சாலை விபத்துகளுக்கு விடை கொடுப்போம்

மனைவி கண் முன்னே கணவன் பலி, கார்-லாரி மோதல் 8 பேர் உயிரிழப்பு, பள்ளி மாணவி லாரியில் சிக்கி பலி போன்ற செய்திகளை தினந்தோறும் படிக்கும்போது ஒரு சில நிமிடங்கள் நம் உள்ளம் பதறுகிறது, உயிரிழந்தவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம்.
Updated on
2 min read

மனைவி கண் முன்னே கணவன் பலி, கார்-லாரி மோதல் 8 பேர் உயிரிழப்பு, பள்ளி மாணவி லாரியில் சிக்கி பலி போன்ற செய்திகளை தினந்தோறும் படிக்கும்போது ஒரு சில நிமிடங்கள் நம் உள்ளம் பதறுகிறது, உயிரிழந்தவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். பிறகு அடுத்தடுத்த செய்திகளில் மனம் லயித்து, விபத்துச் செய்தியினை அறவே மறந்து விடுகிறோம்.

அந்த அளவுக்கு விபத்துகள், இன்றைய அவசர வாழ்வில் ஒரு சாதாரண நிகழ்வாக மாறி விட்டன. ஒவ்வொரு விபத்தும், அதில் ஏற்படும் உயிரிழப்பும் ஒரு குடும்பத்தையே நிர்கதியாக்கி விடுகிறது என்ற அச் செய்தியின் பின்புலத்தைச் சிந்தித்துப் பார்ப்பதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை.

முன்பெல்லாம் ஒரு விபத்து நிகழ்ந்தால், அனைவரும் ஓடி வந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவுவார்கள், ஆனால் இன்றோ, விபத்தில் சிக்கியவரை கூடி நின்று வேடிக்கை பார்த்து விட்டு மட்டுமே செல்லும் அளவுக்கு மனிதாபிமானம் சுருங்கி விட்டது.

புயல், வெள்ளம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகளில் மனிதர்கள் கொத்து கொத்தாக மாண்டு போவது தவிர்க்க இயலாதது. அதையும் முன்கூட்டியே கண்டறிந்து உயிர் மற்றும் பொருள் சேதங்களைத் தவிர்க்கும் தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. ஆனால் கவனக் குறைவு, அவசரம், அதிவேகம் போன்ற அற்ப காரணங்களினால் விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் சாலை விபத்துகளில் சிக்கி, சின்னாபின்னமாகும் மடமையை என்னவென்பது.

சாலை விபத்துகள் என்ன தவிர்க்கவே இயலாத இயற்கைப் பேரழிவா? சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்கவே முடியாதா என்றால் முடியும். முற்றிலும் தடுக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

முழுக் கவனத்துடனும், கட்டுப்பாட்டுடனும் சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களைச் செலுத்தினாலே 90% விபத்துகளைத் தவிர்த்து விடலாம்.

அரசு ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தை (ஜன.1 முதல் 7 வரை) சாலைப் பாதுகாப்பு வாரமாகக் கொண்டாடி பொதுமக்களிடம் சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அரசின் கெடுபிடிகளுக்கு அஞ்சி பெரும்பாலானோர் சாலை விதிகளை அந்த ஒரு வாரம் மட்டும் பின்பற்றுவர். விபத்துகளும் குறையும்.

அரசும் தங்களின் விழிப்புணர்வு மாபெரும் வெற்றி என மார்தட்டிக் கொள்ளும். ஆனால் அடுத்தடுத்த வாரங்களில், மாதங்களில் மீண்டும் பழைய கதை தான்.

இதில் நாம் அரசையோ அல்லது காவல் துறையையோ குறை கூறுவதற்கில்லை. ஏனெனில் லட்சக்கணக்கில் பெருகிவிட்ட நகர்ப்புற வாகனங்களை, ஆங்காங்கே சாலை சந்திப்புகளில் நிற்கும் நான்கைந்து காவலர்களால் கட்டுப்படுத்த முடியுமா? பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து, சாலை விதிகளைப் பின்பற்றினால் தான் விபத்துகளைக் குறைக்க முடியும்.

பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு காரணம் கவனக் குறைவு ஆகும். ஒரு வினாடியில் 8}இல் 1 பங்கு நேர கவனக் குறைவே ஒரு விபத்தினை ஏற்படுத்த போதுமானதாகும்.

பைக் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, சாலையில் கவனமாக இல்லாமல் இருபுறமும் வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வது, அதிகப்படியான நபர்களை பைக்கில் ஏற்றிச் செல்வது, முக்கியமாக மது அருந்திவிட்டு வாகனத்தைச் செலுத்துவது போன்றவையே விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாகும்.

இதுபோன்ற கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளில், விபத்தை ஏற்படுத்துபவர் மட்டுமன்றி, எதிரே வரும் அப்பாவி பாதசாரியோ, வாகன ஓட்டியோ பெரும் சேதாரத்துக்கு ஆளாகின்றனர் என்பதுதான் சகித்துக் கொள்ள இயலாத கொடுமை.

பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள், விபத்துகளில் சிக்குவதற்கு இதுபோன்ற கவனக் குறைவான வாகன ஓட்டிகளே காரணமாவார்கள்.

சாலை விபத்துகளுக்கான மற்றொரு முக்கியக் காரணம், அதிவேகம். எவ்வளவு போக்குவரத்து நெருக்கடி இருந்தாலும், அதனூடே வளைந்து நெளிந்து பைக் ஓட்டி, தங்கள் ஹீரோயிஸத்தை நிரூபிக்க முயன்று பரிதாபமாக உயிரிழப்போரும் உண்டு.

ஆனால், இத்தகைய விபத்துகளில் இவர்களின் பெற்றோர்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலை கொடுத்து அதி வேக பைக்குகளை வாங்கித் தந்து, அவர்கள் விபத்தை விலைக்கு வாங்க இவர்களே முக்கிய காரணமாகி விடுகிறார்கள்.

எதிர்பாராமல் நிகழ்வதுதான் விபத்து. நமது கவனக்குறைவாலும், அசட்டையாலும் ஏற்படுவது விபத்து அல்ல. இதுவும் ஒரு வகையில் பிறருக்கு தீங்கினை ஏற்படுத்தும் குற்றச் செயல்தான்.

சிக்னல்களில் நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தாமல், தள்ளி நிறுத்துவது, சிக்னல் விழுவதற்கு முன்பே வாகனத்தில் சீறிப் பாய்வது என அனைத்து விதிமுறை மீறல்களையும் நாமே செய்து விபத்தினை வரவேற்கிறோம்.

அனைவரும் சுய கட்டுப்பாட்டுடன், சாலை விதிகளை மதித்து பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே விபத்தில்லா சமுதாயம் அமைக்க முடியும். விலைமதிப்பில்லாத மனித உயிர்களைக் காக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com