வன்முறை போக்குதி

நிர்பயா..' "பயத்தை வென்றவள்', "பயம் அறியாதவள்' - ஊடகங்கள் இட்ட பெயர். வினோதினி, திவ்யா - நம்மை எல்லாம் ஆட்டிப்படைக்கும் "சக்தி' ஏன் இந்த இளந்தளிர்களைப் பாதுகாக்கவில்லை. பூஜிக்கும் மலராகப் பாதுகாக்க வேண்டியதை இச்சைக்கு ஆளாக்கினரே?
Updated on
4 min read

நிர்பயா..' "பயத்தை வென்றவள்', "பயம் அறியாதவள்' - ஊடகங்கள் இட்ட பெயர். வினோதினி, திவ்யா - நம்மை எல்லாம் ஆட்டிப்படைக்கும் "சக்தி' ஏன் இந்த இளந்தளிர்களைப் பாதுகாக்கவில்லை. பூஜிக்கும் மலராகப் பாதுகாக்க வேண்டியதை இச்சைக்கு ஆளாக்கினரே?

இந்த வருடம் மனித உரிமைகள் ஆணையம் மக்கள் முன் வைத்த மையக் கருத்து - ""எல்லோருடைய குரலும் ஒலிக்கட்டும்; அவர்களது சிந்தனைகள் கேட்கப்படட்டும்''. ஆனால் இந்தியச் சமுதாயம் இதைக் கேட்கவில்லை. பெண் பாதுகாப்புக்கான பதினாறு நாள்கள் மறந்தோம். ஆனால் "டிசம்பர் பதினாறு' மறக்காமல் தலைநகர் தில்லியில் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரம் அரங்கேற்றப்பட்டது. ஒலிக்க வேண்டிய, கேட்க வேண்டிய குரல் ஒடுக்கப்பட்டது கோரமான முறையில்.

நீதியரசர் வர்மா தலைமையில் மூன்று நபர் குழு அமைத்து, முப்பது நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க அரசு கொடுத்த அவகாசம் முடிவதற்குள், இந்தக் குழு 656 பக்கம் கொண்ட அறிக்கையைச் சமர்ப்பித்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த அறிக்கையில் பெண்களுக்கு எதிரான முக்கியமான குற்றங்கள் கற்பழிப்பு, பாலியல் கொடுமை, பலாத்காரம், மானபங்கப்படுத்துதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

இவை தவிர பெண்களைப் பின் தொடர்தல், கணினி, கைப்பேசி மூலமாக வக்கிரமமான முறையில் தொடர்பு கொள்ளுதல் போன்ற பல குற்றங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகக் கருதப்பட்டு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பெண்களை அடிமைப்படுத்துவது, கைப்பாவையாக நடத்துவது, அபகரிப்பில் பெருமை கொள்ளுதல் போன்றவை ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயத்தில் தொடர்ந்து நிலவி வரும் அவலம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சமுதாய கலாசாரப் பின்னணியில் ஆராய வேண்டும்.

சமுதாய நிலைப்பாடுகள், வீடுகளில் பெண்களை நடத்தும் முறை, கல்வி போதிக்கும் முறை, நல்லியல்புகள் இளைய சமுதாயத்திற்குப் பயிற்றுவிக்கும் முறை இவற்றின் தாக்கம் மக்களின் நடத்தையில் வெளிப்படுகிறது. சரியான வழிகாட்டுதல் இல்லாதபோது, அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகு ஓலமிடுவதில் என்ன பயன்?

பொறுப்பில் இருப்பவர்களின் நடத்தை, அரசியல் நேர்மை, குற்றவியல் ஆளுமையில் திறன், முழுமையான சட்டங்கள் அவற்றைத் தலையீடு இல்லாமல் அமலாக்கும் திறமை, காவல் துறையின் செயலாக்கம், சாதாரணக் காவலரிலிருந்து மேல் அதிகாரி வரை பணியில் ஈடுபாடு, பங்களிப்பு - இவையெல்லாம் பூரணமாக ஆராய வேண்டும். இத்தகைய அடித்தளம் வலிமை பெற்றால்தான் மேல் கட்டமைப்பு உறுதியாக இயங்கும்.

காவல்துறையினருக்கு, பாலியல் கொடுமைகள் பற்றிய புரிந்துணர்வு அவசியம். தில்லியில் ஊடகம் ஒன்று கீழ்நிலைக் காவல்துறையினரிடம் ஆய்வு நடத்தியது. யதார்த்தமாக - எதற்காக ஆய்வு என்று சொல்லாமல் - காவல்நிலைய அதிகாரிகளிடம், பெண்கள் பொது இடங்களில் மற்றும் பணியிடங்களில் அனுபவிக்கும் துன்பங்கள் இன்னல்கள் பற்றி வினவிய போது மிக அலட்சியமான பதில்கள் வந்தன.

