட்டவை இதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள்.

நாடு எந்தத் துறையில் வளர்ச்சி அடைந்தாலும் அதன் பயன் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேரும்போதுதான் முழுமையடையும். மின்னணுப் பணப் பயன்பாடு என்பதும் அதில் அடங்கும். மாற்றங்கள் வருவது என்பது முன்பு மெதுவான நிகழ்வாக இருந்தது. ஆனால் இப்போது வேகமாக வரும் மாற்றங்களை மக்கள் எளிதாக ஏற்றுக் கொள்வது அதிகரித்துள்ளது. எனவே மிகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர பிற சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் கைகளில் காகிதப் பணப் பயன்பாடு அருகிவிடும் நாள் தொலைவில் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com