""பெண்கள் தங்களது நடத்தையினால்தான் பழிக்கு உள்ளாகிறார்கள், நடை உடை பாவனை மூலம் இளைஞர்களை ஈர்க்கிறார்கள், வம்பை விலைக்கு வாங்குகிறார்கள்'' என்பன போன்ற கருத்துகள் வெளிவந்தன. அதாவது இத்தகைய குற்றங்கள் நிகழ்வதற்கு பெண்களே காரணம் என்ற காவல்நிலையக் காவல்பணியாளர்களின் அணுகுமுறை விபரீதமானது. அவர்கள்தான் மக்களோடு தினமும் பழகுகிறார்கள். குற்றங்கள் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டியவர்கள், நிகழ்ந்த குற்றங்களில் சட்ட அமலாக்கம் மூலம் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பொறுப்பானவர்களின் எண்ணங்கள் உணர்வுகள் நேரும் கூறுமாக இருக்க வேண்டும்.

காவல்துறையினருக்கு பெண்கள் சந்திக்கும் பிரச்னை பற்றி புரிதல் இல்லை, உணர்வுகளும் மந்தமான நிலை, பெண் உரிமைச் சுதந்திரம் பற்றி தவறான மதிப்பீடு. இவை தில்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் முக்கியமாக வெளிவந்த முடிவுகள். வேதனைதான், ஆனால் உண்மை. ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் சராசரி சமுதாய உணர்வும் இதுதான் என்பதை மறுக்க முடியாது. சமுதாயத்திலிருந்து வந்தவர்கள்தானே காவல்துறையினரும். காவல் நிலையத்திற்கு வரும் புகார்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். விசாரித்து பைசல் செய்ய வேண்டிய மனுக்கள் இந்திய தண்டனை சட்டத்தில் வரக்கூடிய வழக்குகள். சமுதாய சட்டம், சிறப்பு சட்டம் மற்றும் சில்லறை வழக்குகள்.

இந்திய தண்டனைச் சட்ட வழக்குகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. ஏனெனில் அவை சட்டம், ஒழுங்கு சம்பந்தப்பட்டவை; மற்ற வழக்குகளில் பொறுத்திருந்துதான் நடவடிக்கை என்ற நிர்பந்தம். அதற்காகத்தான் சமுதாயச் சட்டங்களை அமலாக்குவதற்கு பிரத்யேகக் காவல் பிரிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சிணைக் கொடுமை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குத் தொல்லை ஒழிப்புச் சட்டம் என்று பல சமுதாயப் பிரிவு சட்டங்களின் அமலாக்கம் முழுமையாக நடைபெற வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவுகள் முறையே 376, 354, 366, 366அ, 372, 373, 376அ, 498அ, மற்றும் 509. சமுதாயச் சட்டப் பிரிவுகள் போலவே இவ்வழக்குகளில் அதிகக் கவனம் செலுத்தப்படாத நிலையும் உண்டு. பணிச்சுமையும் பல்வேறு பொறுப்புகளால் அலைச்சலும் இந்த நிலைக்குக் காரணமாகிறது. எவ்வளவு வீடுகளில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கள்ளத்தொடர்பு வைத்துகொள்ளும் கணவன்மார்கள், குடித்துவிட்டு குழந்தைகள் முன்னால் மனைவியை அடித்துத் துவைக்கும் கயவர்கள் - கனவான்களாக சமுதாயத்தில் நடமாடுகிறார்கள். தகாத உறவினை நியாயப்படுத்தும் வாதங்களும் வைக்கப்படுகின்றன.

மனைவி மீது சந்தேகப்படும் கணவன்கள் அவள் எங்கு சென்றாலும் மறைமுகமாகப் பின் தொடர்வது, வேறு ஆணிடம் பேசினால் கண்டிப்பது, சொல்லம்புகளால் துளைப்பது, சரமாரியாக அடிப்பது என்று சொல்ல முடியாத கஷ்டங்கள். இத்தகைய அவஸ்தைகளைத் தாங்கமாட்டாமல் தற்கொலைக்குத் தள்ளப்படும் பெண்கள், பலர் அதையும் மீறி வாழ்பவர்கள். அன்றாடம் செத்துப்பிழைக்கும் வாழ்க்கை எந்த விதத்தில் சந்தோஷத்தைக் கொடுக்கும்?

பொருளாதார நிபுணர் அமார்த்திய சென், பெண் குழந்தைகள் பற்றிக் கூறியுள்ள தகவல் நம்மை அதிர வைக்கும். ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் வறுமையால் ஊட்டச்சத்துக் குறைவு காரணமாகக் காணாமல் போய்விடுகிறார்கள் என்பது உண்மை. இதோடு பாலியல் கொடுமை, கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காகக் கடத்தல் இவற்றில் சிக்கி பெண் குழந்தைகள் மாயமாகிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறைக்கு இத்தகைய புரிதல், கூருணர்ச்சி மேம்படுத்தும் பயிலரங்கம் காவலரிலிருந்து தலைமை இயக்குனர் வரை எல்லா களப்பணியாளர்களுக்கும் 2002-ஆம் வருடம் கொடுக்கப்பட்டது. எந்த ஒரு மாநிலத்திலும் இத்தகைய விரிவான வகையில் பாகுபாடு இல்லாது எல்லாப் பணியாளர்களும் பங்கேற்ற பயிற்சி நடத்தப்படவில்லை, தமிழ்நாடு காவல்துறையில் மட்டும்தான் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது சிறப்பு.

நடந்த குற்றங்களை ஆராய்ந்தால் சில தீர்மானங்கள் தெளிவாகும். 2010-ஆம் வருடம் இந்தியா குற்றாவணகத்தின் புள்ளிவிவரப்படி 22.24 லட்சம் வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் பதிவாகின. அவற்றில் 2.13 லட்சம் வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள். மொத்தம் பதிவு செய்த வழக்குகளில் 9.6 சதவிகிதம். மொத்தம் 22,172 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின. இது கடந்த ஐந்து வருடத்தில் 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அதிகமாக 3,135 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின.

பதிவான 22,193 வழக்குகளில், 1975 பாதிக்கப்பட்டவர்கள் 14 வயதுக்குக் குறைந்த சிறுமிகள், 3,570 பெண்கள் 16 வயதுக்கு உட்பட்டவர், 12,749 பெண்கள் 18 வயதிலிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள். வக்கிர புத்தியுள்ள பெற்றோர்களும் உறவினர்களும் 288 வழக்குகளில் குற்றவாளிகள், 7,816 வழக்குகளில் அக்கம்பக்கத்து வீட்டினரும் 1,344 வழக்குகளில் நெருங்கிய உறவினர்களும் குற்றவாளிகள். மொத்ததத்தில் 90 சதவிகிதம் வழக்குகளில் குற்றவாளிகள் தெரிந்திருக்கிறது. இதிலிருந்து குற்றவாளிகள் தெரிந்த வழக்குகளில் விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததால் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவாகிறது எனக் கொள்ளலாம். மேலே கூறியதுபோல குடும்பம், கிராமம் அளவில் பாலியல் கொடுமைகள் மறைக்கப்படுகின்றன என்பது உண்மையல்ல என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான மற்ற நிகழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லளவில் மட்டுமின்றி திறன்மிகு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்படுவது ஒரு நடவடிக்கை. இதோடு சமுதாயத்திலும் மாற்றம் வேண்டும். உணர்வுகளைத் தூண்டும் வகையில் சித்திரிக்கப்படும் பேனர்கள் சினிமா போஸ்டர்கள் பரவலாக பள்ளிக்கு அருகிலும் காணப்படுகின்றன. இந்தக் கலாசாரம் மாற வேண்டும்.

இணையதளம் நன்மை பயக்கிறது, நல்ல தகவல்கள் தருகிறது.

ஆயினும் விரசத்திற்கும் விகாரத்திற்கும் குறைவில்லை. இதை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. வீடுகளில் கட்டுப்பாடு வேண்டும். பெற்றோர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். நாம் முறையில்லாமல் நடந்து கொண்டு பிள்ளைகளுக்கு போதனை செய்தால் எடுபடாது. ஊடகங்களில் சினிமாவில் பார்க்க முடியாத காட்சிகள் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பப்படுகிறது.

சட்டம், ஒழுங்கு நிலை நாட்டுவது அமைதி காப்பது காவல்துறையின் முக்கிய பொறுப்பு. அதில் சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கவேண்டியது தலையாயக் கடமை. "வன்மையில்லை தீமையின்மையால்' என்ற நிலையில் பெண்கள் எந்த நேரத்திலும் எங்கும் தைரியமாகச் செல்ல முடியும் என்பதுதான், ஒரு நகரத்தின் கட்டுப்பாட்டிற்கு உரைகல் என்கிறார் காந்தியடிகள்.

சரகக் காவல் நிலைய அதிகாரி சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கவேண்டும். அதிகாரியின் பெயரைக் கேட்டாலே ரெüடிகள் நடுங்கி ஓடவேண்டும். நிச்சயமாக தமிழகக் காவல்துறை அதிகாரிகளால் முடியும்.

கட்டுரையாளர்:டி.என்.பி.எஸ்.சி. தலைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com